Sunday 10 November 2013

இசைப்பிரியாவின் சகோதரி விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்.....!

இசைப்பிரியாவின் சகோதரி விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்; செவிமடுப்பனவா தமிழ் ஊடகங்கள்?!

இறுதிப்போரில் இலங்கைப் படையினரால் பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகப் போராளி இசைப்பிரியாவின் குடும்பத்தினர் சார்பாக அவரது சகோதரி திருமதி தர்மினி வாகீசன் தமிழ் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த நான்கு ஆண்டுகளாக “இசைப்பிரியா” எனும் புனைப்பெயரைக் கொண்ட எனது தங்கையான, மறைந்த தமிழ்மொழி ஊடகவியலாளர் சோபனா அருட்செல்வன் அவர்கள் தொடர்பான செய்திகள், பெரும்பாலான செய்தி ஊடகங்களில் வசதிக்கேற்ப கதையமைக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.


இதனைத் தொகுப்பவர்கட்கு இசைப்பிரியாவைப் பற்றி எதுவும் தெரியுமா? அன்றி இசைப்பிரியாவுடன் இறுதிநாளிலே நந்திக் கரையோரம் இவர்களும் இருந்தார்களா? எப்படி உங்களால் இது முடிகிறது ? ! என்பது தெரியவில்லை. தமிழன் என்பவன் வீரத்துடன் மானத்தையும், பாசத்தையும் ஒருசேரப் போற்றுபவன். தமிழ் ஊடகங்களும் அதற்கு சான்று பகர்வனவாகவும், அவற்றை வளர்ப்பவைகளாகவும் அமைய வேண்டும்.

இசைப்பிரியா என்பவள் ஒரு கற்பனை கதாப்பாத்திரமல்ல. உயிருடன் சிறப்பாக வாழ்ந்து, நம் தமிழ் சமூகத்திற்காகவே உயிர்நீத்த ஒரு தமிழ்ப் பெண்.

ஒரு பெண்ணைப் பற்றிய செய்தியை எப்படி வெளியிட வேண்டும் என்ற நாகரிகம் ஒரு ஆறறிவு படைத்த மனிதனுக்கு, அதுவும் ஊடக சமூகத்திற்கு நிச்சயம் இருக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கின்றேன். அரை உடலை மறைத்து ஆடை அணிவதை நாகரிகமாகக் கொண்ட ஆங்கில ஊடகங்களுக்கு தெரிந்த ஊடக தர்மம், என் தாய் மொழி ஊடகங்களுக்கு தெரியாமலிருப்பது பெருத்த அவமானத்தையும், மனவருத்தத்தையும் அளிக்கின்றது.

தேசியத் தலைவர் காலங்களிலே, சிங்கள இராணுவப் பயங்கரவாதிகளால் போராளிகளும் பொதுமக்களும் சந்தித்த பல போர் விதிமீறல்கள் புகைப்படங்களாகவும், ஒளிநாடாக்களாகவும் அமைக்கக் கூடிய சூழல்கள் இருந்தன. பாரிய சண்டைகள் இராணுவ முன்நகர்வுகளின் போது இலங்கை இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டு, விடுதலைப் புலிகள் அமைப்பிடம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் ஒப்படைக்கப்படும் வித்துடல்கள் பல மிகவும் மோசமான நிலையில் கேவலப்படுத்தப்பட்டிருக்கும்.

அவற்றையெல்லாம் ஒளிப்படமாக்கி அவர்கள் உயிருடன் வாழ்ந்த காட்சிகளுடன் இணைத்து வெளியிடத் தெரியாதவைகளாவா விடுதலைப் புலிகளின் ஊடகங்கள் இருந்தன. அவர்கள் ஏன் அதனைச் செய்யவில்லை. தமிழ் ஊடக சகோதரர்களே நீங்கள் இன்று என்ன செய்கிறீர்கள்? இதிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி தான் என்ன ?

