Thursday 10 October 2013

வியக்க வைக்கும் தொழில் நகரம்.....!


2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வியக்க வைக்கும் தொழில் நகரம் கண்டு பிடிப்பு. தமிழ் எழுத்துக்களும் காணப்பட்டன !


திருப்பூர்: திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையிலுள்ள கொடுமணல் கிராமம், இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்குமுன், வணிக பெருநகரமாக விளங்கியதற்கான ஆதாரங்கள், அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைத்துள்ளன.

திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில், நொய்யல் ஆற்றின் கரையிலுள்ளது கொடுமணல் கிராமம். சங்க காலத்தில் வணிக பெருநகரமாக, பதிற்றுப்பத்தில், "கொடுமணம்பட்ட... வினைமான் அருங்கலம்' என்ற பாட்டில், மிகச்சிறந்த தொழிற்கூடங்கள் அமைந்திருந்ததற்கான சான்றுகள் உள்ளன.


இது, சேர மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய கரூரையும், வணிக தொடர்புக்கு பயன்பட்ட மேலைக்கடற்கரை துறைமுகமான, முசிறி பட்டணத்தையும், இணைக்கும் "கொங்கப்பெருவழி'யில் அமைந்துள்ளது. 

ஆய்வின்போது, தமிழ்பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள்; ஆட்பெயர்கள், குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்பிராமி எழுத்துக்கள், இலக்கண பிழையின்றி உள்ளன. இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் படிப்பறிவில் சிறந்தவர்களாக இருந்ததற்கு சான்றாக, இவை கிடைத்துள்ளன.

பிற நாடுகளுடன் வணிக தொடர்புகளை வைத்திருந்ததற்கு சான்றாக வெள்ளி முத்திரை நாணயங்கள், வடக்கத்திய கருப்பு வண்ணம் மெருகேற்றப்பட்ட மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன.

விலை உயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தொழிற்கூடங்கள், நெசவுத்தொழில், நூல் நூற்க பயன்பட்ட தக்களி, தந்தத்தால் செய்யப்பட்ட நூல் நூற்க பயன்படும் உபகரணம், இறந்தவர்களை புதைக்கும் ஈமக்காட்டில், பெருங்கற்படை ஈமச்சின்னங்கள், சுடுமண் தக்கலி, சுடுமண் மணிகள், தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள், கூரை ஓடுகள், கார் நீலியன் எனப்படும் சூதுபவள மணிகள், பளிங்கு கற்கள், வைடூரியம், வீடு, தொழிற்கூடங்கள், 218 மணிகள், சங்கு அணிகலன்கள் என நூற்றுக்கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 50 ஏக்கர் பரப்பளவுள்ள வாழ்விட பகுதியில், 9 அகழாய்வு குழிகளும், 100 ஏக்கர் பரப்பளவுள்ள ஈமக்காட்டில், நடுகல், வட்ட கல் என 100 ஈமச்சின்னங்கள் உள்ளன. இதில், ஒரு ஈமச்சின்னமும் தோண்டப்பட்டுள்ளது. இதில், மூன்று அறைகள், வடமேற்கு மூலையில் உயர் வெண்கல குவளை, கீழ் பகுதி சல்லடை போல் அமைப்பும் இருந்தது.

இரண்டாயிரத்து ஐநூறு  ஆண்டுகளுக்கு முன் சிறந்த விளங்கிய நகர், தோண்டி எடுக்கப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் கல் மணி அணிகலன்கள் மற்றும் உலோக அணிகலன்கள், சங்கு அணிகலன்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கியதும், ஒரு குழுவாக வாழ்ந்ததும், பண்டை காலத்திலேயே, உலக அளவில், மதிப்புமிகு பொருட்கள் உற்பத்தி செய்து வணிக தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

கொடுமணல் பகுதியில், விலை உயர்ந்த, சிறந்த தொழில் நுட்பங்களை கொண்ட அணிகலன்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் இருந்துள்ளன. "நீல கல்'(Sapphire), "பல வண்ணங்கள் கொண்ட படிக கல்'(Quartz) , "பெரில்' (Peril)எனப்படும் வைடூரியங்கள் மற்றும் கல் மணிகளை அறுக்கவும், மெருகூட்டவும் பயன்படும் குறுந்தம் கல் வகைகளும் இங்கு இருந்ததால், இங்கு தொழில் சிறப்பாக இருந்துள்ளது.

