Friday 30 November 2012

சிபில் கார்த்திகேசு.........!


சிபில் கார்த்திகேசு (Sybil Kathigasu, 1899-1948) மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு தமிழ்ப் பெண்மணி.

இரண்டாம் உலகப் போரின் போது பல நூறு சீனர்களின் உயிர்களைக் காப்பாற்றியவர். ஜப்பானியப் படையினரை எதிர்த்துப் போராடியவர். 

மலேசியாவின் நட்பு படைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர். இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளின் இரண்டாவது உயரிய விருதான 'ஜார்ஜ் பதக்கம்' பெற்றவர்.

மலேசியாவில் உள்ள சீனர் சமுகம் இவரை ஒரு தியாகி என்று போற்றுகின்றது.

ஈப்போ மாநகரின் முக்கிய சாலைக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Tuesday 27 November 2012

முதல் ஆய்வாளன் தமிழன்.....!


மன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன்
கணக்கதிகாரம் புத்தகம் 15 ஆம் நூற்றாண்டில் காரி என்பவரால் தோன்றிய நூல் இதை தமிழரின் கணித கோட்பாடுகள் என்றே உரைக்கலாம். இது தற்கால கணித முறைகளில் இருந்து முழுவதும் மாறுபட்டு விளக்கப்பட்டுள்ளது . தூரம், காலம், நேரம், எடை போன்ற அணைத்து அளவுகளும் மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டு அனைவருக்கும் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது .

இதில் நீட்டலளவை (தூரத்தை) அளக்கும் ஒரு அட்டவனையை கண்டேன், அதில் "யோசனை" என்ற ஒரு அளவை காணமுடிகிறது . அதைப் பற்றிச் சற்றே யோசித்த வாரே இருந்தேன். அந்த யோசனை அளவை பற்றி ஒரு யோசனை கிட்டியது. இந்த கணக்கதிகரத்தில் அணைத்து அளவுகளும் ஒரு புற பொருளுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றனர். ஆக, யோசனை என்று ஒரு அளவு எப்படி இருக்கும் என்று கணித்து பார்க்க எண்ணினேன்.

1850 ஆம் வருடம் "ஹெர்மன் வோன் ஹெல்ம்வோல்ட்ச" ( Hermann von Helmholtz ) என்ற புகழ் பெற்ற அறிவியலாளர் ஒரு தவளையின் கால்களில் மின்சாரத்தை அளக்கும் கருவியை பொருத்தி அதன் மனதின் வேகத்தை அளக்க முடியும் என்று நிருபித்தார்.

அதற்கு பின்பு வந்தவர்கள் அதன் சரியான மனதின் வேகத்தின் அளவை கண்டுபிடித்தனர் (Speed of Thought). அவை 50 மீட்டர் /நொடி என்று அளவிட பட்டது/ எனினும் வேகமாக கடக்கும் தசைகள் இதே தகவலை 100 மீட்டர் /நொடி என்ற அளவிலும் கடக்குமாம்.

சரி இவை ஒரு பக்கம் இருக்க அந்த யோசனை என்ற அளவையும் தற்போதிய கணித அளவையும் ஒப்பிட்டுப் பாப்போம்.

1 மொழம் = 46.6666 சென்டிமீட்டர் (Cm )
1 சிறுகோல் = 559.9992 சென்டிமீட்டர் (Cm )
1 கூப்பிடுதூரம் = 279999.6 சென்டிமீட்டர் (Cm )
1 காதம் = 1119998.4 சென்டிமீட்டர் (Cm )
1 யோசனை = 4479993.6 சென்டிமீட்டர் (Cm )

சென்டிமீட்டரை கிலோமீட்டராக மாற்றினால் 1 யோசனை = 44.799936 கிலோமீட்டர் (இது காலத்தை குறிக்காத அளவு)

இப்பொழுது அவர்கள் கூறியபடி 50 மீட்டர்/நொடி என்று கால அளவுடன் கணக்கிட்டால் 50 மீட்டர்/நொடி என்பதை கிலோமீட்டர் கணக்கில் பார்த்தல் 180 km/hr எனினும்

இவர்கள் அறிவித்த இந்த அளவு உணர்ந்து, சிந்தித்து, முடிவெடுத்து, செயல்படுதல் என்ற நான்கு செயல்பாட்டை ஒருகிணைந்த அளவே. இங்கு யோசனை என்ற அளவு சிந்தித்தல் என்ற பகுதியில் வரும். ஆகவே,

180 / 4 = 45 கிலோமீட்டர் / hr என்றே வருகிறது . 45 கிலோமீட்டர் / hr = 1 யோசனை எனவே காலத்தைக் குறிக்காத ஒரு யோசனையின் அளவு இவர்கள் அறிவித்த அளவுடன் பொருந்துகிறது.

இதே போல்,

நூற்று ஐம்பதாயிரம் யோசனை = 1 கதிரவநியங்குகிற மட்டு (6719990.4 km) இரண்டு கதிரவநியங்குகிற மட்டு = 1 விண்மீன் மண்டலம் (13439980.8 Km )

இந்த அளவுகளும், நவீன அறிவியலில் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகளிலும் வேறுபாடு இருந்தாலும். முதல் முயற்சி என்றும் தமிழனின் சொந்தமாக இருக்கிறது. இன்றளவும் ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளில் முதல் வெற்றி காண்பது கடினந்தான்.

இப்படி ஆயிரம் அதிசயங்களைப் புதைத்து வைத்துருக்கும் நம் தமிழரின் அறிவின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Saturday 24 November 2012

தமிழின் சிறப்புணர்த்தும் அடைமொழிகள்....!

1) அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ்
2) அருந்தமிழ்:- அருமை + தமிழ் = அருமைபாடுடைய தமிழ்
3) அழகுதமிழ்:- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ்
4) அமுதத்தமிழ்:- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ்
5) அணித்தமிழ்:- அணிநலன்கள் அமைந்த தமிழ், தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ்
6) அன்னைத்தமிழ்:- நமக்கும், உலக மொழிகளுக்கும் அன்னையாக விளங்கும் தமிழ்
7) இசைத்தமிழ்:- முத்தமிழில் ஒரு பிரிவு (ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு)
8) இயற்றமிழ்:- முத்தமிழின் மற்றொரு பிரிவு. ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள் அடங்கியது.
9) இன்றமிழ்:- இனிக்கும் தமிழ் (ஒலிக்க, உரைக்க, சிந்திக்க, செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது)
10) இன்பத் தமிழ்:- இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும் இலக்கண இலக்கிய மரபும் கொண்டு, கற்பவர்க்கு எஞ்ஞான்றும் இன்பம் பயப்பது.
11) எந்தமிழ்:- எம் + தமிழ் (கால்டுவெல், போப்பு போன்ற பிறமொழிச் சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை பாராட்டும் தமிழ்) 12) உகக்குந்தமிழ்:- மகிழ்ச்சியளிக்கும் தமிழ்
13) ஒண்டமிழ்:- ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும் கொண்டு ஒளிதரும் தமிழ்)
14) கனித்தமிழ்:- கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ்.
15) கற்கண்டுத்தமிழ்:- கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச் சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல, அடர்ந்து செறிந்த நிலையிலும் கற்க கற்க மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ்.
16) கன்னித் தமிழ்:- எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும் இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ்.
17) சங்கத்தமிழ்:- மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள் அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ்
18) சுடர்தமிழ்:- அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ்.
19) சுவைத்தமிழ்:- சொற்சுவை, பொருட்சுவை, கலைச்சுவை, கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது.
20) செந்தமிழ்:- செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை உடையது (செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ் எனப்பட்டது தமிழ்)
21) செழுந்தமிழ்:- செழுமை + தமிழ் - வளம் குன்றாத தமிழ்
22) தனித்தமிழ்:- தன்னிகரில்லாத தனித்தன்மை வாய்ந்த தமிழ்
23) தண்டமிழ்:- தண்மை + தமிழ் - குளிர்ச்சி நிறைந்தது
24) தாய்த்தமிழ்:- நமக்கும், உலக மொழிகளுக்கும் தாயாக மூலமாக விளங்கும்
25) தமிழ் 25) தீந்தமிழ்:- (தேன் > தேம் > தீம்) இனிமை நிறைந்த தமிழ்
26) தெய்வத்தமிழ்:- தெய்வத்தன்மை வாய்ந்தது
27) தேன்தமிழ்:- நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை பயக்கும் தமிழ் 28) பசுந்தமிழ்:- பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும் தமிழ்
29) பைந்தமிழ்:- பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை)
30) பழந்தமிழ்:- பழமையும் தொடக்கமும் அறியாத தொன்மையுடைய தமிழ் 31) பாற்றமிழ்:- பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும் சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது.
32) பாகுதமிழ்:- வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது
33) நற்றமிழ்:- நன்மை + தமிழ் – இனிய, எளிய முறையில் எழுதவும் கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத் துணைபுரிவது.
34) நாடகத்தமிழ்:- முத்தமிழுள் ஒன்று – நாடகத்தின் மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும் பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது.
35) மாத்தமிழ்:- மா – பெரிய – பெருமைமிக்க தமிழ் (மங்கலப் பொருளுணர்த்தும் உரிச்சொல் மா)
36) முத்தமிழ்:- இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு அமைந்த தமிழ் 37) வண்டமிழ்:- வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்)
38) வளர்தமிழ்:- காலந்தொறும் வளர்ந்துகொண்டே வரும் தமிழ்

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Wednesday 21 November 2012

கடலை வேலியாக கொண்ட தமிழர்கள்....!

உலகமெங்கும் கடலை வேலியாக கொண்ட தமிழர்கள் கடலில் பயணம் செய்த காலம்.



என் ஆய்வின் மூலம் கற்காலம் முடிவதற்கு முன்பே துவங்கி விட்டனர் என்பதற்கு பல தரவுகள் கிடைத்து வருகின்றன.

குறிப்பாக தமிழர்களின் கடல் பயணங்கள் அதில் பயணம் செய்த குறிஞ்சிக்கும் நெய்தலுக்கும் நடுவில் வாழ்ந்த மருத நிலத்தை சேர்ந்த மக்கள் என்பதற்கு நிலத்தின்அமைப்பை, மக்களின் வாழ்வியலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட தமிழ் சொற்களின் அடையாளங்களை பல உலக கடற்கரை நாகரிக மக்கள் வாழுகின்ற இடங்கள் அவர்கள் பெயர்களை வைத்து என்னால் நன்கு உணர முடிகின்றது.

அரசர்களின் வாழ்கையை பற்றி அதிகம் படித்த மக்களுக்கு ,தமிழர்கள் இன்று மட்டும் உலகமெங்கும் வாழவில்லை, பல காலம் காலமாய் அவர்கள் உலகமெங்கும் சென்று இருக்கிறார்கள் என்று புரிய வைக்க தகுந்த தரவுகளுடன் முயன்று வருகின்றேன்.

தமிழர்களின் கடல் பயணங்களை முழுமையாக தொகுக்க முயன்று வருகின்றேன்.  தேவகோட்டை நாகப்பா செட்டியார் அவர்களிடம் இருந்து வாங்கிய அன்னபூரநீ கப்பலை, அதன் அமெரிக்க கடல் பயணத்தை பற்றி தரவுகள் கிடைத்த படி இருக்கின்றன. 

க(ஹ)பிப் அரசர் ,வள்ளல் சீதக்காதி பர்மா முத்து பிள்ளையின் கப்பல்களை பற்றியும் தரவுகள் வந்த படி உள்ளது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Friday 16 November 2012

தமிழக வரலாற்றின் தொடக்க ...............!

சங்க காலம்:தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

இதனால் இக்காலத்தை மாறுதல் நிகழும் காலம் (TRANSITION PERIOD) என்பர். உணவு தேடி வாழும் இனக்குழு வாழ்க்கை, கால்நடை வளர்ப்பினை மையமாகக் கொண்ட மேய்ச்சல் நில வாழ்க்கை, உணவு உற்பத்தி செய்யும் ஒரு விதமான நிலவுடைமைச் சமுதாய வாழ்க்கை என மூன்று வகையான சமூக அமைப்புகள் வெவ்வேறு நிலப்பகுதிகளில் ஒரே நேரத்தில் நிலவின.

இதனடிப்படையில் வெவ்வேறு வகையான பொருளாதார நடவடிக்கைகளும் சமூக அமைப்புகளும் கொண்ட ஓர் அசமத்துவ வளர்ச்சி (UNEVEN DEVELOPMENT)சங்ககாலத்தில் நிலவியது.

நிலப் பாகுபாடு

மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை, ஆறும் ஆறு பாயும் சமவெளிப் பகுதிகளும் மருதம், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என அழைக்கப்பட்டன. குறிஞ்சியும் முல்லையும் கோடையின் வெம்மையால் தம் நிலையிலிருந்து மாறுபட்டு நிற்கும். இது தற்காலிகமான ஒன்று. இந்நிலப்பகுதி பாலை எனப்பட்டது.

மக்களும் பண்பாடும்

குறிஞ்சி நில மக்கள் சிலம்பன், குறவன், வெற்பன், வேட்டுவர், கானவர், குன்றவர் என அழைக்கப்பட்டனர். தொடக்கத்தில் வில், அம்பு, வேல் ஆகியவற்றின் துணையுடன் வேட்டையாடி வாழ்ந்தனர். மூங்கிலரிசி, திணை, மலை நெல், தேன், கிழங்குகள் ஆகியனவும் உணவாகப் பயன்பட்டன.

உணவு தேடி வாழும் வாழ்க்கை இங்கு நிலவியது. பின், புன்புல வேளாண்மை உருவாகியது. சேயோனாகிய முருகன் இவர்களுடைய கடவுளாக இருந்தான். பறை, தொண்டகப்பறை, குறிஞ்சியாழ் ஆகியன இங்கு வழங்கிய இசைக் கருவிகள். வள்ளிக்கூத்து குறிஞ்சி நிலத்துக்குரிய ஆட்டக் கலையாகும்.

ஆடுமாடுகளை மேய்க்கும் மேய்ச்ச்சல் நில வாழ்க்கையை மையமாகக் கொண்டது முல்லை நிலம். வரகு, சாமை, கேழ்வரகு, கடலை, அவரை, துவரை ஆகியன மழையை நம்பி மேற்கொண்ட வேளாண்மையில் கிட்டின.

மாயோனாகிய திருமால் முல்லை நிலத்தின் கடவுள். ஏறுகோட்பறை, குழல், முல்லையாழ் ஆகியன இந்நிலத்துக்குரிய இசைக் கருவிகள். உணவு தேடும் வாழ்க்கையைக் கடந்து உணவு உற்பத்தி செய்யும் நிலையும் நிரைகளை சொத்துக்களாக கொள்ளும் நிலையும் இங்கு உருவாகின.

