Tuesday 28 August 2012

திரும்பிப் பார்க்கவும் திரும்பி வரவும் ஆசை..!

ஊர்விட்டு ஓடோடிப் போனவர்கள்… கடைசிப்பிள்ளையும் கட்டுநாயக்கா தாண்டியபின் விடுதலை மோகத்தில் விழுந்தெழும்பியவர்கள்..... பிள்ளைகள் மூவரையும் பான்ரோம் காரில் Fபப்புக்கு அனுப்பிய பின் பொடியளின் வீரத்தில் புல்லரித்துப் போனவர்கள்…. நேற்று வந்திருந்தனர்… என்ன வரமாட்டன்..வரமாட்டன் என்டீங்கள்.. கடைசியில இந்தப்பக்கம்? 

இனியென்ன வரலாந்தானே…பிள்ளைக்கும் விடுமுறை… ஒரே அலுப்பு  (“Bore”) என்றான்… அதுதான் ஒருக்கா சுத்திப் பாத்திட்டுப் போவம் என்று….. ஓ…. எங்க போறதா உத்தேசம்?
























நிறைய இடம்  திட்டம் (plan) பண்ணித்தான் வந்தனாங்கள்… தம்பி  பட்டியலை (list) ஐ எடு..
ஓ… பிறந்த இடம்…..
தவழ்ந்த இடம்….
அப்பா படித்த பள்ளிக்கூடம்…
அம்மாவுக்கு அனுமதி கிடைத்த பல்கலைக்கழகம்….
கடல் தாண்டி கண்ணில் வைக்க ஒரு கண்ணகி அம்மன்….

கழுவிக்கொள்ள ஒரு கடற்கரை…..
இன்னும்…
இன்னும்….
அதற்கேன் கடதாசி…
பனியில் குளித்தாலும் புழுதி மணம் மறந்து போகுமோ??

மறந்து போனாலும் என்டு எல்லாம் எழுதியே வைத்திருக்கிறம்…. ம்ம்ம்..போகும் போல்தான் உள்ளது… நமக்கென்ன அனுபவமா?

அப்பா (Dad) அங்க கட்டாயம் கூட்டிக்கொண்டு போவீங்கதானே…?

உரக்க வினவியது பிள்ளை…
அப்பா சொன்னா சொன்னது தான்!
கட்டாயம் கூட்டிக்கொண்டு போவன்…
முதல் பயணம் (Trip) அங்கதான்!
ஒரு கோடி பிரகாசம் பிள்ளை முகத்தில்…. எங்க???
மெல்லக் கேட்டேன்…

அப்பா “சொன்னார்”. வலித்தது…
ஒவ்வொரு அணுவும்… பயணமா (Trip) ஆ?
என் புனித பூமியே…
அவர்கள் உன்னை “சுத்திப் பார்க்க” வருகிறார்களாம்…
எந்த மனதுடன்..?
எந்த உணர்வுடன்?
மூன்று வருசத்துக்கு முந்தியே தொலைக்காட்சியை (TV) ய பாத்திட்டுச் சொல்லிட்டான்… எங்கள் தாயகத்திற்கு (சிலோனுக்கு) போகேக்க அங்க கூட்டிக் கொண்டு போகோணும் என்று… நானும் அப்பவே வாக்குக் கொடுத்திட்டன்..
மூன்று வருசத்துக்கு முந்தி!!
எப்போது? விளங்கியது…

அந்தக் கோரத்திற்கும் கொடுமைகளுக்கும் நடுவில் சுத்திப் பார்க்க இடம்  தெரிவு (Select ) பண்ணிய நீவீர் நீடுழி வாழ்க..!

நீதான் எங்களை கூட்டிக் கொண்டு போக வேணும்… நானா?? அங்கு…..
முடியுமா என்னால்???
இன்றுவரை எனது தலையணை ஈரம் காயவில்லை…
என் கண்ணீரின் ஊற்றுக்கண் நோக்கி….
எனது ஈடு செய்ய முடியா இழப்பின் இருப்பிடம் நோக்கி…..
நிச்சயம் முடியாது.

அது வந்து….
எனக்கு….
வேலை…..
அதெல்லாம் விடுமுறை  (Leave) எடுக்கலாம்..
அவள் வருவாள். இடையில் குறுக்கிட்டு உறுதிமொழி வழங்கினாள் அன்னை.

எப்பபார் வேலை…
வேலை…
மனிசர மதிக்கத்தெரியாம என்ன வேலை?
எவ்வளவு காலத்திற்குப் பிறகு வந்த சனம்…
குசினிக்குள் காதோரத்தில் கடுகடுப்பு வேறு.. ம்ம்ம்…
உன்னாலும் என்னை புரிந்து கொள்ள முடியாது அம்மா.

மனுசன், பிள்ளை, கோயில், அடுப்படி, அயலவர் தாண்டாத உன்னுலகம்! உன் பிள்ளைகள் உயிருக்கு உத்தாரவாதமின்றி இருந்த காலத்தில் ஒரு வார்த்தை கேட்காத உன் உறவுகள்…
ஒரு கவளம் கொள்ளாத உன் வயிற்றை உணராத உறவுகள்….
நீ காலனுடன் பயணப்பட்டு கடைசி நேரத்தில் மறுத்து திரும்பி வந்ததை சிரிப்புடன் பகிர்ந்த உன் உறவுகள்…..
ஒருநாள் தங்கவென வந்தவுடன் எப்படி உன்னால் மட்டும் எல்லாவற்றையும் மறக்க முடிகிறது??

