Tuesday, 16 October 2012

தமிழர் வணிகத்தின் பழமையை ..............!




















மேற்கண்ட வரைபடத்தில் நீல நிறத்தில் இருக்கும் கோடு பண்டைய கடல் வணிகத்தையும், சிவப்பு நிறத்தில் இருக்கும் கோடு பண்டைய தரை வணிகத்தையும் காட்டுகிறது. சீனா முதல் ரோம் வரையான பண்டைய வாணிகம் நடைபெற்ற நாடுகள் இதில் தரப்பட்டுள்ளன.

ஆரம்பகால தமிழர் கடல் வணிகம் என்பது இந்தோனேசியத் தீவுகளில் இருந்து தமிழகம் வழியாக பாரசீக வளைகுடா வரையில் கடற்கரை ஓரமாக மட்டுமே நடந்து வந்தது. பின்னரே அது நடுக்கடல் வணிகமாக பரிணமித்தது. 

அதன் பின்னரே அது மேற்கே எகிப்துக்கும், ரோமுக்கும் கிழக்கே சீனா வரையிலும் பரவியது. தமிழர்கள் ஆரம்பகாலம் முதல் மிக நீண்டகாலம் வரை, இந்தோனேசியத் தீவுகளுக்கும் பாரசீக வளைகுடா நாடுகளுக்கும் மட்டுமே சென்று வந்தனர்.

அரேபியர்களே தமிழகம், இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவைகளின் பொருட்களை முக்கியமாக, வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் தமிழர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு, மேற்குலக நாடுகளுக்கு விநியோகித்தனர்.

பழங்காலத்தில் மேற்குலக நாடுகளுக்கு வாசனைப் பொருட்களும், வாசனைத் திரவியங்களும் மிக மிக தேவைப்பட்டது. பின்னர் தமிழர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவரை சென்று (சொமாலியா) வணிகம் செய்தனர். 

தமிழர்கள் மிக பழங்காலத்தில் இருந்தே, அந்தந்த நாடுகளில் தங்கி இருந்து வணிகம் செய்து வந்தனர். மேலே வரைபடத்தில் உள்ள பாரசீகம்(Persia) என்ற இடத்தில்தான் சுமேரியா, அசீரியா, பாபிலோனியா, பாரசீக நாகரிகங்கள் தோன்றி வளர்ந்தன.

மேலே வரைபடத்தில் உள்ள யா(ஜா)வா(Java) என்ற இடத்தின் அருகே தான் வாசனைத் தீவும்(மொலுக்கஸ்), இன்னபிற தென்கிழக்கு ஆசிய நாடுகளும் உள்ளன.

பண்டைய மேற்கு தமிழகத்தில்(கேரளா), இன்றைய கொச்சி அருகே, அன்று இருந்த முசிறியும், இன்றைய மும்பாய் அருகே அன்று இருந்த பாரிகாயா(ஜா)வும்(Barygaza) வரைபடத்தில் தொட்டுக் காட்டப்பட்டுள்ளன. 

தமிழர் கடல் வணிகம்-திரு. சு(ஸ்)காப் அவர்கள்: “காட்டுமிராண்டி நிலையிலிருந்து கிரேக்கர்கள் எழுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தும் பழம்பெரும் இந்தியாவும் பாரசீக வளைகுடாவைத் தங்கள் வணிகத்திற்கான மையமாகக்கொண்டு.

வணிகப் பொருட்களை வாங்க, விற்க ஒரு வணிகமுறையை உருவாக்கிக் கொண்டனர் என்பதோடு அவர்கள் அன்றே ஆப்பிரிக்காவோடும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். 

இந்தியாவில்(தமிழகத்தில்) உருவாகியிருந்த வளர்ந்த நாகரிகம் தம் சொந்த கப்பல் போக்குவரத்து மூலம் இந்த வணிகத்தை சாத்தியமாக்கியிருந்தது” என எரித்ரேயக்கடலில் பெரிப்ளசு(ஸ்) என்கிற கிரேக்க நூலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பின் முன்னுரையில், புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் திரு.சு(ஸ்)காப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(SOURCE ; THE PERIPLUS OF ERITHRYAN SEA-English translation by W.H.SCHOFF Page.3 ) கிப்பாலசு(ஸ்)(Hippalus) அவர்கள் பருவக்காற்றை கடல் பயணத்திற்கு பயன்படுத்தும் முறையை கண்டுபிடிப்பதற்கு பலநூறு நூற்றாண்டுகளுக்கு முன்பே,  தமிழர்களும்(திராவிடியர்களும்), அரேபியர்களும் பருவக்காற்றை பயன்படுத்தி கடல் பயணம் செய்து கொண்டிருந்தனர் என்கிறார் சு(ஸ்)காப் அவர்கள்.

கென்னடி என்கிற மற்றொரு வரலாற்று ஆய்வாளர் தனது கட்டுரை ஒன்றில்(Journal of the royal asiyatic society 1898-pp;248-287), இதனை ஏற்றுக் கொண்டாலும் கி.மு. 7ஆம் நூற்றாண்டில் இருந்துதான், இந்திய - பாபிலோனிய வர்த்தகம் மிகப்பெரிய அளவில் திராவிடர்களாலும், சிறிய அளவில் ஆரியர்களாலும் நன்கு செழித்து வளர்ந்தது என்றும்.

இந்திய வணிகர்கள் அரேபிய, கிழக்கு ஆப்ரிக்கா, பாபிலோனியா, சீனா போன்ற இடங்களில் தங்கி வணிகம் புரிந்தனர் என்றும் குறிப்பிடுவதாக சு(ஸ்)காப் அவர்கள் தெரிவிக்கிறார்.

இதனை மறுத்து மிக நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே, கடல் வணிகம் நடந்து வந்ததை பேசவந்த சு(ஸ்)காப் அவர்கள், ஏழரா(eeEZRA) அவர்கள் யூதர்களின் பண்டைய வேத நூலை மறுபதிப்பு செய்ததன் காரணமாகவே (ஏழரா என்பவர் யூதர்களின் முக்கிய மதகுரு ஆவார். அவரால் பண்டைய எபிரேய சமய வழிபாட்டு நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்டன. அதனால் அந்நூல் அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. அவருடைய காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு ஆகும்).

இந்த பண்டைய வணிகக் குறிப்புகள் இடம் பெறுகின்றன எனக்கருதி, கென்னடி அவர்கள் பண்டைய எகிப்திய வணிகத்தை மறுதலிக்கிறார் என்றும், ஆனால் பண்டைய எகிப்திய ஆவணங்களில், இந்திய மூலம் கொண்ட பொருட்கள் என்ன குறிப்பிடப்பட்டு உள்ளனவோ, அதே பொருட்கள்தான் ஏழராவின் மறுபதிப்பிலும் இடம்பெறுகின்றன என்கிறார். 

ஆகவே ஏழராவின் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்திய மூலம்கொண்ட வணிகப் பொருட்கள் சோமாலிய கடற்கரைக்கும், நைல் நதிக்கும் அப்பால் விற்கப்பட்டு வந்த ஒரு வணிகம், நடைபெற்று வந்துள்ளது என்பதே உண்மை என்கிறார்.

மேலும் நாகரிக வளர்ச்சி பெறா மிகப்பழங்காலத்தில் ஒரு பழங்குடியினரிடமிருந்து மற்றொரு பழங்குடியினருக்கும், ஒரு கடற்துறை நகரிலிருந்து பிறிதொரு கடற்துறைக்குமாக வணிகம் நடைபெற்றது என்கிறார். (SOURCE ; THE PERIPLUS OF ERITHRYAN SEA-English translation by W.H.SCHOFF Page.227,228 )

ஆக திரு. சு(ஸ்)காப் அவர்களின் கூற்றுப்படி கி.மு. 7 ஆம் நூற்றாண்டுக்கு மிக நீண்டகாலம் முன்பிருந்தே தமிழர்கள், அரேபியர்கள் மூலம் மெசபடோமியப் பகுதிகளுக்கும், கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும், எகிப்துக்கும், பாலஸ்தீனத்துக்கும், கிழக்கே சீனா வரையிலும் வணிகம் செய்து வந்தனர் எனலாம்.

திரு.சு(ஸ்)காப் அவர்களுடைய “எரித்ரேயக் கடலில் பெரிப்ளசு(ஸ்)” என்ற ஆங்கில நூல் மொத்தம் 325 பக்கங்களைக் கொண்டுள்ளது. அதில் பெரிப்ளசு(ஸ்) அவர்களுடைய மூல நூலின் பக்கங்கள் 28 ஆகும்.(பக்:22-49). மீதி உள்ள பக்கங்களில் 234 பக்கங்கள்(பக்:50-283), சு(ஸ்)காப் அவர்களின் விரிவான விளக்கக் குறிப்புகளைக் கொண்டவை.

பண்டைய தமிழகத் துறைமுகங்கள், நகரங்கள், வணிகப்பொருட்கள் பற்றி 
மட்டும் 40 பக்கங்கள்(பக்:203-242) உள்ளன. பெரிப்ளசு(ஸ்) காலத்தில் இருந்த நாடுகள், நகரங்கள், வணிகப் பொருட்கள் குறித்த முழுமையான வரலாறுகளையும், நிலவியல் தரவுகளையும், இன்ன பிறவற்றையும் திரு.சு(ஸ்)காப் அவர்கள் நன்கு அறிந்து கொண்டுதான் விளக்கக் குறிப்புகளை அளித்துள்ளார்.

தமிழகம் குறித்து பல்வேறு நூல்களை நன்கு படித்து, ஆழ்ந்து புரிந்து கொண்டு எழுதியுள்ளார்.

ஆக பொதுவாக அவரது இந்த நூல், பண்டைய காலத்திய கடல் வாணிகம் குறித்த, மிக முக்கியமான அதிகாரபூர்வமான ஆவணம் எனலாம்.

பிளினி, சு(ஸ்)ட்ராபோ, டாலமி போன்ற பண்டைய நூலாசிரியர்களை மட்டுமல்லாது வின்சென்ட் சு(ஸ்)மித், சு(ஸ்)வெல், கென்னடி போன்ற நவீன வரலாற்று ஆசிரியர்களையும் நன்கு ஆழ்ந்து படித்தே விளக்கக் குறிப்புகளை திரு. சு(ஸ்)காப் எழுதி உள்ளார்.

சிந்து-இந்து-இந்தியா: தென் இந்தியாவிற்கும் சுமேரியாவிற்கும் இடையில் பண்டைய காலத்திற்கு முன்பே வணிகப்போக்குவரத்து நடைபெற்றுவந்தது என்று சாயீ(sayce) என்பவர் தம் கி(ஹி)ப்பர்ட் சொற்பொழிவுகளில் (1887) குறிப்பிட்டு உள்ளார்.

ஆதர்(athar)அதற்கு அவர் இரண்டு காரணங்களை தெரிவித்துள்ளார். ஒன்று: சுமேரிய மன்னர்களின் தலைநகர் ஊர்(Ur) என்ற இடத்தில் சந்திரக் கடவுளுக்காகக் கட்டப்பட்ட கோயில் சிதைவுகளில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தேக்கு மரத்துண்டு கேரள(பழந்தமிழகம்) நாட்டிலிருந்து கி.மு. 3000க்கு முன்பு ஏற்றுமதி செய்யப்பட்டதாகும்.

இரண்டு: பழங்கால உடைகளைக் குறிப்பிடும் பாபிலோனிய நாட்டுப் பட்டியல் ஒன்றில் இரண்டுவகைத் துணிகளில் ஒன்றாக “சிந்து” என்ற சொல் குறிப்பிடப் பட்டுள்ளது. சிந்து என்ற சொல்லுக்கு பழந்தமிழில் துணி என்று பெயர்.

இன்றும் கன்னடத்திலும் துளுவிலும் துணியைக்குறிப்பிட சிந்து என்ற சொல் பயன்படுகிறது. எனவே பழந்தமிழகத்தில் இருந்து துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன என அறிய முடிகிறது.

மேலும் சிந்து என்பது ஆற்றிலிருந்து வந்த பெயர் அல்ல. துணிக்கான பண்டைய தமிழ் சொல்லிலிருந்து வந்த பெயர் ஆகும் என்கிறார் சீனிவாச அய்யங்கார். (ஆதாரம்: தமிழக வரலாறு –மக்களும் பண்பாடும்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பக்; 51,52. பதிப்பு; 2008 & தமிழர் வரலாறு-பி.டி.சீனிவாச அய்யங்கார், தமிழ் பதிப்பு. பக்; 29.)

சிந்து என்ற ஆற்றின் பெயரிலிருந்து, இந்த சிந்து என்ற சொல் வரவில்லை என்றால், இந்த சிந்து என்ற தமிழ் சொல்லில் இருந்து தான், இந்து மதத்திற்கான “இந்து” என்ற பெயரும், நமது நாட்டிற்கான “இந்தியா” என்ற பெயரும் வந்துள்ளன என கருதலாம்.

(சிந்துவெளி மக்கள் சிந்து நதிக்கு என்ன பெயர் வைத்திருந்தனர் என அறியும் போதே இவை குறித்து இறுதியாகச் சொல்ல முடியும்.) தமிழ் சொல்லில் இருந்து இந்தியா என்ற பெயர் வந்ததன் காரணமாகவே, ஆரம்பகாலம் முதலே தமிழகம் பொதுவாக உலக மக்களால் இந்தியா என்றே கருதப்பட்டு, இந்தியா என்றே சொல்லப்பட்டும் வந்துள்ளது.

இவை தமிழர் வணிகத்தின் பழமையை சுட்டிக்காட்டுகிறது எனலாம்..

தமிழர் கடல் வணிகம்-பி.டி சீனிவாச அய்யங்கார்: கி.மு.2600 இல் ஆட்சிபுரிந்த எகிப்திய நான்காவது வம்ச அரசன் மெர்னரே(MERNARE) என்பவனின் கீழ் பணிபுரிந்த அசுவான் (ASSWAN) இனத்து க(ஹ)ர்க்குப்(HARKHWF) என்பவனின் கல்வெட்டில் “நறுமணப் புகைதரும் மெழுக்கு,கருங்காலிமரம், நவதானியம், சிறுத்தைப்புலி, தந்தம், தடிகள் மற்றும் பிற சிறந்த பொருள்களைக் கொண்ட பொதி மூட்டைகள் ஏற்றப்பட்ட 300 கழுதைகள் தெற்கு நுபியாவில்(SOUTHERN NOBIA) உள்ள யாம்(YAM) நாட்டிலிருந்து வந்திறங்கின” என்ற குறிப்பு உள்ளது.

இதிலுள்ள கருங்காலி மரம், நவதானியம், சிறுத்தைப்புலி முதலியன தென்னிந்தியாவிலிருந்தே சென்றிருக்கக்கூடும் என்கிறார் பி.டி.சீனிவாச அய்யங்கார்.( தமிழக வரலாறு பக்.31). கி.மு.26 ஆம் நூற்றாண்டின் ஆறாவது அரச குடும்பத்தைச் சார்ந்த இரண்டாம் பெபி (PEppPEPI) என்பவனின் கீழ் பணிபுரிந்த செப்னி(Sebni) என்பவனுடைய குறிப்பில் மெழுக்கு உடைகள் (பருத்தி உடைகள்), யானைத்தந்தம், விலங்கின் தோல் முதலியன உள்ளன. 

