Thursday 31 January 2013

வீரபாண்டிய கட்டபொம்மன்........!


அக்டோபர் 16ஆம் இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவு நாள், இந்நாளை முன்னிட்டு அவரின் வாழ்க்கை வரலாறை நினைவு கூறுவோம்... 1791ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது 30ஆவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார்.

இதே காலத்தில்தான் பிரிட்டிசு(ஷ்) கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது . வரி வசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். 

கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்குப் பாளையக்காரர்களைத் தடைக் கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது.  

அதற்குத் தோதாக, அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர் வெள்ளையர். 

அடிவருடிகளுக்கு எலும்புத் துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத் தண்டனையும் அதிக வரியும் விதிக்கப்படுகின்றது . இப்படித்தான் கிளர்ச்சியாளரான கட்டபொம்மனது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் சில பகுதிகள், துரோகி எட்டப்பனுக்குத் தரப்படுகின்றன.

அதேபோன்று வானம்பார்த்த புஞ்சைப் பூமியான பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்கு ஓரளவு வருவாய் அளித்து வந்த திருவைகுண்டம், ஆழ்வார்த் திருநகர் போன்ற வளமான பகுதிகளைக் கம்பெனி தனது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வருகிறது.

கட்டபொம்மன் முறையாகக் கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறியது கம்பெனி. சினம் கொண்ட கட்டபொம்மன் இந்தப் பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி வரி வசூல் செய்கிறார்.

தனது ஆட்சி நிறுவப்பட்ட இடங்களிலெல்லாம் வரி வசூல் என்ற பெயரில் வெளிப்படையான கொள்ளையை நடத்தி வந்த கம்பெனி, கட்டபொம்மனது இந்த நடவடிக்கையை "கொள்ளை' என்று குற்றம் சாட்டியது.

இந்தக் காலகட்டத்தில் இராமநாதபுரம் , திருநெல்வேலிப் பகுதிகளுக்கு ஜாக்சன் என்பவர் கலெக்டராக நியமிக்கப்படுகிறார். அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாமென்றால் இரண்டு நாட்களில் இராமநாதபுரத்தில் கட்டபொம்மன் தன்னை சந்திக்க வேண்டுமென ஜாக்சன் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடுகின்றார்.

நாள் குறித்த ஜாக்சனோ கட்டபொம்மனை தன் சுற்றுப் பிரயாணத்தில் ஊர் ஊராகச் அலைக்கழித்து, 23 நாட்கள் கழித்து இராமநாதபுரத்தில் சந்திக்கிறார். தன்னை அவமானப்படுத்திய ஜாக்சன் குறித்து சென்னை சென்று விளக்கம் அளிக்கிறார் கட்டபொம்மன்.

ஜாக்சன் மாற்றப்படுகிறார். கட்டபொம்மனது வீரம் ஏனைய பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவுகிறது. இந்நிலையில் புதிய கலெக்டராய் லூசி(ஷி)ங்டன் பதவியேற்கிறார். அதே சமயம் கம்பெனியுடனான கட்டபொம்மனது முரண்பாடு அரசியல் ரீதியில் கூர்மையடைகிறது . 

பிரிட்டிசு ஆதிக்கத்துக்கு மாபெரும் சவாலாக விளங்கி வந்த திப்பு சுல்தான் மே மாதம் 1799இல் வீரமரணம் எய்தவே, கம்பெனியின் பீரங்கிகள் கட்டபொம்மனை நோக்கித் திரும்புகின்றன உடனே தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு கட்டளையிடுகிறார் லூசிங்டன். 

முறையான அழைப்பு (கவுல்) இன்றி சந்திக்க இயலாதென கட்டபொம்மன் மறுக்கிறார். போர்த் தயாரிப்புக்குப் போதிய அவகாசம் பெறும் நோக்கத்துடன் அப்போது நடந்த கடிதப் போக்குவரத்தில் கட்டபொம்மன் நிதானமான போக்கையே கடைப்பிடிக்கிறார்.

ஆனால் கம்பெனியோ அவரது நடவடிக்கைகளை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது. நிமிர்ந்து நின்ற கட்டபொம்மன் இறுதியில் செப் 1,1799 அன்று பானர்மென் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுகிறது.

கடுமையாக எதிர்த்துப் போராடினார் கட்டபொம்மன். கோட்டக்குள் வெள்ளையர் படைகள் நுழைந்ததையடுத்து அங்கிருந்து வெளியேறிய கட்டபொம்மன் புதுக்கோட்டை அரசரால் பிடித்துக் கொடுக்கப்பட்டு கைதாகிறார்.

மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட "குற்றங்களை' கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை.

ஒரு தேச பக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு "ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்" என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை , வீரமும் பெருமிதமும் நிறைந்ததாக இருந்தது.

தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தாராம்.

கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூக்குமேடை ஏறியபோது, "இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்' என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினாராம்.

ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவிற்கிணங்க, 1799ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதியன்று கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.  

அடுத்து வந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது.

கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீர வரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது.

இன்றைக்கும் சித்திரை மாதம் நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம். 'Divide and Rule' என்பதே ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலங்களில் அவர்களின் தாரக மந்திரமாக பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை அறிகிறோம்.

ஆனால், சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இதே மந்திரம் பல அரசியல் கட்சிகளால், அவற்றின் தலைவர்களால், முதலாளிகளால், நிறுவனங்களின் நிர்வாகத்தால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டுதான் வருகின்றன என்பதை மறுக்க முடியுமா? என்ன வேறுபாடு? முன்பு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். இப்போது...!?

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Saturday 19 January 2013

எதனால் தமிழன் கெட்டான்............?


தமிழ் உறவுகளுக்காக !

தமிழன் பேசிப் பேசியே கெட்டான் !

பழம்பெருமை பேசியே தமிழன் கெட்டான் !

தமிழ்.. தமிழ்.. என்று பேசியே தமிழன் கெட்டான் !

தமிழன்.. தமிழன்.. என்று பேசியே தமிழன் கெட்டான் !


இப்படியெல்லாம் பலரும் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஏன் நீங்களும்தான் கேட்டிருப்பீர்கள். இதில் உண்மை இருக்கிறதா? இந்தக் குற்றச்சாட்டு சரிதானா? இப்படிக் கேட்பவர்களை நோக்கி சில வினாக்களை வினவ விரும்புகிறேன்.

எதைப் பேசி தமிழன் கெட்டான்?

தமிழ் மொழியின் சிறப்பு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் மொழியின் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் இலக்கியம் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் மரபு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்ப் பண்பாடு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்ச் சமயம் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் வாழ்வியல் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் மன்னர்கள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்ப் புலவர்கள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் நூல்கள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்க் கலைகள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் வீரம் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் அறிவு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் நாடு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் விடுதலை பற்றி பேசிக் கெட்டானா?

நான் சொல்கிறேன், இதில் எதையுமே கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பேசாமல் ஊமையராய் செவிடர்களாய் இருந்ததால்தான் இன்றையத் தமிழன் கெட்டுச் சீரழிந்து இருக்கின்றான் இதுதான் உண்மை.

உலகத்தின் எல்லா இனத்தவனும் அவனவன் மொழி, இனம், கலை, பண்பாடு, இலக்கியம், அறிவுநூல், வரலாறு, நாகரிகம் என ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் தூக்கிப்பிடித்து மேலே ஏற்றிக் கொண்டாடுகிறான்.

ஆனால், தமிழன் மட்டும்தான் தன் உரிமைப் பொருள்கள் எல்லாவற்றையும் காலடியில் போட்டு மிதிக்கிறான். தன் மொழியைவிட தன் இனத்தைவிட தன் பண்பாட்டைவிட வேற்றாருடையது சிறந்தது என்று புலம்பித் திரிகிறான்.

சொந்த இனத்தின் வேரையே வெட்டிவிட்டு இனவழி, மொழிவழி உறவைத் துண்டிக்கிறான். சொந்த அடையாளத்தை மறைத்து, மறந்து மாற்றான் போல வேடம்போட்டு வாழ்கிறான்.

அதனால்தான் சொல்கிறேன். “பழம்பெருமை பேசியே தமிழன் கெட்டான்” என்பது வடிகட்டிய பொய். “பழம் பெருமை பேசாமல் – புரியாமல் – அறியாமல் – தெரியாமல்தான் தமிழன் கெட்டான், கெடுகின்றான் எங்கு பார்த்தாலும் அடியும் உதையும் படுகின்றான்.

இவற்றிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டு தப்பித்த தமிழனோ அன்னியவனின் அடிமையாய் அடிவருடியாய் வாழ்கின்றான். புதிய மாற்றமாக இனிக் கண்டிப்பாக

தமிழருடன் தமிழில் பேசுவோம் !

தமிழின் பெருமை பேசுவோம் !.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Tuesday 15 January 2013

வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள்...........!.


கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான சுற்றளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.வட்டத்திற்கான சுற்றளவை கணக்கதிகாரம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. இதில் வட்டதிற்கான சுற்றளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார்.