இசைப்பிரியா அவர்கள் ஒரு தமிழ்ப்பெண். ஒரு இளம் தாய், ஒரு குடும்பப்பெண். பல் திறமைசாலி, எல்லா வளமும் நிறைந்த சூழலில், குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். அவர்களுக்கென்று பெற்றோர், சகோதரிகள், பிள்ளைகள் என எல்லா உறவுகளுமே உண்டு. அவற்றையும் விட தமிழீழ தேசியத் தலைவரின் வளர்ப்பிலே இணைந்து பத்தாண்டிற்கு மேலாக ஊடகப் போராளியாக வலம் வந்து தலைவரதும் தமிழ் மக்களதும் நன்மதிப்பை பெற்றவள்.

கடும்போர் சூழ்ந்து பதுங்கு குழிகளை வாழ்விடமாக்கி முதுகு வளைந்து மக்கள் நடமாடிய காலத்தில் கூட, அவள் தன் குழந்தைகளையும் மறந்து உறவிழந்து தவிப்போரையும், காயமடைந்து மருந்தின்றி தவிப்போரையும் ஆற்றுப்படுத்துவதிலேயே தன் நாட்களைக் கழித்தாள். அவளின் பாசமான வார்த்தைகளை என்றுமே எம் தமிழ் உறவுகள் மறக்க மாட்டார்கள்.

ஊடக சகோதரர்களே!

அவளை நீங்கள் அறிந்திருந்தால்தானே அவளது மென்மையும், தாய்மையும், சகோதரப் பாங்கும் உங்கட்குப் புரியும். பூவினும் மென்மையான அந்தத் தாயின் காட்சிகளை கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சிகளாக்க உங்களுக்கு எப்படி மனம் ஒப்பியது. அவளது சகோதரியானதால் நான் மட்டுமல்ல தாயகத்தே அவளை நேசித்த தாய்மடி உறவுகளும் உங்கள் பொறுப்பற்ற செயலை கண்டித்த வண்ணமே உள்ளார்கள்.

சிங்கள அரச பயங்கரவாதத்தினால் நடத்தப்பட்ட இறுதி தமிழின அழிப்பு நடவடிக்கையின்போது உயிருடன் பிடிக்கப்பட்டு இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டார். துவாரகாவிலிருந்து மாறுபட்ட தோற்றமுடையவளாக இசைப்பிரியா இருந்திருந்தால் கூட சிங்களக் காடைகள் அவளை உயிருடன் விட்டிருக்கப்போவதில்லை. இந்தத் தகவலே போர் விதி மீறலுக்குப் போதுமான ஆதாரமாகும்.

சனல்-4 ஒரு காணொளியை வெளியிட்டால் உடனேயே அதற்கொரு கதை, வசனம், நெறியாள்கை செய்து சினிமாப் படமாக வெளியிடுகின்றீர்கள். சினிமாப் படங்களுக்குக் கூட ஒரு தணிக்கை உள்ளது. உங்கள் வீட்டுப் பெண்ணாக இருந்தால் இப்படித்தான் வெளியிடுவீர்களா? உங்கள் வீட்டுப் பெண்கள் உங்களிடம் இதுபற்றி மனம் வருந்தவில்லையா? உங்களது இந்த அபரிதமான அத்துமீறல்களையிட்டு இசைப்பிரியா குடும்பம் சார்பாக எனது அதிருப்தியையும், மனவருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ் ஒளிநாடாக்களை சிங்களவனிடமிருந்து பெற்று அதில் உள்ளவற்றை பொறுப்பற்ற முறையில் பிறரிடம் கையளித்த தமிழ் உறவுகளிடமும் எமது மன வருத்தத்தினை இவ்விடத்திலே நாம் தெரியப்படுத்த விரும்புகின்றோம். இதில் சம்பந்தப்பட்டிருப்பது உங்கள் அனைவருக்காகவும் மடிந்த ஒரு தமிழ்ப் பெண்ணின் மானம் என்பதை ஏன் நீங்கள் சிந்திக்க மறந்தீர்கள். அவளது தியாகத்தை ஏன் இப்படி அசிங்கப்படுத்துகின்றீர்கள்.

விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளென இணையங்களில் தோன்றுபவர்களே…உங்களுக்கும் இது தோன்றவில்லையா?? இதற்கான உங்கள் முன்னெடுப்பென்ன?? அவளின் பெயரை சொல்லி புகைப்படங்களில் காட்சி கொடுக்கும் நீங்கள், அசிங்கமான காட்சிகளை தணிக்கை செய்யவேண்டுவதிலும் எமக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

தமிழர் மீதான, உலகறிய நடத்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கையை பகிரங்கப்படுத்தி, இலங்கை அரசுமீது போர்க்குற்ற விசாரணையை நடத்த உலகைத் தூண்ட வேண்டியது ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதிகளான எமது கடமையாகும். ஆனால், சம்பவக் கோர்வைக்காகவும், வியாபார நோக்கு, சுயஇலாபம் கருதியும் உங்கள் மனத்தே எழும் கற்பனைகளையும், யூகங்களையும் கருவாக்கி ஒளிப்படங்களுக்கேற்ப கதையெழுதும் பொறுப்பற்ற சில தமிழ் ஊடகங்களின் செயற்பாடானது எமக்கு மிகுந்த மனவேதனை அளிக்கின்றது.

53வது படையணிக்கு கட்டளையிட்டவர்களும், படைப்பிரிவு அமைப்பவர்களும் போல் உங்கள் திறமையைக் காட்ட நீங்கள் எழுதும் வார்த்தைகள் எம் இதயங்களை ஈயக்குண்டுகளாக ரணமாக்குகின்றன. இசைப்பிரியாவையும், வேறு குடும்ப உறவுகள் மூவரையும் இழந்து நான்கரையாண்டுகளாக வளமிகு எம் தாய்நாட்டை விட்டு நாதியற்றலையும் எங்களை, நீங்களுமா துன்பப்படுத்த வேண்டும்.

ஊடகக் கோட்பாடுகளயும், அறநெறிகளயும் மீறிய சில தமிழ் ஊடகவியலாளர்களதும் அவர்கள் நடத்தும் இணையங்களதும் செயற்பாடானது பொறுப்புணர்வுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்படும் ஏனைய தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்களையும் சேர்த்தே பாதிக்கின்றது என்பதை ஒரு ஊடகப் போராளியின் சகோதரி என்ற முறையில் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இசைப்பிரியா எம் குடும்பத்தின் அன்பு தேவதை, இசைப்பிரியா தமிழினத்தின் ஒட்டுமொத்த வலிக்கான உணர்வாதாரம். இசைப்பிரியா பூசிக்கப்பட வேண்டிய ஒரு தமிழ்த்தாய். அவளை சிங்களவனுடன் சேர்ந்து நீங்களும் அசிங்கப்படுத்தாதீர்கள். சக ஊடகவியலாளர்களதும், அவரது குடும்பத்தாரதும் உணர்வுகட்கு மதிப்பளியுங்கள்.

இசைப்பிரியா சார்பாகவும், அவரது குடும்பத்தினர் சார்பாகவும் எனது உணர்வுபூர்வமான வேண்டுகோள் என்னவென்றால், இன்று முதல் இசைப்பிரியா தொடர்பான பொதுவில் தவிர்க்கப்படவேண்டிய ஒளிப்படங்களையோ, காணொளிகளையோ, சம்பவ யூகக் கற்பனைகளையோ வெளியிடாதீர்கள். இசைப்பிரியா சிங்கள இராணுவத்தினரால் உயிருடன் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வளவு தகவலுமே போதுமானது.

எமது இவ் வேண்டுகோளை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்றும் எம்மை சட்ட நடவடிக்கை நோக்கி செல்லும் சந்தர்ப்பத்திற்கு ஆளாக்கமாட்டீர்கள் என்றும் நம்புகின்றேன்.

குடும்பத்தினர் சார்பாக

திருமதி தர்மினி வாகீசன்

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.