மேலும், கார்னீலியன், அகேட் ஆகிய மணிகள் தயாரிக்கும் மூலப்பொருட்கள், குச(ஜ)ராத் பகுதியில் இருந்தும், "பிளாக் கேட் ஐ' எனப்படும் பூனைக்கண் மணிகள் இலங்கையில் இருந்தும், லேபிசு(ஸ்) லசு(ஸ்)லி மணிகள், ஆப்கானிசுத்(ஸ்)தானில் இருந்தும் வந்துள்ளன. அதோடு, சங்கு அறுத்து, அணிகலன்கள் தயாரித்ததும், துணி உற்பத்தியும் சிறந்து விளங்கியதற்கு சான்றாக உபகரணங்கள் கிடைத்துள்ளன.இங்கு, 500 ஆண்டுகள் செழிப்பாக இருந்துள்ளன.

அரசியல், வணிக வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், நகரம் அழிந்துள்ளது. வணிகர்கள் அதிகளவு வந்து தங்கியிருந்ததும், 1912ம் ஆண்டு, ஐந்து கல் தொலைவில் உள்ள கத்தாங்கண்ணியில் கிடைத்த ரோமானிய நாணய குவியலும், வணிக தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன.

தமிழ் பிராமி எழுத்து பொறித்த மண்பாண்டங்கள் கிடைத்ததும், எழுத்து இலக்கண பிழையில்லாமல் உள்ளதால், 2,500 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்களின் கல்வி அறிவை விளக்குகிறது.வடக்கத்திய கருப்பு வண்ணம் மெருகேற்றப்பட்ட மண்பாண்டங்கள், பிராகிருத மொழியில் பெயர் பொறித்து ஆட் பெயர்கள், பெருங்கற்படை சின்னங்கள், இனக்குழு சார்ந்த வாழ்வியலையும், அவர்களுக்கு தேவையான உணவு உற்பத்திக்கு, வேளாண் தொழில் மேற்கொண்டதற்கான உழவு, அறுவடைக்கான உபகரணங்கள்,சேமிப்பு கிடங்குகள், கால்நடை எலும்புகள் அதிகளவு கிடைத்துள்ளதால், கால்நடை வளர்ப்பும் சிறந்து விளங்கியுள்ளது.

ஆட்பெயர்களில், மாகந்தை, குவிரன், சுமனன், ச(ஸ)ம்பன், ச(ஸ)ந்தைவேளி, பன்னன், பாகன், ஆதன் என்ற பெயர்களும், பெரும்பாலும் சாத்தன், ஆதன் என முடிவடைகின்றன. கண்ணகியின் கணவர் பெயர் சாத்தன்; சேர அரசர்களின் பெயர் சேரலாதன் என முடிவடைவதும், இந்நகரின் காலத்தை குறிக்கிறது.

விலை உயர்ந்த மணிகள் உற்பத்தி நகரமாக இருந்ததாலும், ஆயுதங்கள், கோவில்கள் தென்படவில்லை. இதிலிருந்து போர் முறை, கடவுள் வழிபாடு, பிந்தைய காலத்தில் உருவானது என தெரியவருகிறது.

அறிவியல் சார்ந்த கார்பன் ஆய்வு, அமெரிக்காவுக்கு அனுப்பி ஆய்வு செய்ததில், கொடுமணல் காலம் கி.மு., ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தையது என தெரிந்துள்ளது.கொடுமணல் என்ற நகரம், மிகச்சிறந்த தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழிற்கூடங்களை கொண்ட நகரமாகவும், உள்நாடு, வெளிநாடு வணிக உறவுகளை கொண்ட வணிக நகரமாகவும், சமூக, பொருளாதார, எழுத்தறிவு பெற்ற நகரமாகவும் விளங்கியுள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.