கணக்கதிகாரப் பாடல் : 50

“விட்ட மதனை விரைவா யிரட்டித்து
மட்டுநாண் மாதவனில் மாறியே – எட்டதனில்
ஏற்றியே செப்பியடி லேறும் வட்டத்தளவும்
தோற்றுமெப் பூங்கொடி நீ சொல் “

விளக்கம்:

விட்டம்தனை விரைவா யிரட்டித்து = விட்டத்தின் இரு மடங்கு = 2r + 2r = 4r (விட்டம் = 2r )
மட்டு நாண் மாதவனில் மாறியே = 4 ஆல் பெருக்கு
எட்டதனில் ஏற்றியே = 8 ஆல் பெருக்கு
செப்பியடி = 20 ஆல் வகு

வட்டத்தின் சுற்றளவு = ( 4r x 4 x 8 ) / 20 = 32 / 5 r
= 2 ( 16/5) r = 2 π r

இங்கு π = 16 / 5 = 3.2 ( இது ஓரளவுக்குத் துல்லியமான தோராயமே )
இன்று நாம் பயன்படுத்தும் வட்டத்தின் சுற்றளவு = 2 π r என்ற சூத்திரத்தை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துள்ளனர் என்று அறியும் போது உண்மையில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Sunday 13 January 2013

இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்!

அனைத்து முன்னும்பின்னும் நேயர்களிற்கும்!




தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Saturday 12 January 2013

"ஈழத்தில் சோழர்களின் சுவடுகள்"............... !

இலங்கையில் நீண்ட காலமாக தலை நகராக விளங்கியநகரம் அனுராதபுரம். கி.மு.காலத்தில் இருந்தே இந்த நகரம் மிகவும் பிரபலம் பெற்று விளங்கியதற்கு வரலாற்றுச் சான்றுகள் ஏராளம் உண்டு.


2000 ஆண்டுகளுக்கு முன்பே சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இலங்கை முழுவதையும் ஒரே குடையின் கீழ் ஆண்ட ஒப்பற்ற தமிழ் மன்னன் எல்லாளன்கூட அனுராதபுரத்தை தலைநகரமாகக் கொண்டே இலங்கை முழுவதையும் ஆண்டான் என்று வரலாறு கூறுகிறது.

பௌத்தம் இலங்கையில் தீவிரமாகப் பரவத் தொடங்கிய காலத்திலும் கூட அனுராதபுரத்தின் சிறப்பே ஓங்கி இருந்தது.இந்தியாவில் இருந்து புத்த மதத்தின் சின்னமாக கொண்டுவரப்பட்ட அரசமரக் கிளை ஒன்றுகூட அனுராதபுரத்தில் உள்ள விகாரை ஒன்றில்தான் நடப்பட்டு இன்றும் அதன் கிளைகள் அழியாமல் உள்ளன.

ஆயினும் இலங்கையின் தலைநகரம் அனுராதபுரம் என்ற வரலாற்றை முதன் முதலாக மாற்றிய பெருமை சோழர்களுக்கே உரியது..கி.பி.895 இல் ராசராச சோழனின் மகனாகிய ராசேந்திரச் சோழன் என்பவன் இலங்கைமீது படை எடுத்துவந்து (ஆதாரம் 'சோழர் வரலாறு';by ..நீலகண்ட சாஸ்திரி)அனுராதபுரத்தை கைப்பற்றி தலை நகரக் கட்டிடங்களை எல்லாம் தரைமட்டமாக்கி, வெற்றிவாகை சூடினான்.

சைவ சமயத்தில் மிகவும் பற்றுள்ள ராசராச சோழனும் அவனது பரம்பரையும் புத்த மதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஒருபோதும் விரும்பவில்லை..ஆயினும் மனித நேயமுள்ள சோழர்கள் பௌத்தத்தை அழிக்க நினைத்திருந்தால் அனுராத புரத்தில் இருந்த புத்த சின்னங்கள் எல்லாவற்றையும் அழித்திருக்கலாம்.. ஆனால் அப்படிச் செய்யாமல் அரச கட்டிடங்களை மட்டுமே தரைமட்டமாக்கினான்.

ராசேந்திரச் சோழன்,இலங்கையின் தலைநகரம் என்னும் பெருமையை அனுராத புரத்தில் இருந்து மாற்றி கிழக்கே நகர்ந்து சென்று பொலநறுவையை இலங்கையின் தலை நகரமாக மாற்றி கோட்டை கொத்தளங்களை கட்டினான் ராசேந்திரச் சோழன்.

நீண்ட காலமாக இலங்கையின் தலைநகரம் அனுராதபுரம் என்று இருந்த வரலாற்றை மாற்றிய பெருமை இந்தச் சோழ இளவரசனுக்கு உரியதாகும். அதுமட்டுமன்றி.பொலநறுவையில் ஒரு பெரிய சிவன் கோயிலையும் கட்டுவித்து வழிபட்டான் இப்பெரு மன்னன்.