அந்நாட்களில் தென்னிந்தியாவில்தான் பருத்தி ஆடைகள் நெய்யப்பட்டன என்றும் தந்தம் இந்தியத் தந்தமே என்றும், இரும்புப்பொருட்கள் (வாய்ச்சி, கோடரி, வாள்) பலவற்றை எகிப்து, சோமாலியா போன்ற நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வந்தது என்றும், அது குறித்த பிற்காலத்திய ஆவணம் இருக்கிறது என்றும் பி.டி.சீனிவாச அய்யங்கார் குறிப்பிடுகின்றார். (தமிழக வரலாறு பக்.32.)

தமிழர்கள் தொடக்ககாலத்திலிருந்தே மிகப்பெரிய கடல்வணிகத்தை வளர்த்து வந்தனர் என்றும் அன்றைய வட இந்தியர்கள் மாலுமித் தொழில் தெரிந்தவர்களல்லர் என்றும் பி.டி.சீனிவாசஅய்யங்கார் குறிப்பிடுகிறார் (பக்.32).

பழங்காலத்தில் வட இந்தியர்கள் கடல் வணிகம் செய்ததில்லை என்பதை, திராவிடியர்களே அதாவது தமிழர்களே கடல் வணிகம் செய்தனர் என்பதை வின்சென்ட் சு(ஸ்)மித், சு(ஸ்)காப், கென்னடி, சு(ஸ்)வெல் போன்ற பல உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்.

இந்தியா பெருமளவில் இலவங்கம், மிளகு,முத்து முதலியவைகளை உற்பத்தி செய்தது என்றும் பருத்தி ஆடைகளை புதிய கற்காலம் முதலே நெய்து வந்தது என்றும் பி.டி.சீனிவாசஅய்யங்கார் குறிப்பிடுகிறார்.(பக்.33.) 

அரேபிய இடைத்தரகர்களால் எகிப்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள் தென்னிந்தியப் பொருட்கள்தான் என்பதையும், தென்னிந்தியப் பரதவர்கள் அப்பண்டங்களை தங்களுடைய படகுகளில் ஏடனுக்கும் கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரைக்கும் கொண்டு சென்றனர் என்பதையும் தெரிவிக்கிறார் பி.டி.சீனிவாச அய்யங்கார்.(பக்.30,31)

தமிழர் கடல் வணிகம்-பழைய ஏற்பாடு:
யூதர்களின் ஆதிசமயத் தலைவரான மோசஸ்(MMOSES), தாம் நிகழ்த்திய இறை வழிபாட்டில் வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் மிக அதிக அளவில் பயன்படுத்தினார் என பழைய ஏற்பாடு தெரிவிக்கிறது.

மோசசு(ஸ்) கோயில் கட்டி வழிபாடு செய்த ஆண்டு கி.மு. 1490 ஆகும். மோசசு(ஸ்) அவர்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டிய தங்கம் முதலான பொருட்களோடு, இறுதியாக வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் குறிப்பிடுகிறார்.

மேலும் வாசனைத் திரவியங்களை எப்படி ஒன்றிணைக்க வேண்டும் என்றும், அந்த புனிதமான வாசனைத் திரவியங்களைக் கொண்டு எந்தெந்த பொருட்களை புனிதப் படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.

குருமார் மற்றும் அவரது புதல்வர்களைக்கூட இந்த வாசனைத் திரவியங்களைக் கொண்டே புனிதப்படுத்த வேண்டும் என்கிறார் மோசசு(ஸ்). (ஆதாரம்: 1. பழைய ஏற்பாடு- EXODUS, 35: 4-9, 37: 29 & 40: 9-15. 2. தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்- டாக்டர் கே.கே. பிள்ளை பக்: 50,51).

ஆக கி.மு. 15ஆம் நூற்றாண்டில், வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் மிகச்சிறந்த புனிதப் பொருட்களாக யூதர்களின் சமயத்தலைவரான மோசசு(ஸ்) கருதி, அவைகளை அன்றே பெருமளவு பயன் படுத்தியுள்ளார் என்பதை பழைய ஏற்பாடு மிகத் தெளிவாகவும் மிக விரிவாகவும் குறிப்பிடுகிறது.

கி.மு. 1000 வாக்கில், இசு(ஸ்)ரேலை ஆண்ட சாலமன்(SSOLOMON) மன்னனுக்கு தென் அரேபிய நாட்டு அரசி சேபா(SHEBA), மிக அதிக அளவான வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும், தங்கத்தையும், மதிப்புமிக்க கற்களையும் பரிசாக வழங்கினார்.

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை டயர் நாட்டு மன்னன் கிராம்(HHIRAM) அவர்களின் கப்பல்களுடன், சாலமனின் தார்சிசு(ஸ்)(TARSHISH) கப்பல்களும் சேர்ந்து ஒபீர்(OOPHIR) துறைமுகம் சென்று நிறைய தங்கத்தையும், அகில் மரங்களையும், மதிப்புமிக்க கற்களையும், வெள்ளி, குரங்குகள், மயில்கள், தந்தங்கள், முதலியனவற்றையும் கொண்டு வந்தன ( ஆதாரம்: பழைய ஏற்பாடு-KINGS 1, 9:27,28, & 10:2,10,11,22,25).

சாலமன் மன்னனுக்கு வந்து சேர்ந்த பண்டங்களில் பல தமிழ்ப் பெயர்களின் சிதைவுகளே என்கிறார் கே.கே.பிள்ளை அவர்கள்.

உதாரணம்:
1.துகிம்- தோகை, மயில்தோகை;
2.ஆல்மக் மரங்கள்- அகில் மரங்கள்
3.Kகஃபி- கவி, (பழந்தமிழில் கவி என்பது குரங்கு என பொருள்படும்). முதலியன ஆகும்(தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்- பக்: 50,51). பாண்டிய நாட்டின் தலைநகராய், துறை முகமாய் கடலைத் தொட்டுக் கொண்டிருந்த கொற்கை நகரம் இப்போது கடலிலிருந்து ஏழு மைல் தூரத்தில் உள் நாட்டுப் பகுதியில் அமைந்துள்ளது.

ஓஃபிர் அல்லது உவரி இவ்வூரின் பகுதியாகும். இப்போதும் இதே பெயரில் இங்கிருக்கும் மீனவர் கிராமத்தில் மணல் மேடுகள் உள்ளன. இம் மணல மேடுகள் ஒரு காலத்தில் தங்கச் சுரங்கங்களாய் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மழை பெய்தபின்னர் கிராமவாசிகள் அங்கு சென்று தங்கப் பொடியைப் பொறுக்குகின்றனர் என்கிறார் நரசய்யா அவர்கள்.( கடல் வழி வணிகம், பக்:63.)

ஆக சாலமன் மன்னனுக்கு வந்த பொருள்களில் பல பெயர்கள், தமிழ்ப் பெயர்களின் சிதைவுகளாக இருப்பதும், ஒஃபீர் (அ) உவரி என்ற பகுதி இன்றும் கொற்கைத் துறை அருகே இருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய தரவுகளாகும்.

பண்டைய தமிழகம்:
பண்டைய தமிழகம் இன்றைய தமிழகம் போன்று மூன்று மடங்கு நிலப்பரப்பு கொண்டதாகவும், இன்றைய தமிழகக் கடற்கரை போல மூன்று மடங்கு நீளம் கொண்டதாகவும் இருந்த, ஒரு பரந்த விரிந்த மாபெரும் பரப்பாகும். 

இன்றைய தமிழகம் முழுமையும், இன்றைய கேரள மாநிலம் முழுமையும், அதன் கடற்கரைகளும் பண்டைய தமிழகத்தில் இருந்தன.

இவை போக இன்றைய கர்நாடகத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கோவா வரையிலான துளு நாடு முழுமையும் அதனை ஒட்டிய கடற்கரையும் (பழந்தமிழகத்தில் இதனை நன்னர்கள் ஆண்டனர்), கர்நாடகத்தின் தென் பகுதியும், தற்போதைய ஆந்திர மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள ஒரு சில மாவட்டங்களும், அதனை ஒட்டிய கடற்கரையும் பண்டைய தமிழகத்தில் இருந்தன.

இவை போக இன்றைய இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமேற்கு, தென் கிழக்குப் பகுதிகளும், அநுராதபுரத்தை ஒட்டிய பகுதிகளும், இலங்கைக் கடற்கரையில் 75 விழுக்காட்டுக்கு மேற்பட்டவைகளும் பண்டைய தமிழகத்தில் இருந்தன.

ஆக ஒட்டு மொத்தமாக பண்டைய தமிழகத்தில் ஏறத்தாழ 4 இலட்சம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பும், கிட்டத்தட்ட 2500 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரையும் இருந்தன. இவைகளை ஒப்பிட, கீழ்க் கண்ட சில தரவுகளை அறிவது நலம்.

நமது இன்றைய தமிழகத்தின் பரப்பு சுமார் 1.3 இலட்சம் சதுர கிலோ மீட்டர். இன்றைய தமிழக கடற்கரையின் நீளம் சுமார் 800 கி.மீ. இன்றைய இந்திய நாட்டின் பரப்பு சுமார் 33 இலட்சம் சதுர கிலோ மீட்டர். இன்றைய இந்திய கடற்கரையின் நீளம் சுமார் 6000 கி.மீ.

பிற்கால சோழப்பேரரசு உச்ச நிலையில் இருந்தபொழுது, அதாவது இராசேந்திர சோழன் காலத்தில் அதன் ஆட்சிக்குட்பட்ட பரப்பு சுமார் 16.5 இலட்சம் சதுர கிலோ மீட்டர்.

பண்டைய தமிழகத்தின், சுமார் 2500 கி.மீ நீளக்கடற்கரை, தமிழர்களை கடலோடிகளாகவும் கடல் வணிகத்தில் தலை சிறந்தவர்களாகவும் ஆக்கியது எனலாம்.

தமிழர் கடல் வணிகம்- இணையதளத் தரவுகள்:
கி.மு.3000வாக்கில் அசீரியர்களின் தொன்மக்கதை ஒன்றில் அவர்களது கடவுள் நல்லெண்ணையைக் குடித்த பின் தான் (எள் விதையிலிருந்து கிடைக்கும் எண்ணெய்) உலகத்தைப் படைத்தார் என்ற பதிவு உள்ளது.

இந்த எள் செடியின் மூலம்(ORIGIN) இந்தியத் துணைக்கண்டம் என்று கருதப்படுகிறது. ஆக அன்றே இந்தியாவிலிருந்து இந்த எண்ணெய் அசீரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கி.மு.2500க்கு முந்திய எகிப்து அரசன் சியொப்ஸ் (Cheops) அவர்களின் மிகப்பெரிய பிரமிடுகளைக் கட்டிய தொழிலாளர்களுக்கு ஆசியக்கண்டத்து வாசனைப்பொருட்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு வலிமையூட்டப்பட்டது என எகிப்திய ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

கி.மு.2400இல் சுமேரியாவில் கிராம்பு(Cloves) பயன்படுத்தப்பட்டதாக தொல்பொருள் ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கிராம்பு (வாசனைப்பொருள்) அன்று உலகிலேயே இந்தோனேசியாவில் உள்ள மொலுக்கசு(ஸ்)(Moluccas) தீவில் மட்டுமே கிடைத்தது.

இத்தீவிற்கு வாசனைத்தீவு என்றே பெயரிடப்பட்டுள்ளது. இத்தீவுடன் நடத்தப்பட்ட வணிகமே மிகப்பழமையான வணிகம் ஆகும்.

பாபிலோனிய மன்னன் க(ஹ)முராபி(HHAMMURABI) (கி.மு.1792-1750) தனது சட்டத்தில் அறுவை மருத்துவத் தோல்விக்கு கடுமையான தண்டனை விதித்ததால் அங்கு மிகப்பெரிய அளவில் வாசனைத்திரவியங்களும் வாசனைப் பொருட்களும் தேவைப்பட்டன.

எகிப்திய ஆவணங்களின் படி கி.மு.1550 இல் மருத்துவத்திற்காகவும், உடலை அழிவிலிருந்து பாதுகாக்கவும் வாசனைத் திரவியங்கள் பயன் படுத்தப்பட்டன. இலவங்கப்பட்டை(Cassia), கருவேலம்பட்டை(Cinnamam) முதலியன மனித உடலை அழியாமல் பாதுகாக்க அவசியமாகக் கருதப்பட்டது.

இவை தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமே கிடைக்கின்றன. எகிப்தில் கி.மு.1473-1458 வரை ஆண்ட இளவரசி க(ஹ)ட்செப்சுட்சு(ஸ்) (Hatcepsuts) , “ பண்ட்” என்ற இடத்திற்கு கப்பல் பயணம் செய்து கருவேலம்பட்டை, வாசனைப் பொருட்கள் போன்றவைகளை எகிப்துக்குக் கொண்டுவந்ததாக எகிப்திய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

எகிப்தில் கி.மு.1213 இல் இறந்த இரமேசசு(ஸ்)-2(Ramasses) உடைய மம்மியின் இரு மூக்குத் துவாரங்களிலும் மிளகுப்பொருள்(Peppercorn) செருகி வைக்கப்பட்டிருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (Source; E-Document-Trade,History of the spice trade, introduction page )

தமிழர் வணிகம்-திருமதி. இலட்சுமி:
பண்டைய தென்னிந்திய வணிகம் குறித்த தனது கட்டுரையில் திருமதி இலட்சுமி அவர்கள், தொல்லியல், கல்வெட்டுகள், மொழியியல் சான்றுகள், வரலாற்று நூல்கள், மனித இன ஆய்வு, சமயத் தொடர்பு போன்ற பலகோணங்களில் ஆய்வு செய்து, மிகப் பழங்காலத்தில் இருந்தே தமிழகம் கடல் வணிகம் செய்து வருகிறது என உறுதிபடக் கூறுகிறார்.

அவரது தரவுகள் சிலவற்றை காண்போம். எகிப்தின் 17 ஆவது அரச வம்சம் நிறைய யானைத் தந்தங்களைப் பெற்ற தற்கான ஆவணங்கள் உள்ளன. மேலும் அதனால் ஆன பொருட்களான மேசை, நாற்காலி, சிலை போன்றவற்றைப் பயன்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன.

ஆப்பிரிக்கக் காடுகளை விட தென்னிந்தியக் காடுகளில் யானைகளைப் பிடிப்பது எளிது. எனவே இவை தென்னிந்தியாவில் இருந்து தான் அதிக அளவில் வந்துள்ளன.

எகிப்திய 18வது அரச வம்சம் மதிப்பு மிக்க கற்கள், வாசனைப் பொருட்கள், தந்தங்கள், தங்கம், கருவேலம்பட்டை, மனிதக்குரங்கு, குரங்கு, நாய், புலித்தோல் முதலியவற்றை அரேபியர்கள் மூலம் பெற்றதற்கான குறிப்புகள் உள்ளன.

இந்தியாவோடு அசீரியா கொண்ட வணிகத் தொடர்பு குறித்து, கிட்டிட்டி (Hittiti) அரசனான மிட்டானியுடைய (Mitani) கி.மு.14ஆம், 15ஆம் நூற்றாண்டை சார்ந்த கியூனிபார்ம் எழுத்துப் பொறிப்புகள் உள்ளன.