மலையிலும் காட்டிலும் அலைந்து திரிந்த நிலையிலிருந்து வளர்ச்சி பெற்று ஆற்றங்கரையில் நிலையாக வாழத் தொடங்கிய இடம் மருத நிலமாகும். இங்கு உழு தொழிலின் மூலம் உணவு உற்பத்தி நிகழ்ந்தது. ஆற்று நீரை நேரடியாகவும் நீர்நிலைகளில் தேக்கி வைத்தும் பயன்படுத்தினர்.

செந்நெல், வெண்நெல், கரும்பு, மஞ்சள் (பிற்காலத்தில் வாழை) ஆகியன முக்கிய உற்பத்திப் பொருளாயின. கரும்பிலிருந்து வெல்லம் தயாரிக்கும் கரும்பாலைகளும், உபரி நெல்லை மூலதனமாகக் கொண்டு பண்டமாற்று வாணிபத்தை மேற்கொண்ட வாணிப குழுக்களும் உருவாயின.

சிற்றூர்கள் பேரூர்களாக வளர்ச்சி பெறத் தொடங்கின. நெல்லரிப் பறையும், மருதயாழும் இந்நிலத்தின் இசைக் கருவிகளாகயிருந்தன. தச்சர், கொல்லர், குயவர் ஆகிய கைவினைர்களின் தோற்றமும் இங்குதான் உருவாகியது.

நெய்தல் நிலப்பகுதியில் மீன்பிடித்தலும், உப்பு உற்பத்தி, உலர்மீன் உற்பத்தி செய்தலும், இவற்றை பிற நிலப்பகுதிகளுக்குக் கொண்டு சென்று பண்டமாற்று செய்தலும் முக்கிய தொழில்கள். இதன் வளர்ச்சி நிலையாகக் கடல் வாணிபம் உருவாகியது. நெய்தல் குடியிருப்புகள் பட்டினம், பாக்கம் என்றழைக்கப்பட்டன. வருணன் (வண்ணன்) இந்நிலத்தின் தெய்வம். நாவாய்பறையும், நெய்தல் யாழும் இசைக் கருவிகள்.

வளமற்ற நிலப்பகுதியான பாலையில் வழிப்பறியும் கொள்ளையும் மக்களின் துணைத் தொழில்களாயின. இங்கு வாழ்ந்த மறவர்களின் குடியிருப்பு, கொல் குறும்பு எனப்பட்டது. கொற்றவை, இந்நிலத்தின் தெய்வம். நிறைகோட்பறை, சூறைகோட்பறை, வாகையாழ் ஆகியன இந்நிலத்தின் இசைக் கருவிகள்.

சங்ககால அரசியல்

சங்ககாலத் தமிழகம் மன்னராட்சியின் கீழ் செயல்பட்டது. ஆட்சி புரிவோர் குறுநில மன்னர்கள். வேந்தர் என இரண்டு வகையாக அழைக்கப்பட்டனர். குறிஞ்சி முல்லை நெய்தல் பாலை ஆகிய நான்கு நிலப் பகுதிகளிலும் வாழ்ந்த குறவர், ஆயர், பரவர், மறவர் ஆகிய மக்கட் பிரிவினர் தத்தமக்கென சுயேச்சையான ஆளுவோரைக் கொண்டிருந்தனர்.

இவர்களையே குறுநில மன்னர்கள் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடும். குறுநில மன்னர்களுக்கும் அவர்களால் ஆளப்படும் மக்களுக்குமிடையே ஆழமான வேறுபாடுகள் நிலவவில்லை.

மருதநில அல்லது நெய்தல் நில நகர் ஒன்றினை மையமாகக் கொண்டு பரந்த நிலப்பகுதியை ஆட்சிபுரிந்தவர்கள் வேந்தர் எனப்பட்டனர். சேரர், சோழர், பாண்டியர் என மூன்று வேந்தர்கள் மட்டுமே பெருநிலப் பகுதியை ஆண்டனர். வாய்ப்பு நேரிடும் போது குறுநில மன்னர்களின் நிலப் பகுதியையும் தங்களுடன் இணைத்துக் கொண்டனர்.

மூவேந்தர்களுக்கு துணை புரிய

1. அமைச்சர்,
2. புரோகிதர்,
3. சேனாதிபதி,
4. தூதர்,
5. ஒற்றர்

என்போரைக் கொண்ட ஐம்பெருங் குழுவும்,

1. கரணத் தலைவர்,
2. கருமகாரர்,
3. கனகச்சுற்றம்,
4. கடைகாப்பாளர்,
5. நகரமாந்தர்,
6. படைத் தலைவர்,
7. யானை வீரர்,
8. இவுளிமறவர்

என்போரைக் கொண்ட எண்பேராயம் என்ற அமைப்பும் இருந்தன.

ஆயினும் இவ்விரு அமைப்புகளும் மன்னனைக் கட்டுப்படுத்தும் தன்மையன அல்ல. குறுநில மன்னர்கள் ஆண்ட பகுதிகளில் பொதியில் மன்றம் என்ற அமைப்புகள் செயல்பட்டன.

சமயம்

ஆவிகளின் மீது நம்பிக்கை கொண்ட ஆவி உலகக் கோட்பாடும் (Animism)‘குலக்குறி’ (Totem) வழிபாடும் மூத்தோர் வீரர் வழிபாடும் சங்ககாலச் சமயத்தில் செல்வாக்கு செலுத்தின. போரில் இறந்துபட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டி வழிபடும் நடுகல் வழிபாடு பரவலாக இருந்தது.

கடிமரம், காவல்மரம் என்ற பெயரில் குறிப்பிட்ட மரங்கள் புனித மரங்களாகக் கருதப்பட்டன. பாம்பு வழிபாடும் வழக்கிலிருந்தது. திருமால், முருகன், கொற்றவை ஆகியன சங்ககாலத்தில் முக்கிய தெய்வங்களாக விளங்கின. இன்று பரவலாக உள்ள பிள்ளையார் வழிபாடு சங்ககாலத்தில் இல்லை.

சிவனைப் பற்றிய குறிப்புகள் சங்க நூல்களில் இடம் பெற்றாலும் மேற்கூறிய தெய்வங்களைப் போல் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை. வாலியோன் என்ற பெயரில் பலராமர் வழிபாடு இருந்துள்ளது. சமணம், பௌத்தம் ஆகிய வடபுல சமயங்கள் இங்கு பரவின.

வடமொழித் தாக்கத்தின் விளைவாக வேள்விகள் நிகழ்ந்தன. சங்ககால கவிஞர்கள் சிலர் இவ்விரு சமயங்களையும் தழுவியிருந்தனர். இவ்வுலக வாழ்க்கையை வெறுத்தொதுக்கும் நிலையாமைக் கோட்பாடு செல்வாக்குப் பெறவில்லை. வாழ்க்கை உவப்புக் கொள்கையே மேலோங்கியிருந்தது.

பொருளியல்

நாட்டில் அடிப்படைத் தொழிலாக வேளாண்மை அமைந்தது. மருதநிலப் பகுதியில் நெல்லும், கரும்பும் பயிர் செய்யப்பட்டன. எள், கொள், துவரை ஆகியன குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளில் பயிர் ஆயின. சாமை, வரகு, திணை ஆகியன முக்கிய புன்செய் நிலப் பயிர்களாகும்.

தேனெடுத்தல், கிழங்குகளை அகழ்ந்தெடுத்தல், மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் ஆகியன ஏனைய பொருளாதார நடவடிக்கைகளாகும். நெசவு, கொல்வேலை, தச்சு வேலை, கருப்பஞ் சாற்றிலிருந்து வெல்லம் எடுத்தல், சங்கறுத்தல், கூடை முடைதல் ஆகியன முக்கிய கைத்தொழில்களாக அமைந்தன.

பண்டமாற்று முறையில் வாணிகம் நிகழ்ந்தது. பெரிய நகரங்களில் அங்காடி என்ற பெயரில் சந்தைகள் இருந்தன. பகற்பொழுதில் செயல்படுபவை நாளங்காடி என்றும், இரவு நேரத்தில் செயல்படுபவை அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன. கடைத்தெரு நியமம் என்று அழைக்கப்பட்டது.

பொருட்களைக் கொண்டு செல்ல எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகள் பயன்படடன. வணிகர்கள் சாத்து என்ற பெயரில் குழுக்களாகச் செயல்பட்டனர்.

மிளகு, அரிசி, இஞ்சி, ஏலம், மஞ்சள், இலவங்கம் ஆகிய உணவுப் பொருட்களும் சந்தனம், அகில் ஆகிய மணப் பொருட்களும் தமிழகத்திலிருந்து அரேபியா, எகிப்து, உரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. குரங்கு, மயில், யானைத்தந்தம், முத்து ஆகியனவும் ஏற்றுமதியாயின. கடல் வாணிகத்திற்குப் பாய்கள் கட்டப்பட்ட மரக்கலங்கள் பயன்பட்டன.

இலக்கணம்

தமிழ் மொழி தொன்மையான நூலாக இன்று நம் பார்வைக்குக் கிட்டுவது தொல்காப்பியமாகும். தனக்கு முன்னால் வாழ்ந்த நூலாசிரியர்களின் நூல்களை கற்றுத் தேர்ந்து தொல்காப்பியர் இந்நூலை உருவாக்கியுள்ளார். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பிரிவுகளாக இந்நூல் அமைந்துள்ளது.

பொதுவாக மொழிகளின் இலக்கணம் என்பது எழுத்து, சொல் யாப்பு சார்ந்ததாக மட்டுமே இருக்கும். ஆனால் தொல்காப்பியம் இவை மூன்றுடன் மட்டுமின்றி மனித வாழ்க்கையின் இலக்கணத்தை உணர்த்தும் வகையில் பொருளதிகாரம் என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளது.

இலக்கியம்

தமிழ் இலக்கியத்தின் பொற்காலமாக சங்ககாலம் அமைந்தது. இக்காலத்தில் தோன்றிய பெரும்பான்மைப் பாடல்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற பெயரில் பிற்காலத்தில் தொகுப்பு நூல்களாகத் தொகுக்கப்பட்டன.

1. நற்றிணை,
2. குறுந்தொகை,
3. ஐங்குறுநூறு,
4. பதிற்றுப்பத்து,
5. பரிபாடல்,
6. கலித்தொகை,
7. அகநானூறு,
8. புறநானூறு

என்ற எட்டு நூல்களும் எட்டுத்தொகை என்ற தொகுப்பில் அடங்குகின்றன. இந்நூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பல்வேறு கவிஞர்களால் பல்வேறு கால கட்டங்களில் பாடப்பட்டவை.

1. திருமுருகாற்றுப்படை,
2. பொருநராற்றுப்படை,
3. சிறுபாணாற்றுப்படை,
4. பெரும்பாணாற்றுப்படை,
5. முல்லைப்பாட்டு,
6. மதுரைக் காஞ்சி,
7. நெடுநல் வாடை,
8. குறிஞ்சிப் பாட்டு,
9. பட்டினப்பாலை,
10. மலைபடுகடாம்

என்ற பத்து நூல்களும் பத்துப்பாட்டு எனப் பெயர் பெற்றன.

இவற்றுள் திருமுருகாற்றுப்படையும், நெடுநல்வாடையும் நக்கீரராலும், எஞ்சிய எட்டு நூல்களும் எட்டு கவிஞர்களாலும் இயற்றப்பட்டன. இவ்விலக்கியங்களின் தனிச்சிறப்பு இவை அகம் புறம் என்ற பொருள் பாகுபாடுகளைக் கொண்டிருப்பதாகும்.

மனிதர்களின் அகம் (மனம்) சார்ந்த காதல் தொடர்பான செய்திகளைக் கூறுவது அகத்திணை ஆகும். இதற்குப் புறத்தேயுள்ள கல்வி, வீரம், கொடை, நீதி அறமல்லன போன்றவற்றைக் குறிப்பது புறத்திணையாகும்.

அகநூல்களில் இடம்பெறும் காதலர்களை, இயற்பெயர் சுட்டிக் குறிப்பிடக் கூடாது, என்ற தொல்காப்பியர் விதியை சங்ககாலக் கவிஞர்கள் உறுதியாகக் கடைபிடித்தனர்.

சங்ககாலத்தை அடுத்து வரும் காலம் சங்கம் மருவிய காலம் எனப்படும். இக்காலத்தில் உருவான பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு எனப்படுகின்றன.

இவற்றுள் திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை ஐம்பது, கார் நாற்பது, கைந்நிலை என்ற ஆறு நூல்களும் சங்ககால அகத்திணைமரபு சார்ந்தவை.

எஞ்சிய நூல்களில் திருக்குறள் தவிர்ந்த, நாலடியார், பழமொழி, ஏலாதி, திரிகடுகம், நான்மணிக்கடிகை, ஆசாரக் கோவை, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி என்ற பதினொறு நூல்களும் புறத்திணை சார்ந்தவை. குறள் அகமும், புறமும் சார்ந்த நூலாகும்.

பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் தலையான இடத்தைப் பெறுவது திருக்குறள். 1330 குறள் வெண்பாக்களைக் கொண்ட இந்நூல் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. எச்சமயத்தையும் சாராது வாழ்வியல் நெறிகளைக் கூறுவது இதன் தனிச் சிறப்பாகும்.

சங்க காலத்தில் வாழ்வியலின் பகுதியாகக் கருதப்பட்ட கள்ளுண்டல், பரத்தையற் பிரிவு, புலால் உண்ணுதல், சூதாடல் ஆகியன வள்ளுவரால் கடிந்தொதுக்கப்படுகின்றன.

திருக்குறளுக்கு அடுத்த இடத்தைப் பெறும் நாலடியார் சமண முனிவர்கள் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பாகும். இந்நூல் குறளுக்கு மாறாக உலகியல் வாழ்க்கை மீது வெறுப்பை வெளிப்படுத்தி துறவறத்தை வற்புறுத்துகிறது.

இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற இரு நூல்களும் வைதீக சமயச் சார்பானவை. ஒழுக்கங்களின் தொகுதி என்ற பொருளைத் தரும் ஆசாரக் கோவை என்ற நூல் வடமொழி நீதிநூல்கள் சிலவற்றின் சாரமாக அமைகின்றது. பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகியன சமணம் சார்ந்து நீதி கூறுகின்றன.

பல்லவர் காலம் (கி.பி. 3 முதல் 9 வரை)

சங்ககாலத்துக்குப் பின் களப்பிரர் என்ற அரச மரபினரின் ஆட்சி நடைபெற்றது. இவர்கள் சமண சமயத்தைச் சார்ந்தவர்கள். இவர்களது காலத்தை இருண்ட காலம் என்று சொல்வது பொதுவான மரபு.