இன்றும் அந்தச் சிவன் கோயில் அவன் நினைவாக அங்கே உள்ளது.கோயிலின் பட்டயங்களில் ராசேந்திரச் சோழனின் இலங்கைப் படை எடுப்புபற்றி பொறிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி பொல நறுவையை சுற்றி பல குளங்களைக் கட்டுவித்து மக்களை விவசாயத்தில் பெருமளவில் ஈடுபடுத்தி வந்தான் இம்மன்னன்.

ராசேந்திரச் சோழன் இலங்கைமீது படை எடுத்து வரும்போது அவனது படையினரும் யானைப்படை,குதிரைப்படை போன்றவையும் கப்பல்கள்மூலம் கொண்டுவந்து தரை இறக்கப்பட்டு பாளையம் அமைத்து இருந்த இடம், வடபகுதியில் உள்ள வடமராட்சி கிழக்கின் செம்பியன் பற்று ஆகும்.சோழருக்கு இன்னுமொரு பெயர் செம்பியன் என்பது ஆகும்.

எனவே சோழரின் வரலாற்று பிரதேசமாகவே செம்பியன்பற்று என்னும்பெயர் அன்றில் இருந்து வழங்கி வருகிறது.. செம்பியன் பற்றுப் பகுதியில் பின்னாளில் சிறீலங்கா படைகளின் குண்டுவீச்சில் இருந்து தப்ப மக்கள் நிலத்தை தோண்டியபோது பல இடங்களில் சோழர்களின் காசுகளும் சிவன் சிலைகளும் வேறு சில வரலாற்றுச் சின்னங்களும் மண்ணுக்குள் இருந்து எடுக்கப்பட்டன.

செம்பியன் பற்றில் மட்டுமன்றி அதை அண்மிய ஊரான நாகர்கோயிலிலும் இவை பல இடங்களில் கண்டு எடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

ஒருமுறை பரப்புரைக்கு நான் அங்கே சென்றவேளை அப்படியான சோழர்களின் காசுகளில் சில என் கையிலும் கிடைத்தன. ராசேந்திரச் சோழன் கட்டைக்காட்டின் ஊடாக படைகளை நகர்த்தி சென்ற வழித்தடத்தின் சில சுவடுகள் கட்டைக் காட்டுக்கும் உடுத்துறைக்கும் இடையில் இருப்பதையும் நான் கண்டிருக்கிறேன்.

இவ்வாறு சோழர்களின் வரலாற்றுச் சுவடுகள் ஈழத்தில் நிறைய உண்டு. அவையெல்லாம் தமிழர்களின் வீரத்தின் அடையாளம் ஆகும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Sunday 6 January 2013

தமிழன் உருப்படாததற்கு காரண‌ங்கள்........!


இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்... ஒரு நிமிடம்!

இது பல்பொடி விளம்பரம் அல்ல. தமிழன் புறக்கணிக்கப்படுகிற, அடிவாங்குகிற தேசங்களின் பட்டியல் தான் இது.

கேரளா, கர்நாடகாவில் தமிழன் செ(ஜெ)ன்ம எதிரியாகவே பார்க்கப்படும் நிலை. ஆந்திராவிலும் தமிழனுக்கு எதிரான ஆவேசம். மராட்டியம், மும்பையில் தமிழன் என்றாலே எட்டிக்காய். கல்கத்தாவிலும், டில்லியிலும் தமிழனுக்கு எதிரான அரசியல்.யே(ஜெ)ர்மனியில் கூட நியோ நாசி(ஜி)க்கள் என்ற குழுவினருக்குத் தமிழன் என்றால் பிடிக்கவில்லை.

தமிழனுக்கு என்ன ஆச்சு? எல்லோரும் திட்டமிட்டு அவனுக்கு கட்டம் கட்டுவது ஏன்? அவன் செய்த தவறுதான் என்ன?

*முதல் காரணம் தமிழனின் அறிவாற்றல்! 

எந்த இடத்தில் விட்டாலும் அதில் மூளையைச் செலுத்தி முன்னேறும் ஆற்றல். அந்த தன்னம்பிக்கை காரணமாகவே அவன் தன் மண்ணில் மற்ற யார் பிழைப்பதையும் தடுப்பது இல்லை. ஆனால், அதே தமிழன் வேறு மண்ணில் பிழைக்கப் போகும் போது அங்கு அவன் காட்டும் ஆற்றல் மற்றவர்களைப் பொறாமையும் ஆத்திரமும் கொள்ளச் செய்கிறது. அதற்குத் தீர்வாகத்தம் மண்ணில் தமிழனைப் பிழைக்க விடக்கூடாது என்று முடிவெடுத்து மற்றவர்கள் செயல்படுகின்றனர்.