அதே காலத்தைச் சார்ந்த அசீரிய அரசனான டிக்ளத் பைல்சர்-3 (Tiglath pileser) உடைய நிம்ருட் (Nimrud) எழுத்துப் பொறிப்புகளில், இந்தியப் பொருட்களான துணிகள், நறுமணப் பொருட்கள் முதலியனவற்றை யக்கிம் (Yakim) என்ற அரசன், அசீரிய அரசனுக்கு பரிசாக வழங்கியதற்கான குறிப்புகள் உள்ளன. 

எகிப்தின் 20 ஆவது அரச வம்சத்தைச் சார்ந்த இரமேசசு(ஸ்)-3 (கி.மு.1198-1167) என்பவரும், எகிப்தின் 28 ஆவது அரச வம்சத்தைச் சார்ந்தவர்களும் தென்னிந்திய பொருட்களை பெற்றதாகக் குறிப்புகள் உள்ளன.

திருமதி இலட்சுமி அவர்கள் தந்துள்ள தரவுகள் பல முன்பே தரப்பட்டுள்ளதால் அவை இங்கு தவிர்க்கப் படுகின்றன். தமிழகப் பரதவர்கள் தங்கள் படகுகள் அல்லது சிறு கப்பல்கள் மூலம் பாரசீக வளைகுடா, ஏடன், கிழக்கு ஆப்பிரிக்கத் துறைமுகங்களுக்கு தமிழக, தென்கிழக்கு ஆசிய பொருட்களைக் கொண்டு சென்று ஒப்படைக்க,

அதனைப் பெற்றுக் கொண்ட பொனீசியர்களும், அரேபியர்களும் அவைகளை எகிப்துக்கும் பாரசீக வளைகுடாவைச் சுற்றியுள்ள நாடுகளுக்கும் மிகப் பழங்காலத்திலேயே கொண்டு போய்ச்சேர்த்தனர் என்பதை சில ஆதாரங்களுடன் திருமதி. வி.டி. இலட்சுமி அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.(Source: E- Document-Trade, Ancient south Indian commerce – Srimathi. V. T. Lakshmi)

பெருங்கற்கால குறியீடுகள்:
தமிழத்தில் உள்ள பெருங்கற்படை சின்னங்களிலும், முதுமக்கள் தாழிகளிலும் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த பானை ஓடுகள், மட்பாண்டங்கள், அணிகலங்கள், முத்திரைகள் போன்ற பொருட்களிலும், நாணயங்களிலும், கல்வெட்டுகளிலும், தமிழில் எழுத்துகளோடும் குறியீடுகள் உள்ளன.

இக்குறியீடுகள் பண்டைய நாகரிகங்களில் உள்ள குறியீடுகளோடு ஒப்புமை கொண்டுள்ளன.

இவை முக்கியமாக சிந்துவெளி எழுத்துக்களோடு நெருங்கிய தொடர்பு உடையனவாக உள்ளன. இவை குறித்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட “பண்டைத்தமிழக வரைவுகளும் குறியீடுகளும் “ என்ற நூலில் கீழ்க்கண்ட தரவுகளை வழங்குகிறார் முனைவர் இராசு பவுன்துரை அவர்கள்.

சுமேரியன், அக்கேடியன், ஹிட்டடைட் ஆகிய மூன்று தொன்மையான மொழி எழுத்து மரபுகளுடன் பெருங்கற்காலத் தமிழகக் குறியீடுகளின் வடிவங்கள் ஒப்புமை உடையனவாக உள்ளன. (பக்:237)

சுமேரிய-எகிப்து மொழியில், இலினியர்(Linear-B) எழுத்துமுறை கலந்திருப்பதாகவும், இலினியர் எழுத்துக்களில் 87 குறியீடுகள் உயிர்மெய் எழுத்துக்கள் எனவும், அந்த 87 எழுத்துக்களும் தென்னிந்தியக்குறியீடுகள், வரிவடிவங்களோடு ஒப்புமை உடையனவாக உள்ளன. (பக்: 248) தமிழகத்தில் கண்டறியப்பட்ட பண்டைய குறியீடுகளையும்,

சிந்து வெளிக் குறியீடுகளையும் தொகுத்துக் காணும் பொழுது அவற்றிற்கு இடையே காணப்படும் வரைவு ஒற்றுமைகளும், மொழி, எழுத்து குறித்த சிந்தனைகளும் ஒரு தொடர்ச்சியான வரலாற்றைப் பெற்றுத் திகழ்கின்றன என்பதை அறிய முடிகிறது. (பக்:252.)

மேலும் சிந்து வெளிக் குறியீடுகளின் எழுத்துரு அமைப்பில் தமிழின் தொடர்பையும், தொல் குறியீடாகிப் பின்னர் மொழியாக்கம் பெற்ற தமிழியில் சிந்து வெளிக் குறியீடுகளின் ஒப்புமையும் காணமுடிகிறது. (பக்:253)

தமிழகப் பெருங்கற்காலக் குறியீடுகளுக்கும், கி.மு. 500 - கி.பி. 200 ஆம் காலத்திய ஜப்பானிய யாயோய் (Yayoi) பண்பாட்டு மட்பாண்டக் குறியீட்டு வரைவுகளுக்கும் இடையே தெளிவான வடிவ ஒற்றுமை இருக்கிறது.(பக்:230)

சீனம், எகிப்து, இலங்கை, யப்பான், கிரேக்கம் ஆகிய நாடுகளின் 130 பழங்காலக் குறியீடுகள் தமிழகப் பெருங்கற்காலக் குறியீடுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளன.(பக்: 239-244)

அதில் எகிப்து நாட்டுக் குறியீடுகளோடு 121 குறியீடுகளும், சீனத்தோடு 103 குறியீடுகளும், யப்பானோடு 94 குறியீடுகளும், கிரேக்கத்தோடு 64 குறியீடுகளும் ஒப்புமை கொண்டுள்ளன என்பது கணக்கிட்டு அறியப்பட்டது. 

பண்டைய உலக நாகரிகங்களின் சமகாலத்துப் பண்பாட்டிற்கு இணை -யாகவே சங்ககாலத் தமிழகம் திகழ்ந்தது என்பதை, உறுதி செய்யும் வண்ணம் இப்பெருங்கற்காலக் குறியீடுகள் அமைகின்றன(பக்:262).

மேலே தரப்பட்ட முனைவர் பவுன் துரை அவர்களின் தரவுகள் கி.மு.3000 முதல் கி.மு.1500 வ்ரையும், கி.மு.800 முதல் கி.மு. 200 வரையுமான இரு காலத்தைக் கொண்டவை என்றும், இதில் எகிப்து, சிந்து, சீனம், சுமேரியா போன்ற பண்டைய நாகரிகங்கள் முதல் காலத்தையும், இலங்கை, யப்பான், கிரேக்கம் போன்ற நாடுகள் இரண்டாம் காலத்தையும் சார்ந்தவை ஆகும் என்றும் அவரே தெரிவித்துள்ளார். (பக்:263)

பண்டைய நாகரிக நாடுகளின் குறியீடுகளோடு கொண்டுள்ள இந்த ஒப்புமையை தற்செயலானவை எனக் கருத இயலாது.

பண்டைய தமிழகம் இந்த நாடுகளோடு கி.மு. 3000 முதல் வணிகப் பண்பாட்டுத் தொடர்பைக் கொண்டிருந்தன என்பதற்கு இக்குறியீடுகளின் ஒப்புமை ஒரு ஆதாரமாகத் திகழ்கிறது எனலாம்.

தமிழக இலங்கைத் தொல்பொருள் ஆய்வு:
பண்டைய வணிகம் குறித்து மேலே சொல்லப்பட்ட தரவுகளில், குறிப்பிடப்பட்ட வாணிப பொருட்களில் பெரும்பாலானவை தமிழகம், இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றில் விளைகிற, உற்பத்தி ஆகிற பொருட்களே ஆகும்.

பண்டைய காலத்தில் இவை அனைத்தும் சிந்து வெளிப் பகுதி, பாரசீக வளைகுடா நாடுகள், மேற்குலக நாடுகள் ஆகியவைகளுக்கு தமிழகம் வழியாகவே அனுப்பி வைக்கப்பட்டன.

தமிழகத்தில் உலோக காலத்துக்கு முந்தைய, மூன்றாம் நிலைக் கற்காலக் கருவிகள் திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரம் பகுதியில் கிடைத்துள்ளது. 

தன் காலம் கி.மு. 4000 ஆகும். அதன் பின் உலோக காலம் தொடங்குகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை உலோக காலம் பிற இடங்களைப் போல் அல்லாமல், நேரடியாக இரும்புக் கால நாகரிகமாகவே தொடங்குகிறது.( தமிழக வரைவுகளும், குறியீடுகளும்- இராசு பவுன்துரை, பக்: 85-86.) 

இலங்கையின் அநுராதபுரத்தில் ஆதிகால இரும்புப் பண்பாட்டின் தொடக்கக் குடியிருப்புகளின் காலம் கி.மு. 1000 என சிரான் தரணியகல (இலங்கை தொல்லியல் ஆய்வாளர்) தெரிவித்துள்ளதாக, “இலங்கையில் தமிழர்” என்ற தனது நூலில் இந்திரபாலா குறிப்பிட்டுள்ளார்.( பக்.113.)

இலங்கையின் வடமேற்குக் கரைக்குத் தமிழ் நாட்டிலிருந்து பரவிய புதிய ஆதி இரும்புக் காலப் பண்பாடு, அவ்விடத்தில் நன்கு வேரூன்றிய பின், உள்ளே பரவத் தொடங்கி அநுராதபுர இரும்புக் காலக் குடியிருப்பு தோன்றியது எனலாம் என்கிறார் இந்திர பாலா. (பக்:110).

புதிய ஆதி இரும்புக்கால நாகரிகம் தமிழ் நாட்டில்(ஆதிச்ச நல்லூர்) நன்கு வேரூன்றிய பிறகே, இலங்கையின் வடமேற்கு கரைக்கு(பொம்பரிப்புப் பகுதி) பரவியிருக்க வேண்டும்.

பொம்பரிப்பு பகுதியில் நன்கு வேரூன்றிய பிறகே அநுராதபுரத்திற்கு பரவி இருக்கவேண்டும். இதற்கு சில நூற்றாண்டுகள் ஆகியிருக்கும். ஆக அநுராதபுர இரும்புப் பண்பாட்டின் தொடக்கக் குடியிருப்பு காலம் கி.மு. 1000 எனில், இலங்கையின் வடமேற்கில்(பொம்பரிப்புப் பகுதி) பரவிய ஆதி இரும்பு பண்பாட்டின் தொடக்க குடியிருப்பு காலம் கி.மு. 1200 ஆக இருக்கவேண்டும்.

இலங்கையின் இரும்பு பண்பாட்டின் தொடக்க காலம் கி.மு. 1200 என்றால், அதற்கு முன் தமிழகத்தின் ஆதிச்ச நல்லூரில் அப்பண்பாடு நன்கு வேரூன்றிய பிறகே இலங்கைக்கு பரவியிருக்க வேண்டும்.

எனவே தமிழக ஆதி இரும்பு பண்பாட்டின் தொடக்க காலம் கி.மு. 1500 ஆக இருக்க வாய்ப்புள்ளது.

தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இரும்புப் பண்பாடு, தென்னிந்தியாவில் கி.மு. 1200 அளவில் தோன்றியதாகவும், இலங்கையில் கி.மு. 1000ல் தோன்றியதாகவும் கருதப்படுகிறது என்கிறார் இந்திரபாலா.(பக்: 114).

ஆதிச்ச நல்லூர்:
தமிழகத்தின் வடமேற்கு பகுதியில் பெருங்கற்படை சின்னங்களும், தென்கிழக்கு பகுதியில்( ஆதிச்ச நல்லூர்) முது மக்கள் தாழிகளும் தமிழகத்தின் இரும்புப் பண்பாட்டு காலச் சின்னங்களாக உள்ளன. 

தக்காணத்தில் உள்ள வடபகுதி பெருங்கற்படைச் சின்னங்களின் அகழாய்வு கொண்டுதான் தென்னிந்திய இரும்புக் காலப் பண்பாடு கி.மு. 1200 எனக் கொள்ளப்படுகிறது ஆனால் தமிழகத்தின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள ஆதிச்ச நல்லூரில் இது வரை 1%க்கு குறைவான அகழாய்வே நடத்தப்பட்டுள்ளது(தொல்லியல் நோக்கில் சங்ககாலம்-கா.ராஜன், பக்:26). அலெக்சாண்டர் ரே அவர்கள் சுதந்திரத்திற்கு முன்பு நடத்திய அகழாய்விற்குப்பின், 2004 இல் தான் மீண்டும் அகழாய்வு தொடங்கப்பட்டது. 

அதுவும் முழுமையாக நடத்தப்படவில்லை ஆதிச்ச நல்லூர் அகழாய்வு இயக்குநர் டாக்டர் சத்யமூர்த்தி அவர்கள், 25.5.2007 இந்து நாளிதழில், பொருள் உற்பத்தி பண்பாடு தெற்கிலிருந்து வடக்கே சென்றிருக்கலாம் என்பதைக் காட்டுவதாக, ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த( 1% ஆய்வில்) பொருட்களின் தயாரிப்பில் உள்ள உயர்தொழில்நுட்பம் இருக்கிறது என குறிப்பிட்டு உள்ளார்.

தென்னிந்தியாவின் வடபகுதியில் கி.மு 1200ல் தோன்றிய இரும்பு பண்பாடு தெற்கே பரவியதாகவே முன்பு கருதபட்டது.

தெற்கிருந்து வடக்கே பொருள் உற்பத்தி பண்பாடு பரவியது என்றால், இரும்பு பண்பாடு முதலில் ஆதிச்ச நல்லூர் பகுதியில் துவங்கி இருக்க வேண்டும் என்பதோடு அதன் காலம் கி.மு 1200க்கு முன்பாக இருக்க வேண்டும்..

ஆதிச்ச நல்லூர் மற்றும் பிற முதுமக்கள் தாழி உள்ள இடங்களில் அகழாய்வு முழுமையாக நடத்தப்பட்டால் , தமிழக இரும்பு பண்பாட்டின் தொடக்கம் கி.மு.1500 ஆக இருக்க வாய்ப்புள்ளது.

இலங்கை, ஆதிச்ச நல்லூர் தொல்லியல் ஆய்வுகள் அதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.

இரும்பு காலத்திற்கு முன்பே, புதிய கற்காலத்திலேயே, மனிதர்கள் கடல் பயணம் மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர். தமிழகத்தில் மூன்றாம்நிலை புதிய கற்காலம் கி.மு 4000 ஆகும்.

இரும்பு பண்பாட்டின் தொடக்கம் கி.மு. 1500ஆகும். ஆக, கி.மு. 4000த்துக்கும், கி.மு. 1500க்கும் இடைபட்ட காலத்தில், தமிழர்கள் கடல் வணிகத்தைத் தொடங்கிவிட்டனர் எனலாம்.

இரும்பு பண்பாட்டின் துவக்க காலத்தில் இருந்து, இக்கடல் வணிகம் ஒரு வளர்ச்சி பெற்ற வணிகமாக மாறுவதோடு, ஒரு நிலையான, தொடர்ச்சியான வணிகமாகவும் மாறியிருக்கும்.

