Wednesday 23 October 2013

மாம்பழத்துக்குப் பெயரைத் ...................!

மாம்பழத்துக்குப் பெயரைத் தந்தது தமிழர்கள்தான். ஆங்கிலத்தில் "மாங்கோ' என்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தப் பெயரைத் தந்தவர்கள் போர்த்துக்கீசியர்கள்.

500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக இந்தியா வந்து ஆங்காங்கே குடியேறிய போர்ச்சுக்கீசியர்கள், இந்திய மாம்பழங்களைச் சுவைத்து அதிசயித்துப் போனார்கள்.

பைத்தியம் பிடிக்காத குறைதான். அதனால்தான் விதவிதமான மாம்பழங்களை உருவாக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அல்போன்சா மற்றும் மல்கோவா என்று நாம் இப்போது சப்புக்கொட்டிச் சாப்பிடுபவை எல்லாம் போர்ச்சுக்கீசியர்களின் கடும் உழைப்பினால் வந்தவை. உலகிற்கு மாம்பழங்களை (ஏற்றுமதி செய்து) அறிமுகப்படுத்தியவர்களும் அவர்களே!
இந்தியர்கள் மாம்பழங்களை 3000 ஆண்டுகளாகச் சுவைத்து மகிழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் ஐரோப்பியர்களுக்கு இதன் சுவை கடந்த 300 ஆண்டுகளாகத்தான் தெரியும் என்பது அதிசய செய்தி!

ஆண்டு முழுவதும் பச்சைப் பசேலென்று இருப்பது மாமரம்.கோடையின் உச்சத்தில் மாம்பழத்தின் காலம் ஆரம்பிக்கும். கோடை வெய்யிலின் உக்கிரம் அதிகரிக்க, அதிகரிக்க மாம்பழத்தின் இனிப்பும் அதிகரிக்கும்! நமது கண்ணையும் கருத்தையும் நாவையும் கவரும் மாம்பழத்தில், உலகில் 1000 வகைகள் உள்ளன.

பந்துபோல உருண்டையாகவும், சற்றே நீள் உருண்டையாகவும், முன்பாகம் கிளியின் மூக்கு போல வளைந்த நிலையிலும் பல்வேறு வடிவங்களில் மாம்பழங்கள் விளைகின்றன. சில வகை மாம்பழங்கள் மாலை வானத்தைப் போல மஞ்சளும் சிவப்பும் கலந்த செவ்விளநீர் நிறத்தில் கண்ணைக் கவரும். சுத்தமான மஞ்சள் மற்றும் இலைப் பச்சை நிறங்களில் ஒரு சாதாரண விளாம்பழத்தின் அளவிலிருந்து தர்பூசணி அளவு பெரிய அளவு வரையிலும் வகைவகையாக மாம்பழங்கள் உள்ளன.

இந்தியாவும் ஆசியாவும் உலகிற்கு அளித்த அன்புப் பரிசு இந்த மாம்பழம். இந்தியாவின் மிகப்பெரும் சாதனை என்று யாராவது கேட்டால், தயங்காமல் "உலகிற்கு மாம்பழத்தை அறிமுகப்படுத்தியதுதான்' என்று சொல்லலாம். 

அசாம் காடுகளிலும் பர்மா (மியான்மர்) நாட்டின் அடர்ந்த காடுகளிலும்தான் முதன் முதலில் மாம்பழங்கள் தோன்றியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

வைட்டமின் ஏ,சி மற்றும் டி அதிகமாக உள்ள மாம்பழத்துக்கு வேறு பல குணங்களும் இருப்பதாக நம்மவர்கள் நம்புகின்றனர். மாம்பழம் யோகத்தைக் கொண்டு வரும் என்று பெரும்பாலோர் நினைக்கின்றனர். மாவிலைத் தோரணங்களை வீட்டு வாசல்களில் தொங்கவிடுவதன் மூலம் யோக தேவதையை இல்லங்களுக்கு வரவழைத்து ஆசைக் கனவுகளையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கருதுகிறார்கள். 

