Sunday 6 January 2013

இலங்கையின் பூர்வ குடிகள்.............!

இவர்கள் தான் இலங்கையின் பூர்வ குடிகள். "நாகரீகமடைந்த" சமுதாயத்தால் "வேடுவர்கள்" என்று அழைக்கப் படும் பழங்குடி இனம். தென்னிலங்கையில் ஊவா மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்தில் தொப்பிக்கல, வாகரை போன்ற பிரதேசங்களிலும் அதிகளவில் வாழ்கின்றனர்.


பெயர் மட்டுமே வேடுவர்கள். ஆனால், அந்த மக்கள் வேட்டையாடுவதுடன், விவசாயமும் செய்கின்றனர். இவர்களுக்கென்று தனியான மொழி உண்டு. "நாகரீகமடைந்த" சிங்களவர்களும், தமிழர்களும், மண்ணுக்காக உரிமைப் போரில் ஈடுபட்டமை, உலகம் முழுவதும் தெரிந்த விடயம்.

ஆனால், இலங்கையில் மூன்றாவதாக வேடுவ மொழி பேசும் மக்கள் வாழ்வதும், அவர்களது இனமும், மொழியும் அழிந்து கொண்டு வருவதும், வெளியுலகத்திற்கு தெரியாது. 

சிங்களப் பகுதிகளில் வாழும் வேடுவர்களின் மொழியில், ஆதிக்க மொழியான சிங்களத்தின் சொற்கள் கலந்துள்ளன. ஆனால், அது சிங்களத்தின் கிளை மொழியன்று. தனித்துவமான, 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மொழி.

ஒரு காலத்தில் இலங்கை முழுவதும் வாழ்ந்து அழிந்து போன இயக்கர் இனத்தவர் பேசிய மொழியாக இருக்கலாம். ஏனெனில், இவர்களது தெய்வங்களின் பெயர்கள் "யக்கா" என்று முடிகின்றன.

"நாகரீகமடைந்த" சிங்களவர்கள், இலங்கையின் பழங்குடி இனத்தை சிறுமைப் படுத்தும் நோக்கில், "யக்கா" என்ற சொல்லை பேய், பிசாசு என்ற அர்த்தத்தில் பயன்படுத்தினார்கள். கதிர்காமக் கந்தன் வேடுவரின் குல தெய்வம் ஆகும்.

மேலும் மட்டக்களப்பு தான்தோன்றீசுவரர் ஆலயமும், முற்காலத்தில் வேடுவரின் வழிபாட்டுத்தலமாக இருந்தது. இன்றைய வேடுவரின் மதத்தில், புத்த மதத்தின், இந்து மதத்தின் கூறுகள் கலந்துள்ளன.

ஆனால், "நாகரீகமடைந்த" சிங்களவர்களும், தமிழர்களும், வேடுவரின் புராதன மத நம்பிக்கையை "சிறு தெய்வ வழிபாடு" என்று சிறுமைப் படுத்தி வருகின்றனர். 

வேடுவர்களுக்கு தனியான கலாச்சாரம் உண்டு. குறிப்பிட்ட நேரத்திற்கு ஒழுங்கு படுத்தினால், நேரம் தவறாமல் கலந்து கொள்வது அதில் ஒன்று. ஒரு முறை, சிறீலங்கா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக, வேடுவர் தலைவனை சந்திக்க சென்ற அரசு அதிகாரி, குறிப்பிட்ட இடத்திற்கு தாமதமாக சென்று அசடு வழிந்தார்.

நேரம் தவறாமை மட்டுமல்ல, சூழலியல் சமநிலை பேணுவதற்காக இயற்கையோடு ஒன்றி வாழ்வது குறித்தும், வேடுவர்கள் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எடுத்துக் கூறினார்கள். இருந்தாலும் நாங்கள் இன்னமும் வேடுவர்களை "நாகரீகமடையாத பழங்குடி இனம்" என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.