அதற்கு பின்னரே இரும்பு பொருட்களின் ஏற்றுமதி தொடங்கி இருக்க வேண்டும்.

ஆக, பண்டைய தமிழர் கடல் வணிகம் மிகப்பழங்காலத்தில் இருந்து நடந்து வருகிறது என்பதற்கான சில ஆதாரங்களும் காரணங்களும் வருமாறு, 

1.பண்டைய நாகரிக நாடுகள் பயன்படுத்திய பொருட்களில் (தரவுகளில் சொல்லப்பட்டவை) பெரும்பாலனவை தமிழகம், இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவைகளில் மட்டுமே கிடைப்பவை.

ஆகவே, அவை அனைத்தும் தமிழகம் வழியாகவே, தமிழர் கடல் வணிகம் மூலமே மேற்குலக நாடுகளுக்கு கிடைத்துள்ளன.

2.தமிழக பெருங்கற்கால குறியீடுகள், பிற தொன்மையான நாகரிகங்களின் குறியீடுகளோடு ஒப்புமை கொண்டிருப்பது, பண்டைய தமிழகத்திற்கும் பிற தொன்மையான நாகரிக நாடுகளுக்கும் இடையே இருந்த வணிகப் பண்பாட்டுத் தொடர்பை உறுதிப்படுத்துகிறது.

3.பண்டைய தமிழகத்தின் மிக நீண்ட கடற்கரையும், அதன் பரந்த விரிந்த பரப்பும், தமிழகப் பரதவர்களின் கடலோடும் தன்மையும், பண்டைய தமிழகத்தின் அரசியல், சமூக, பொருளாதாரச் சூழ்நிலையும் தமிழகக் கடல் வணிகம் பழங்காலம் தொட்டு நடைபெற ஒரு முக்கிய காரணியாகும். 

4.சீனா, தென்கிழக்கு ஆசிய நாடுகள், இலங்கை போன்ற கிழக்குலக நாடுகளுக்கும், சிந்துவெளிப்பகுதி, பாரசீக வளைகுடா நாடுகள், கிழக்கு ஆப்ரிக்கா, எகிப்து, பாலசு(ஸ்)தீனம், ரோம் போன்ற மேற்குலக நாடுகளுக்கும் இடையே ஒரு கேந்திரமான இடத்தில் தமிழகம் அமைந்திருப்பதும் ஒரு காரணமாகும்.

5.தமிழகத்தில், புதிய கற்காலத்தின் மூன்றாம்நிலை காலம் கி.மு. 4000 என்பதும், தமிழக இரும்பு பண்பாட்டின் தொடக்க காலம் கி.மு. 1500 என்பதும், தமிழகம் மிகப் பழங்காலத்தில் இருந்தே கடல் வணிகம் செய்வதற்கேற்ற சூழ்நிலையைக் கொண்டிருந்தது எனலாம்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Friday, 12 October 2012

விடுதலைப் புலிகளை ஒழிக்க (பகுதி-7)........!

நிதர்சனம். நெற் என்னும் இணையத்தில் வெளியான கட்டுரை இதுவாகும்.

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்!

இந்தியாவின் குழப்பம்- சீனா, பாக்.கின் லாபம்… இதுகுறித்து முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவிடம் பின்னர் நான் ஒருமுறை பேசியபோது அவர் கூறினார்.

முதலில் இந்தியாவிடம்தான் நாங்கள் ஆயுத உதவி கோரினோம். இந்தியா மறுத்த பின்னரே, பிற வாய்ப்புகளை நாங்கள் நாடினோம்.

முதலில் மேற்கத்திய நாடுகளை அணுகினோம். ஆனால் அவர்களின் ஆயுதங்கள் மிகவும் விலை உயர்ந்தவை.

அதையும் மீறி அவர்களிடம் ஆயுதங்களை வாங்கினால் தொடர்ந்து தருவார்களா என்ற சந்தேகமும் இருந்தது.

இதையடுத்து சீனாவிடம் திரும்பினோம். எங்களுக்கேற்ற விலையில் பெருமளவில் ஆயுதங்களைத் தர அவர்கள் தயாராக இருந்தனர்.

மேலும் ஐந்து வருட கடனுக்கு அவர்கள் ஆயுதங்களைக் கொடுக்க முன்வந்தனர். இதையடுத்து அவர்களிடம் கொள்முதல் செய்தோம். 

அதேசமயம், பாகிசு(ஸ்)தானிடம் அவசரமாக தேவைப்பட்ட ஆயுதங்களை மட்டுமே கொள்முதல் செய்தோம் என்றார். இந்தியாவின் குழப்பத்தை சீனாவும், பாகிசு(ஸ்)தானும் இப்படி சாதுரியமாக பயன்படுத்திக் கொண்டன. 

இதன் விளைவு இன்று இந்தியாவின் பின்புறம், சீனாவும், பாகிசு(ஸ்)தானும் சத்தம் போடாமல் வந்து நின்று விட்டன என்று தனது நூலில் எழுதியுள்ளார் கோகலே.!

முற்றும்..

Tuesday, 9 October 2012

அனுராதபுரம் தமிழர்களின் வரலாற்று தாயகம்!

அனுராதபுரம் தமிழர்களின் வரலாற்று தாயகம்!கட்டுடைக்கப்பட வேண்டிய சிங்களப் பொய்கள்! இலங்கைத் தீவின் புராதன நகரங்களில் ஒன்றான அனுராதபுரத்தை சிங்கள இனத்தவர்கள் தங்களது வரலாற்று நகரமாகவும் தங்களுக்கு மட்டுமே உரித்தான பௌத்த புண்ணிய பூமியாகவும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

இதற்கு ஆதரமாக அங்குள்ள பௌத்த விகாரைகள் புனித வெள்ளரசு மரம் மற்றும் புராதன கட்டிடங்களை காட்டுகின்றனர்.

கிறீசு(ஸ்)த்துவுக்கு முன்னர் 6ம் நூற்றாண்டில் கௌதம புத்தர் பிறப்பதற்கு முன்னர் உருவாகிய அனுராதபுர நகரத்தின் வரலாற்றை 1200 ஆண்டுகளுக்கு பின்னர் கிபி 6ம் நூற்றாண்டின் வாழ்ந்த(சிலர் அவர் கிபி4ம் நூற்றாண்டில் வாழந்ததாகவும் கூறுவர்)மகாநாபர் என்ற தேரவாத பிக்கு எழுதிய மாகாவம்சம் என்ற சார்புநிலை நூலை வைத்துக்கொண்டு அது தங்களுக்கு மட்டுமே உரித்தான வரலாற்றுத் தலைநகரம் என்று சிங்களம் பெருமை பேசிக்கொள்கிறது.

இலங்கை தமிழர்களின் வரலாற்றை இந்து சார்பு நிலையில் இருந்து நிறுவ முற்பட்ட பெரும்பாலான நமது தமிழ் வரலாற்றாசிரியர்களும் அது பௌத்த நகரமாக இருப்பதால் சிங்கள பௌத்த நகரம் என்று ஒத்தூதி மகாவம்சத்துக்கு விளக்கவுரையும் பொழிப்புரையும் எழுதிவிட்டனர். 

மகாவம்சம் கிமு 505 நூற்றாண்டில் வட இந்தியாவிலிருந்து (இன்றைய ஒரிசா மாநிலம்) விஜயனும் அவனது 700 தோழர்களும் இலங்கைக்கு வந்ததில் இருந்து பௌத்த சிங்களவர்களுடடைய வரலாறு தொடங்குவதாக சொல்கிறது.

விஜயன் வந்ததாக சொல்லப்படும் காலத்தில் இருந்து 1100 வருடங்களுக்குப் பின்னர் அது பற்றி மாகாநாபர் வெறும் மரபுக்கதைகளையும் செவிவழிக் கதைகளையும் அடிப்படையாக வைத்து எழுதி வைத்துள்ள புனைவை உண்மையான வரலாறு என்று நிரூபிப்பதற்கு எந்தவித ஆதரமும் இல்லை. 

அதேவேளை அந்தக்காலகட்டத்தில் 2500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை 700க்கும் அதிகமானவர்கள் கடல்வழியாக கடப்பதென்பது சாதாரணவிடயமல்ல.கடற்போக்கு வரத்தில் அனுபவம் உள்ளவர்களால் தான் அது முடியும்.அந்தக்கால கட்டத்தில் இந்திய பெரு நிலப்பரப்பில் இருந்த அரசுகளில் சோழர்களும் பாண்டியர்களும் மட்டுமே கடற்போக்குவரத்தில் அனுபவம் பெற்றவர்களாகவும் கடலில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் இருந்தார்கள்.

ஓரிசாவிலிருந்து விஜயனும் அவனது தோழர்கள் 700 பேரும் உண்மையில் வங்கக் கடல் வழியாக இலங்கைக்கு பயணம் செய்திருந்தால் கூட அந்தக் கடலில் ஆதிக்கம் செலுத்திய சோழர்களின் கடற்படையின் கண்ணில் படாமல் இலங்கைக்கு சென்றிருக்க முடியாது.அந்தக்காலகட்டத்தில் காவிரிப்பூம் பட்டணம் மிகப் பெரிய கடல் வணிக நகரமாகவும் சோழர்களின் முக்கிய கடல் போக்குவரத்து மையமாகவும் திகழ்ந்தது

எனவே விசயன் இலங்கைக்கு வந்ததாக மகாநாபர் கூறியது தேரவாதப் பிரிவினரான தங்களை ஆரிய வம்சாவளியினர் என்று காட்டுவதற்கான முயற்சியாகும்.

இந்த இடத்திலே முக்கிய கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் இந்த விசயன் இலங்கைக்கு வந்ததாக சொல்லப்பட்ட காலத்திலும் சரி மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திலும் சரி இலங்கையிலும் இந்தியாவிலும் இருந்தது தேசிய இனச் சிந்தனைகொண்ட ஆட்சிமுறைகள் அல்ல!

தமிழத்தை எடுத்துக் கொண்டால் சோழர் ஆட்சி; பாண்டியர் ஆட்சி சேரர் ஆட்சி என்றகின்ற ஆட்சி முறைகளே அங்கு இருந்தன. இந்த மூன்று அரசுகளுக்குள்ளும் மொழி பண்பாடு சமயம் என்பவற்றில் இன வழிச் சிந்தனைகள் இருந்தனவே அன்றி இனம் சார்ந்த ஐக்கியம் இருக்கவில்லை. 

குறிப்பிட்டுச் சொன்னால் பண்டைய குல வழிச் சமூக ஆட்சிமுறையில் இருந்து முற்றிலும் விலகாத அதன் தொடர்ச்சியான ஆட்சிமுறைகளே இருந்தன.

அது போலவே இலங்கையிலும் மகாநாபர் காலத்தில் இதையொத்த அரசுகளே இருந்தன.சிங்கள இனம் ஒரு தனித்துவமான இனமாக தோன்றிவிட்டதாக சொல்ல முடியாது.மாகாநாபர் பாளி மொழியில் தான் செய்யுள் வடிவில் மகாவம்சத்தை ஏட்டில் எழுதியுள்ளார்.

அனுராதபுரத்தை ஆண்ட எல்லாளனையும் சேனன் குந்திகன் புலக(ஹ)த்தன், பாகியன், பணயமாறன், பிலயமாறன் மற்றும் தத்திகன் ஆகியோரையும் அவர் அந்நிய ஆக்கிரமிப்பார்கள் என்று கூறுகின்றாரே தவிர தமிழர்கள் என்று குறிப்பிட வில்லை. பிற்காலத்தில மாகாவம்சத்தை மொழியாக்கம் செய்த பௌத்த சிங்கள இனவாதிகள் தான் அவர்களை தமிழர்களாகவும் எல்லாளன் துட்ட கைமுனு யுத்தத்தை தமிழ் சிங்கள யுத்தமாகவும் அடையாளப் படுத்தினார்கள்.

மகாவம்சத்தில் விசயன் இலங்கைக்கு வந்த காலத்தில் இயக்கர் நாகர் என்ற இரண்டு பிரிவை சேர்ந்த மக்கள் அங்கு வாழ்ந்ததாகவும் அவர்களுக்கு அரசுகள் இருந்ததாகவும் இயக்கர் குல இளவரசியான குவேனியை விசயன் மணம் புரிந்ததாகவும் சொல்லப்படுகிறது.ஆனால் இந்த இயக்கர்களும் நாகர்களும் நாரீகமற்றவர்களாக இருந்ததாகவும் மகாநாபர் கூறுகிறார். இதை திராவிடர்களை அரக்கர்கள் என்றும் தாசுக்கள் (இழிவானவர்கள்) ஆரியர்கள் சித்தரித்ததுடன் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.

இலங்கையின் பூர்வீக குடிகளாக இயக்கர்களும் நாகர்களும் இருந்தார்கள் என்பதும் அவர்களுக்கான அரசுகளும் இருந்திருக்கின்றன என்பதும் இவர்கள் இருவரும் நாகர் குலம் இயக்கர் குலம் என்பதில் வேறுபட்டாலும் ஒரே இன-மொழிக்(தமிழ்) குழுமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் உண்மையாகும்.

இது எறக்குறைய தமிழ் நாட்டில் சேர சோழ பாண்டிய அரசுகள் இருந்ததற்கு ஒப்பானது.

அனுராதபுரத்தின் வரலாறு பௌத்த மத்தத்தின் இலங்கை வருகையுடன் தான் முக்கியப்படுத்தப்படுகிறது.

பௌத்த மதத்தை இலங்கைக்கு கொண்டு வந்தவர் மெளிரிப் பேரரசர் அசோகனுடைய மகன் மகிந்தன் எனப்படும் மகிந்த தேரர் என மகாவம்சம் சொல்கிறது.

மகிந்தர் இலங்கைக்கு வந்த போது அனுராதபுர நகரத்தை ஆட்சி செய்தவன் தேவநம்பிய தீசன்(கிமு 247 - கிமு 207)

அவனுக்கு முன் பண்டுகாபன் (கிமு 437)

மூத்தசிவன் முதலான பல அரசர்கள் அந்த நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்திருக்கிறார்கள்.

அவர்கள் யாரும் பௌத்தர்கள் அல்ல.

மகாவம்சமும் அதற்கு முந்திய தீபவம்சமும் தரும் தகவலின்படி அவர்கள் மலையை வழிபடுவது கல்லை (சிவலிங்கம்) வழிபடுவது காட்டு மரங்களை வழிபடுவது வேள்வி நடத்துவது மிருங்களை பலியிடுவது என்று நாரிகமற்ற ஒழுங்கு படுத்தப்படாத வழிபாட்டு முறையை கடைப்பிடித்தார்கள்.

இது அந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்த தமிழகத்திலும் நிலவிய வழிபாட்டு முறையாகும்.வைதீக மயப்படுத்தலுக்கு உள்ளாக சிவ(லிங்க)வழிபாடும் நடுகல் வழிபாடும் தமிழர்கள் சிறப்பாக நிலவிய வழிபாட்டு முறைகளாகும்

அதே போல இறந்த உடல்களுக்கு சடங்குகளைச் செய்வது அவற்றை புதைத்துவிட்டு வணங்குவது முதலான மூடநம்பிக்கைகளைக் கொண்டிருந்தார்கள்.இதுவும் அன்றைய காலகட்டத்தில் தமிழ் சமூகத்தில் நிலவிய சடங்கு முறையாகும்.(உடலங்களை எரியூட்டுவதென்து ஆரியமயமாக்கலுக்கு பின்னர் வந்தது).