மண்மாதாவின் அன்புக் கொடை என்றும் மாம்பழத்தை வர்ணிக்கின்றனர். கௌதம புத்தர் வெள்ளை நிற மாமரம் ஒன்றை உருவாக்கினார் என்றும் பிற்காலத்தில் அவருடைய வழிவந்தவர்கள் அம்மரத்தை வழிபட்டனர் என்றும் கதைகள் உள்ளன.


எல்லோருடைய மனங்களிலும் இல்லங்களிலும் நிறைவான இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கும் மாம்பழம் உண்மையிலேயே "பழங்களின் அரசன்'தான்!

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.


Saturday 19 October 2013

திருமலையின் வரலாறு உருவாகிய காலம்.....!

உலக வரலாறுகள் உருவாக்க காலம் என்பது கிட்டத்தட்ட கிறிசுத்துக்கு பின் வந்த காலப் பகுதிகளை ஒட்டித்தான் காணப்படுகின்றன.அப்படித்தான் இலங்கை வரலாறும் கி.மு 500 ஆண்டளவில் விசயன் வருகையோடு தொடங்குகிறது என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

ஆனால் மகாவம்சம் விசயன் வருகைக்கு முன்னரான திருகோணமலையில் இறுக்கமான ஒரு ஆட்சி முறை இருந்ததை வெளிப்படையாக சொல்லவிட்டாலும் சில இடங்களில் சொல்லாமலும் இல்லை.

அப்படித்தான் விசயனது வருகைக்குப் பின்னரான சம்பவம் ஒன்றை கூறும் மகாவம்சம் நம் தேடலை அதிகரித்து சென்று விடுகிறது , விசயன் வருகைக்கு பின்னர் விசயனுக்கு வாரிசு இல்லாமல் போகவே விசயன் தனது வாரிசுக்காக கலிங்க நாட்டில் இருந்து தனது தம்பி சுமிதனின் மகனான பாண்டு வாசுதேவனை இலங்கை தீவில் உள்ள தனது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்துக்கு அழைக்கிறான்.



அப்படி அழைக்கப்பட்ட பாண்டு வாசு தேவனும் அவனுடைய 32 மந்திரிகளும் துறவிகள் வேடம் பூண்டே திருகோணமலை துறை முகத்தை அடைந்ததாக மகாவம்சம் கூறுகிறது .

இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நமக்கு ஒரு கேள்வி எழுகிறது.பாண்டு வாசு தேவனும் அவனது மந்திரிகளும் மாறு வேடத்தில் திருகோணமலைக்கு வர காரணம் என்ன ?

அப்படியானால் விசயனது கூட்டத்திற்கு எதிரானவர்களின் கட்டமைப்பு திருகோணமலை பகுதியில் இருந்திருக்க வேண்டும். அதன் காரணமாகவே இக்குழுவினர் மாறுவேடத்தில் வந்திருக்கின்றனர். இவ் மகாவம்ச குறிப்பில் இருந்து இன்னும் ஒன்று புலப்படுகிறது. இங்கு வாழ்ந்த மக்கள் துறவிகளை மதிக்கத்தக்கவர்களாக வாழ்த்திருகின்றனர். ஆகவேதான் பாண்டு வாசுதேவன் குழுவினர் துறவி வேடத்தை தேர்ந்து எடுத்திருகின்றனர்.

ஒழுங்கான ஆட்சி முறையுடன் இம் மக்கள் வாழ்தார்கள் என்று நிருபிக்க மகாவம்சத்தில் இன்னுமொரு குறிப்பு காணப்படுகிறது.துட்டகைமுனு எல்லாளன் போரை பற்றி குறிப்பிடும் மகாவம்சம் எல்லாளனை துட்டகைமுனு வெல்வதற்கு முன்பு 32 தமிழ் ஆரசுகளை வென்றதாக கூறுகிறது.