* தமிழன் அறிவாளி. ஆனால், புத்திசாலி அல்ல. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. தன் அறிவை எல்லோருக்கும் பயன்பெறத் தருபவன் அறிவாளி (உதாரணம்: தாமஸ் ஆல்வா எடிசன்). தன் அறிவையும் மற்றவர்கள் அறிவையும் தனக்கு லாபமாக பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் (உதாரணம்: தமிழக அரசியல் தலைக ள்). பிழைக்கச் செல்லும் இடங்களில் தன்னைப் பார்த்து வயிறு எரிகிற மற்றவர்களை தாஜா செய்வது பற்றி கவலையே படாமல்கண்ணை மூடிக்கொண்டு உழைத்து முன்னேறுவது. அதனால் ஒரு நிலையில் அநியாயம் செய்கிற எதிரிகளிடம் சுலபமாகச் சிக்கிக் கொள்கிறான்.

* மிருகங்களில் நாய்... பாலில் பெண்பால்... இனத்தில் தமிழன்... இந்த மூன்றுக்கும் ஒரு வினோத ஒற்றுமை உண்டு.தம்மவர்கள் முன்னேறினால் பொறுக்காது.

ஒரு நாய் அதிகம் குரைப்பதே தெருவில் இன்னொரு நாய் வரும்போதுதான். அது போல சக பெண்ணின் முன்னேற்றம் இன்னொரு பெண்ணைத்தான் மனம் சுருங்கச் செய்யும். இது உண்மை. அதைப்போலவே ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான். 

இந்தச் சண்டையை இங்கு பிழைக்க வரும் மற்ற இனத்தவர் பயன்படுத்திக் கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம்.


அதே நேரம் தமிழ்நாட்டுக்கு ஒரு மலையாளியோ, தெலுங்கரோ, கன்னடரோ பிழைக்க வந்தால், தான் காலூன்றியவுடன், தன் மண்ணில் இருந்து பிழைக்க வருபவனைத் தேடிப்பிடித்து அரவணைத்துக் கொள்கிறார்கள். திட்டமிட்டு அழைத்துக்கொண்டும் வருகிறார்கள். இன்று மலையாளிகளுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு தரும் மலையாள வீட்டு உரிமையாளர்களே சென்னையில் உண்டு. அதுபோல கடை உரிமையாளர்களும் உண்டு. குறைந்தது அவர்களுக்கு வாடகையாவது குறைக்கப்படும். தமிழனுக்கு அதிக வாடகை. நடப்பது கேரளாவில் அல்ல தமிழகத்தில்!

*பெண்ணாசை 

பெண்ணாசைக்கு தமிழினம் , மங்கோலிய இனம் என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது 
என்றாலும் கூட , தமிழனுக்கு காலகாலமாக மரபணுவிலேயே அது கொஞ்சம் 
அதிகமாக ஊறிவிட்டதோ என்று யோசிக்கத் தோன்றுகிறது .அந்தக் கால அரசர்கள் , 
பின்னால் வந்த குறு நில மன்னர்கள் , என்று பெண்ணாலும் அழகிய பெண்களை 
முன் நிறுத்திய படைகள் மற்றும் தனிப்பட்ட விதத்திலும் பெண்ணால் 
அழிந்தவர்கள் என்று வரலாற்றில் அதிகம் . இன்றும் கூட பெரிய வணிக 
நிறுவனங்களை உருவாக்கி அதை பிழைப்பு தேடி வரும் வேற்று மாநிலப் 
பெண்களிடம் இழந்து புலம்புபவர்கள் அதிகம் . காலகாலமாக இதை மற்றவர்கள் 
பயன்படுத்திக் கவிழ்த்துப் பலன் பெறுகின்றனர்.

* மற்ற மொழியினத்தவர்கள் எல்லோரும், தங்கள் மொழி, இன உணர்வைக் காக்க, சாதி மத உணர்வுகளைத் தாராளமாகத் தள்ளி வைப்பார்கள். உதாரணமாக கிறித்தவரான கே.ஜே.யேசுதாசின் குரல், தினசரி ‘அரிவராசனம்’பாடி சபரி மலை அய்யப்பனைத் தூங்க வைக்கும். அது மலையாளிகளின் ஒற்றுமை. ஆனால், தமிழனோ மத, சாதி உணர்வுகளுக்காக, தமிழ் உணர்வையும், தமிழின உணர்வையும் தரையில் போட்டு மிதிப்பான்.

இலங்கையில் முதன் முதலாக பிரச்னை வந்தது சிங்களர்களுக்கும் தமிழ் பேசும் முசுலிம்களுக்கும்தான். ஆனால், தமிழர்களில் பெரும்பான்மையான இந்துக்கள், புத்தமதச் சிங்களன்தான் நமக்கு நெருக்கம் என்று அவனோடு உறவாடி தமிழ் முசுலிம்களை எதிர்த்தனர். அங்கே மொழியை விட மதம் பெரிதாகப் போனது.