மொத்தத்தில் இந்தக் குறிப்புகள் அனைத்தும் அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் இருந்த மக்கள் தமிழ் இன மொழிவழிக் குழுமத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் அந்த மக்களை ஆட்சி செய்த அரசர்களும் அதே குழுமத்தை சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

மகிந்த தேரரும் அவரது சீடர்களும் இலங்கைக்கு வான் வழியாக பறந்து வந்ததாகவே தீப வம்சமும் மகாவம்சமும் கூறுகின்றன.

இது தமிழகத்தினுடாக பௌத்தம் தங்களுக்கு வரவில்லை.தாங்கள் நேரடியாக ஆரியத் தொடர்புடையவர்கள் என்பதற்காக புனையப்பட்ட ஒரு கூற்றாகும்.

உண்மையில் மகிந்த தேரர் தமிழ் நாட்டுக்கு வந்து அங்கு ஆட்சிசெய்த மன்னர்களின் ஆதரவைப் பெற்றுத்தான் இலங்கைக்குச் சென்றிருக்க முடியும்.

அந்தக்கால கட்டத்தில் ‘இறைமை என்பது கடவுளுக்குரியது.அரசு என்பது கடவுளினுடைய சொத்து.மன்னர் கடவுளின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி நடத்துபவர்’ என்ற வரையறையே அரசுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

எனவே சர்வ வல்லமை படைத்த கடவுளையும் அவரது பிரதிநிதியான மன்னரையும் மறுதலிக்கும் மாற்றுச் சமயக் கொள்கை உடையவர்களும் அதை பரப்புபவர்களும் அவ்வளவு சுலபத்தில் ஒரு அரசின் ஆட்புல எல்லைக்கு ஊடாக பயணம் செய்திருக்க முடியாது.

தமிழகத்தில் இருந்த ஆட்சியாளர்கள் சோழர்களையே இலங்கையின் தோரவாத பௌத்த வரலாற்று ஆசிரியர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக சித்தரித்திருக்கிறார்கள்.அதே நேரம் பாண்டிர்களும் சேரர்களும் இலங்கை அரசர்களுடன் மண உறவு வைத்துக் கொண்டதாகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மகிந்த தேரர் காஞ்சிபுரம் வந்து தங்கியிருந்து பின் அங்கிருந்து பாண்டிய நாட்டுக்கு ஊடக நாகர்கோவில் கன்னியாகுமரி பகுதிக்கு வந்து அங்கிருந்தே இலங்கைக்கு சென்றதாக சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.(இது பற்றி ஆராயப்பட வேண்டும்)

மகிந்த தேரரின் வருகையின் பின்னர் தேவநம்பிய தீசன் பௌத்த மதத்தை தழுவியதாகவும் மாகாபோதி விகாரையும் மகாசங்கமும் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இலங்கையின் வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வு என்பதில் சந்தேகம் இல்லை.

எனெனில் இலங்கையில் அது வரை சைவ கடவுளின் சொத்தாக இருந்த அரசும் இறைமையும் மகா சங்கத்தின் ஆன்மீக சொத்தாக மாற்றமடைகிறது.மன்னர்கள் மகா சங்கத்தின் பிரதிநிதிகளாக இருந்தே ஆட்சி செய்ய வேண்டிய நிலை தோன்றுகிறது.

இந்த இடத்திலே முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் கௌதம புத்தர் ஒரு போதும் தன்னை கடவுளாக சித்தரித்ததில்லை. அது போல கடவுளைப் பற்றியும் அவர் போதிக்கவில்லை. அவர் மக்களை துன்பங்களில் இருந்து விடுவிப்பதற்கான அவர்கள் நற்கதியடைவதற்கான ஒரு வழிகாட்டியாகவே இருந்தார். அதற்கான வழிமுறைகள் பற்றியே அவர் போதித்தார்.

அவர் எதையும் எழுத்தில் எழுதி வைக்கவில்லை.ஆனால் அவரது மரணத்துக்கு பின் அவரது சீடர்களே பௌத்த சங்கத்தை உருவாக்கி அவற்றை தத்துவமாக மாற்றினர்.

புத்தரின் கோட்பாட்டுகளாக மூன்று புகலிடங்கள் மற்றும் ஐந்து நல்லொழுக்கம் பரிந்துரைக்கப்படுகின்றன. புத்தம்(புத்தரின் Nபாதனைகள்), சங்கம்(பௌத்த சங்கம்),தர்மம் என்பனவே மூன்று புகலிடங்கள் எனப்படுகின்றன.

ஐந்து நல்லொழுக்கங்கள் என்பன

எந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் தவிர்த்தல்

கொடுக்காத எப்பொருளையும் எடுப்பதைத் தவிர்த்தல்

தவறான பாலியல் உறவுகள் கொள்ளாது இருத்தல்

தவறான பேச்சு உரைக்காமல் இருத்தல்; 
(பொய் சொல்வதும், வதந்தி கிளப்புவதும், கடுமையாகப் பேசுவதும், வம்பளப்பதும் தவிர்த்தல்)

போதையளிக்கும் எப்பொருளையும் உட்கொள்ளுதலைத் தவிர்த்தல் ஆகியவையாகும்

கௌதம புத்தர் அரசுரிமையை துறந்து ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று கூறி துறவற வாழ்க்கை வாழ்ந்து மறைந்தார்.

ஆனால் அவருடைய கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சங்கம் அரசுகளை தங்களது செல்வாக்குக்கு உட்படுத்தி அவற்றை சார்ந்து இயங்கியது ஒரு முரண்நிலையாகும்.

தேவநம்பிய தீசனுக்குப் பின் எல்லாளன் ஆட்சிக்கு வரும் வரை

உத்தியன் (கிமு 267) மகாசிவன் (கிமு 257) சூரதீசன் (கிமு 247) சேனனும், குத்திகனும் (கிமு 237)அசேலன் (கிமு 215) ஆகிய பல மன்னர்கள் ஆட்சி நடத்தியிருக்கிறார்கள்.இந்தக் காலகட்டத்தில் அனுராதபுரத்தில் இருந்த மகாவிகாரை செல்வாக்குப் பெற்ற ஒரு வழிபாட்டு தலமாகவும் அங்கிருந்த மகா சங்கம் அதிகாரம் பெற்ற அமைப்பாகவும் மாற்றமடைந்திருந்தது. 

பௌத்தர்களுக்கும் சைவ சமயத்தவர்களுக்கும் அல்லது பௌத்தத்துக்கும் அதை கடைப்பிடிக்காதவர்களுக்கும் இடையிலான முரண்பாடு கூர்மையடைந்திருக்கிறது.அது தொடர்பிலான மோதல்களும் இடம பெற்றிருக்கின்றது.மகாபோதி விகாரையில் இருந்த புத்த பிக்குகள் பௌத்தம் தொடர்பான தகவல்களை மட்டும் அட்டகத்தா என்ற பெயரில் பாளி மொழியில் செய்யுள் வடிவத்தில் எழுதி வைத்திருந்தனர்.பௌத்தம் அல்லாத ஏனைய வரலாற்றை அவர்கள் குறிப்பிடவில்லை.

எல்லாளனின் வருகையும் அவனது ஆட்சிமுறையும் மகா சங்கத்தினருக்கும் அவர்களைச் சேர்ந்த பிரிவினருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. அவனது நீதி தவறாத ஆட்சிமுறை பௌத்தத்துக்கு அவன் கொடுத்த மரியாதை அனைத்து மதங்களையும் சமமாக பாவித்த முறை என்று அவனுக்கு மகாவம்சம் பாராட்டு வழங்குவதிலிருந்து அவன் மக்களின் செல்வாக்கைப் பெற்ற ஒரு மன்னனாக இருந்தான் என்பதை அறிய முடிகிறது.

அவனைப்பற்றி குறை கூறுவதை மக்கள் எற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை உணர்ந்த மகா சங்கத்தினர் அவனை அந்நிய ஆக்கிரமிப்பாளனாக காட்ட முற்பட்டனர்.(எல்லாளன் சோழநாட்டில் இருந்து வந்தவன் என்றும் சைவ சமயத்தை கடைப்பிடித்தவன் என்று சிலரும் சமன சமயத்தை கடைப்பிடித்தவன் என்று சிலரும் கூறுகின்றனர்.)எல்லாளனின் வருகையோடு ருகுணை பகுதிக்கு இடம்பெயர்ந்த பௌத்த அதிகார மையத்தின் (அரசு) பிரதிநிதியாக துட்ட கைமுனு இருந்தான்.அந்திய ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி பௌத்தத்தை காப்பது அவனது கடமை என்று போதிக்கப்பட்டது.

எல்லாளனை வெற்றி கொண்டு அனுராதபுரத்தில் பௌத்த மேலான்மையை நிலை நாட்டுவதற்காக துட்ட கைமுனு திஸ்சமாறகமவிலுருந்து படை திரட்டிக்கொண்டு புறப்பட்ட போது அவன் 20க்கும் மேற்பட்ட சிற்றரசர்களை வெற்றி கொண்ட பின்னரே அனுராதபுரத்தை அடைய முடிந்ததாக மகாவம்சம் கூறுகிறது.இவர்கள் அனைவரும் பௌத்த மதத்தின் எதிரிகள் என்றும் எல்லாளனின் நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது. கிமு 161ல் துட்ட கைமுனுவுக்கும் எல்லளனுக்கும் இடையில் நடந்த போர் தமிழ் சிங்களப் போர் என்றும் அதில் கிடைத்த வெற்றி சிங்களவர்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் சிங்கள இனவாத வரலாற்றாசிரியர்கள் இப்போது கூறுகின்றனர். ஆனால் மகாவம்ச மூல நூலில் துட்ட கைமுனு பௌத்த மன்னாகவும் அந்த மதத்தின் காவலனாகவும் சித்தரிக்கப் படுகிறானேயன்றி எந்த இடத்திலும் அவன் ஒரு சிங்கள இனத்தவன் என்றோ குறிப்பிடப்படவில்லை. 

உண்மையில் எல்லாளனுக்கும் துட்ட கைமுனுவுக்கும் நடந்த யுத்தம் பௌத்தத்துக்கும் அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் நடந்த யுத்தமேயன்றி சிங்கள தமிழ் யுத்தமல்ல. துட்ட கைமுனு அடைந்த வெற்றியைக் குறித்து மகாவம்வம்சத்தின் 25வது அத்தியாயத்திலே ஒரு குறிப்புள்ளது அதிலே மகாசங்க பிக்குகளைப் பார்த்து துட்ட கைமுனு ‘மரியாதைக்குரியவர்களே! பல லட்சக்கணக்கான மக்கள் உயிர்கள் இழக்க காரணமாயிருந்த எனக்கு எவ்வாறு ஆறுதல் கிடைக்கும்? என்று கேட்கிறான் அதற்கு அவர்கள் ‘நீ சொர்க்கம் செல்ல இந்த ஒரு செயல் தடையாக இருக்காது. உன்னால் ஒன்றரை மனிதரே உயிரிழந்தனர். பௌத்த சமயத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும் தீயவர்களுமான ‘மற்றவர்கள்’ மிருகங்களைபோல கருதப்படவேண்டும் என்று பதில் சொல்வதாக கூறப்படுகிறது. இது இந்த யுத்தம் இனங்களுக்கு இடையில் நடந்த யுத்தம் அல்ல, இரண்டு மதங்களுக்கு இடையில் நடந்த யுத்தம் என்பதற்கு சிறந்த ஆதாரமாகும்.

இதிலே இன்னொரு ஆச்சரியப்படத் தக்க தகவல் என்ன வென்றால் எல்லாளனை வெற்றி கொள்வதற்கு கதிர்காம முருகனுக்கு துட்டகைமுனு நேர்த்தி வைத்தாகவும், இந்தப் போரில் வெற்றி பெற்றால் கோவில் கட்டுவதாக அவன் வேண்டிக் கொண்டதாகவும் அதன்படி கதிர்காமம் கோவிலைக்கட்டியதாகவும் கதிர்காம வரலாறு என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.(இது எந்தளவு உண்மை என்று தெரியாது.ஆனால் பதியப்பட வேண்டிய குறிப்பு)

மகாவம்ச குறிப்புகளில் இருந்தும் இலங்கையின் தென்குதியின் பல்வேறு பகுதிகளில் புதைபொருள் ஆராட்சியின் போது கிடைக்கப்பெற்ற இருந்தும் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் கிமு 1000 வருடத்திற்கு முற்பட்ட காலத்தில் இருந்தே ஒரே இன மொழி பண்பாட்டை சேர்ந்த மக்களே வாழ்ந்திருக்கிறார்கள் என்ற கருத்து வலுப்பெற்றிருக்கிறது. (இது தொடர்பாக இன்னும் ஆய்வுகள் செய்யப்படவேண்டும்)

துட்டகைமுனுவின் ஆட்சிக்குப் பின்னர் அனுராதபுரம் முழுக்க முழுக்க பௌத்த தலைநகரமாக (சிங்கள தலைநகரமாக அல்ல) மாறியது. மகாபோதி விகாரையும் மகா சங்கமும் முன்னரைவிட வலிமை மிக்க அமைப்புக்களாக மாற்றம் பெறுகின்றன.

அதேவேளை இந்தக் காலகட்டத்தில் தமிழகத்திலும் பௌத்தம் காலூன்ற ஆரம்பிக்கிறது. காஞ்சிபுரம் முக்கியமான பௌத்த மையமாக மாறுகிறது. 

கிறீஸ்த்துவுக்கு முன் முதலாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் மகாபோதி விகாரைக்கு இணையாக அபயகிரி விகாரை கட்டப்படுகிறது.(இந்த விகாரை அங்கிருந்த ஒரு புராதன சிவன் கோவிலை இடித்துவிட்டு கட்டியதாகவும் சிலர் கூறுகின்றார்கள்.)இந்த இரண்டு விகாரைகளுக்கும் தமிழகத்தில் இருந்தும் பௌத்த துறவிகள் வந்து தங்கியிருந்து மதப்பணியாற்றி இருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் அனுராதபுரத்துக்கு வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் கூட பௌத்தர் அல்லாத அரசுகள் இருந்திருக்கின்றன. பௌத்தர்களுக்கும் பௌத்தர்கள் அல்லாதவர்களுக்கும் இடையிலான மோதல்களும் தொடர்ச்சியாக நடந்திருக்கின்றன. 

இதேவேளை கிறீசு(ஸ்)த்து பிறப்பதற்கு சமமமான காலகட்டத்தில் இந்தியாவில் பௌத்த சங்கம் பிளபட்டு. மகாயான பௌத்தம் என்ற ஒரு புதிய பிரிவு தோற்றம் பெறுகிறது. இந்தப் புதிய பிரிவு தமிழ் நாட்டில் இருந்தே தோற்றம் பெற்றதாக பல்வேறு வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர் 

மகாயான பௌத்தம் பாரம்பரிய தேரவாத பௌத்தத்தில் இருந்து பல விடயங்களில் வேறுபடுகின்றது. மகாயான பௌத்தத்தில் புத்தர் அழியாதவர், மாறாத்தன்மையுடையவர், எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவர், மேலும் எங்கும் நிறைந்திருப்பவர். மகாயான பௌத்தத்தில் போதிசத்துவர்கள் என்றழைக்கப்படும் பல தெய்வீக-குணங்களை கொண்டவர்கள் வணங்கப்படுகிறார்கள்.