அதுமட்டும் அல்லாது அக்காலத்தில் மிகப்பிரபலமாக இருந்த கோகர்ண (திருமலை) துறைமுகப்பகுதியை எந்த ஆரிய வம்சத்தில் இருந்து வந்த ஆட்சியாளனும் ஆண்டதாக குறிப்பிடவில்லை. ஆரிய வம்சத்துக்கு ஆதரவாக எழுதப்பட்ட நூலில் அடிக்கடி கோகர்ணம்(திருமலை)சவாலுக்குரிய பகுதியாகவே குறிப்பிடப் பட்டுள்ளது என்பது அவர்களின் செல்வாக்கு குறைவான இடம் என்பதை மட்டும் காட்டுகிறது. அப்படியானால் அந்த 32 அரசர்களில் யாரோ ஒருவனால் இப்பகுதி ஆளப்பட்டு இருக்கிறது என்பது சந்தேகமில்லாமல் புலப்படுகிறது.

இவ்வாறு சவாலுக்குரிய பிரதேசமாக இருந்த கோகர்ணம் வழிபாட்டு ரீதியாகவும் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

கி. மு 300 ஆண்டு காலப்பகுதியில்தான் இலங்கையில் சைவ மற்றும் பிராமணர்களின் செல்வாக்கு அதிகரிக்க தொடங்கிய காலம் எனலாம். இதற்கு முக்கிய காரணம் வியாபார தொடர்புகள்தான். இதே மாதிரித்தான் சமணமும் தேவாதார மற்றும் மகாயான பௌத்தங்கள் நிறுவன ரீதியாக இலங்கை தீவில் காலடி எடுத்து வைக்கின்றன.

கி மு 3 நூற்றாண்டு காலப்பகுதியில் மகாயான பௌத்தத்துக்கு மாறிய மகாசேனன் கோகர்ணம் (திருகோணமலை) , எரகாவில்லை(ஏறாவூர்), மற்றும் இலங்கை தீவின் கிழக்கு பகுதியில் இருந்த பிராமணன் கலந்தனின் ஊர் ஆகிய வற்றில் இருந்த லிங்க கோவில்கள் அழிக்கப்பட்டதாக மாகவம்சம் கூறுகிறது. மகாசெனனால் அழிக்கப்பட்ட மூன்று லிங்க வழிபாட்டு தலங்களும் இருந்த இடங்கள் திருகோணமலையை அண்டிய பிரதேசங்கள்தான் இருந்திருக்கின்றன.

இதில் முக்கியமான விடயம் என்னவேனில் பலமான தென்னிந்திய தொடர்பை திருகோணமலை கொண்டிருந்திருக்கிறது . என் என்றால் இலங்கையில் லிங்க வழிபாடு என்பது ஆதார ரீதியாக இலங்கை ஆதிக்குடிகளிடம் இருக்க வில்லை.கந்த, வேல் ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்ட முருக வழிபாடுதான் இவர்களிடம் இருந்தது.அப்படி காணப்பட்ட திருகோணமலையில் வணிகர்களில் வருகை மூலமே லிங்க வழிபாடு அறிமுகப்படுத்த பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு திருகோணமலையில் லிங்க வழிபாடு , மற்றும் மகாயான புத்த மதங்கள் போட்டி போட்டு கொள்ள முருக வழிபாடு அழியாமல் தனித்துவமான வழிபாட்டு முறையாக கி பி எழாம் நூற்றாண்டு வரை சிறப்பாக இருந்ததை சூளவம்சம் சில புனைவுகளுடன் எடுத்துரைக்கிறது.

கி பி எழாம் நூற்றாண்டு காலப்பகுதியில் மானவர்வன் என்ற இளவரசன் கந்தக்கடவுளை நினைத்து வேள்வி செய்ததாகவும் அப்போது கந்த கடவுள் மயில் பறவையில் வந்து காட்சி தந்ததாகவும் பாளி இலக்கியமான சூளவம்சம் கூறுப்பிடுகிறது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Thursday 10 October 2013

வியக்க வைக்கும் தொழில் நகரம்.....!