அவர்களது முதல் பயணம் (Trip)… மாங்குளம் சந்தி திரும்பி தொடர்ந்தது…. மன்னித்துக்கொள்ளுங்கள் என் உறவுகளே….
உங்கள் ஓலங்களை …
உங்கள் உதிரப் பெருக்குகளை நிறுத்த முயலாதவள்.
உங்கள் கண்ணீர் துடைக்க ஒற்றை விரலையேனும் நீட்டாதவள்…
உங்கள் உடலங்கள் மீது ஒரு மலரேனும் தூவாதவள்…. வருகிறாள்! உறவுகளை உதிர்த்து மனதளவில் மரணித்துப் போனவள் உல்லாசப் பயணமொன்றில் ஓரங்கமாகி.

மறைக்கும் நோக்கமற்ற மேலாடைகளும்…
முழங்கால் தாண்டாத முக்கால் காற்சட்டைகளும்…
ஆளுக்கு ஒரு கமெராவும்…..
ஆன்சி மானேயின் அனல் பறக்கும் பாடல்களும்…
முட்டாள்களே புரிந்து கொள்ளுங்கள்…

நீங்கள் போய்க்கொண்டிருப்பது மனிதாபிமானம் மரத்துப்போன ஒரு இடத்தை நோக்கி….
ஒரு தேசியம் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட தேசம் நோக்கி….
எங்கள் கற்புகள் கன்னமிடப்பட்ட களம் நோக்கி…
சுட்டிக் குழந்தைகளின் சுடலை நோக்கி…
துரோகம் வடித்த துன்பியல் நாடகத்தின் இறுதிக்காட்சி இடம்பெற்ற இடம் நோக்கி….
இறுதிவரை தாளாத இயல்பு நோக்கி…
ஒப்பற்ற ஓராயிரம் மரணங்கள் நோக்கி…

இன்னும்…
இன்னும்….
மயானத்தின் அமைதி சிலவேளை மனிதர்களுக்குப் புரியலாம்… இவர்களுக்கு?? நிச்சயமாக இல்லை.

உங்கள் வலிகளை அவர்கள் தெரிந்திருந்தார்கள்….. உணரவில்லை
உங்கள் மரணங்களுக்கு அவர்கள் சாட்சியாக இருந்தார்கள் 
உறுத்தவில்லை  உருக்குலைந்த வீடுகள்….
ஓட மறந்த வாகனங்கள்….

மரத்தோடு இரண்டறக்கலந்து விட்ட சேலைத் தொட்டில்… காலில்
தடக்கிய ஓட்டை விழுந்த பந்து…
மண்ணிலிருந்து முளைத்துப்பறந்த ஒரு துண்டு சீருடை… குண்டுச்
சிதறல் தாங்கிய பானைகள்… நடுவே
குண்டு துளைத்த அந்த சிறு சப்பாத்து…. சிதைந்த
கிடந்த யுனிசெப் கூரைகள்…. வாழ்வைத்
தொலைத்துவிட்ட வளமான குடும்பத்தின் எச்சங்களும் எலும்புக்கூடுகளும் கமெரா பிடித்துக் கொண்டது காட்சிகளை கண்குளிர…

உறுத்தலின்றி…
வலிகளின்றி..
கண்ணை மறைக்கும் கண்ணீர்த் திரையின்றி…
ஓவென்று அழச்சொல்லும் உணர்வின்றி…
எனக்கு மட்டும் எல்லாமே எதிர்மறையாய்……
முச்சந்திகளிலும் நாற்சந்திகளிலும் உயரத்தூக்கிய கற்களுக்கு முன்னாலும் ஒளிர மறுக்கவில்லை கமெராக்கள்…
அவர்கள் கடைவாயில் கசியும் இளக்காரத்தையும் கண்களில் வழியும் வெற்றிச் செருக்கையும் ஓரமாய் தெரியும் காமத்தையும் ஒட்டுமொத்த குரூரத்தையும் ஏன்தான் உங்களால் உணரமுடியவில்லை….

மாத்தயா…யாப்பனே த?
இல்லை...,இல்லை....,நாங்கள் ஐ ரோப்பாவிலிருந்து (No..No.. We are From Europe.)

கடவுளே இப்படி ஒரு நாள் என்வாழ்வில் மீண்டும் வராமல் போகட்டும்.. வருமெனில் என் வாழ்வே இல்லாமல் போகட்டும்.

மீண்டும் ஆன்சி மானேயின் அனல் பறக்கும் பாடல்கள்….. அட்டகாசமாய்! பயணம் இன்று எப்படி இருந்தது??(How was the trip today??)  மிகச்சிறந்தது அப்பா.(Supppppeeerrrrrrrrrrrrr dad.) மிகச்சிறந்த! உண்மையில் நல்ல....(Excellent! Really nice...)  நன்றிகள் அப்பா.(Thanks dad) 

ம்ம்ம்ம்…. எனக்கும் தானடா….
வலித்தது… வார்த்தைகள் தந்த ரணம்… உள்ளம்
உள்ளவர்களுக்கு மட்டும்… போய்
வருகிறேன் என் உறவுகளே… உங்கள்
ஏக்கப்பார்வை என்னைத் தொடருவதையும்
உங்கள் பாசப்பார்வை என் பிடரியை
வருடுவதையும் கடந்து போகும் உங்கள்
சூடான மூச்சையும் என்னால் உணரமுடிகிறது…
திரும்பிப் பார்க்கவும்
திரும்பி வரவும் ஆசைதான்….. ஆனால்
இப்போதல்ல…. இன்னொரு தடவை
மனிதர்களுடன் வந்தால்….!!! வருகிறேன்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.