எல்லா உயிர்களும் மோட்சமடைய வாய்ப்புள்ளவர்கள் என்பதே மகாயான பௌத்தத்தின் அடிப்படைத் தத்துவமாகும். மேலும் பல புத்தர்கள் மற்றும் போதிசத்துவர்களின் வழிபாடும், புத்தரின் அழியாத்தன்மையும் அதன் அடிப்படை தத்துவத்தினுள் அடங்கும். இதனால் சாதாரண மக்களை மகாயான பௌத்தம் வெகுவாகக் கவர்ந்தது,

காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக காவிரிப்பூம் பட்டணம் நாகபட்டணம் தஞ்சாவூர் உட்பட சோழர்களின் ஆட்சிப் பிரதேசத்திலே தான் இந்த மாகாயான பௌத்தம் செல்வாக்குடன் திகழ்ந்தது.சங்ககாலத்துக்கு அடுத்தபடியாக வந்த களப்பிலர் காலத்திலே தான் சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் ஆளமாக வேரூன்றியது என்றும் இந்தக்களப்பிலர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சிலரும் ‘இல்லை அவர்கள் சேர சோழ பாண்டிய அரச மரபுகளைச் சாராத மற்றொரு தமிழ் நிலப்பிரபுத்துவக் குழுவினர்’ என்று சிலரும் கூறுகின்றனர்.(இதுவும் நீண்ட ஆய்வுக்குரிய ஒரு விடயமாகும்)

பௌத்தத்தில் ஏற்பட்ட தேரவாத மகாயான பிளவு என்பது இலங்கையிலும் எதிரொலித்தது.அபயகிரி விகாரை மகாயான பௌத்த விகாரையாகவும் மாகாபோதி விகாரை தேரவாத பௌத்த விகாரையாகவும் மாற்ற மடைகிறது.மாகாயான பௌத்தம் அனுராதபுரத்தை மையங்கொண்டு இலங்கையின் வடபகுதியிலும் தேரவாத பௌத்தம் தெற்கிலும் செல்வாக்கு செலுத்த ஆரம்பிக்கின்றன.

வடக்கில் கதிரமலை என்ற மகாயன பௌத்த தலைநகரம் உருவாகிறது.

கி.பி 171 முதல கி.பி 193வரை அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி புரிந்த கஜபாகு மன்னாhல் பத்தினத் தெய்வவழிபாடு(கண்ணகிவழிபாடு) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதென இராசவாளி என்ற சிங்கள நூல் கூறுகிறது. கசபாகு ஆட்சி காலத்தில் சேரமன்னன் செங்குட்டுவன் தனது தலைநகராகிய வஞ்சியில் இமயமலையில் இருந்து கொண்டுவந்த கல்லில் கண்ணகிக்கு சிலை செய்து கோயில் அமைத்து பெருவிழா எடுத்ததாகவும் . கிபி 178ல் நடந்த அந்தவிழாவிற்கு செங்குட்டுவனின் அழைப்பையேற்று அவன் நண்பனாகிய கசபாகு விழாவில் கலந்து கொண்டதாகவும் அந்த நூல் கூறுகிறது. இதிலிருந்து கசபாகு மகயான பௌத்த பரிவைச் சோந்தவன் என்பது உறுதியாகிறது.அக்கால தேரவாத பௌத்தத்தில் இப்போதுள்ளது போல் பிறதெய்வ வழிபாடுகள் இருக்கவில்லை. தமிழர் மதத்தின் (ஆதி சைவம்) சில கூறுகளை உள்வாங்கியிருந்த மகாயான பௌத்தை இதை அனுமதித்திருந்தது.

கி.பி 302 முதல் 315 வரையில் அனுராதபுரத்தை ஆண்ட கோதாபயன் என்ற, அரசன் மகாபோதி விகாரைக்கு(தேரவாதம்) ஆதரவாக அபயகிரி விகாரையில் இருந்த அறுபது பிக்குகள் மீது சமய நிந்தனைக் குற்றம் சாட்டி தமிழ்நாட்டுக்கு , நாடு கடத்திவிட்டான்.

அந்தக்காலகட்டத்தில் தமிழகத்தில் மகாயானபௌத்த சங்கத்தின் தலைமை பிக்குவாக இருந்த சங்கமித்திரர் இதையறிந்து அனுராதபுரத்துக்குச் சென்று அரசனின் தவறை உணர்த்தி மிண்டும் மகாயானபௌத்தத்தை அங்கு நிலைநாட்டுவதற்காக தனது சீடர்களோடு புறப்பட்டார்.

இதையறிந்த மகாபோதிவிகாரையை சேர்ந்த தேரவாத பிக்குகள் அரசனிடத்தில் முறையிட்டார்கள். அரசன் சங்கமித்திரரை அழைத்து விசாரித்த போது அவர் மகாயானபௌத்தத்தின் சிறப்புக்களை எடுத்துக் கூறி தேரவாத பௌத்த பிக்குகள் தன்னுடன் விவாதம் செய்த ஏற்பாடு செய்யும் படியும் இந்த விவாதத்தில் தான் வெற்றியடைந்தால் மகாயானபௌத்தத்தை பரப்பவும் அபியகிரி விகாரை முன்பு போல இயங்கவும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கிணங்க கோத்தபாயனின் அரசவையில் சங்கமித்திரருக்கும் தேரவாத பௌத்த தலைவரான சங்கபாலன் என்பவருக்கும் வாதப்போர் நிகழ்ந்தது. இந்த வாதத்தில் சங்கமித்திரரே வெற்றி பெற்றார். கோத்தபாயன் சங்கமித்திரரின் ஆழ்ந்த கல்வியறிவைப் பாராட்டி அவரை ஆதரித்ததுடன் தமது பிள்ளைகளான சேட்டதிஸ்ஸன், மகாசேனன் ஆகிய இருவருக்கும் கல்வி கற்பிக்க ஆசிரியராக நியமித்தான்.

முத்தவனான சேட்ட திஸ்ஸன் தேவரவாத பிக்குகளின் நட்பை பெற்றிருந்தால் சங்கமித்திரரிடம் பகைமை பாராட்டி வந்தான். இளையவனான மகாசேனன் அவரிடம் அதிக அன்பு கொண்டிருந்தான்.

கிபி 323 ல் கோத்தபாயன் காலமாக அரசுரிமையை மூத்த மகனான
சே(ஜே)ட்டதிஸ்ஸன் ஏற்றுக்கொண்டான். எற்கனவே சங்கமித்திரரிடம் பகைமை பாராட்டிய அவன் ஆட்சிக்கு வந்தததம் அவருக்கு ஆதவாக இருந்த மந்திரிகளில் சிலரைக் கொலைசெய்துவிட்டான். இதைக் கண்ட சங்கமித்திரர் அவன் தம்மையும் கொன்று விடுவான் என்று அஞ்சிச் சோழ நாட்டிற்கு திரும்பிச்சென்றுவிட்டார் .. பத்து ஆண்டுகளின் பின்னர் கிபி333ல் சேட்டதிஸ்ஸன் இறந்துவிட அனுராதபுரத்தின் அரசுரிமை சங்கமித்திரரின் அன்புக்குரிய மாணவனான மகாசேனனிடம்(கி.பி. 334-361) வந்தது.

இச்செய்தி அறிந்த சங்கமித்திரர் அங்குசென்று, தம் மாணவனாகிய அரசனுக்குத் தமது கையினாலேயெ முடிசூட்டினார். அன்று முதல் அங்கு தங்கி இருந்து மகாயான பௌத்த நெறியை பரப்பி வந்தார். 

இந்தக்காலகட்டத்தில் மகாபோதிவிகாரையில் இருந்த தேரவாத பிக்குகள்; உண்மையான பௌத்த மதத்தைப் போதிக்க வில்லை என்று அரசனுக்கு முறைப்பாடுகள் வந்ததால் அந்தவிகாரையில் வாழும் பிக்குகளுக்கு நகரமக்கள் உணவு கொடுக்கக்கூடாதென்றும், மீறிக் கொடுப்பவர்களுக்கு நூறு பொன் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவன் கட்டளையிட்டான். இதன் காரணமாக அங்கிருந்த தேரவாத பிரிவு பிக்குகள் உண்ண உணவு கிடைக்கப் பெறாமல் தென்பகுதியில் இருந்த றுகுணு பிரதேசத்தக்கு போய்விட்டார்கள்.

கைவிப்பட்ட நிலையில் இருந்த மகாபோதி விகாரையை மகாசேனன் சங்கமித்திரரிடம் ஒப்படைத்துவிட்டான்.

அவர் அந்த விகாரையை இடித்து, அந்தப்பொருள்களைக் கொண்டு தமது அபயகிரி விகாரையைக் புதுப்பித்துப் பெரியதாகக் கட்டினார். இந்த நடவடிக்கைக்கு சோணன் என்னும் மந்திரியும் துணையாயிருந்தான். இவற்றை யெல்லாம் அறிந்த அரசனுடைய மனைவியர்களுள் ஒருத்தி( தேரவாத பிரிவை சோந்தவள்;), அபயகிரி விகாரையிலிருந்த பிக்குக்களைத் துரத்திவிட்டு, அந்த விகாரையையும் இடித்தொழித்து சங்கமித்திரரையும் அவருக்குத் துணையாயிருந்த சோணனையும் கொன்றுவிடும்படிச் சிலரை ஏவியதாகவும் அவர்கள் மந்திரியையும் சங்கமித்திரரையும் கொலைசெய்துவிட்டார்கள் என்றும் மகாவம்சத்தின் 36,37 ஆம் அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

(ஆனால் வேறு சில தகவல்கள் சங்க மித்திரர் இந்த கொலை முயற்சியில் இருந்து தப்பி தமிழகம் சென்றுவிட்டதாக தெரிவிக்கின்றன.)

மகாசேனின் ஆட்சிப் பகுதியின் இறுதிக்காலத்தில் மகாபோதி விகாரை மீண்டும் கட்டப்பட்டதையும் மகாவம்சத்தை தொகுத்த மகாநாபர் அந்த விகாரையில் இருந்தே அதை தொகுத்ததையும் அறிய முடிகிறது.

பௌத்தம் இலங்கைக்கு வந்ததாக கூறப்பட்ட காலத்தில் இருந்து மகாநாபர் மாகாவம்சத்தை தொகுத்தாக கூறப்படும் காலம் வரை சிங்கள மொழி சிங்கள இனம் என்ற குறிப்புகள் எங்கும் இடம்பெறவில்லை.பௌத்தர்கள் -பௌத்தத்தின் எதிரிகளான அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் என்ற குறிப்புகள் தான் எங்கும் விரவிக் கிடக்கின்றன.

கல்வெட்டுகள் இலக்கியங்கள் சமயக் குறிப்புகளின் கூட தேர வாதப்பிரிவினர் பாளி மொழியிலும் மகாயான பிரிவினர் சமஸ்கிரதத்திலும் எழுதியுள்ளனர். கிபி 4 ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டொன்று அபயகிரி விகாரையிலுள்ளது.

இந்தியாவில் பௌத்த மதம் தோன்றியதில் இருந்து மகாவம்சம் எழுதப்படும் காலம்வரை சீனாவில் பௌத்த மதத்தை பரப்பிய போதி தர்மர் பௌத்த தத்துவமான திரிபிடகத்துக்கு விளக்கவுரை எழுதிய ஆச்சாரிய தர்மபாலர் உட்பட 23 க்கும் மேற்பட்ட பௌத்த பேரறிஞர்கள் தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள்.

இலங்கையில் இருந்த தேரவாத மாகாயான பௌத்த முரண்பாடுகளும் பௌத்தர்களும் பௌத்தர் அல்லாதோருக்கும் இடையிலான முரண்பாடும் தமிழகத்தை மையம் கொண்டுதான் இயங்கியிருக்கின்றன.

இலங்கையில் கிபி 4ம் நூற்றாண்டில் கூர்மையடைந்த மகாயான தேரவாத முரண்பாடு கிபி 6ம் 7ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் பௌத்தம் வைதீக இந்து மதத்துக்குள் ஐக்கியப்பட்டுப் போய்விட கௌதம புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக கொள்ளப்பட இந்து எதிர் தேரவாதபௌத்த முரண்பாடாக கூர்மையடைகிறது.

இதனூடாக ‘தமிழக எதிர்ப்பு தமிழ் எதிர்ப்பு’ என்ற அடிப்படையில் சிங்கள இனத்துவத்துக்கான தொடக்கப்புள்ளி இடப்படுகிறது.

கிபி 7ம் நூற்றாண்டுக்குப் பின் வலுவிழந்து போன அனுராதபுரம் கிபி 10 ம் நூற்றாண்டில் இராச  இராச சோழனின் ஆட்சிக்காலத்தில் அவனது படையினரால் முற்றாக அழிக்கபட்டு பெலநறுவை (சனநாத மங்களம்)க்கு அதிகார மையம் மாற்றப்பட்ட பின்பு தான் சிங்கள இனத்துவம் முழுவடிவம் பெறவதை பார்க்க முடிகிறது.

இந்தக் கால கட்டத்திலும் சிங்கள இன அடையாளத்துடன் ஆட்சிக்குவந்த பிற்கால அரசர்கள் பாண்டியர்களுடனும் சேர நாட்டு சிற்றரசர்களுடனும் நெருங்கிய உறவுகளைப் பேணியிருக்கிறார்கள். சோழர்கள் மட்டுமே அவர்களுக்கு எதிரிகளாக இருந்திருக்கிறார்கள்.

உண்மையில் சோழர்கள் மட்டும் தான் இலங்கை மீது படையெடுத்தார்களா?

சேர பாண்டியர்கள் இலங்கையின் மீது செயல்வாக்கு செலுத்த முயலவில்லையா?

அப்படி முயல வில்லை என்றால் அதற்கு என்ன காரணம்?

மாறக முயன்றிருந்தால் அவர்களை சிங்கள வரலாற்றாசிரியர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக காட்ட முயலாது ஏன் என்ற கேள்விகளுக்கு விடை காணப்பட வேண்டும்.

இன்றைக்கு அரசமரம் இருக்கும் இடம் எல்லாம் தங்களுடைய புனித பூமி என்றும் இலங்கைத் தீவும் சிங்கள இனமும் தேரவாத பௌத்த நெறியை காப்பாற்றுவதற்காக கௌதபுத்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவை என்றும் கூறிக்கொண்டிருக்கின்ற பௌத்த சிங்கள பேரினவாத பொய்களை கட்டுடைப்பதற்கு தமிழர்களாகிய நாம் 13 ம் நூற்றாண்டில் ஆரிய சக்கரவாத்திகளால் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண இராட்சியம் பற்றிய ஆய்வுடன் திருப்திகொள்ளும் மனோபாவத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு அநுராதபுரத்தில் இருந்தும் எமது வரலாற்றை தேட முற்பட வேண்டும்.

