Monday 15 July 2013

போர்ச்சுக்கீசியர்கள் வசம் இருந்த இலங்கையை.............!

போர்ச்சுக்கீசியர்கள் வசம் இருந்த இலங்கையை, டச்சுக்காரர்கள் கைப்பற்றிக் கொண்டனர். கண்டி அரசனுக்கு ஆதரவாக இருப்பது போல் நடித்து, பிறகு அவனை ஏமாற்றி விட்டனர்.

டச்சுக்காரர்கள் வருகை


கி.பி. 1595-ம் ஆண்டு முதல், டச்சுக்காரர்கள் கீழ்த்திசை நாடுகளில் வணிகம் செய்யும் நோக்கத்தோடு கப்பல்களில் பயணம் செய்தனர். (இங்கிலாந்து நாட்டுக்கு கிழக்கே, யேர்மனிக்கு மேற்கே உள்ளது நெதர்லாந்து. இது, கொ(ஹா)லந்து என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் டச்சுக்காரர்கள். டச்சு மொழி பேசுவதால், டச்சுக்காரர்கள் என்ற பெயர் வந்தது. இவர்களை, இலங்கையைச் சேர்ந்தவர்கள் "ஒல்லாந்தர்'' என்று குறிப்பிடுகிறார்கள்).

1602-ம் ஆண்டு, டச்சுக் கப்பல் ஒன்று மட்டக்களப்புக்கு வந்தது. அதில் இருந்த டச்சு வியாபாரிகள், கண்டி அரசனை சந்தித்து அந்தப் பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதி கோரினர்.

கண்டி அரசனுக்கு போர்ச்சுக்கீசியர்கள் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. டச்சுக்காரர்களின் உதவியைப் பெற்று, போர்ச்சுக்கீசியர்களை விரட்டலாம் என்று கண்டி மன்னன் எண்ணினான்.

ஒப்பந்தம்

டச்சுக்காரர்களின் கோரிக்கைக்கு கண்டி அரசன் இணங்கி, அவர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டான். இந்த ஒப்பந்தம் கி.பி. 1638-ம் ஆண்டில் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தப்படி, இருவரும் சேர்ந்து போர்ச்சுக்கீசியரை எதிர்த்தனர். அவர்களிடம் இருந்த பல பகுதிகளை மீட்டனர்.

அப்படி மீட்ட பகுதிகளை டச்சுக்காரர்கள் கண்டி அரசனிடம் கொடுக்காமல் அவனை ஏமாற்றி, தங்கள் வசம் வைத்துக் கொண்டனர் . போர்ச்சுக்கீசியர்களுக்கும், டச்சுக்காரர்களுக்கும் பல்வேறு இடங்களில் போர் நடந்தது.

அதில் டச்சுக்காரர்கள் வெற்றி பெற்று, இலங்கை முழுவதையும் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். போர்ச்சுக்கீசியர் இலங்கையை விட்டு விரட்டி அடிக்கப்பட்டனர்.இலங்கையின் பொருளாதாரம் முழுவதும் டச்சுக்காரர்களின் கைக்கு வந்தது. காப்பித் தோட்டங்களை பெரும் அளவில் ஏற்படுத்தினர்.உற்பத்தியாகும் பொருள்களில் பெரும்பாலானவற்றை அவர்களே எடுத்துக் கொண்டனர்.

தோட்டத் தொழிலாளர்

தொன்று தொட்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே வியாபாரத் தொடர்பு இருந்து வந்தது. டச்சுக்காரர்களின் ஆட்சியின்போது, அந்த வியாபாரம் குறைந்து போயிற்று. இலங்கைத் தோட்டங்களில் வேலை செய்ய, முதன் முதலாக 10 ஆயிரம் இந்தியர்களை இலங்கைக்கு டச்சுக்காரர்கள் அழைத்து வந்தனர். அவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்.

தமிழர்களின் நாடு

டச்சுக்காரர்கள் அரசாண்டபோது, இலங்கைக்கு வந்திருந்த அடிரியன் ரேலண்ட் என்ற ஆராய்ச்சியாளர், தமிழ், சிங்களம், மலாய் ஆகிய மொழிகளை அறிந்தவர். அவர் எழுதிய குறிப்புகளில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:-

"இத்தீவை விட்டுப் போவதற்கு முன் தமிழர் பற்றியும், தமிழ் மொழி பற்றியும் சிறிது கூறவேண்டும்.இந்தத் தீவின் பெரும் பகுதியில் தமிழர்கள் வாழுகிறார்கள். இந்தப் பகுதி கைலாய வன்னியன் என்ற மன்னனால் ஆட்சி செய்யப்படுகிறது.

இங்கு வாழும் மக்கள், சிங்களரின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் அல்ல. டச்சுக்காரர்களின் ஆட்சிக்கும் உட்பட்டவர்கள் அல்ல.கரை ஓரமாக உள்ள நிலம் அனைத்தும், இந்த மன்னனுக்கே உரித்தானது. கரை ஓரங்களில் வாழும் மக்கள் தமிழ் மொழி பேசுகிறார்கள்.

நீர்கொழும்பு பகுதிக்கு தெற்கே, தெய்வேந்திர முனைவரையுள்ள பகுதிகளில் சிங்கள மொழி பேசப்படுகிறது.'' இவ்வாறு அடிரியன் ரேலண்ட் கூறியுள்ளார்.

டச்சு ஆட்சியின்போது இலங்கை வந்த மற்றொரு ஆராய்ச்சியாளர் கிறிஸ்தோபர் சுவைட்சர். இவருடைய குறிப்புகளில் கூறப்பட்டு இருப்பதாவது:-

"மட்டக்களப்பு, காலி, திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம், அரிப்பு, கற்பிட்டி, நீர்கொழும்பு முதலான பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
வன்னி நாட்டில் உள்ள தமிழர்கள், சுதந்திரமாக ஆட்சி நடத்துகிறார்கள். மற்ற பகுதிகளில் உள்ளவர்கள், டச்சுக்காரர்களின் ஆட்சியின் கீழ் உள்ளனர்.''

இவ்வாறு சுவைட்சர் கூறியுள்ளார்.

வெள்ளையர் வருகை

"வல்லவனுக்கு வல்லவன், வையகத்தில் உண்டு'' என்பது போல, டச்சுக்காரர்களின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வெள்ளைக்காரர்கள் (இங்கிலாந்து) இலங்கைக்கு 1795-ம் ஆண்டு மத்தியில் வந்து சேர்ந்தார்கள்.

"கிழக்கு இந்திய கம்பெனி'' என்ற பெயரில், வியாபாரம் செய்ய இந்தியாவுக்கு வந்த வெள்ளையர்கள், பற்பல சூழ்ச்சிகள் செய்து, ராசதந்திரங்களைக் கையாண்டு ஆட்சியைப் பிடித்ததுபோல, இலங்கையிலும் வியாபாரம் செய்யவே முதலில் வந்தனர்.

அந்தக் காலக்கட்டத்தில் டச்சுக்காரர்கள் போதிய பலத்துடன் இல்லை. வெள்ளையர்களிடம் பலம் வாய்ந்த ராணுவம் இருந்தது. எனவே, டச்சுக்காரர்களிடம் இருந்த பகுதிகளை அவர்கள் எளிதாக கைப்பற்றிக் கொண்டனர்.1798-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதி கொழும்பு நகரை வெள்ளையர் கைப்பற்றியதுடன், இலங்கையில் டச்சுக்காரர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.