வடக்கு மாகாணத் தமிழன், கிழக்கு மாகாணத் தமிழனை ‘மட்டக்களப்பான் மடையன்’ என்று சொல்லித்தாழ்ந்த சாதி என்று காரணம் காட்டித் தள்ளி வைத்தான். புறக்கணித்தான். அங்கே மொழியை விட சாதி பெரிதாகப் போனது. அங்கும் இன உணர்வில்லை.

* தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். ஒரு வங்காளி எங்கு போனாலும் வங்காளியாகவே இருப்பான். ஒரு மலையாளி எங்கு போனாலும் தன் கலாசார வேர்களைக் கைவிடுவது இல்லை. ஆனால், தமிழன் அதைப்பற்றிக் கவலைப்படுவதே இல்லை. பொதுவாக உலக மக்களிடம் உள்ள இன உணர்வு தமிழனிடம் இல்லாததால் மரியாதை கிடைப்பது இல்லை. ஒரு நிலையில் தமிழன் கேலிப் பொருள் ஆகிறான்.

* இரண்டு மலையாளிகள் சந்தித்துக் கொண்டால் மலையாளத்தில் பேசுவார்கள். இரண்டு தெலுங்கர்கள் சந்தித்துக்கொண்டால் தெலுங்கில் பேசுவார்கள். இரண்டு கன்னடர்கள் சந்தித்துக் கொண்டால் கன்னடத்தில் பேசிக்கொள்வார்கள். இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால்..? ஆங்கிலத்தில் பேசுவார்கள்!

நீங்கள் அறிந்த விசயம் இது. ஆனால் தாய்மொழியை மதிக்கிற எந்த இனமும் இந்த கேடுகெட்ட குணத்தை மதிப்பது இல்லை. அதனால் ஏற்படும் எரிச்சல் கோபமாக மாறுகிறது. தாய்மொழியை தாய் மண்ணிலேயே புறக்கணிக்கிற எந்த இனமும் உருப்பட முடியாது என்பதற்கு தமிழனே உலகளாவிய சாட்சி!

* மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழ் மக்களுக்கு நிலம் சொந்தமாக உள்ள பல பகுதிகள்,தமிழின வரலாற்றின் களமாக இருந்த பல நிலங்கள், தமிழின கலாசாரமாக சின்னமாக இருந்த நிலங்கள்,நியாயமாகத் தமிழ்நாட்டோடு வரவேண்டிய பல வளமான பகுதிகள், நதி உற்பத்தியாகும் இடங்கள் எல்லாம்,மற்ற மாநிலத்தவரால் திட்டமிட்டுப் பிடுங்கப்பட்டன. அப்போது திராவிட நாடு என்ற கனவில் இருந்த தி.மு.க.,அதையெல்லாம் எதிர்த்தால் அந்த மாநிலங்களில் ஓட்டு வாங்க முடியாது என்று எண்ணி, தமிழ்ப் பெருமாநிலம் சிதறிப்போனதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. திராவிட நாடு என்ற சித்தாந்தம் காரணமாக பெரியாரும் இதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தார்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, ஆந்திர, கேரள, கர்நாடக மாநிலங்களில் உயர்பதவிகளில் இருந்த தமிழர்கள் எல்லோரும் பதவி பறிக்கப்பட்டனர். விரட்டப்பட்டனர். அடுத்தடுத்த கட்டங்களில் தமிழர்கள் அங்கே பதவிக்கு வருவது தடுக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடோ திராவிடம் என்ற பெயரில் எல்லோரையும் தொடர்ந்து அனுமதித்தது. இங்கு வளர்ந்த மற்ற மொழி பேசும் அதிகார வர்க்கத்தினர், அதன் பின்னர் தமிழ்நாட்டில் வேலைப் பார்த்துக்கொண்டே, தங்கள் மாநிலத்துக்கு உண்மையாக நடந்தனர். தமிழனை சுரண்டினர். தமிழன் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், மீட்டிங் பார்ப்பதில் குறியாக இருந்தான்.

* இந்தியாவின் சனாதிபதியாக அப்துல்கலாம் இருந்த நேரம்... காங்கிரசு கட்சி அடுத்த சனாதிபதி வேட்பாளராகப் பிரதீபா பட்டீலை நிறுத்துகிறது. அவர் மராட்டியப் பெண்மணி. மராட்டியத்தில் காங்கிரசும், சிவசேனாவும் எதிர்க்கட்சிகள். ஆனால் சிவசேனா தலைவர் பால்தாக்கரே சொன்னார், ‘‘பிரதீபா பட்டில் எங்கள் செ(ஜெ)ன்ம விரோதக் கட்சியான காங்கிரசு ஆளாக இருக்கலாம். ஆனால் எங்கள் மண்ணின் மகள். மராட்டிய மாணிக்கம். எனவே கட்சி உணர்வை தூக்கி எறிந்துவிட்டு, கூட்டணியோ எதிரணியோ என்று பாராமல் பிரதீபா பட்டீலை ஆதரிக்கிறேன்’’என்று சொன்னார்.