ஏனென்றால் அங்கு மதங்களுக்கு இடையில் தான் சண்டை நடந்திறது, இனங்களுக்கிடையில் அல்ல அங்கு வாழந்த மக்கள் தமிழர்கள் தான்.அவர்கள் பேசிய மொழி தமிழ் தான். பௌத்தர்கள் என்பதால் மட்டும் அவர்கள் சிங்களவர்கள் ஆகிவிடமாட்டார்கள். 

இது பற்றி நீண்ட விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்

Sunday, 7 October 2012

உயிர்காக்க நாட்டை விட்டு............!

எமக்கு நோர்வே வேண்டாம் இலங்கையே போதும் பொதுமக்கள் ஆர்பாட்டம் !

கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்திற்கு முன்னாள் நேற்று முந்தினம், (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. நோர்வேயில் பிரசாவுரிமைப் பெற்றவர்களின் உறவினர்களால் முற்பகல் 11.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது என அதிர்வு இணையம் அறிகிறது.

நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கி வருகின்ற சிறுவர் காப்பகத்தினால் தமது பிள்ளைகள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டதை கண்டித்தும், அவர்களை மீட்டு தருமாறும் வலியுறுத்தியும், ஒசு(ஸ்)லோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் தாய்மாரைக் காப்பற்றக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பில் இடம்பெற்றது.

நோர்வே சட்டத்தின்படி வீடுகளிர் சிறுவர்கள் பெற்றோர்களால் கண்டிக்கப்பட்டாலோ, இல்லையேல் ஒரு வயதுக்கு மேல் அவர்களை தம்மோடு ஒரே கட்டிலில் உறங்க அனுமதித்தாலோ அதனை ஒரு பெரிய குற்றமாக அரசு கருதுகிறது.


இவ்வாறு நடந்தால், நோர்வே அரசு பிள்ளைகளைப் பொறுப்பேற்று அவர்களை வழிநடத்தும். இலங்கையர் உட்பட வெளிநாட்டவர்கள் பலரது பிள்ளைகள் இந்த சிறுவர் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிள்ளைகளை ஒழுங்கான முறையில் பராமரிக்காததாலும், கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் சண்டையால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாலும் அவர்களை பெற்றோரிடமிருந்து பிரித்து தாம் பராமரித்து வருவதாக நோர்வே அரசாங்க தரப்பினர் தெரிவிக்கின்றனர். 

இதில் எந்த அளவு உண்மை உள்ளது என்று தெரியவில்லை.

இவ்வாறு நோர்வே காப்பகத்தினால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையர்கள் உட்பட சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் பெரும் துயரங்களை அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவஎர்களை பெற்றோரிடம் ஒப்படைக்கக் கூறி, கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்துக்கு முன்னல் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

இராணுவம் ப.நடேசனைச் சுட்டது !

"நாம் கொல்லப்படும்போது உலகம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது" என்ற தொணிப் பொருளில் எழுதப்பட்ட புத்தகம் நேற்று(05) வெளியிடப்பட்டது.

இதில் கலந்துகொள்ள நோர்வேயில் இருந்து லண்டன் வந்த நோர்வே நாட்டு அமைச்சரும், இலங்கைக்கான சமாதானத் தூதுவருமான எரிக் சொல்கைமை, அதிர்வின் நிருபர் இடைமறித்து கேள்விகளைக் கேட்டுள்ளார்.

மேடையில் சில கருத்துக்களை தெரிவித்துவிட்டு, கருத்தரங்கு முடிவடைந்ததும், வெளியில் வந்த எரிக் சொல்கைமிடம் அதிர்வின் நிருபர் புலித்தேவன் மற்றும் நடேசன் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த எரிக், இலங்கை இராணுவமே புலித்தேவன் மற்றும் நடேசனைக் கொன்றது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் !

   

 இதனூடாக கோத்தபாய மற்றும் இலங்கை அரசின் கூற்றை எரிக் சொல்கைம், முற்றாக மறுத்துள்ளதோடு, இலங்கை இராணுவத்தை அவர் நேரடியாகச் சாடியுள்ளார்.

கேள்வி 1 :-

மேடையில் நீங்கள் லக்ஷ்மன் கதிர்காமரை புலிகள் கொன்றார்கள் என்று பல தடவை கூறியிருந்தீர்கள், இதில் உங்கள் கரிசனை தெரிகிறது. ஆனால் இலங்கையில் புலிகளின் அரசியல் துறையைச் சேர்ந்த கெளசலியன் பின்னர் சு.ப.தமிழ்ச் செல்வன் ஆகியோர் கொல்லப்பட்டதற்கு உங்கள் கரிசனை எங்கே போனாது ?

எரிக்கின் பதில் :-

சரியாகப் பதிலளிக்கவில்லை. (காணொளியைப் பாருங்கள்)

கேள்வி 2 :- புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோர் கொல்லப்படுவதற்கு முன்னர் உங்களோடு பேசினார்களா ? அன்று என்ன நடந்தது ?

எரிக்கின் பதில் :-

ஆம் என்னோடு பேசினார்கள், தாம் இராணுவத்திடம் சென்று சரணடைய இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் சிறிது நேரம் கழித்து அவர்கள் இறந்துவிட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது.

அவர்களை இலங்கை இராணுவமே கொன்றது என்றார்( காணொளியைப் பாருங்கள்).

BBC முன்நாள் ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன் அவர்கள் எழுதிய புத்தகவெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்ளவே எரிக் லண்டன் வந்திருந்தார்.

இதில் ஜஸ்மின் சூக்கா(ஐ.நா அதிகாரி) BBC ஹர்ட் டோக் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்டிபன் சக்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பிரதம விருந்தினராக சனல் 4 கொலைக்களத்தின் தயாரிப்பாளர் கொலம் மக்ரே அவர்களும் கலந்துகொண்டார்.

சர்வதேச மன்னிப்புச் சபைக்கு சொந்தமான கட்டிடத் தொகுதியில் இந் நிகழ்வு நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Saturday, 6 October 2012

விழுங்கப்பட்ட மண்ணும் பறிக்கப்படும் மண்ணும்!

1950 ஆம் ஆண்டில் கல்லோயா குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்பு கந்தளாய் திட்டம் உருவாக்கப்பட்டுத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தத் திட்டங்களில் சில பிரிவுகள் இன விகிதாசார அடிப்படையில் தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட்டன அதன் மூலம் தமிழ் தலைமைகளின் எதிர்ப்புகள் முறியடிக் கப்பட்டன. ஆனால், காலப்போக்கில் இனமோதல்கள் மூலம் அந்தப் பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட அவை முற்றுமுழுதாகச் சிங்கள மயப்படுத்தப்பட்டன. 

இவை திட்டமிடப்பட்டு சட்டப்படி தமிழ் மக்களின் நிலம் அபகரிக்கப்பட்ட கதையாகும். ஆனால் இந்த நிலப்பறிப்புக்கு இன்னுமொரு வலுவான பக்கம் இருந்து வந்துள்ளமையை எமது முன்னைய தலைமைகள் கண்டு கொள்ளத் தவறின. ஆனால் இன்று எமது மண்ணின் பெரும் பகுதி பறிபோய் விட்டது. 

கஞ்சா தோட்டம் குடியிருப்பாகிய கதை

1953 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அனுராதபுரம் சிறையிலிருந்து தப்பியோடிய பயங்கரக் கொள்ளைக்காரனாகிய யக்கடேயா தனது தலைமறைவு வாழ்க்கைக்கு மூதூர் வெருசல் பிரதான வீதிக்கு மேற்காக அமைந்துள்ள தற்போது "அலிஒலுவ" என அழைக்கப்படும் அரிப்புச் சந்தியை அண்மித்த காட்டுப் பகுதியைத் தெரிந்தெடுத்தான். மகா வலி ஆற்றங்கரையை அண்டிய இவ் வளமான பிரதேசத்தில் யாழ்ப்பாணம் கம்பர்மலையைச் சேர்ந்த விவசாயிகள் வருடா வருடம் சென்று வெங்காயம், மிளகாய்க்குரிய பருவகாலங்களில் விவ சாயம் செய்து திரும்புவதுண்டு. தலை மறைவாக வாழ்ந்த "யக்கடேயா' அங்கு பெருமளவில் கஞ்சா பயிர் செய்கையை ஆரம்பித்தான்.

மெல்ல மெல்ல அவனது நண்பர்களும் உறவினர்களும் அங்கு காடுகளை வெட்டிக் குடியேறி கஞ்சாச் செய்கையுடன் விவசாய முயற்சிகளையும் மேற்கொண்டனர். இதனால் அந்தப் பகுதி ஒரு பெரும் கஞ்சா உற்பத்தி மையமாகவே விளங்கியது.அதையடுத்து அங்கு ஒரு பௌத்த விகாரை அமைக்கப்பட்டு அது ஒரு தொன்மை வாய்ந்த பௌத்த வழிபாட்டுத் தலமாக ஒரு காலத்தில் விளங்கியது எனவும் கூறப்பட்டது. அந்த விகாரையில் பிக்குவின் அனுசரணையுடன் பல சிங்களக் குடியிருப்புகள் "சேருவில" என்ற பேரில் உருவாகின.

சேருவிலவின் வரலாறு

இப்படியாக சேருவில, மஹிந்தபுர, சயயபுர, தெஹியோவத்தை, மாவிலாறு சிங்களப் பகுதி எனப் பல குடியேற்றங் கள் புற்றுநோய் போல் எங்கும் துரிதமாக உருவாகின. சட்டவிரோதமாக ஆரம்பிக்கப் பட்ட இந்தக் குடியேற்றங்கள் சிங்கள அரசியல்வாதிகளின் முயற்சி காரணமாக குடியேற்றத் திட்டங்களாக அங்கீகரிக் கப்பட்டுச் சகல அரச உதவிகளும் வழங்கப்பட்டன.

சேருவாவில என்ற புதிய அரச அதிபர் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டது. அது மட்டுமன்றி தமிழர்களுக்கும் முஸ்லிம் களுக்கும் என இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்த மூதூர் பிரிக்கப் பட்டு மூதூர், சேருவில என இரு தேர் தல் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. இன்று திருமலை மாவட்டத்தில் சேரு வில ஒரு சிங்களத் தேர்தல் தொகுதியாக விளங்குகிறது.தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி அமைந்த போது வவுனியா தொகுதி யாருக்கு என்ற பிரச்சினையில் வவுனியா மாவட்டத்தை வவுனியா, முல்லைத்தீவு என இரண்டாகப் பிரித்து பங்கு போடுவதற்காக மூதூரை இரண்டா கப் பிரிக்க தமிழ்த் தலைமைகள் ஆதரவு கொடுத்த வெட்கம் கெட்ட செயலை யும் நாம் மறந்து விட முடியாது.எப்படியிருந்த போதிலும் திருகோண மலை மாவட்டத்தில் கல்லோயா, கந்த ளாய், சேருவில போன்ற பெரும் பகுதிகள் சிங்கள ஆதிக்கத்தால் விழுங்கப்பட்டுவிட்டன என்பது உண்மை யாகும்.

முஸ்லிம்களின் நிலம் பறிப்பு

இவ்வாறே மட்டக்களப்பு மாவட்டத்தில் சீனித் தொழிற்சாலையில் பணிபுரியவும் கரும்பு உற்பத்தியில் ஈடுபடவும் எனப் பெருமளவு சிங்களவர் குடியேற்றப்பட்டனர். முஸ்லிம்களின் ஏராளமான விளை நிலங்கள் பறிக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இன்று அங்கு தமிழர்களும் முஸ்லிம்களும் சிறுபான்மையினராக்கப்பட அம்பாறை என்ற ஒரு சிங்கள மாவட்டமே உருவாகிவிட்டது.

"திருமாவெலிய" புனித பிரதேசத் திட்டம் போன்றவற்றால் மேலும் மேலும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கெதிரான நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.அதாவது மட்டக் களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியும் விழுங்கப் பட்டுவிட்டது. இது ஏற் கனவே எமது தாயகப் பகுதி விழுங்கப்பட்ட கதை மட்டுமன்றி எமது தாயகப் பகுதியின் நிலத் தொடர்ச்சி துண்டிக்கப்பட்ட கதையையும் சொல்லும் வரலாறாகும். போர் முடிந்த பின்பு இந்தக் கொடிய ஆக்கிரமிப்புக் கரங்கள் வடக்கு நோக்கி விரிய ஆரம்பித்துவிட்டன.

வடக்கு நோக்கிவிரியும் ஆக்கிரமிப்பு







ஏற்கனவே எமது மக்கள் நீண்டகால மாகவே வாழ்ந்து வந்த பகுதிகள் அப கரிக்கப்பட்டும், எமது நீர்ப்பாசனக் குளங்களின் நீரேந்தும் பகுதிகளாக இருக்கும் காடுகள் அழிக்கப்பட்டும் இராணுவத்தினரின் குடும்பங்களுக்கான குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது எமது சனத்தொகை விகிதாசாரத்தில் சிங்களவர்களின் தொகையை அதிகரித்து எமது இன தனித்துவத்தைச் சீரழிக்கும் நீண்ட நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதியாகும். எவ்வாறு கல்லோயா, கந்தளாய், சேருவில போன்ற குடியேற்றங்கள் மூலம் கிழக்கு மாகாணத்தின் தாயகத் தொடர்ச்சி துண்டிக்கப்பட்டதோ அவ் வாறு வெலிஓயா என்ற பெரும் திட்டத் தின் மூலம் வடக்குக்கும் கிழக்குக்குமான நிலத்தொடர்பைத் துண்டிக்க பெரிய முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. 

முல்லையில் ஆபத்து

தமிழ் மக்களின் இதயபூமியான மணலாற்றில் தனிக்கல்லு, கென்ற்பாம், டொலர்பாம், ஜனகபுர ஆகிய பகுதி களில் அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் 1984 இல் மகாவலி அபிவிருத்திச்சட்டம் மூலம் வெளியேற்றப்பட்டு அங்கு சகல வசதிகளுடனும் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுவிட்டனர்.இந்தப் பகுதிகளுடன் கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், கருநாட்டுக் கேணி, புலிபாஞ்ச கல், அளம்பில், குமுழ முனை ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டு ஒரு புதிய உதவி அரச அதிபர் பிரிவு "வெலி ஓயா" என்ற பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதாவது அனுராதபுர மாவட்டத்தில் சில பகுதிகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பகுதிகளும் இணைக்கப்பட்டு வெலிஓயா என்ற பிரதேச செயலர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இது முல்லை மாவட்டத்தை அபகரிக்கும் சதி முயற்சிக்கும் வடக்கு, கிழக்குக்குமிடையேயான நிலத் தொடர்பைத் துண்டிக்கும் முயற்சிக்கும் ஒரு சட்டபூர்வ வலிமை வழங்கப்பட்ட பிர கடனமாகும். இந்த ஆக் கிரமிப்பின் இரண்டாவது கட்டம் இப்போது கொக்கிளா யில் ஆரம் பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1960 இற்கு முன்பு குடியி ருந்தவர்கள் எனக் கூறப்பட்டு 37 சிங்களக் குடும்பங்கள் கொக்கிளாய் முகத்து வாரம் பகுதியில் குடியேற் றப்பட்டுவிட்டன. அதையடுத்து மேலும் 45 குடும்பங்கள் சகல வசதிகளுடனும் குடியேற்றப்படுவதற்காக முல்லைத் தீவு மாவட்டத்தில் கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளன.