ஆனால் திரமிள சங்கம் என்ற பெயரில் சங்கம் ஒன்றை அமைத்து தமிழ் வளர்த்தமையை சதாசிவபண்டாரத்தார் சுட்டிக்காட்டி, தமிழ் மொழிக்கு இது இருண்ட காலமல்ல என்பதைச் சான்றுகளுடன் நிறுவியுள்ளார்.

களப்பிரர் ஆட்சிக்குப் பின் பல்லவர் ஆட்சி தமிழகத்தில் நிலவியது. கி. பி. 260 தொடங்கி 450 ஆண்டுகள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவர் ஆட்சி நிலை பெற்றிருந்தது.

சமயம்

சைவமும், வைணவமும் எழுச்சி பெற்ற காலம் பல்லவர் காலம் ஆகும். சைவநாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் தோற்றுவித்த சமய இயக்கம் பக்தி இயக்கம். இவ்விரு சமயத்தினரும் சமணத்துடனும், பௌத்தத்துடனும் மாறுபட்டு அவற்றின் செல்வாக்கை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தேவார ஆசிரியர்களான திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தமிழ் நாடெங்கும் பயணம் செய்து சைவ சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டினர். இவர்களால் பாடப்பெற்ற சைவக் கோயில்கள் பாடல் பெற்ற தலங்கள் எனப் பெயர் பெற்றன.

இவர்களைப் போன்றே ஆழ்வார்களும் வைணவக் கோயில்களுக்குச் சென்று பக்திப் பாசுரங்கள் பாடினர். இவர்களால் பாடப்பெற்ற வைணவக் கோயில்கள் மங்களா சாசனம் செய்த திருப்பதிகள் எனப்பட்டன.

பௌத்த சமணத் துறவிகள் வாழும் சமய மடங்களில் சமய நூல்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன. காஞ்சிபுரம் பௌத்த மடத்தில் பயின்ற போதிதருமர், போதிருசி என்ற இரு துறவிகளும் சீனா, ஜப்பான் நாடுகளுக்குச் சென்று சென் புத்தமதப் பிரிவை பரப்பினர்.

பீகாரில் இருந்த உலகப் புகழ் பெற்ற நாலந்தா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும், துணை வேந்தராகவும் இருந்த தருமபாலர் காஞ்சியில் பிறந்து பயின்றவர்தாம். வெளிநாட்டுப் புத்ததுறவிகள் இங்கு வந்து சமய நூல்களைக் கற்றுச் சென்றனர்.

பல்லவர் அரசு

சங்ககாலத்தைப் போன்றே பல்லவர் காலத்திலும் ஆட்சிமுறை பிறப்பு வழி உரிமையாய் இருந்து வந்தது. மன்னருக்குத் துணைபுரிய அமைச்சர்கள் இருந்தனர். ஆட்சிப் பகுதியானது கோட்டம், நாடு, ஊர் என்று மூன்று பிரிவுகளாக பகுக்கப்பட்டது.

நாட்டின் நிர்வாகத்தைக் கவனித்து வந்தவர் நாட்டார் என்றும், ஊரின் ஆட்சிக்குப் பொறுப்பான வேளாளர்கள் ஊரார் என்றும் அழைக்கப்பட்டனர். இவை தவிர பிரம்மதேயம் என்ற பெயரில் பிராமணருக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர்களைப் பிராமணர்களே நிர்வகித்து வந்தனர்.

இம்மூன்று வகையான நிர்வாகிகளும் கோவில் மான்யங்கள், நீர்ப்பாசனம், நீதி விசாரணை, நிலவுரிமை போன்றவற்றை கவனித்து வந்தனர். இதன் பொருட்டு வாரியங்கள் பல உருவாக்கப்பட்டன.

இவ்வாரியங்கள் அதற்கென்று விதிக்கப்பட்ட பணியினைச் செய்து வந்தன. சான்றாக வேளாண்மைக்கு ஆதரவான ஏரிகளைப் பராமரிக்கும் வாரியம் ஏரி வாரியம் என்றும் தோட்டங்களைப் பராமரிக்கும் வாரியம் தோட்ட வாரியம் என்று அழைக்கப்பட்டதைக் குறிப்பிடலாம்.

கலை

பல்லவர் காலத்தில் கட்டிடக் கலையும் சிற்பக் கலையும் வளர்ச்சியடைந்தது. கருங்கற்களினால் கட்டிடங்களை கட்டும் பணி பல்லவர் காலத்தில்தான் உருவாகியது.

குகைகளை உருவாக்கி அமைக்கப்பட்ட குடைவரைக் கோவில்கள் பல்லவர் காலத்தில் செல்வாக்கு பெற்றன (பல்லவர்களுக்கு முன்னர் பாண்டியர்கள் குடைவரைக் கோவில்களை உருவாக்கி உள்ளனர் என்பது தொல்லியல் வல்லுநர் நாகசாமியின் கருத்து).

கல்லிலே கலை வண்ணம் கண்ட பல்லவர் கால சிற்பக்கலைக்கு காஞ்சியிலும், மாமல்லபுரத்திலும் உள்ள கோவில் சிற்பங்கள் சான்று பகர்கின்றன.

இவை தவிர இசையும், நடனமும் பல்லவர் காலத்தில் தழைத்தமைக்கு, குடுமியான்மலை, திருமெய்யம் ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களும் சித்தன்ன வாசலில் தீட்டப் பெற்றுள்ள நடன மங்கையரின் ஓவியங்களும் சான்று.

பல்லவர் காலத்தில் வடமொழி செழித்து வளர்ந்தது. பல்லவர்கள் வடமொழி ஆர்வலர்களாக இருந்தமையே இதற்குக் காரணமாகும். பல்லவ மன்னர்கள் அவையில் நடிப்பதற்காக பாஷகவி என்பவர் வடமொழி நாடகங்கள் சிலவற்றை எழுதியுள்ளார்.

பௌத்த துறவிகளைப் பகடி செய்யும் வகையில் மத்த விலாச பிரகசனம் என்ற எள்ளல் நாடகத்தை மகேந்திர வர்மன் வடமொழியில் எழுதியுள்ளான்.

அணி இலக்கண அறிஞரான தண்டி என்னும் கவிஞர் எழுதிய காவிய தரிசனம் என்ற வடமொழி அணி இலக்கண நூல் தண்டியலங்காரம் என்ற பெயரில் தமிழில் வெளியாயிற்று. பாரதக் கதையைக் கூறும் பாரத வெண்பாவும் நந்திக் கலம்பகம் என்ற சிற்றிலக்கியமும், பெருங்கதை என்ற காப்பியமும் பல்லவர் காலத்தில் உருவான குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கியங்கள் ஆகும்.

சோழர் காலம் (கி.பி. 10 - கி.பி. 13)

பல்லவர் காலத்துக்குப் பின் தமிழ்நாட்டில் உருவான ஒரு வலிமையான அரசு சோழப் பேரரசு கும். சோழர் ஆட்சியிலும் மன்னனே ஆட்சி மையமாக அமைந்தான்.

சோழநாடு மண்டலங்கள் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மண்டலத்துள்ளும் வளநாடுகள் பல இருந்தன. பல கிராமங்களின் தொகுப்பாக கூற்றம் என்ற அமைப்பு இருந்தது.

இதை கோட்டம் அல்லது நாடு என்றும் குறிப்பிட்டனர். பல கூற்றங்களை உள்ளடக்கியதாக வளநாடு அமைந்தது. சுப்பாராயலுவின் கருத்துப்படி 10 முதல் 300 சதுரம் வரை பரப்பைக் கொண்ட நிருவாகப் பிரிவாக நாடு இருந்தது.

நாடுகளின் பொருப்பாளர்களாக நாட்டார், நாடுகண்காணி என்போர் இருந்தனர். வேளாண்மை காவல் வரிவசூல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். மன்னனுக்கு உதவி புரிய இருக்கும் அரசு அலுவலர்கள் உடன் கூட்டம் என்று அழைக்கப்பட்டனர்.

வாய்மொழியாக மன்னன் பிறப்பிக்கும் ஆணைகளைக் கேட்டு அவற்றை எழுத்தில் பதிவு செய்து உரியவர்களிடத்தில் அனுப்பி வைக்கும் பணியைச் செய்பவன் திருவாய்க்கேள்வி திருமந்திர ஓலை எனப்பட்டான்.

கலை இலக்கியம்

சோழர் காலத்தில் கட்டிடக் கலையும் சிற்பக்கலையும் செழித்து வளர்ந்தன. தன் நிழலைத் தனக்குள்ளே தருக்குடனே தாங்கி நிற்கும் தஞ்சைப் பெருங்கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம், தராசுரம் ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களும் அங்குள்ள சிற்பங்களும் சோழர்காலக் கட்டிடக் கலைக்குச் சான்றுகளாய் உள்ளன.

சோழர் கால இலக்கியங்களில் சைவ சமயச் சார்புடைய இலக்கியங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உருவாயின. உமாபதி சிவாச்சாரியார் என்பவர் எட்டு சைவ சித்தாந்த நூல்களை இயற்றியுள்ளார்.

சைவ சமயத்தின் 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் திருத்தொண்டர் புராணம் சேக்கிழாரால் இயற்றப்பட்டது. சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைக் கூறும் திருவிளையாடற் புராணம் என்ற நூலைப் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் எழுதியுள்ளார்.

ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவால நடையில் ஈடு எனப்படும் விரிவுரை இக்காலத்தில் உருவாகியது.

சமண சமயத்தைச் சார்ந்த திருத்தக்கத்தேவர் எழுதிய சீவகசிந்தாமணி, கொங்குவேளிர் எழுதிய பெருங்கதை ஆகிய காவியங்களும் வளையாபதி, நீலகேசி என்ற சமணக் காப்பியங்களும் குண்டலகேசி என்ற பௌத்த காப்பியமும் தோன்றின.

திவாகரம், பிங்கலந்தை என்ற நிகண்டுகளும், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை, புறப்பொருள் வெண்பா மாலை, வீரசோழியம், வெண்பாப் பாட்டியல் ஆகிய இலக்கண நூல்களும் உருவாயின. 

செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி ஒட்டக்கூத்தரின் மூவருலா, கம்பரின் இராமாயணம், புகழேந்தியின் நளவெண்பா ஆகியன சோழர் காலத்தில் தோன்றிய பிற இலக்கியங்கள் ஆகும்.

இளம்பூரணர், சேணாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார் ஆகியோர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதினர். சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும், பரிபாடலுக்கும், திருக்குறளுக்கும் உரை எழுதிய பரிமேலழகரும் சோழர் காலத்தவரேயாவர்.

சோழர் காலத்தில் வடமொழிப் பயிற்சியளிக்கும் கல்வி நிறுவனங்கள் (கடிகா) பல நிறுவப்பட்டன. நூல்களைச் சேகரித்து வைக்கும் நூலகம் போன்ற அமைப்பு சோழர் காலத்தில் இருந்தது. இதை சரசு(ஸ்)வதி பண்டாரம் என்றழைத்தனர்.

கிராமசபை

சோழர் ஆட்சியின் சிறப்பியல்பாக கிராம சுய ஆட்சி முறை நிலவியது. பிராமணர்களுக்கு உரிய நிலங்களுக்கு வரி வாங்கப்படவில்லை. இவை இறையிலி எனப்பட்டன. இறையிலி நிலங்களைக் கொண்ட பிராமணர் குடியிருப்புக்கள் கிராமங்கள் எனப்பட்டன.

குடும்பு என்ற சிறு பிரிவுகளாக கிராமம் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்புக்கும் ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடும்புக்குரிய வேட்பாளர்களின் பெயர்களைப் பனை ஓலைத் துண்டில் தனித்தனியாக எழுதி அவ்வக் குடும்புக்குரிய குடத்தில் இடுவர்.

பின்னர் குடத்தை நன்றாக குலுக்கி அறியாச் சிறுவன் ஒருவனைக் கொண்டு ஓலைத்துண்டு ஒன்றை எடுக்கும்படி செய்வர். அவனால் எடுக்கப்படும் ஓலையில் காணப்படும் பெயருக்குரியவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

குடும்பில் உறுப்பினராவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன. சொந்த மனையில் வீடு கட்டியிருத்தல், குறைந்தது கால்வேலி நிலமுடையவராய் இருத்தல், 35 வயதிற்குக் குறையாதிருத்தல், 70 வயதிற்கு மேற்படாதிருத்தல், நான்கு வேதத்தில் ஒரு வேதத்தையோ, ஒரு பாசி(ஷி)யத்தையோ ஓதும் ஆற்றல் பெற்றிருத்தல் என உத்திரமேரூர் சாசனம் குறிப்பிடுகிறது.

அடித்தள மக்கள் கிராம சபைகளில் நுழைய விடாமல் தடுப்பதில் இத்தகுதிகள் முக்கியப் பங்காற்றின. மேலும் ஒரு குழுவிலோ, வாரியத்திலோ உறுப்பினராக இருந்து பணியாற்றிய போது ஒழுங்காகக் கணக்கு காட்டத் தவறியவர்கள், அவருடைய உறவினர்கள், ஒழுக்கமற்றவர்கள், வேட்பாளராகத் தகுதியற்றவர்கள் என்றும் இச்சாசனம் தெரிவிக்கின்றது.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு வாரியங்கள் அமைக்கப்படும். ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்சவார வாரியம், பொன் வாரியம், கலிங்கு வாரியம் கழனி வாரியம் ஆகியன முக்கிய வாரியங்களாகும். இவ்வாரியங்களின் உறுப்பினர்கள் வாரியப் பெருமக்கள் என்றழைக்கப்பட்டனர். ஒவ்வொரு வாரியங்களும் தமக்குரிய பணிகளைச் செய்து வந்தன.

பிராமணர் அல்லாதோர் வாழ்ந்த குடியிருப்புக்கள் ஊர்கள் எனப்பட்டன. இவற்றை ஊரவை நிறுவகித்தது. அவையின் நிர்வாகக்குழு, ஆளும் கணம் என்றழைக்கப்பட்டது. வணிகர்கள் மிகுதியாக வாழ்ந்த நகரங்களின் சபை நகரத்தோம் எனப்பட்டன.

சமூகம் சோழர் காலச் சமுதாயத்தில் சாதி வேறுபாடுகள் ஆழமாக இருந்தன. பிராமணர்கள் ஏற்றம் பெற்றிருந்த சாதியினராக விளங்கினர். அகரங்கள், அக்கிரகாரங்கள், சதிர்வேதி மங்கலங்கள் என்ற பெயர்களில் பிராமணர்களுக்குத் தனிக்கிராமங்கள் உருவாக்கப்பட்டன.

கோவில்கள், மடங்கள் ஆகியன இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. இலவச உணவும் உறையுளும் நல்கி வேதக்கல்வி புகட்டும் வேதபாட சாலைகளும் இவர்களுக்கென்றே மன்னர்களால் நிறுவப்பட்டன.

பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் நிலக்கிழார்களாக விளங்கிய வேளாளர்கள் இருந்தனர். கோவில் நிலங்களின் மீது பிராமணர்களுடன் இணைந்து இவர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

இவ்விரு சமூகத்தினரையும் தவிர பல்வேறு கைவினைத் தொழில் செய்து வந்தவர்களும், உழுகுடிகளான, பள்ளர், பறையர் ஆகியோரும் தனித்தனி சாதிகளாக அழைத்திருந்தனர். சோழர் காலச் சாதிகள் வலங்கையர், இடங்கையர் என்ற இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

இவ்விரு பிரிவுகளின் உருவாக்கம் குறித்து வினோதமான புராணக் கதைகள் உருவாகியுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 98 குலங்கள் இடம் பெற்றிருந்தன. வலங்கையர் இடங்கையரிடையே சில நேரங்களில் பூசல்களும் மோதல்களும் நிகழ்ந்தன.

பெரும்பாலும் இடங்கையினர் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்தனர். சில நேரங்களில் வலங்கையினர் இடங்கையினர் ஆகிய இரு வகுப்பினரும் வேறுபாடுகளைத் துறந்துவிட்டு பிராமணர்களையும், வேளாளர்களையும் எதிர்த்துப் போராடியுள்ளனர். பெரும்பாலும் இப்போராட்டம் வரி எதிர்ப்பை மையமாகக் கொண்டேயிருந்தது.

தீண்டாமை சோழர் காலத்தில் வேர்விட்டு வளர்ந்திருந்தது. பறையர்களுக்கென்று தனிக்குடியிருப்புகள் இருந்தன. தீண்டாச்சேரி என்று இக்குடியிருப்புகள் அழைக்கப்பட்டன. ஆயினும் இவர்களில் சிலர் சொத்துரிமை உடையவர்களாகவும் இருந்தனர்.

ஆடலிலும், பாடலிலும் வல்ல பெண்டிரை விலைக்கு வாங்கியும், வன்முறையில் கைப்பற்றிக் கொண்டும் கோவில் பணிகளில் ஈடுபடுத்தினர்.

கோவிலைப் பெருக்கி மெழுகுதல், மாலை தொடுத்தல் தேவாரம் ஓதுதல், நடனமாடுதல், நாடகங்களில் நடித்தல் ஆகியன இவர்களின் முக்கியப் பணிகளாக அமைந்தன. தலைக்கோலிகள், தளிச்சேரிப் பெண்டுகள், பதியிலார், தேவரடியார் என்று இவர்களுக்குப் பெயர்கள் வழங்கின.

அடிமைமுறை சோழர் காலத்தில் நிலை பெற்றிருந்தது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர்.

அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் எனப் பெயர் பெற்றது.

வறுமையின் காரணமாகத் தம் குடும்ப உறுப்பினர்களை விற்பதும் தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் நிகழ்ந்துள்ளன. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார்.

இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டது. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசூலச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன.

நெற்குற்றுதல், வேளாண் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாகும். தங்களை மட்டுமின்றி தங்கள் பரம்பரையினரையும் அடிமைகளாக விற்றுக் கொண்டதை இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் பரம்பரை பரம்பரையாக, வழியடிமை, யானும் எம் வம்சத்தாரும் என்று கல்வெட்டுக்களில் காணப்படும் தொடர்கள் உணர்த்துகின்றன.

சமயம்

சோழர் காலத்தில் அரசு சமயமாக சைவம் விளங்கியது. சிவனுக்கு முக்கியத்துவம் இருந்தது. பல்லவர் காலத்தில் வளரத் தொடங்கிய சைவம் சோழர் காலத்தில் வளர்ச்சியின் உச்சத்தை எட்டியது. சைவ சமயத்தின் தத்துவமாக சைவ சித்தாந்தம் உருப்பெற்று செல்வாக்குற்றது.

பதி (இறைவன்), பசு (உயிர்), பாசம் (இருள் + தளை) என்ற மூன்றும் சைவசித்தாந்தத்தின் அடிப்படைத் தத்துவமாகும். இதன்படி உலக உயிர்கள் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றையும் உள்ளடக்கிய பாசத்தை நீக்கி பதியாகிய இறைவனை அடைய வேண்டும்.

சைவசமய இலக்கியங்களாகப் பன்னிரு திருமுறைகள் அமைகின்றன. மறைந்து கிடந்த தேவாரப் பாடல்கள் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டு கோவில்களில் ஓதப்பட்டன. இதைக் கண்காணிக்க தேவார நாயகம் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார்.

கோவில்களில் நாள்தோறும் விளக்கேற்றவும், தேவாரம் பாடவும், திருவிழாக்கள் நிகழ்த்தவும் மன்னர்களும் பொதுமக்களும் மானியம் வழங்கினர். சைவ வைணவ கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலமானியங்கள் தேவதானம் எனப் பெயர் பெற்றன.

தமிழ் வைணவர்களின் புனித நூலான நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற தொகுப்பு சோழர் காலத்தில்தான் உருப்பெற்றது.

பாண்டியர் காலம் (கி. பி. 13ம் நூற்றாண்டு)

சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவான பாண்டியப் பேரரசு சோழப் பேரரசைப் போன்றே மண்டலம், நாடு, கூற்றம் ஆகிய ஆட்சிப் பிரிவுகளைக் கொண்டிருந்தது.

பல்லவர் காலத்தைப் போன்றே சோழர் காலமும் வேளாண்மையை மையமாகக் கொண்ட பெருமளவிலான கிராமங்களை அடிப்படை அலகாகக் கொண்டிருந்தது. வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது.

நெசவு, எண்ணெய் எடுத்தல், வெல்லம் தயாரித்தல், உப்பு விளைவித்தல் கிய தொழில்கள் நிகழ்ந்தன. பாண்டியர் ஆட்சியில் சிறப்புமிக்க தொழிலாக முத்து குளித்தல் விளங்கியது.

உரோம் நாட்டிற்கு இம்முத்துக்கள் ஏற்றுமதியாகி தங்கத்தைக் கொண்டு வந்தன. மார்கோபோலோ என்ற இத்தாலி நாட்டு சுற்றுப் பயணி மாரவர்மன் குலசேகரன் என்ற பாண்டிய மன்னன் 1200 கோடி பொன்னைச் சேமித்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கொலைத் தண்டனை பெற்ற கைதிகள் முத்து குளித்தலில் ஈடுபடுத்தப்பட்டனர். வாணிபத்தின் பொருட்டு இங்கு வந்த அரேபியர்கள் இங்கே தங்கள் சமயத்தை பரப்பினர்.

பாண்டிய மன்னனின் அரசவையில் இசு(ஸ்)லாமியர் சமயத்தைச் சார்ந்த அமைச்சர் ஒருவர் இடம் பெற்றிருந்தார்.

பாண்டியர்களின் கொற்கை துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. மணிக்கிராமம், அஞ்சு வண்ணத்தார் என்ற வணிகச் சங்கங்களும் நானாதேசிகன் என்ற பெயரில் அயல்நாட்டு வாணிபம் மேற்கொண்ட குழுவும் இருந்தன.

அரேபிய நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. இது குறித்து வசப் என்ற அரேபியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"அந்தக் குதிரைகள் வந்து இறங்கியதும், அவற்றிற்குப் பச்சை வாற்கோதுமையைத் தருவதற்கு மாறாக, வறுத்த வாற்கோதுமையையும் வெண்ணெய் சேர்த்துச் சமைத்த தானியத்தையும் தீனியாகப் போட்டுக் காய்ச்சிய ஆவின் பாலைக் குடிப்பதற்குக் கொடுக்கிறார்கள்.

இது மிகவும் விசித்திரமான செயல். லாயத்தில் முளைகளை அடித்து, குதிரைகளை அவற்றோடு கயிற்றால் பிணைத்து, அங்கேயே அவற்றை 40 நாள் விட்டு விடுகிறார்கள். அதனால் குதிரைகள் கொழுத்துப் பருத்துப் போகின்றன.

பின்னர், அவற்றிற்குப் பயிற்சியளிக்காமலும் அங்கவடி முதலிய குதிரைச் சாமான்களைப் பூட்டாமலும், அவற்றின் மீது ஏறியுட்கார்ந்து இந்திய வீரர்கள் அவற்றைப் பிசாசைப் போல் ஓட்டுகிறார்கள்.

அவற்றின் வேகம் புரக்கின் வேகத்திற்குச் சமமாயிருக்கிறது. மிகுந்த வலிமையும் வேகமும் சுறுசுறுப்பும் உடைய புதிய குதிரைகளும் வெகு விரைவில் வலிமையற்ற, வேகமற்ற, பயனற்ற, மதியற்ற குதிரைகளாய் மாறிவிடுகின்றன.

அதாவது, அவை எதற்கும் உதவாத இழி நிலையை எய்தி விடுகின்றன. சாட்டையடி வாங்காமலே மிக வேகமாக ஓடக்கூடிய வலிமைமிக்க அந்தக் குதிரைகள் இந்நாட்டுத் தட்பவெப்ப நிலையைத் தாங்க மாட்டாமல் வலியிழந்து வாடிப் போகின்றன.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.


Monday 12 November 2012

தமிழ் இலக்கியத்தில் நீர் மேலாண்மை..!

வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது (குறள்-16) என்கிறார் வள்ளுவர். அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர். மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது. இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார். 

"இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப
மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்''
(வரி.26-28)

இப்பாடலடியில், "மழை பிணித்து ஆண்ட மன்னவன்' என்பதன் பொருள், முறையாகப் பெய்யும் மழை நீரை ஏரி, குளங்களில் சேமித்து அவற்றைத் தக்க முறையில் பயன்படுத்தி, நாட்டை வளம்பெறச் செய்யும் மன்னன் இவன் என்பதாகும்.

இதே போல மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாய கடமை என்பதைப் புறநானூற்றுப் பாடலில்,

"நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம இவன் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே''
(புறம்-18,28-30)

என்று புலவர் புலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துப் பாடியுள்ளார். இதன் பொருள், நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும். 

"அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ''
(புறம்.118)

எனக் குறிப்பிடுவதன் மூலம் ஏரி எந்த வடிவில் இருக்க வேண்டும் என்பதைப் புறநானூறு வழி அறிய முடிகிறது. ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால், அதிகநீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும்போது ஏற்படும். இது ஏரி வடிவமைப்பில் மிகவும் சிக்கனமான வடிவமைப்பாகும்.

சிறுபஞ்ச மூலத்தில் குளம் அமைக்கும் முறை பற்றி காரியாசான் கூறியுள்ளார். அதில், பொதுக்கிணறு அமைத்தல், வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் வெளியேறும் கலிங்கு, தூம்பு போன்றவைகளை அமைப்பவர் சொர்க்கத்துக்குப் போவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகத்தில், நீர் வரும் வரத்துக்கால் நன்கு அமையாத குளம் இருப்பின் அதனால் பயன் குறையும் என்ற செய்தியை,

"வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை யுண்ணாக் குழவியும்
சேய்மரபில் கல்விமாண் பில்லாத மாந்தரும்
இம்மூவர் நல்குரவு சேரப்பட்டார்''
(83)

என்று, தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அற்ற நிலையில் உள்ளவர்களும் எப்படி சிறக்க முடியாதோ, அதுபோல் வாய் நன்கு அமையாத குளமும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மிகுதியாக வரும் ஆற்று வெள்ளநீரை தம்முள் அடக்கிக் கொள்ளக்கூடிய பெரும் ஏரிகள் இருப்பது ஒரு நாட்டுக்குச் சிறப்புத் தரும் என்பதை, "யாறுள் அடங்குங் குளமுள வீறுசால்' என்று நான்மணிக்கடிகை குறிப்பிடுகிறது. இப்பாடலில் குறிப்பிடப்படும் ஆறு உள் அடங்கும் குளம் என்ற சொற்றொடர், நீர் மேலாண்மைத் திறத்தின் ஒரு முக்கிய வெளிப்பாடாகும்.

பெரு வெள்ளம் ஏற்படும் காலங்களில் அந்நீரை உரிய முறையில் சேமித்து, நீர் இல்லாத காலங்களில் பயன்படுத்தக்கூடிய நிகழ்வை இச்சொற்றொடர் எடுத்துக்காட்டுகிறது. கண்மாய்களையும், குளங்களையும் காத்து நின்ற அதாவது, முறையாகப் பராமரித்த செய்தியை அகநானூற்றுப் பாடல், 

"பெருங்குளக் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயில்
மறந்தனளே''
(25)

என்கிறது. அதாவது, பனியிலும், மழையிலும், அடர்ந்த இருள் சூழ்ந்த நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன்போல, குழந்தையைப் பாதுகாக்க அன்னை தன் தூக்கத்தை மறந்தாள் என்பது இப்பாடலின் பொருள்.

சிறு குழந்தையைத் தாயானவள் கண்ணை இமை காப்பதுபோல் காத்த செயலும், நீர் நிலைகளைக் காக்கும் செயலும் ஒன்றாகவே எண்ணப்பட்டு வந்துள்ளது.

பழந்தமிழ் நூல்களில் இத்தகு நீர்நிலைகளிலிருந்து மிகு நீரை வெளியேற்ற "கலிங்கு' என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். இக்கலிங்கு குறித்த தகவல்கள் மிகுதியாக இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன.

இத்தகு தொழில் நுட்பம் நம் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான "அறவணர் தொழுத காதை' என்னும் பகுதியில், புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,

"பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும்''
(1384-87)

என்கிறார். "சுருங்கை' என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய். அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும். அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருள்.

1,600 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே "குமிழித்தூம்பு' என்பதாகும். பழந்தமிழர்களின் நீர் மேலாண்மைச் செயல்பாட்டில் இந்தக் "குமிழித்தூம்பு' அறிவியல் சார்ந்த மிக நுட்பமான, நேர்த்தியான பயன்பாடுடைய படைப்பாகும்.

இதேபோல் பெருக்கெடுத்து மிகுவேகத்தில் ஓடிவரும் நீரை குறுக்கே தடுப்பணை அமைத்துத் தடுப்பதற்கு மிகுந்த தொழில்நுட்ப அறிவு தேவைப்படும். வருகிற நீரைக் கற்கள் கொண்டு தடுப்பதால், இத்தகு தடுப்பணை "கற்சிறை' எனும் அழகுத் தமிழ்ச் சொல்லால் வழங்கப்பட்டுள்ளது.

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், "பெருகிவரும் படையை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப் போராடுவதுபோல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது' (வரி:725-726) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர்.