2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வியக்க வைக்கும் தொழில் நகரம் கண்டு பிடிப்பு. தமிழ் எழுத்துக்களும் காணப்பட்டன !


திருப்பூர்: திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையிலுள்ள கொடுமணல் கிராமம், இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்குமுன், வணிக பெருநகரமாக விளங்கியதற்கான ஆதாரங்கள், அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைத்துள்ளன.

திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில், நொய்யல் ஆற்றின் கரையிலுள்ளது கொடுமணல் கிராமம். சங்க காலத்தில் வணிக பெருநகரமாக, பதிற்றுப்பத்தில், "கொடுமணம்பட்ட... வினைமான் அருங்கலம்' என்ற பாட்டில், மிகச்சிறந்த தொழிற்கூடங்கள் அமைந்திருந்ததற்கான சான்றுகள் உள்ளன.


இது, சேர மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய கரூரையும், வணிக தொடர்புக்கு பயன்பட்ட மேலைக்கடற்கரை துறைமுகமான, முசிறி பட்டணத்தையும், இணைக்கும் "கொங்கப்பெருவழி'யில் அமைந்துள்ளது. 

ஆய்வின்போது, தமிழ்பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள்; ஆட்பெயர்கள், குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்பிராமி எழுத்துக்கள், இலக்கண பிழையின்றி உள்ளன. இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் படிப்பறிவில் சிறந்தவர்களாக இருந்ததற்கு சான்றாக, இவை கிடைத்துள்ளன.

பிற நாடுகளுடன் வணிக தொடர்புகளை வைத்திருந்ததற்கு சான்றாக வெள்ளி முத்திரை நாணயங்கள், வடக்கத்திய கருப்பு வண்ணம் மெருகேற்றப்பட்ட மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன.

விலை உயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தொழிற்கூடங்கள், நெசவுத்தொழில், நூல் நூற்க பயன்பட்ட தக்களி, தந்தத்தால் செய்யப்பட்ட நூல் நூற்க பயன்படும் உபகரணம், இறந்தவர்களை புதைக்கும் ஈமக்காட்டில், பெருங்கற்படை ஈமச்சின்னங்கள், சுடுமண் தக்கலி, சுடுமண் மணிகள், தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள், கூரை ஓடுகள், கார் நீலியன் எனப்படும் சூதுபவள மணிகள், பளிங்கு கற்கள், வைடூரியம், வீடு, தொழிற்கூடங்கள், 218 மணிகள், சங்கு அணிகலன்கள் என நூற்றுக்கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 50 ஏக்கர் பரப்பளவுள்ள வாழ்விட பகுதியில், 9 அகழாய்வு குழிகளும், 100 ஏக்கர் பரப்பளவுள்ள ஈமக்காட்டில், நடுகல், வட்ட கல் என 100 ஈமச்சின்னங்கள் உள்ளன. இதில், ஒரு ஈமச்சின்னமும் தோண்டப்பட்டுள்ளது. இதில், மூன்று அறைகள், வடமேற்கு மூலையில் உயர் வெண்கல குவளை, கீழ் பகுதி சல்லடை போல் அமைப்பும் இருந்தது.

இரண்டாயிரத்து ஐநூறு  ஆண்டுகளுக்கு முன் சிறந்த விளங்கிய நகர், தோண்டி எடுக்கப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் கல் மணி அணிகலன்கள் மற்றும் உலோக அணிகலன்கள், சங்கு அணிகலன்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கியதும், ஒரு குழுவாக வாழ்ந்ததும், பண்டை காலத்திலேயே, உலக அளவில், மதிப்புமிகு பொருட்கள் உற்பத்தி செய்து வணிக தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

கொடுமணல் பகுதியில், விலை உயர்ந்த, சிறந்த தொழில் நுட்பங்களை கொண்ட அணிகலன்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் இருந்துள்ளன. "நீல கல்'(Sapphire), "பல வண்ணங்கள் கொண்ட படிக கல்'(Quartz) , "பெரில்' (Peril)எனப்படும் வைடூரியங்கள் மற்றும் கல் மணிகளை அறுக்கவும், மெருகூட்டவும் பயன்படும் குறுந்தம் கல் வகைகளும் இங்கு இருந்ததால், இங்கு தொழில் சிறப்பாக இருந்துள்ளது.