அதாவது இவர்கள் கொக்கிளாயைச் சொந்த இடமாகக் கொண்டவர்கள் எனவும் அவர்கள் இடம்பெயர்ந்து தென்னி லங்கையில் வாழ்ந்தவர்கள் எனவும் கூறப் படுகிறது. போர் காரணமாக இடம்பெயர்ந்த வர்களுக்கு வெளிநாடுகள் வழங்கும் சகல உதவிகளும் முழுமையாக வழங்கப்பட்டுக் கொக்கிளாயில் குடியேற்றப்படுகின்றனர்.

1960 ஆம் ஆண்டை அடுத்த காலப் பகுதியில் நீர்கொழும்பைச் சேர்ந்த சம் மாட்டி ஒருவர் கொக்கிளாயில் கரை வலை மீன்பிடித் தொழிலுக்காக வந்திறங்கினார். அங்கு ஏற்கனவே கொக்கிளாயிலிருந்து முல்லைத்தீவுவரை முல்லைத்தீவு அளம்பில் பகுதிகளைச் சேர்ந்த சம் மாட்டிகளே கரைவலைத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.

மீன்பிடியில் ஆரம்பம்...

இது பரந்த கடற் படுகையாதலால் முல்லைத்தீவு மீனவர்களும் அவர் களை எதிர்க்கவில்லை. சில வருடங் களில் மேலும் இரு சம்மாட்டிகள் அங்கு வந்து தொழில் தொடங்கவே அந்த மூன்றுபாடுகளும் அவர்கள் பருவகாலத் தொழில் செய்யும் இடங்களாகின. ஆனால் பருவகாலம் தொடங்கும் போது அவர்கள் படகுகள், வலைகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தேவைகளுடனும் வருவதும் பருவகாலம் முடிய அனைவரும் திரும்பிச் செல்வதும் வழமையாக இடம்பெற்றன.

காலப்போக்கில் கரைவலைத் தொழிலில் கூலித் தொழிலாளிகளாக வருபவர்கள் முகத்துவாரம் பகுதியில் குடிசைகள் அமைத்துக் குடியிருக்க ஆரம்பித்தனர். பருவகாலம் முடிந்த பின்பு இவர்கள் கொக்கிளாய் ஏரியில் மீன்பிடித்துத் தொழில் செய்தனர். சில வருடங்களில் இவர்களுக்கு மீனவர் குடியிருப்புகள் என்ற பேரில் வீடுகள் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டன. 

இவ்வாறு 1982ஆம் ஆண்டில் 21 குடும்பங்கள் இங்கு நிரந்தமாகக் குடி யிருந்தன. கொக்கிளாயில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கும் இவர்களுக்குமிடையே சுமுகமான உறவு நிலவி வந்தது. எனினும் இவர்களில் சிலர் சிறிபுரவில் உள்ள சிங்களக் காடையர்களுன் சேர்ந்து கொக்கிளாய்த் தமிழ் மக்களின் மாடுகளைக் கடத்தி இறைச்சிக்காகக் கொழும்புக்கு ஏற்றும் களவுத் தொழி லில் இறங்கிய பின்பு இரு சாராருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இப்படியான சந்தர்ப்பங்களில் கொக்கிளாய் இராணுவ முகாமைச் சேர்ந்த படையினர் தமிழ் இளைஞர்களை வேட்டையாட ஆரம்பித்தனர். இதனால் பல இளைஞர்கள் தலைமறைவாகக் காடுகளில் ஒளிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

தமிழர் வெளியேற்றம்

1984 ஆம் ஆண்டில் மகாவலி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், தென்னைமர வாடி, கருநாட்டுக்கேணி, புலிபாய்ஞ் சகல், முந்திரிகைக் குளம், மருதோடை, ஊஞ்சல்கட்டி, ஒதியமலை, மண் கிண்டி, பெருங்குளம், தனிக்கல் போன்ற தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த கிராமங்களை விட்டு 24 மணி நேர அவகாசத்தில் வெளி யேற்றப்பட்டனர். இந்த நாள்களிலேயே பெருங்கொடூரமான ஒதியமலைப் படுகொலைகள் இடம்பெற்றன.

இப்போது சில மாதங்களின் முன்பு தான் இந்தப் பகுதியின் தமிழ் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அக்கிராமங்களில் சில இருந்த சுவடே இல்லாமற் காணாமற் போய் விட்டன. பல சிங்களக் குடியேற்றங் களால் பெயர் மாற்றம் பெற்று வேறு உரு வம் எடுத்து விட்டன. மீளக்குடி மர்ந்த மக்களோ போதிய வசதிகள் இன்மை யால் மீண்டும் அந்தக் கிராமங்களை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளனர். தமிழ் மக்களின் இதயபூர்வ மான மண லாறு கூட "வெலிஓயா" ஆகிவிட்டது.இந்த நிலையில் தான் 1960 இற்கு முன் நிரந்தரமாகக் குடியிருந்தவர்கள் என்ற பேரில் சகல வசதிகளுடனும் கொக் கிளாய் முகத்துவாரம் பகுதியில் சிங்கள வர்கள் குடியேற்றப்படுகின்றனர்.

ஆக்கிரமிப்பு விரியும்

கொக்கிளாயின் ஏனைய பகுதிகள் கருநாட்டுக் கேணி, கொக்குத்தொடுவாய் ஆகிய பகுதிகளுக்கும் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை விரிவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஒரு பெரும் ஆபத்து கொக்கிளாய் குடியேற்ற உருவத்தில் பல்முக நோக்குடன் எம்மை நோக்கி வருகிறது.

இங்குதான் நாங்களும் எங்கள் தமிழ் தலைமைகளும் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி எழுகிறது. ஒரு நாடாளு மன்றப் பதவிக்காகவும் எமக்குள் எழுந்த சிக்கலை எமக்குள்ளே தீர்க்க வழியற்று வேறு வழிகளை நாடியதன் மூலமும் எமது முன்னைய தலைமைகள் சேருவில என்ற தொகுதி உருவாகவும் திருமலை மாவட்டத்தின் நிலத் தொடர்பை அறுக்கவும் வழி வெட்டிக் கொடுத்தோம்? இப்போ வடக்கையும் கிழக்கையும் நிலத் தொடர்பால் துண்டிக்கவும் வடக்கை விழுங்கவும் கொக்கிளாயில் தொடங்கும் ஆக்கிரமிப்புக்கு எதிராக நாம் என்ன செய்யப் போகிறோம்? 

தமிழ்த் தரப்பு விரைந்து பயனுள்ள நடவடிக்கை எடுக்கத் தவறினால் காலத்தைத் தவறவிட்டுக் கடமையைச் செய்ய மறுத்த குற்றம் இவர்களைச் சாரும். அதுமட்டுமன்றி இவர்களை ஒதுக்கி விட்டு மக்கள் நேரடியாக நடவடிக்கைகளில் இறங்கும் நிலையும் ஏற்படலாம்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Friday, 5 October 2012

காட்டுக்குள் ஓர் அதிசயம்…!


காட்டுக்குள் ஓர் அதிசயம்… சிங்கராச(ஜ) காட்டுக்குள் ஒரு சிவன் ஆலயம் இலங்கையின் இரத்தின மாநகரம் என்றழைக்கப்படும் இரத்தினபுரியிலிருந்து 53 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கிறது இறக்குவானை எனும் அழகிய நகரம்.

சிங்கராச வனத்தை எல்லைப்பகுதியாகக் கொண்ட இறக்குவானை அனைத்து மதங்களுக்கும் பொதுவானதோர் இடமாக விளங்குகிறது. நகரத்திலிருந்து பார்க்கும்போது நாலாபக்கமும் தூரத்தே தெரியும் ஆரண்யகத்தின் வனப்பு எம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.


இந்த காட்டுக்குள் ஒரு சிவன் ஆலயம் இருப்பதாகவும் அது அதிசக்தி வாய்ந்த ஆலயம் என்றும் அப்பகுதி மக்கள் அடிக்கடி பேசிக்கொள்வதுண்டு. அதனை கண்டறிவதற்காக எமது பயணம் ஆரம்பமானது.

‘ஆமாங்க, பழைய காலத்துக் கோயில் ஒன்னு இருக்குது. கங்கொடை என்கிற இடத்த தாண்டி காட்டு வழியா போகனும். யானை உருவத்தில ஓர் ஆல மரம் இருக்கும். அதான் அடையாளம்’ என்றார் ஊர் பெரியவர் ஒருவர். 

யானை உருக்கொண்ட ஆல மரம் என்றதும் எமது எதிர்பார்ப்பு அதிகமானது. 


நகரத்திலிருந்து 8 கிலோ மீற்றர் தூரப் பயணம். சுமார் 3 கிலோமீற்றர் தூரம் வரை கால்நடையாகத்தான் செல்ல வேண்டும். காட்டுவழியே கால்நடையாகச் செல்லும்போது கவனமாக செல்லும்படியும் குரங்குகளின் அட்டகாசம் அதிகம் என்றும் கங்கொடையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளாகள் கூறினார்கள்.

உயர்ந்த மலை. அதிகாலைப் பொழுதில் சில்லென்ற காற்றோடு பனி படர்ந்து உள்ளத்தையும் நனைக்கிறது. காட்டுக்குள் கரடுமுரடான பாதையில் வெகுதூரம் நடந்த பின்னர் தெரிகிறது அந்த ஆலமரம்.






ஆம்! அந்தப் பெரியவர் சொன்ன ஆலமரமாகத் தான் இருக்கும் என ஊகித்துக்கொண்டோம். ஆனாலும் அந்த இடத்திற்குச் செல்வதற்கு பாதை இருக்கவில்லை. பாதை எங்கே எனத் தேடியபோதுதான் மலைப்பாறைக்கு உச்சியில் சிறியதாய் ஓர் ஆலமரம் இருப்பதும் ஓங்கியுயர்ந்த தென்னைமரத்தோடு கீழே கடவுள் சிலைகள் இருப்பதற்கான அடையாளம் இருப்பதையும் கண்டோம்.

கோயிலுக்கு செல்வதற்கு அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகள் பழைமையை எடுத்துக்காட்டின.

பாதையை அமைத்துக்கொண்டு செல்வோம் என உறுதிகொண்டு ஆலமரத்தை நோக்கிய எமது நடையை ஆரம்பித்தோம்.


என்ன அதிசம்? ஆலமரத்தின் ஒரு கிளை யானைத் தந்தத்தைப் போலவே காட்சியளிக்கிறது. மற்றொரு கிளையும் அவ்வாறுதான். யானையின் கண்களைப் போலவே இயற்கை படைப்பின் அடையாளங்கள் விளங்கின. 

பரந்த உலகில் எல்லைகளற்ற அதிசயங்களோடும் அழகோடும் மனித சக்திக்கு அப்பாற்பட்டிருக்கும் இயற்கையில் இப்படியும் ஒரு பரிமாணம் இருக்கிறதா என வியப்புச் சிந்தனை துளிர்ந்தது.


அங்கிருந்து சாதாரண தூரத்தில் தான் அந்தக் கோயில் இருந்தது. எனினும் முட்செடிகளுக்குள்ளே நடக்கவேண்டிய கட்டாயம்.

சரி ஆகட்டும் என எண்ணிக்கொண்டு கோயிலை நோக்கி சென்றோம். முற்றுமுழுதாக பரந்ததொரு பாறையின் மீதிருக்கிறது கோயில். மிக மிக பழைமையான படிக்கட்டுகள் உடைந்த நிலையில் எம்மை வரவேற்றன. பாதணிகளை அகற்றிக்கொண்டு நாம் மேலே சென்றபோது, தூரத்தே தெரிந்த மலைகள் அனைத்தும் மிக அருகில் தெரிவது போலிருந்தது.

மென்மையான காற்று அமைதி கலந்து வீசியது. அது ஆழ்மனதின் மையங்களை தொட்டுச்செல்வதாய் ஓர் உணர்வு. கவனிப்பாரன்றி பாழடைந்த நிலைமையில் மிகச்சிறிய இலிங்கச் சிலையோடு இன்னும் சில இந்துத் தெய்வச் சிலைகள் இருந்தன.


யாரோ பற்றவைத்துவிட்டுப்போன ஊதுவர்த்தியும் சில காட்டுப்பூக்களும் வாசனை வழங்கிக் கொண்டிருந்தன.

நாமும் கடவுளை வணங்கிவிட்டு இந்த ஆலயம் பற்றி மேலதிக தகவல்களை யாரிடம் பெறலாம் என எண்ணிக்கொண்டிருந்தவேளை தூரத்தே ஒரு பெரியவர் களைப்போடு நடந்துவந்துகொண்டிருந்தார். 

‘என்னோட பெயர் தேவராச்(ஜ்). வயசு 68ஆகிறது. நான் சின்னவயசில இருந்து இங்கதான் இருக்கேன். காட்டுப் பக்கத்தில தான் என்னோட வீடு இருக்குது. 1800 வருசத்திலிருந்து இந்தக் கோயில் இருக்கிறதா எங்க தாத்தா சொல்லுவாரு.

நல்ல சக்தியுள்ள கோயிலுங்க. இப்போ யாருமே கவனிக்கிறதில்ல. கங்கொடையில உள்ள சின்னப் பிள்ளைங்க இங்க வந்து விளையாடுவாங்க. அந்த ஆல மரத்த பார்த்தீங்களா? அத பார்த்தாலே உங்களுக்கு இந்தக் கோயிலோட அதிசயம் விளங்கியிருக்கும்.

காட்டுக்குள்ள ஆறு ஒன்னு இருக்குது. அதுக்கு மூலிகை ஆறு னு பெயர். சிங்கராஜ காட்டுக்குள்ள மூலிகை கலந்து வருது. அதுதான் இந்தக் கோயிலோட தீர்த்தம். இன்னும் ஒரு கிலோ மீற்றர் நடந்திங்கன்னா அதையும் பார்த்து குளிச்சிட்டு வரலாம். நோய் தீர்க்கக் கூடிய ஆறு அது’ என்று சொல்லிக்கொண்டே நடந்துகொண்டிருந்தார்.









இது வேடுவர்களின் வழிபாட்டிடமாக இருந்திருக்கலாம் என நாம் பேசிக்கொண்டோம். உண்மை எதுவென்று நாம் சந்தித்த எவருக்கும் தெரியவில்லை.

ஆம்! உண்மையில் அந்த ஆறு அதிக சலசலப்பின்றி மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. நாம் குளித்துவிட்டு மீண்டும் கோயிலுக்கு வந்து சற்று நேரம் அந்த இயற்கையை ரசித்துவிட்டு மீண்டும் இறக்குவானையை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

எழுத்தில் வராத ஆவணப்படுத்தப்படாத தொன்மையின் சான்றாக விளங்கக் கூடிய எத்தனையோ ஆலயங்கள் இவ்வாறு காட்டுப்பகுதியில் இருக்கலாம். அவை தொடர்பான தகவல்களை திரட்டிப் பெறவேண்டியது அவசியமாகும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.