தமிழ் இலக்கியங்கள் சுட்டும் நீர் மேலாண்மைச் செய்திகள் ஏதோ கற்பனையான ஒன்று என்று யாரும் எண்ணிவிட முடியாது. அதில் கூறப்படும் செய்திகள், அறிவியல் சார்ந்தவையாக இருப்பதை கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு உறுதி செய்ய முடிகிறது. பழைய தொழில்நுட்பங்களுடன் புதியவைகளையும் இணைத்து நீரைச் சேமித்தால் எதிர்காலத்தில் கவலைப்படும் அவசியம் இருக்காது.!!!

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Saturday 10 November 2012

சுவசுதிக் கிணறு.....!

எட்டாம் நூற்றாண்டில் கம்பன் அரையன் என்ற மன்னனால் கட்டப்பட்ட சுவசுதிக் வடிவ கிணறு திருச்சிராப்பள்ளியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெல்லாறை என்ற ஊரில் அமைந்துள்ளது.


இந்த கிணற்றில் இறப்பிலா வாழ்கையை பற்றி பாடல் வரிகள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கிணற்றை "மற்பிடுகு பெருன்கிணறு" என்றும் கூறுகின்றனர்...

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Friday 9 November 2012

அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்!

ஈழத்தமிழரும்(நாகர்), இயக்கரும் இன்றைய இலங்கையை ஆண்டு வரும் வேளையில், மற்றைய தமிழ் இராச்சியங்கள் பெரும் புகழோடும், கப்பல்கள், பெரும் துறைமுகங்கள் (பூம்புகார்) என்று வாழ்ந்து வந்தார்கள். அந்த வேளையிலே தான் சுமார் 5500 ஆண்டுகள் முன் அளவில் மகாபாரத யுத்தம் நடந்ததாக நம்பப் படுகின்றது.


இது துவாபர யுகத்தின் முடிவும் கலியுகத்தின் ஆரம்பமும் ஆகும். இக்கால கட்டத்தில் உலகில் பெரும் அழிவுகள் நடைபெற்றது. போர் மூலம் மட்டும் அல்லாது வேறும் பல வழிகளில், அதாவது இவ்யுத்தம் முடிந்த பின்பு கடல் அனர்த்தம் ஏற்பட்டு உலகில் இருந்த பெரும் வளர்ச்சி கண்ட பட்டினங்கள் யாவற்றையும் கடலில் இழுத்துக் கொண்டது.

இவ் வேளையிலே துவாரக மாநகரமும் கடலில் மூழ்கியது என்பதை நாம் அறிவோம். தமிழர்களின் அரும் செல்வங்களான மாமதுரை, பூம்புகார், யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி கூடஇவ்வாறு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. அதன் பின் எஞ்சிய மக்கள் காடுகளாய் இருந்த நிலங்களைவெட்டி இன்றைய நகரங்களை அமைத்தனர்.

இதிலே தமிழரின் பெரும் கண்டுபிடிப்புக்கள், அரிய நூல்கள் என்று இன்னும் எவ்வளவோ சொத்துக்கள் அழிவுற்றன. பல சதுர் யுகங்களிற்கு முன்பு இன்றைய இந்தியா முன்னாள் ஒரு தீவாக இருந்தது. அதாவது இந்த உலகத்தின் தனி ஒரு நிலக்கண்டம் பல ஓடுகள் கொண்டதாய் இருந்தவை. 

அந்த ஓடுகள் விலகி நகரத் தொடங்கவே இந்தியா, இலங்கை, போன்ற இத்தகைய நாடுகள் ஒரு கண்டமாகவும், மற்றைய கண்டங்கள் தனித்தனியாகவும் பிரிந்து சென்றன. இவ்வாறு பிரிந்து சென்ற கண்டங்களில்(ஓடுகள்) ஒன்றான ஆசிய நாட்டு ஓட்டுடன், இந்தியநாட்டு ஓடு மோதியது. அந்த மோதலில் இரு நிலங்களும் குவிந்து இமயம் உருவாகியது, 

அது உலகில் உயரமாகவும் மாறியது. இங்கே நான் குறிப்பிட்டது விஞ்ஞானரீதியானது. ஏன் நான் இச் சம்பவத்தை குறிப்பிட்டேன் என்றால் இந்த இந்திய தீவே பல சதுர் யுகங்களின் முன் குமரிக்கண்டமாக விளங்கியது என்பதை குறித்துக்காட்டுவதற்கு. இன்னொரு கண்டம் இருந்ததாக புராணங்களிலோ அல்லது விஞ்ஞானரீதியாகவோ இல்லை.

ஆகவே தீவாக இருந்த இந்திய நாட்டையே குமரிக்கண்டம் என்று அழைத்து இருக்கலாம் தவிர இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் பலர் கூறுவது போல் இன்னொரு கண்டம் இருந்திருக்க சந்தர்ப்பம் இல்லை. அடுத்த காரணம் காவேரி, வைகை போன்ற ஆறுகள் முக்கிய நகரங்களின் வழியாகவே கடலில் கலந்தது.

இன்றைய தமிழ் ஆய்வாலர்கள் சொல்லுகின்ற வரைபடத்தில், இவ்வாறு அங்கே அவ் ஆறுகள் ஓடுவதாக காட்டப்பட்டாலும் இன்றைய இந்திய நிலப்பரப்பில் ஓடுகின்ற இவ்விரு ஆறுகளும் எவ்வாறு பண்டைய தமிழ் நூல்களிலும், புராணங்களிலும் சொல்வது போன்று அதே இடத்திலிருந்திருக்க முடியும்?

தமிழ் ஆய்வாலர்கள் சொல்லும் குமரிக்கண்டம் கடலில் மூழ்கியிருந்தால் எவ்வாறு ஆறுகள் இங்கிருக்க முடியும்?

ஆகவே விஞ்ஞானம், தமிழ் நூல்கள், புராணங்கள் ,நிலப்பரப்பு ,ஆறுகள் மற்றும் பழைய நகரத்தின் எச்சங்கள் என்று பார்ப்போமானால் இன்றைய இந்திய நாடே பழைய குமரிக்கண்டம் ஆகும்!

இராமேசு(ஸ்)வரம் தொடக்கம் கோடிக்கரை(கோடியாக்கரை) வரை உள்ள நிலப்பரப்பு கடலால் அரிக்கப்பட்டு உள்வாங்கப்பட்டடிருக்கும். அங்கே தான் வைகை ஆறும் கடலில் வந்து கலக்கின்றது. அவ்வாறு அரிக்கப்பட்ட பகுதியே தமிழரின் பழம்பெரும் நகராகிய மதுரை ஆகும்.

அத்துடன் கடலில் மூழ்கிய நகரங்களின் பெயர்கள் இன்று அதே கரையோர கிராமங்களின் பெயர்களாக இருக்கின்றது(தமிழ் நாட்டு வரை படத்தை உற்றுப் பார்த்தால் கடலால் அரித்து செல்லப்பட்ட நிலம் இருந்த இடம் தெரியும்). காவேரி ஆறு கடலில் கடக்கும் இடமே தமிழரின் மாபெரும் தலைநகர் பூம்புகார் இருந்து கடலில் மூழ்கிய இடமாகும்.

இவ்வாறு கடலுக்குள் இழுக்கப்பட்ட நகரங்களில் மகாபலிபுரமும் (மாமல்லபுரம்) ஒன்று. காவேரி பாய்ந்து வரும் பகுதியிலுள்ள பிரமாபுரம் (சீர்காழி) ஆலயம் பல சதுர் யுகங்களின் முன்தோன்றிய வரலாறு உடையது.  

இன்றும் அவ் ஆலயம் அங்கேயே உள்ளது. அவ்விடம் கடல் நீர் சென்று திரும்பியதாக தோணியப்பர் ஆலய வரலாறு கூறுகின்றது. இவ்வாறே துவாபர யுகத்தின் முடிவில் அழிவுகள் ஏற்பட்டன.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Thursday 8 November 2012

வந்தார்கள்-வென்றார்கள்........!


இந்திய சரித்திரத்தின் வீரப்புருசர்கள் தற்காப்பு யுத்தத்தையே தூக்கிப் பிடித்தபோது, எதிரிகள் மீது படையெடுத்து அவர்களைப் பந்தாடிய இரண்டு தமிழர்கள் இருந்தார்கள். வடக்குப் படையெடுப்புகளால் முடக்கப்பட்டபோது, தெற்கை எட்டுத்திக்கிலும் பட்டொளி வீசிப் பறக்கும் பளபளக்கும் சாம்ராச்சியத்தை உருவாக்கி தகதகவென மின்னும் தந்தையும், மகனும் வந்தார்கள்.

அவர்கள் வாள் வீச்சு வடக்கையும் தாக்கியது, கடல் கடந்தும் தாவியது. வேழம் அவர்களுக்கு வெள்ளாடாகவும், மலைகள் அவர்களுக்கு மண்மேடாகவும் காட்சியளித்தன.

‘வடமேற்கில் தொடர்ந்து கசி(ஜி)னி முகமது படையெடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான் ஒரு மாவீரன் இந்தியாவின் தெற்குப் பகுதியிலிருந்து ஒரு பெரும் படையுடன் கிளம்பி வடக்கு நோக்கி வந்து சேர்ந்தான். அவனுடைய வீரர்களை யாராலும் எதிர்த்து நிற்க முடியவில்லை.

இன்றைய கைதராபாத், ஒடிசா, வங்காளம் எல்லா நாடுகளும் அந்த மன்னன் வீரத்தின்முன் மண்டியிட்டன’ என்று, ‘வந்தார்கள்-வென்றார்கள்’ என்ற சரித்திரம் படைத்த சரித்திர நூலில் மதன் குறிப்பிடுகிறார். அவர் எழுப்பியுள்ள வினாவைப்போல கசினியும், ராசேந்திர சோழனும் சந்தித்திருந்தால், இந்தியாவின் வரலாறு வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும்.

ஆனால் ராசேந்திரனின் ஆர்வமோ மலேயா, சுமத்திராவைக் கைப்பற்ற வேண்டும் என்பதாக இருந்தது. எவரும் சிந்திக்காத திசையில் ராசேந்திர சோழனால் மட்டும் எப்படி யோசிக்க முடிந்தது?

வாளைச் சுழற்றிக்கொண்டு வான் முட்டும் வீரமுழக்கம் இட்டுக்கொண்டு எப்படி வங்கம் வரை செல்ல முடிந்தது?

காரணம் எளிது. எதிரியாய் எண்ணி அவர்கள் பலங்களைத் துல்லியமாகக் கவனித்து, அவற்றை உடைக்கும் வலிமையை உருவாக்கிக் கொண்டான். 

வெளிநாடுகளில் சிம்ம கர்ச்சனை புரிந்து சீறி எழுந்து அந்நாட்டு வீரர்களை துவம்சம் செய்ய அவனால் எளிதில் முடிந்ததற்கு அவனுடைய இந்த உத்தியே காரணம்.

போர் என்பது உடல்களுக்குள் நடக்கிற யுத்தம் மட்டுமல்ல, அது மனங்களிடையேயும் நிகழும் மல்யுத்தம் என்பதை அவன் துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்தான். அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் முன்கூட்டியே ஊகித்து அவற்றைக் கச்சிதமாக உடைத்துத் தகர்த்தவன் அவன்.

தந்தை ராசராசன் என்கிற மாபெரும் நிர்வாகி உருவாக்கித்தந்த அடித்தளமும், ஈட்டிய செல்வப்பொதியும், உண்டாக்கிய நிலநிர்வாக முறையும், அடிக்கல் நாட்டிய கடற்படையும் அவனுக்குப் பரந்துபட்ட வாய்ப்பை உருவாக்கியது.

அதில் மளமளவென கட்டுமானம் செய்து உயர்ந்த கோபுரத்தை அவனால் எழுப்ப முடிந்தது. ராசேந்திரசோழனின் சாகசங்கள் சுவாரசியமானவை. அவனும் அவன் தந்தையும் ராச்சி(ஷ்)டிரகூடர்களைப் போர்க்களத்தில் ஓட ஓட விரட்டியவர்கள்.

வடமேற்குக் கர்னாடகா, தெற்கு மகாராச்சிடிரம் ஆகியவற்றில் சோழ சாம்ராச்சியத்தை விரிவுபடுத்தினர். துங்கபத்ராவைத் தாண்டி சாளுக்கியர்களை வீழ்த்தினார்கள். பனவாசி, மனயகேடா நாட்டு மன்னர்கள் சோழர் படைகள் வருவதைக்கண்டதும் பயந்துபோய் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒளிந்து கொண்டார்கள்.

வடக்கு கைதராபாத்தையும் கைப்பற்றினர். பராந்தகன், பாண்டியர்களைப் பந்தாடிய போது, பயந்து ஓடிய பாண்டிய மன்னன் இலங்கை மன்னனிடம் மகுடத்தை ஒப்படைத்து ஓடிப்போனான். அதைத் தன் படையெடுப்பில் மீட்டான் ராசேந்திரன். சிங்களமன்னனின் மகுடத்தைத் தட்டிப்பறித்து அவனைக் குறுகச் செய்தான்.

சிங்கள மன்னன் ஐந்தாம் மகிந்தனைக் கைது செய்ய... அவன் 12 ஆண்டுகள் சோழர் சிறையில் இருந்து இறந்துபோனான். பாண்டியர்களையும், சேரர்களையும் அமுக்கி வைத்துக் கப்பம் கட்டும் நாடுகளாக மாற்றினான். பிறகு தன் மகனை யெ(ஜ)யவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்கிற பெயரில் மதுரையின் ஆளுநராக நியமித்தான்.

ராசேந்திரன் கலிங்கத்தை வென்றான். அப்போது கோதாவரிக்கரையின் படையின் பின்வரிசையில் அவனே நின்று பகைவர்கள் தாக்காதபடி பாதுகாப்பு வளையம் அமைத்தான்.

வங்க மன்னன் மகிபாலாவை போர்க்களத்தில் வென்றான். ராசேந்திர சோழன் இயல்பாகவே துணிச்சலும், வீரமும் கொண்ட தளபதி. போரின் நுணுக்கங்களையும், அசைவுகளையும் சரியாகக் கணிக்கும் ஆற்றல் பெற்றவன்.

எதற்கும் அஞ்சாத தைரியம் கொண்ட அவன் எப்படிப் போர்க்களத்தில் அவனை எதிர்த்து வந்த மதம் பிடித்த யானையை தனியொரு வீரனாக வெட்டிச் சாய்த்தான் என்பதை ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். அதுவரை தமிழகத்தில் படை திரட்டுவது என்கிற பழக்கமே இருந்தது. ஆனால் ராசராசன் நிலையான படையை உருவாக்கி, அதில் இருக்கும் வீரர்களை செதுக்கி செதுக்கி சிறந்த திறன் கொண்டவர்களாக மாற்றினான். 