ஆனால் தமிழரான அப்துல் கலாமுக்கு எதிராகக் களம் இறங்கிய பிரதீபா பட்டீலை, அப்துல் கலாம் பிறந்த தமிழ்நாட்டுக்கே முதன் முதலாகக் கொண்டு வந்து அறிமுகக் கூட்டம் நடத்தி, பிரதீபா பட்டீலுக்கு பலம் சேர்த்து,ஒரு சனாதிபதித் தமிழன் வீழக் காரணமாக இருந்தவர்கள் சாட்சாத் தமிழர்கள்தான்.

* ஆந்திராவோ, கர்நாடகாவோ, கேரளாவோ அந்த மொழி இனம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னைக்காக, ஒரு போராட்டம் நடந்தால், அரசாங்கம், அரசியல் தலைவர், ஆள்வோர் அதை அடக்கச் சொன்னாலும் அதிகார வர்க்கமும்,காவல்துறையும் போராட்டக்காரர்களை பூப்போலக் கையாளும். அவர்கள் எல்லாம் உப்பு போட்டு சோறு தின்பதாலேயோ என்னவோ, நம் இன மொழிக்குத்தானே போராடுகிறான் என்ற உணர்வு அங்கு பலருக்கும் இருக்கும். அதே நேரம் ஈழப் பிரச்னைக்காக பெங்களூரில் மறியல் செய்த தமிழர்களை கர்நாடக போலீஸ் எப்படி புரட்டிப் புரட்டி அடித்தது என்பதையும் பார்த்தோம்.

ஆனால் தமிழ்நாட்டில்? நமது மீனவர்களை சிங்களக் கடற்படை என்ன செய்தாலும் கவலை இல்லை. ஆனால் அத்து மீறி தமிழக எல்லைக்குள் வரும் சிங்கள மீனவர்களைப் பார்த்து குனிந்து கும்பிட்டு, சுடுநீரில் குளிப்பாட்டி,சொறிந்து விட்டு, சொடக்கெடுத்து, தலைவாழை இழைபோட்டு, உணவு ஊட்டி, பீடா மடித்துக்கொடுக்கும் தமிழகக் காவல்துறை...
தமிழ்நாட்டில் யாராவது தமிழுக்காக, தமிழனுக்காக போராடினால் மட்டும் சட்டக் கல்லூரிக்குள்ளேயே புகுந்து புரட்டி எடுக்கும் தமிழகக் காவல்துறை.

* காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவதில் மூத்த குடி கன்னடக் குடிதான் என்றாலும், அது கட்சி அரசியலோடு நின்றுவிடும். கன்னட இனம் அழியும் போது காசுக்கு அவர்கள் ஓட்டுப்போட மாட்டார்கள். ஆனால், தொப்புள் கொடி நீளமுள்ள தூரத்தில் 80,000 தமிழர்கள் கொசுக்கள் போல நசுக்கப்பட்டபோதும்... அது பற்றிக் கவலைப்படாமல்,ஒரு நாளைக்கு கூட உருப்படியாகப் பலன் தராத ஓரிரு நூறுரூபாய்த் தாளுக்காக ஓட்டு வியாபாரம் செய்த தமிழக வாக்காளர்கள்...

தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்....

பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

இலங்கையின் பூர்வ குடிகள்.............!

இவர்கள் தான் இலங்கையின் பூர்வ குடிகள். "நாகரீகமடைந்த" சமுதாயத்தால் "வேடுவர்கள்" என்று அழைக்கப் படும் பழங்குடி இனம். தென்னிலங்கையில் ஊவா மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்தில் தொப்பிக்கல, வாகரை போன்ற பிரதேசங்களிலும் அதிகளவில் வாழ்கின்றனர்.


பெயர் மட்டுமே வேடுவர்கள். ஆனால், அந்த மக்கள் வேட்டையாடுவதுடன், விவசாயமும் செய்கின்றனர். இவர்களுக்கென்று தனியான மொழி உண்டு. "நாகரீகமடைந்த" சிங்களவர்களும், தமிழர்களும், மண்ணுக்காக உரிமைப் போரில் ஈடுபட்டமை, உலகம் முழுவதும் தெரிந்த விடயம்.

ஆனால், இலங்கையில் மூன்றாவதாக வேடுவ மொழி பேசும் மக்கள் வாழ்வதும், அவர்களது இனமும், மொழியும் அழிந்து கொண்டு வருவதும், வெளியுலகத்திற்கு தெரியாது. 