மேலும், கார்னீலியன், அகேட் ஆகிய மணிகள் தயாரிக்கும் மூலப்பொருட்கள், குச(ஜ)ராத் பகுதியில் இருந்தும், "பிளாக் கேட் ஐ' எனப்படும் பூனைக்கண் மணிகள் இலங்கையில் இருந்தும், லேபிசு(ஸ்) லசு(ஸ்)லி மணிகள், ஆப்கானிசுத்(ஸ்)தானில் இருந்தும் வந்துள்ளன. அதோடு, சங்கு அறுத்து, அணிகலன்கள் தயாரித்ததும், துணி உற்பத்தியும் சிறந்து விளங்கியதற்கு சான்றாக உபகரணங்கள் கிடைத்துள்ளன.இங்கு, 500 ஆண்டுகள் செழிப்பாக இருந்துள்ளன.

அரசியல், வணிக வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், நகரம் அழிந்துள்ளது. வணிகர்கள் அதிகளவு வந்து தங்கியிருந்ததும், 1912ம் ஆண்டு, ஐந்து கல் தொலைவில் உள்ள கத்தாங்கண்ணியில் கிடைத்த ரோமானிய நாணய குவியலும், வணிக தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன.

தமிழ் பிராமி எழுத்து பொறித்த மண்பாண்டங்கள் கிடைத்ததும், எழுத்து இலக்கண பிழையில்லாமல் உள்ளதால், 2,500 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்களின் கல்வி அறிவை விளக்குகிறது.வடக்கத்திய கருப்பு வண்ணம் மெருகேற்றப்பட்ட மண்பாண்டங்கள், பிராகிருத மொழியில் பெயர் பொறித்து ஆட் பெயர்கள், பெருங்கற்படை சின்னங்கள், இனக்குழு சார்ந்த வாழ்வியலையும், அவர்களுக்கு தேவையான உணவு உற்பத்திக்கு, வேளாண் தொழில் மேற்கொண்டதற்கான உழவு, அறுவடைக்கான உபகரணங்கள்,சேமிப்பு கிடங்குகள், கால்நடை எலும்புகள் அதிகளவு கிடைத்துள்ளதால், கால்நடை வளர்ப்பும் சிறந்து விளங்கியுள்ளது.

ஆட்பெயர்களில், மாகந்தை, குவிரன், சுமனன், ச(ஸ)ம்பன், ச(ஸ)ந்தைவேளி, பன்னன், பாகன், ஆதன் என்ற பெயர்களும், பெரும்பாலும் சாத்தன், ஆதன் என முடிவடைகின்றன. கண்ணகியின் கணவர் பெயர் சாத்தன்; சேர அரசர்களின் பெயர் சேரலாதன் என முடிவடைவதும், இந்நகரின் காலத்தை குறிக்கிறது.

விலை உயர்ந்த மணிகள் உற்பத்தி நகரமாக இருந்ததாலும், ஆயுதங்கள், கோவில்கள் தென்படவில்லை. இதிலிருந்து போர் முறை, கடவுள் வழிபாடு, பிந்தைய காலத்தில் உருவானது என தெரியவருகிறது.

அறிவியல் சார்ந்த கார்பன் ஆய்வு, அமெரிக்காவுக்கு அனுப்பி ஆய்வு செய்ததில், கொடுமணல் காலம் கி.மு., ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தையது என தெரிந்துள்ளது.கொடுமணல் என்ற நகரம், மிகச்சிறந்த தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழிற்கூடங்களை கொண்ட நகரமாகவும், உள்நாடு, வெளிநாடு வணிக உறவுகளை கொண்ட வணிக நகரமாகவும், சமூக, பொருளாதார, எழுத்தறிவு பெற்ற நகரமாகவும் விளங்கியுள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.