அவனுடைய மகனும் அவர்கள் எப்போதும் கூர்மைப்படுத்தப்பட்ட குத்தீட்டியாகத் திகழும்படி போர்களை வடிவமைத்தான். ராசேந்திரன் காலத்தில் சோழப்படை துளியும் ஓய்வின்றி தொடர்ந்து போர்க்களத்திலேயே கழித்தது. ஆனாலும் அவர்கள் அலெக்சாண்டருடைய வீரர்களைப்போல ‘வீட்டை அடைய ஆவல் கொண்டு’(Home Sick)என்று அடம்பிடிக்கவில்லை. 

ராசேந்திரனுடைய வங்கப்படையெடுப்பு அவனுடைய கடற்படை தெற்காசிய நாடுகளுக்குப் படையெடுப்பதற்கான முன்னோட்டமாகவே இருந்தது. பிற்காலச் சோழர்கள் இந்தியப் பெருங்கடலையும், வங்காள விரிகுடாவையும் நிலப்பரப்பாக நினைக்குமளவு கப்பல் கட்டும் பணியில் தேர்ந்து விளங்கினர்.

கடலும், காற்றும் அவர்கள் கலங்களுக்குக் கட்டுப்பட்டன. அவர்கள் கடல்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இரவும் பகலும் சோழக் கப்பல்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு, வணிகக்கப்பல்கள் பத்திரமாகப் பயணிக்கப் பாதுகாப்பு அளித்தன. அதுவரை அப்படியொரு அமைப்பு தமிழகத்தில் விரிவாக ஏற்படுத்தப்படவில்லை.

வர்த்தகம் செழிக்க ஏற்படுத்தப்பட்ட நாவாய், விரிவுபெற்று சக்தி வாய்ந்த கடற்படையாக உருவம் பெற்றது. ‘சோழர்கள் கடலின் தோழர்கள்’ என்ற நிலை ஏற்பட்டது. பத்தாம் நூற்றாண்டின் பின்பாதியில் மூன்று புதிய சக்தி வாய்ந்த பேரரசுகள் உலகில் உதயமாயின.

எகிப்தில் பாட்டிமிட்சு(ஸ்), சீனத்தில் சாங், இந்தியாவில் சோழர்கள். மூவருமே இந்தியப் பெருங்கடல் வணிகத்தில் பெருமளவு ஈடுபட்டனர். வரலாற்று ஆசிரியர்கள், சோழர்கள் தெளிவாகவும், உறுதியாகவும் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து கடற்படையெடுப்பை நடத்தியதாக சிலாகிக்கிறார்கள்.

அவர்கள் ஒருபோதும் அவசரக் கோலத்தில் படையெடுப்பு நிகழ்த்தவில்லை. எந்தப் போர்க்களத்திலும் சின்ன சிராய்ப்புகூட ஏற்படாமல் சோழப்படை தொடர்ந்து வெற்றிக்கொடியையே நாட்டியது. இலங்கையும், மாலத்தீவுகளும் அவர்களுடைய கடல் வணிகத்திற்கு முக்கிய மையங்களாகத் தேவைப்பட்டன.

ஒரிசா, வங்கம் போன்ற நாடுகளும் அவர்களுடைய கடல்வணிகத்தைத் தடைசெய்து அவ்வப்போது வியாபாரிகளுக்குத் தொந்தரவு கொடுத்து வந்ததால் ஏற்பட்ட எரிச்சலால் அவற்றை அடித்து நொறுக்கி, ‘வாலைச் சுருட்டிக்கொண்டு இருங்கள், இல்லாவிட்டால் நான் வாளை உயர்த்தவேண்டியிருக்கும்’ என்று எச்சரிப்பதற்காகவே ராசேந்திரன் படைகளுடன் திக்விச(ஜ)யம் செய்தான்.

சோழர்களை அனுசரித்துச் சென்றால் மட்டுமே அமைதியாக வாழமுடியும் என்கிற சூழல் தெற்காசிய நாடுகளுக்கு ஏற்பட்டது.

ஆர்ப்பரிக்கும் அலைகள் வழியிலுள்ள நாடுகளில் ஆழிப்பேரலை வந்ததைப்போல் ஆரவாரம் நிகழ்த்தும். பிரளயம் போன்ற பேரோசையுடன் கம்பீரமாய் நீரைக் கிழித்துச் செல்லும். சோழர்கள் நாவாய் புறப்பட்டால், கடலையே ஆக்கிரமித்துக்கொண்டு மீன்கள் நீந்தக்கூட இடமில்லாத அளவு மரக்கலங்கள் அணிவகுக்கும்.

அவற்றைப் பார்த்த மாத்திரத்திலேயே எதிரிநாட்டு மன்னர்கள் நடுங்கி ஒளியுமளவு அவை காட்சியளித்தன. அங்கோர்வாட் மன்னன் முதலாம் சூர்ய வர்மன் விசுவாசத்தை நிரூபிக்க, எதிரிகளை வதைக்க உபயோகப்படுத்திய அவனுடைய சொந்தத்தேரை ராசேந்திரனுக்குப் பரிசாக அளித்து தாஜா செய்தான்.

கடாரத்தை ஆண்ட சிறீவிசய ராச்சியத்திற்கும் சோழர்களுக்குமிடையே நட்புறவு இருந்துவந்தது. ராசராசன் காலத்திலிருந்து விலையுயர்ந்த பரிசுகளைச் சோழர்களுக்கு அளித்து, அவர்களிடம் கடார மன்னர்கள் கடமைப்பட்டவர்களாகவே காட்டிக்கொண்டனர்.

1016ம் ஆண்டு சிறீவிசயம் ஜாவாவை வீழ்த்தியவுடன், சீனத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு பெரும் சக்தியாக ஊடுருவப் பார்த்தார்கள். ராசேந்திரன் சீனத்திற்கு 1020ம் ஆண்டு ஒரு தூதுக்குழுவை அனுப்பி, சாங் சாம்ராச்சிய மன்னன் எந்த வகையிலும் கடற்படையெடுப்புக்கு ஊறு விளைவிக்காதவாறு பார்த்துக்கொண்டான்.

அதுதான் அவனுடைய ராசதந்திரம். ஏற்கெனவே 1022-23ம் ஆண்டுகளில் கலிங்கம் மூலமாக கங்கைவரை சென்று எச்சரிக்கை செய்து, தான் எடுக்கவிருக்கும் படையெடுப்புக்கு இடைஞ்சலில்லாமல் பார்த்துக்கொண்டான். புலிவேட்டைக்குப் போகும்போது, எலிகள் வந்தால் அவற்றை நசுக்க சக்தி விரயமாகுமே என்பதால்தான்.

1025ம் ஆண்டு சிறீவிசயம் நாட்டிற்குச் சோழக் கடற்படை புறப்பட்டது. ஒவ்வொரு கப்பலிலும் திறம் வாய்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சோழ வீரர்கள். வாளைச் சுழற்றுவதிலும், அம்பில் பந்தத்தைச் சுற்றி நெருப்புக்கோளங்களை குறி தவறாமல் எறிவதிலும் அவர்கள் கில்லாடிகள்.

உணவு, உடை, ஆயுதம் என்று நுணுக்கமாகச் செய்யப்பட்ட அத்தனை ஏற்பாடுகளுடன் அந்தப் படையெடுப்பு முடுக்கிவிடப்பட்டது. ஏற்கெனவே பரிச்சயமான வழியில், ஏதோ பள்ளிக்குப் போவதைப்போல பதற்றமில்லாமல் பயணம்.

சோழர்கள் வழியில் மலாய, சுமத்ரா என்று அவர்கள் அத்தனை துறைமுகங்களையும் அடித்து நொறுக்கியவாறு முன்னேறினர். சீனத்துடன் தொடர்பில்லாமல் இருந்த அந்த நாடுகள், சீன உதவியையும் கோரமுடியவில்லை.

நேர்த்தியாக வாள் வீசும் வாள் பெற்ற கைக்கோளர்களும், குறி தப்பாமல் அம்பை இலக்கில் சரமாரியாகச் செலுத்தும் வில்லிகளும் எதிரிகளை வெட்டிச்சாய்த்தும், குத்திக்கிழித்தும் கடலைச் சிவப்பாக்கும் வேலைகளைச் செய்தனர்.

கடாரம் படையெடுப்பின்போது ராசேந்திரனே சோழப் படையின் தளபதியாய் இருந்தான். சிறீவிசய சாம்ராச்சியம் சோழப் படையெடுப்பில் ஆடிப்போனது. 

சோழர்களின் மரக்கலங்களை எதிர்த்து புறப்பட்டு வந்த சிறீவிசயக் கப்பல்கள் மின்னல் வேகத்தில் பாய்ந்துவந்த எரியம்புகளாலும், தீப்பந்தங்களாலும் சேதமடைந்து சின்னாபின்னமாயின.

ராசேந்திரனின் வீரர்கள் விட்ட அம்புகள் கப்பல் செலுத்தியவர்களின் கழுத்திற்குக் குறி வைத்தன. சீறிப் பாய்ந்த சோழவீரர்கள் அந்தப் படகில் இருந்த கடார சிப்பாய்களைக் கண்டந்துண்டமாக வெட்டினர். கடார சிப்பாய்களின் கால்சராய் நனைய கடல் மட்டம் உயர்ந்தது.

சோழப்படையின் வேகமும், புயல் போன்ற தாக்குதலும் அவர்களை கதிகலங்க வைத்தன. கடாரத்தையும், சிறீவிசயத்தையும் சோழர்படை சூறையாடியது. அந்நாட்டு மன்னனே கைதியாகும் சூழல் ஏற்பட்டது. சங்க்ரம விசயதுங்கவர்மன் சிறைபிடிக்கப்பட்டான்.

ராசேந்திரனின் கால்களில் விழுந்து விடுதலை பெற்றான். கப்பற்படை திரும்பி வரும் வழியில் மலேயா, சமிரி, நிக்கோபார் தீவுகளையெல்லாம் வெற்றிபெற்றுத் திரும்பியது.

ராசேந்திரனுடைய தொடர் வெற்றி, படை பலத்தாலோ உணர்ச்சியும், உள்ளுணர்வு மிக்க வீரர்களாலோ மட்டும் விளையவில்லை. அது நேர்த்தியான ஒருங்கிணைப்பின் பலன். பல்லாண்டுகள் சிறிது சிறிதாக வடிவமைக்கப்பட்ட வெற்றிக்கோட்டை.

எதிரிகள் என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே ஊகித்து அந்தத் தடைகளை அப்புறப்படுத்திவிட்டு சுற்றுலா போவதைப்போல அவன் படைகள் சென்றுவர ஏற்பாடுகள் செய்தான்.

அவனுக்கு அவனே எதிரியாய் எண்ணி செயல்பட்டதால், எதிரிகள் அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவன் பெருமைக்காகப் படையெடுக்கவில்லை.

அந்த நாட்டின் மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்கிற எண்ணம் ஒவ்வொரு வீரனின் உள்ளத்தில் ஏற்பட்டதாலும், பொருளாதாரம் மேம்படும் பொது நோக்கமிருந்ததாலும் அவன் வெற்றியைத் தவிர வேறெதையும் சந்திக்கவில்லை.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Wednesday 7 November 2012

யப்பான் மொழியின் மூலம் தமிழ்

யப்பான் மொழியின் மூலம் தமிழ் மொழி? இயற்கையும் சரி, வரலாறும் சரி என்றுமே நமக்கு புரியாத புதிராகவே இருக்கும். சில வரலாற்று நிகழ்வுகள் நமக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தரக்கூடியவை. யாருமே இதுதான் நடந்தது என உறுதிபடக்கூற முடியாது.

ஆனால் ஆராய்ச்சி மூலம் கிடைக்கும் பதில்கள் என்றுமே சுவாரசியத்துடன் ஆவலையும் கொடுப்பவை. அதில் ஒன்றுதான் யப்பான் மொழியின் மூலம் எந்த மொழி? தமிழா? யப்பான் மொழியின் எழுத்துமுறை சீன மொழியை அடிப்படையாகக் கொண்டது.

அவ்வாறு சீன எழுத்துமுறை கலப்பதற்கு முன்பாகவே (கி.மு.500 - கி.பி 300களில்) 7000 கிலோமீட்டர் பயணம் செய்து யப்பானில் அரிசி விளைவிக்கும் முறையைக் கற்றுக்கொடுக்க சென்ற தமிழர்கள் மொழியையும் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும் அல்லது யப்பானிய மொழி தமிழிலிருந்து சொற்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பது ஓனோ அவர்களின் வாதம். அரிசியை உலகிற்கு (கிழக்கு நாடுகளுக்கு) விளைவிக்க கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள்.

இதில் எவ்வித ஐயமும் கிடையாது. யப்பானிய மொழியானது கி.மு.200க்கு முந்திய காலத்தில் ஆசியாவிலிருந்தோ அல்லது அருகிலுள்ள பசிபிக் தீவுகளிலிருந்து வந்தவர்களிடமிருந்தோதான் தோன்றியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. (ஆதாரம் - விக்கிபீடியா)

திருமணத்திற்கு பெண் பார்க்கும் படலம்: முந்திய காலங்களில் யப்பானில் பெண் பார்க்க மூன்றுநாட்கள் பெண்ணின் வீட்டிற்கு செல்வர். மூன்றாவது நாள் பெண்வீட்டார் அரிசி இனிப்புப்பண்டம் (SWEET CAKE) கொடுத்தால் திருமணத்திற்கு சம்மதம் என்று பொருள்.

இது தமிழில் பழங்காலம் மட்டுமல்ல இன்றும்கூட இருக்கிறது. என்ன பெண் பார்க்கும் நாட்கள் ஒன்றாக சுருங்கிவிட்டது. யப்பானிய-தமிழ் மொழியைப்பற்றி ஆராய்ந்த ஓனோ அவர்களைப்பற்றி அறிந்தால் மட்டுமே இதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

தமிழ் ஓசை களஞ்சியத்திலிருந்து அவர் வரலாறு (18.01.2009) தமிழ் - யப்பானிய மொழி பற்றி ஆராய்ந்த அறிஞர் சுசுமு ஓனோ: டோக்கியோவில் 23.08.1919 இல் பிறந்த சுசுமு ஓனோ அவர்கள் பழங்கால யப்பானிய மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக்கொணர்ந்தவர்.

1943ம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 1944ல் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியத் தொடங்கினார். 1952 ஆம் ஆண்டு காக்சுயின் பலைகலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகப் பணியில் உயர்ந்தார்.அந்தப் பணியுடன் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் 1953 இல் விரிவுரை நிகழ்த்தியுள்ளார்.

1960 இல் காக்சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியுயர்வு பெற்றுத் தொடர்ந்து அங்குப் பணிபுரிந்தார். பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு பழஞ்சுவடியை ஆராய்ந்து இவர் வெளியிட்டதைச் யப்பானிய அறிஞர்கள் போற்றி இவருக்கு முனைவர் பட்டம் வழங்கினர்.