சிங்களப் பகுதிகளில் வாழும் வேடுவர்களின் மொழியில், ஆதிக்க மொழியான சிங்களத்தின் சொற்கள் கலந்துள்ளன. ஆனால், அது சிங்களத்தின் கிளை மொழியன்று. தனித்துவமான, 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மொழி.

ஒரு காலத்தில் இலங்கை முழுவதும் வாழ்ந்து அழிந்து போன இயக்கர் இனத்தவர் பேசிய மொழியாக இருக்கலாம். ஏனெனில், இவர்களது தெய்வங்களின் பெயர்கள் "யக்கா" என்று முடிகின்றன.

"நாகரீகமடைந்த" சிங்களவர்கள், இலங்கையின் பழங்குடி இனத்தை சிறுமைப் படுத்தும் நோக்கில், "யக்கா" என்ற சொல்லை பேய், பிசாசு என்ற அர்த்தத்தில் பயன்படுத்தினார்கள். கதிர்காமக் கந்தன் வேடுவரின் குல தெய்வம் ஆகும்.

மேலும் மட்டக்களப்பு தான்தோன்றீசுவரர் ஆலயமும், முற்காலத்தில் வேடுவரின் வழிபாட்டுத்தலமாக இருந்தது. இன்றைய வேடுவரின் மதத்தில், புத்த மதத்தின், இந்து மதத்தின் கூறுகள் கலந்துள்ளன.

ஆனால், "நாகரீகமடைந்த" சிங்களவர்களும், தமிழர்களும், வேடுவரின் புராதன மத நம்பிக்கையை "சிறு தெய்வ வழிபாடு" என்று சிறுமைப் படுத்தி வருகின்றனர். 

வேடுவர்களுக்கு தனியான கலாச்சாரம் உண்டு. குறிப்பிட்ட நேரத்திற்கு ஒழுங்கு படுத்தினால், நேரம் தவறாமல் கலந்து கொள்வது அதில் ஒன்று. ஒரு முறை, சிறீலங்கா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக, வேடுவர் தலைவனை சந்திக்க சென்ற அரசு அதிகாரி, குறிப்பிட்ட இடத்திற்கு தாமதமாக சென்று அசடு வழிந்தார்.

நேரம் தவறாமை மட்டுமல்ல, சூழலியல் சமநிலை பேணுவதற்காக இயற்கையோடு ஒன்றி வாழ்வது குறித்தும், வேடுவர்கள் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எடுத்துக் கூறினார்கள். இருந்தாலும் நாங்கள் இன்னமும் வேடுவர்களை "நாகரீகமடையாத பழங்குடி இனம்" என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Friday 4 January 2013

மூழ்கிய தமிழரின் வரலாறு....!

கடலுக்கடியில் பூம்புகார்... பெங்களூர் மிதிக் சொசைடியில் நடைபெற்ற 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது.

இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக் கூறியதாவது:

ஏசுநாதர் பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும்.

கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது.

ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார். வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”

இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்?
கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா?
அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுக ள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா?
உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்கமா?
உறைந்து போய் விட்டதா?
புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் எற்றப்பட்டிருக்க வேண்டாமா?
காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக்கட்டுரை வெளியிட்டது?
பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக் காட்சிகளுமில்லை. தமிழறிஞர்கள் நடத்தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமா?
பூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா?
சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது?
தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை?
நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா?
அறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை?

கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும். குமரிக்கண்டம்‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது.

அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது. இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும்.

தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது”
1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்
2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு
3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு
4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்
5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள். இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தெளிவாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது.

உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். ( தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர் )

1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.
2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.
3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.
4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.
5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன” என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல்

வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார்.

இதுபற்றி ஆய்வுகளும் தேவை. தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு.

நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள்.

வாயடைத்துப் போகும் ஆரியம்!
நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை. ஆயின் என்சைக்ளோ பீடியா அப்ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழியில் கலைக்களஞ்சியம் உள்ளது.

தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா? அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா? 

தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன்? 

பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை சுனாமி (Tsunami) என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்.

யப்பானிய தீவுக்கூட்டங்களிலும் அவுசுத்திரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல் கண்காணிப் படுகிறது. இதுபற்றி தேசிய புவியியல் அலைவரிசை (National Geographic Channel) பல செய்திகளை வெளிக்கொணர்கிறது.

தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா?

வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்? தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா? 

இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் 
பாக்நீரிணைப் பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா?  

புதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில்தேசிய கடலியல் நிறுவனம் (National Institute Of Oceano Graphy) மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின் கடமையாகும். தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காத, நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.