இந்த ஆய்வு 1950 இல் ஓர் ஆராய்ச்சி இதழில் வெளிவந்துள்ளதாக அறிஞர் பொற்கோ குறிப்பிடுவார். கியோட்டோ பல்கலைக்கழகம் வழியாக இவர் முனைவர் பட்டம் பெற்றவர்(1952). சுசுமு ஓனோ பழஞ்சுவடிகளை ஆராய்வதில் பேரறிவு பெற்றவர்.

சொல்லாராய்ச்சி, அகராதிகளில் ஈடுபாடு உடையவர். இவர் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட யப்பானிய அகராதியின் படிகள் யப்பானில் பல்லாயிரக்கணக்கில் விற்கப்பட்டன. 1981 இல் இவர் வேறொரு அறிஞருடன் இணைந்து உருவாக்கிய யப்பானிய ஒருபொருட் பன்மொழி அகராதி ஓர் ஆண்டில் இலட்சம் படிகள் விற்றனவாம்.


"யப்பானிய மொழியின் தோற்றம்" என்ற ஒரு நூலை உருவாக்கி 1957 இல் வெளியிட்டவர். இந்த நூல் ஐந்து இலட்சம் படிகள் விற்றனவாம்.இந்த நூலின் வருகைக்குப் பிறகு யப்பான்மொழி பற்றி அறியும் வேட்கை யப்பானியர்களுக்கு உருவானது. ஓனோ அவர்கள் பதினொரு ஆய்வு நூல்களை வெளியிட்டவர்.

ஏழு நூல்களைப் பிற அறிஞர்களுடன் இணைந்து பதிப்பித்துள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். பேராசிரியர் சிங்கிச்சி காசிமொத்தோ அவர்களின் மேல் சுசுமு ஓனோ அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு.அவர் வழியாகவே யப்பானிய மொழியாராய்ச்சியில் ஓனோ அவர்கள் ஈடுபட்டார்.

ஆய்வு ஈடுபாடும் மொழிப்புலமையும் கொண்ட ஓனோ அவர்கள் மொழிவரலாற்று ஆய்வு,இலக்கண ஆய்வு,தொன்மையான யப்பானிய இலக்கிய ஆய்வுகளில் நல்ல ஈடுபாடு உடையவர். 1957ல் அவர் யப்பானிய மொழியின் மூலத்தை ஆராயத் தொடங்கினார். அவர் யப்பானிய மொழியைக் கொரியன் அய்னு மற்றும் அசுடுரேனேசியன் மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தார்.

அந்த மொழிகளுடன் எந்த மரபு சார் தொடர்புகளும் அவரால் வெளிக்கொணர முடியவில்லை. இப்போது இவர் கவனம் திராவிட மெழிகளின் மீது பதிந்தது. பேராசிரியர் இமென்யு மற்றும் பொன். கோதண்டராமன் இவர்களின் தூண்டுதலால் இவர் யப்பான்-தமிழ் மொழியை ஆராயத் தொடங்கினார். 

இரண்டாம் உலகப் போரின் பொழுது கல்வித்துறைக்கு மிகப்பெரிய பங்களிப்புச் செய்ததையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.டோக்கியோ காக்சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியாற்றிய சுசுமு அவர்கள் மொழிக்கல்வி உள்ளிட்ட பல ஆய்வுகளைச் செய்தவர்.

தமிழ் மொழிக்கும் யப்பானிய மொழிக்கும் உள்ள உறவை 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து 1999 இல் தம் ஆய்வை நூலாக வெளியிட்டார். யப்பானிய மொழியில் வெளிவந்த அந்நூல் 20 இலட்சம் படிகள் விற்பனை ஆயின (நாம் நூல்களை அச்சிட்டுவிட்டு நூலகத்துறையின் ஆணைக்கு ஆண்டுக்கணக்கில் காத்துக்கிடப்பதை எண்ணி வருந்துக).

தமிழ் படிக்கத் தமிழகத்திற்கு வந்த சுசுமு ஓனோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிபுரிந்த முனைவர் பொற்கோ அவர்களிடம் முறையாகத் தமிழ் கற்றார். பின்னர் இரண்டு பேராசிரியர்களும் இணைந்து பல்வேறு ஆய்வுகளைச் செய்தனர்.1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகச்சிறந்த ஆய்வு முடிவுகளை வெளியிடும் அளவிற்குச் சுசுமு ஓனோ அவர்களுக்குத் தமிழ் - யப்பானிய மொழி உறவு பற்றிய உண்மைகள் வெளிப்படத் தொடங்கின.

1979 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் யப்பானிய மாந்தவியல் கழகத்தின் சார்பில் "யப்பானிய மொழிகளின் தோற்றம்" என்ற தலைப்பில் ஓனோ அவர்கள் டோக்கியோவில் உள்ள ஆசகி மண்டபத்தில் உரையாற்றினார்.ஆசகி இதழில் இக்கட்டுரை வெளியானது.தமிழ் யப்பானிய மொழிகுறித்து வெளிவந்த முதல் கட்டுரையாக பொற்கோ இதனைக் குறிப்பிடுகிறார்

கெங்கோ என்ற இதழிலும் 1980 தை முதல் புரட்டாசி மாதம் வரை ஓனோ அவர்கள் தமிழ்-யப்பானிய உறவு பற்றி எழுதினார். இதன் விளைவாகத் தமிழ்- யப்பானிய மொழி உறவு பற்றி யப்பான் நாட்டில் ஒரு பரவலான அறிமுகம் ஏற்பட்டது. ஆசகி என்ற நாளிதழில் வெளிவந்த கட்டுரை ஒன்றை யப்பானில் உள்ள இந்தியத்தூதரகம் சென்னைப்பல்கலைக்கழகத்தின் அந்நாள் துணைவேந்தர் முனைவர் தாமோதரனுக்கு அனுப்பியது

இதன்பிறகு துணைவேந்தரின் இசைவுடன் பொற்கோவும் ஓனோவும் இணைந்து தமிழ்- யப்பானிய மொழியாய்வில் ஈடுப்பட்டனர். மடல் வழியாகஆய்வு முயற்சி நீண்டது.இந்த ஆய்வு பற்றி பொற்கோவுடன் கலந்துபேச ஓனோ அவர்கள் தனிப்பயணமாக 03.04.1980 இல் சென்னை வந்தார்.

இரண்டு நாள் உரையாடலுக்குப் பிறகு யப்பான் திரும்பினார். தமிழ் யப்பானிய மொழித்தொடர்பு பற்றிய பல உண்மைகள் புரியத் தொடங்கியதும் யப்பானிய ஒலிபரப்பு நிறுவனம்(Nippon Hoso Kyokay) )களஆய்வுப்பணிக்கு உதவ முன்வந்தது.ஆசகி என்ற செய்தித்தாள் நிறுவனமும் உதவ முன்வந்தது.11.09.1980 இல் யப்பானிலிருந்து களப்பணிக்குக் குழு புறப்பட்டது. 

ஒருமாத காலம் இந்தக்குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து களப்பணியாற்றித் தகவல் திரட்டியது.களஆய்வை முடித்துக்கொண்டு திரும்பிய ஓனோ அவர்கள் தம் குழுவினருடன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடினர். பல்கலைக்கழக இசைவுடன் இந்தக் கலந்துரையாடலைச் யப்பான் என்.எச்.கே நிறுவனம் யப்பானிய தொலைக்காட்சிக்காகப் படம் எடுத்துக்கொண்டது.

தமிழகத்தில் களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள், தரவுகள் யாவும் ஒழுங்குபடுத்தப் பட்டு 01.11.1980 இல் யப்பான் நாட்டில் ஒளிபரப்பானது. ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர். மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டன.

தமிழ்மொழியுடனும் தமிழ்நாட்டுடனும் பலவகையில் தொடர்புகள் தங்கள் மொழிக்கு உள்ளது என்று உணர்ந்ததே யப்பானியர்களின் மகிழ்ச்சிக்ககுக் காரணம். இத்தகு பெருமைக்குரிய ஓனோவுக்கு மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டுக்குச் சிறப்பு அழைப்பு அனுப்பத் தமிழக அரசு முடிவுசெய்தது. மாநாட்டின் பொது அரங்கில் இவர் கட்டுரை தமிழ் யப்பானியமொழிக்கு இடையிலான உறவு பற்றி படிக்கப்பட்டது.

இந்து.எக்சுபிரசு உள்ளிட்ட ஏடுகள் புகழ்ந்து எழுதின. இவ்வாய்வு முடிவில் உடன்பாடு இல்லாமல் சில அறிஞர்கள் இருந்துள்ளமையையும் அறியமுடிகிறது. 12.09.1980 ஆம் ஆண்டு இந்து நாளிதழில் "தமிழ் யப்பானிய மொழியில் திராவிடமொழிகளின் செல்வாக்கு" பற்றிய ஒரு கட்டுரையை எழுதினார்.

யப்பானிய மொழிகளின் வேர்ச்சொற்கள் தமிழில் இணைவதை விளக்க ஐந்நூறு சொற்களைச் சான்றாகக் காட்டி வேறொரு கட்டுரையும் வரைந்தார். 

இவையெல்லாம் தமிழுக்கும் யப்பானிய மொழிக்கும் உள்ள உறவுகளை விளக்கும் வகையில் அமைந்திருந்தன.இக்காலத்தில் "உயிரிடைப்பட்ட வல்லொலிகள்" என்ற தலைப்பிலும்,"மொழிமுதல் சகரம்" என்ற தலைப்பிலும் இவர் உருவாக்கிய ஆய்வுரைகள் சிறப்புடையனவாகும்.

ஓனோ அவர்கள் தமிழ் யப்பானிய உறவு பற்றிய தம் ஆய்வுகள் குறித்துத் திராவிட மொழிகளைப் பற்றி நன்கு ஆராய்ந்த எமனோ, பர்ரோ அவர்களின் கருத்தறிய விரும்பினார். அதன்பொருட்டு அமெரிக்கா சென்று எமனோ அவர்களைக் கண்டு உரையாடினார்.எமனோ அவர்கள் மிக மகிழ்ந்து இவ்வாய்வைப் பாராட்டினார்.

1981 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓனோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகம் வந்து தம் ஆய்வைத் தொடர்ந்தார்."தமிழ் ஜப்பானிய ஒலி ஒப்புமை" என்ற ஒரு நூல் எழுதித் தம் ஆய்வை உலகிற்கு வழங்கினார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு வந்தபிறகு பொற்கோ அவர்களின் நெறிப்படுத்தலில் பல வகையில் தம் ஆய்வுப்பணிகளை வரன்முறைப்படுத்தி ஈடுபட்டார்.

மொழி ஒப்பியல் வரலாற்றுக்கொள்கைகளை ஊன்றிப் படித்தார். திராவிடமொழியியலில் வெளிவந்த நூல்களைக் கற்றார். ஆழமாகத் தமிழ்மொழியையும் இலக்கண இலக்கியங்களையும் அறிந்தார். தமிழ்மொழிக்கும் யப்பானிய மொழிக்கும் மொழிக்கூறுகளில் ஒப்புமை இருப்பது போலவே இலக்கியப் பாடுபொருளிலும் ஒற்றுமை உள்ளதை உணர்ந்தார்..

நம் சங்க இலக்கியங்கள் போலச் யப்பானிய மொழியில் மங்யோசு என்ற தொகை இலக்கியம் உள்ளது.இரண்டு தொகைகளிலும் பாடுபொருள் ஒற்றுமை உள்ளது. தமிழ் யப்பானிய உறவுக்கு ஒலி அமைப்பு, சொல் அமைப்பு, சொற்றொடர் அமைப்பு ஆகியவற்றையும் தொல் இலக்கியங்களையும் சார்ந்து ஆய்வை வளர்த்துள்ளார்.

ஒலியாலும் பொருளாலும் ஒப்புமை உடைய நானூறு சொற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. (எ.கா) நம்பு- நமு யாறு- யற நீங்கு-நிகு உறங்கு-உரகு கறங்கு-கரகு அகல்-அகரு அணை-அண கல்-கர எனச் சொல் ஒற்றுமை உள்ளன. சுசுமு ஓனோ அவர்கள் யப்பானிய அரசின் பரிசும் பாராட்டும் பெற்றவர்.

இலங்கைப் பேராசிரியர்கள் முனைவர் சண்முகதாசு,பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசு ஆகியோரும் சுசுமு ஓனோ அவர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளனர். மொழியியல் ஆய்வில் வல்ல பேராசிரியர் அ.சண்முகதாசு அவர்களும் பண்பாட்டு ஆய்வுகளில் சிறந்த அவர்மனைவி மனோன்மணி அவர்களும் ஓனோ அவர்களின் ஆய்வுக்குப் பல வகையில் உதவியவர்கள்.

தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவைப் போலச் யப்பானில் அறுவடைத் திருவிழா நடைபெறுவதை எடுத்துரைத்தவர் சுசுமு ஓனோ அவர்கள்.தமிழர்களின் திருவிழாவான பொங்கலைப் பற்றி ஆராயத் தொடங்கினார். பொங்கலை ஒத்த அதே நாளில் யப்பானில் ஒரு விழா நடைபெறுகிறது.

அதனைச் சிறிய புத்தாண்டு(Koshogatsu )என்பர். விழா நாளில் கொங்கரா எனக் குரல் எழுப்புவர். எனவே இதனைக் கொங்கரா என்பர்.தமிழ்நாட்டுப் பொங்கலுக்கும் யப்பானிய கொங்கராவிற்கும் மொழிவகையிலும் பண்பாட்டு வகையிலும் தொடர்பு உண்டு என்பதை உணர்ந்தார்.

1982 இல் தமிழகத்துப் பொங்கல் விழாவைக் கண்டு இது யப்பானில் கொண்டாடப்படும் பொங்கலுடன் நெருக்கமாக உள்ளதைக் கண்டு வியந்தார். நான்கு நாள் நடைபெறும் விழாக்களும் யப்பானில் நடைபெறும் விழாவும் எந்தவகையில் ஒற்றுமையுடையன எனக் கண்டு புலமை இதழில்(1981 டிசம்பர்) எழுதினார்.

பழைனவற்றைக் கழித்தல்,சிறுபறை முழக்கல், அரிசியிட்டுப் பொங்கலிடுதல், வாசற்பொங்லன்று காக்கைக்குச் சோறிடல், கொங்கரோ கொங்க என்று கூவுதல் ஆகிய நிகழ்வுகள் யப்பானில் நடைபெறுகிறதாம். மாடுகளுக்கு நாம் உணவு ஊட்டுவதுபோல் யப்பானில் சில பகுதிகளில் குதிரைக்கு உணவு ஊட்டுவது உண்டாம்.

தமிழுக்கும் யப்பான் மொழிக்கும் இடையில் இலக்கிய,இலக்கண,கல்வெட்டு,நாட்டுப்புறவியல் செய்திகளுடன் உள்ள உறவையும் வெளிப்படுத்தியவர். யப்பானின் யாயோய் கல்லறைகளுடன் தென்னிந்தியா மற்றும் இலங்கையிலுள்ள (கி.மு. 1300300) காலப்பகுதி கல்லறைகளுடன் ஒப்பிட்டு அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

1990 களின் முற்பகுதியில் வெளியிடப்பட்ட அவரின் ஆய்வுமுடிவுகள் இரு பண்பாட்டுக்குமிடையில் இலக்கியம், பண்பாட்டு நடைமுறைகள் உள்ளிட்டவற்றில் ஒற்றுமைத் தன்மைகள் வியக்கத்தக்க வகையில் இருந்ததை வெளிப்படுத்தின.

இவருடைய பணியைப் பற்றி கமில் சுவலபில் அவர்கள் 1990 இல் சொன்னது : யப்பான் மற்றும் திராவிட மொழிகளின் ஒற்றுமையைத் தற்செயலானது என எளிதில் ஒதுக்கிவிட முடியாது. மற்றும் இது ஆழமான மரபு வழி ஒற்றுமையை நமக்குப் புலப்படுத்துகிறது.

ஓனோவின் இந்த ஆராய்ச்சி ஒற்றுமையை மெய்ப்பிக்க முயற்சி செய்யும். சென்னையில் தங்கியிருந்தபொழுது அவர் எழுதி "உயிரிடை நின்ற வல்லினம்" என்ற கட்டுரை திராவிட மொழியியல் கழகத்தின் ஏட்டில் வெளிவந்தது. உலக அளவில் நடைபெற்ற பல்வேறு கருத்தரங்குகள் மாநாடுகளில் கலந்துகொண்டு தமிழ் யப்பானிய உறவுபற்றிய கட்டுரை படித்தவர்.

தமிழகப்புலவர் குழு இவருக்குத் தமிழ்ச்சன்றோர் என்ற பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளது.சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் யப்பானிய மொழியைக் கற்பிக்க தில்லியிலிருந்து முனைவர் பாலாம்பாள் அவர்களை அழைத்துப் பணியமர்த்தம் செய்ததில் இவருக்குப் பங்கு உண்டு.

1999 இல் தமிழகம், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து தமிழியல் மற்றும் மொழியியல் அறிஞர்களைச் யப்பானுக்கு அழைத்துத் தமிழ் யப்பானியமொழி உறவு பற்றிப் பேசினார் இதில் பொற்கோ ஒருங்கிணைப்பாளர்.

பேராசிரியர்கள் அகத்தியலிங்கம், செ.வை. சண்முகம், கி.அரங்கன், வ.ஞானசுந்தரம்,தங்க.மணியன் ஆகியோர் இந்தியாவிலிருந்தும், சண்முகதாசு, மனோன்மணி சண்முகதாசு இலங்கையிலிருந்தும், மணியன் கிருட்டினன், கந்தசாமி, குமரன் மலேசியாவிலிருந்தும் சென்றனர்.

இந்த ஆய்வரங்க உரைகள் தொகுக்கப்பட்டுச் யப்பானிய மொழியில் வெளிவந்தன. 29 ஆண்டுகள் தமிழ் யப்பானிய ஆய்வில் தொடர்ந்து ஈடுப்பட்ட ஓனோ அவர்களைச் யப்பானிய மக்களும், ஆய்வறிஞர்களும் போற்றி மதிக்கின்றனர். தமிழ்க் கல்வி நிறுவனங்கள், தமிழ் அறிஞர்களுடன் பேராசிரியர் சுசுமு ஓனோ நீண்டகாலத் தொடர்புகளைப் பேணிவந்தார். 

யப்பானிய மாணவர்கள் பலரைத் தமிழ் மொழியைக் கற்குமாறு அவர் ஊக்குவித்தார்.தமிழுக்கும் யப்பானுக்கும் உறவுப்பாலம் அமைத்தார். தமிழ் மொழிக்கும் யப்பான் மொழிக்கும் இடையில் நெருங்கியத் தொடர்பு உள்ளதைப் பல்வேறு சான்றுகள் வழியாக உலகிற்கு வெளிப்படுத்திய பேராசிரியர் சுசுமு ஓனோ அவர்கள் தம் 89 ஆம் அகவையில் 14.07.2008 திங்கள் கிழமை டோக்கியோவில் இயற்கை எய்தினார். அறிஞரை இழந்து தமிழுலகம் வருந்துகிறது.

டிசுக்(ஸ்)கி 1 : இதுபற்றி யப்பானின் நேரம் பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரை டிசுக்கி 2 : சொற்கள், இலக்கணம், பொங்கல் திருவிழா, பெண் பார்க்கும் முறை என எல்லாமே இருமொழிகளிலும் ஒன்றாய் இருப்பதை வெறும் தற்செயல் என ஒதுக்கிவிட முடியாது.

நிச்சயம் தொடர்பு இருக்க வேண்டும். இதில் நகைச்சுவை என்னவென்றால் இதுவரை தமிழ்பற்றி ஆராய்ந்து அதன் பெருமைகளைப் போற்றியவர்கள் வேற்று மொழிக்காரர்களே!

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Saturday 3 November 2012

தமிழர்களும்... பருவக் காற்றும்..........!

தமிழர்கள் கடல் வாணிபத்தில் சிறந்தவர்கள். இதற்கான சான்றுகள் உலகெங்கிலும் கிடைக்கின்றன. மலேசியாவில் தமிழ்க் கல்வெட்டு, தாய்லாந்தில் சங்ககால நாணயங்கள், கம்போடியக் கல்வெட்டில் தமிழ் மன்னனின் பெயர், சாதவாகன மன்னர் நாணயத்தில் கப்பல்படம், யாவாவில் கப்பல்சிற்பம், சங்க இலக்கியத்தில் யவனர் பற்றிய குறிப்புகள், ரோமானிய மன்னர் அகசு(ஸ்)டசு(ஸ்) அவையில் பாண்டிய மன்னனின் தூதன், தமிழ்நாட்டில் கிடைக்கும் ஆயிரக் கணக்கான ரோமானிய நாணயங்கள், டாலமி, பிளினி போன்ற வெளி நாட்டு யாத்திரீகர்களின் பயணக் குறிப்புகள், யுவான் சுவாங் பாகி(ஹி)யான் முதலிய சீன யாத்திரிகர் குறிப்புகள், இப்படிச் சான்றுகளின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.

தமிழர்களின் கடல் வாணிகத்திற்குப் பெரும் உறுதுணையாக அமைந்தது பருவக் காற்றாகும். ஒரு குறிப்பிட்ட பருவத்தில், ஒரு குறிப்பிட்ட திசையில் வீசும் கடற் காற்றுக்குப் பருவக் காற்று என்று பெயர். டீசலினால் இயங்கும் ராட்சதக் கப்பல்களும், நீராவியால் ஓடும் பெரிய கப்பல்களும் கண்டு பிடிப்பதற்கு முன்னர் மனிதர்கள் கண்டு பிடித்த கப்பல் காற்றினாலேயே இயங்கின. காற்றின் இரகசி யத்தை அறிந்தவர்கள் குறிப்பிட்ட நாளில் புறப்பட்டு, குறிப்பிட்ட இடத்தை அடைவது எளிதாக இருந்தது. இதற்காக அவர்கள் பிரமாண்டமான பாய்மரக் கப்பல்களைக் கட்டினர்.


பருவக் காற்றின் இரகசியத்தை அறிந்து வைத்திருந்த யவனர்களும், அராபியர்களும் அதை வெளி நாட்டவர்களுக்குக் கற்றுத்தர வில்லை என்றும் தமிழர்கள் நடத்திய கப்பல் போக்குவரத்து கடற்கரையையொட்டி'' நடைபெற்ற கப்பல் போக்குவரத்துத் தான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

பருவக் காற்றின் சக்தியை முதன் முதலில் கண்டு பிடித்தவர் கி(ஹி)ப்பாலசு(ஸ் ) என்ற கிரேக்க நாட்டு அறிஞரென்றும், கிளாடியசு(ஸ்) என்ற ரோமானிய மன்னன் காலத்தில் தான் பருவக் காற்றைப் பயன்படுத்திக் கப்பல் விடுவது அதிகரித்த தென்றும், மேலைநாட்டு அறிஞர்கள் எழுதி வைத்துள்ளனர். ஆனால் புறநானூறு முதலிய சங்க கால நூல்களைப் படிப்போர்க்கு இந்தக் கூற்றில் பசையில்லை என்பதும், மேலை நாட்டாரின் வாதம் பொய் என்பதும், உள்ளங்கை நெல்லிக்கனியென விளங்கும்.

வெண்ணிக் குயத்தியார் என்ற பெண் புலவர் கரிகால் பெருவளத் தானைப் புகழ்ந்து பாடிய புறநானூற்றுப் பாடல் காற்றின் சக்தியால் தமிழர்கள் கலம் (கப்பல்) செலுத்தியதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அந்தப் பாடல் வரிகள் கரிகாலன் ஆண்ட காலத்தைப் பற்றிக் கூடப் பேசவில்லை. அவனுடைய முன்னோர் களின் காலத்தில் காற்றின் விசையால் கப்பல்கள் விடப்பட்டதைப் புகழ்ந்து பேசுகிறது. அந்த வரிகள்,

'நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் கண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
- (புறநானூறு - பாடல் 66)

''வளவனே! உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான பொறிமுறைகளைப் பொருத்திக் கப்பல் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர்கள். மதயானை மிகுந்த படைகளை உடைய கரிகால் வளவ!'' என்று உரையாசிரியர்கள் பொருள் எழுதி வைத்துள்ளனர் இப்பாடல் வரிகளுக்கு.

இப்பொழுது ஒரு கேள்வி எழும். கரிகால் வளவனின் காலம் என்ன? கிரேக்க அறிஞர் கி(ஹி)ப்பாலசி(ஸி)ன் காலம் என்ன? யார் முதலில் வாழ்ந்தவர்?

கிரேக்க அறிஞர் கி(ஹி)ப்பாலசு(ஸ்) இன்றைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். ஆனால் கரிகால் சோழனோ அதற்கு முன்னர் குறைந்தது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அதாவது இன்றைக்கு இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் (கி.மு. 2ம் நூற்றாண்டு). மேலும் இப்பாடல் கரிகாலன் முன்னோர்களே காற்றின் விசையைப் பயன்படுத்திக் கப்பல் விட்டதாகக் கூறுகிறது. (முக்கியச் சொற்களின் பொருள்: - வளி - காற்று, முந்நீர் - கடல், நாவாய் - கப்பல்)

கிளாடியசு(ஸ்) என்ற ரோமானிய மன்னர் காலத்தில் இந்த வழக்கம் பெரிதும் அதிகரித்த தென்று முன்னர் கண்டோம்.அவன் இயேசு நாதரின் சம காலத்தில் ஆட்சி புரிந்த மன்னன். ஆகவே கிரேக்கர்களுக்கு முன்னரே பருவக் காற்றைப் பயன் படுத்திக் கப்பல் விட்டது தமிழன் தான் என்று அடித்துக் கூறலாம்.

பழந்தமிழ் இலக்கியத்தில் மேலும் பல இடங்களில் இதே போன்ற குறிப்புகள் வருகின்றன யவனர்கள் பற்றிய பலகுறிப்புகளும் உள்ளன. ''கப்பல்'' என்ற தமிழ்ச் சொல் கூட உலகெங்கிலும் வெவ்வேறு வகையில உருமாறி வழங்குகிறது கப்பல் - skip - ship

யேர்மானிய மொழியில் ''சு(ஸ்)கிப்''என்றும் ஆங்கிலத்தில் ''சிப்'' என்றும் உருமாறி விட்டது தமிழ்ச் சொல் கப்பல்!

''கட்டமரான்'' (catamaran) என்ற சொல்லை மத்திய அமெரிக்க நாடான மெக்சிக்கோவில் பயன்படுத்துகின்றனர். மெக்சிக்கோவில் மாயா, இன்கா, அசு(ஸ்)டெக் போன்ற பழம் பெரும் நாகரீகச் சின்னங்களை இன்றும் காணலாம். 

''நாவாய்'' (படகு, கப்பல்) என்ற சொல்லும் தமிழ் அல்லது வட மொழியில் இருந்து உலகம் முழுதும் சென்றது.

நாவாய் - NavY - Navy

இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சம், ''எல்லாளன்'' என்ற சோழ மன்னனின் அறநெறி ஆட்சியைப் பெரிதும் புகழ்ந்து பேசுகிறது. இது ''ஏழாரன்'' (ஏழு மன்னர்களை வென்று ஏழு ஆரம் அல்லது ஏழு மணி முடிகளை அணிந்தவன்) என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம். சிலர் இந்தச் சோழ மன்னனைக் கரிகாலனாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஏனெனில் இருவரின் காலமும் ஏறத்தாழ ஒன்று தான். எல்லாள மன்னனின் கதை மனுநீதிச் சோழன் கதை போலவே உள்ளது. ஒரு பசுவின் கன்றைக் கொன்ற தன் மகனையே தேரின் சக்கரத்தில் வைத்துக் கொன்றான் மனுநீதிச் சோழன் என்று சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம் ஆகியவை கூறுகின்றன. ஆனால் இருவரும் ஒருவரா என்று அறிய மேலும் ஆராய வேண்டும். சோழ மன்னர்கள் இலங்கை, மற்றும் யா(ஜா)வா, சுமத்ரா (தற்கால இந்தோனேசி’யா) வரை கடலில் சென்று வென்றனர்.

கம்போடியா, வியட்நாம், லாவோசு ஆகிய நாடுகளில் 800க்கும் அதிகமான சமசுக்கிருதக் கல்வெட்டுகள் உள்ளன. இவைகளில் மிகவும் பழமையான இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ''சிறீமாறன்'' என்ற பெயரைக் குறிப்பிடுகிறது. இவன் அங்கு சென்ற பாண்டிய மன்னன் அல்லது தளபதியாக இருக்கலாம். புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் எழுதிய பாடல் ஒன்று உள்ளது. இவன் கடலில் செல்லும் போது உயிர் நீத்தவன் என்பதை அவனுடைய பெயரே கூறிவிடும். 

தமிழர்களின் கடலாட்சிக்கு ஏராளமான சான்றுகள் இருப்பினும் முதலில் பருவக் காற்றைக் கண்டு பிடித்து, பயன்படுத்தியது தமிழனே என்பதற்கு இந்தச் சான்றுகளே போதும் அல்லவா?

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.