Monday 6 August 2012

இலங்கையின் பெயர் அளகை என............!


உயிர்களைக் கொலை செய்யாத கொல்லா அறக்கொள்கை பண்டைத் தமிழர் பண்பாடே! ‘சமணரும் பௌத்தரும் தமிழரிடத்திலேதானே பிறந்திருக்க வேண்டும் என எழுதியிருந்தீர்கள். பாளி மொழியிலுள்ள பௌத்த நூல்கள் இந்தியா முழுவதையும் தமலிகா (தமிழகம்) என்ற சொல்லால் குறிப்பிட்டாலும் மகாவீரரும் புத்தரும் வடஇந்தியர்கள் ஆதலால், எப்படி அவர்களைத் தமிழர்களாகச் சொல்ல முடியும்’ எனக் கேட்டிருந்தார்கள். 

இந்தியா முழுவதும் தமலிகாவாக – அதாவது தமிழர் வாழ்விடமாக இருந்த பொழுது சமணரும் பௌத்தரும் தமிழரின் கலாசாரப் பண்பாட்டின் சூழலில் இருந்தே தோன்றி இருக்க வேண்டும் என்பதே எனது வாதம்.

சமண மதம் பௌத்த மதத்தைவிட காலத்தால் முந்தியது என்பது அறிஞர்கள் கருத்தாகும். ஆதலால், தமிழர் கொள்கையையே சமண மதம் எடுத்துக் கூறியது என்று காட்டினால் சமணரும் பௌத்தரும் தமிழர் இடையே இருந்து தோன்றியவர்கள் என்பதை நீங்கள் நம்பு-வீர்களா?

சமணர்களுக்கும் தமிழர்களுக்கும் பொதுவான சில கதை-களையும் கொள்கைகளையும் பார்ப்போம்:

1. சாதிப்பிரிவு

இருக்கு வேதம் கி.மு. 1000ல் எழுதப்பட்டது என்கிறார்கள். அதில் பிராமணர் விராட புருஷனுக்கு வாய் ஆவார். அவருடைய இரு தோள்களிலிருந்து அரசரும், தொடைகளில் இருந்து வைசியரும், காலின் அடிப்பாகத்தில் இருந்து சூத்திரரும் தோற்றுவிக்கப்பட்டார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது வேதகாலத்தில் நால்வகைச் சாதிப்பிரிவு வடஇந்தியாவில் இருந்ததை இது காட்டுகிறது.

பண்டைய தமிழரிடையே சாதிப்பிரிவுகள் இருக்கவில்லை. ஆனால், தொழிற்பிரிவுகள் இருந்தன. அதனைச் சாதிப்பிரிவு எனக்கொள்வது நன்றல்ல. இதனை,

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்’

-திருக்குறள் 98:2

எனும் திருவள்ளுவர் வாக்காலும் அறியலாம். தமிழைப் படித்து அறிவதற்கு ஏற்ற வாய் இருந்தும், தமிழ் படிக்க முடியாதபடி தன்னை சமணர் அழித்தார்கள் என்பதை,

‘வாயிருந்தும் தமிழே படித்து ஆளுறாது
ஆயிரம் சமணும் அழிவாக்கினான்’

-பன்னிரு திருமறை 5:58:9

எனப்பாடிய திருநாவுக்கரசர் புலையரிடத்திலும் கடவுளைக் கண்டார். இதே கொள்கையை சமணரின் ‘அருங்கலச்செப்பு’ எனும் சமண நூல்,

‘பறையன் மகனெனினும் காட்சி உடையன்
இறைவன் எனஉணரற் பாற்று’

என்று கூறுகிறது. இந்தக்கூற்று சமண மதம் சாதிப் பிரிவு இல்லாத தமிழரின் பண்பாட்டில் தோன்றியதைத்தானே காட்டுகிறது.

ஆனால், சமண நூலாக பலராலும் சொல்லப்படும் சீவகசிந்தாமணியில் திருத்தக்கதேவர், ‘விலங்குகளை கொன்று உண்பதால், பற்களிடையே கொழுப் பையும் இறைச்சியையும் உடைய வேடரும், கடலோரத்தில் வாழும் பரதவரும் இழிதொழில் செய்யும் இழிகுலத்தவர்’ என்கிறார்.

தமிழரின் சாதிப்பாகுபாடு இல்லாத தன்மையில் இருந்து விலகி, பிற்காலச் சமணர் இவ்வாறு சாதி பேதம் பேசத் தொடங்கியதாலும் சமணமதம் தமிழரை விட்டு ஒழிந்து போயிற்று.

2. உயிர்களை கொலை செய்யாமை

முனிவர் செய்த யாகங்களை அரக்கர் அழித்தார்கள். எனவே, அரக்கர் கொடியவர் என்று நீங்கள் படித்திருப்பீர்கள். முக்கியமாக விசுவாமித்திர முனிவர் செய்த யாகத்தை அழித்த தாடகை என்னும் அரக்கியை பெண் என்றும் பாராது ராமர் கொன்றார் என்று ராமாயணம் மூலம் நீங்கள் அறிந்திருப்பீர்கள். தேவர்களின் மனங்களைக் குளிரவைக்கவே முனிவர்கள் யாகங்களை செய்தார்ளாம்.

தேவர்களின் மனங்கள் குளிர்ந்தனவோ என்னவோ, உண் மையில் ‘யாகம்’ என்ற பெயரில் முனிவர்கள் உயிர்களைக் கொன்றார்கள். யாகத்தில் அதாவது வேள்வித்தீயில் உயிருள்ள குதிரைகளைப் போட்டு எரிப்பதை ‘அசுவமேத யாகம்’ என்றும், யானைகளை உயிருடன் போட்டு எரிப் பதை ‘கஜமேத யாகம்’ என்றும், மனிதரையே போட்டு எரிப் பதை ‘நரமேத யாகம்’ என்றும் அழைத்தனர்.

காட்டுமிராண்டித் தன்மையான அந்த யாகங்களை, அரக்கர்கள் தடுத்தது பிழையா? உயிரோடு துடிக்கத் துடிக்க சுடர்விட்டு எரியும் வேள்வித்தீயில் உயிர்களைப் போட்டு எரித்துக் கொன்றது கொடிய செயலா? அல்லது அத்தகைய யாகங்களைச் செய்யாது தடுத்தது கொடிய செயலா? நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

உயிரோடு உயிர்களை வேள்வித்தீயில் போட்டு எரித்த வட நாட்டு முனிவர்களின் யாகங்களை அழித்த இந்த அரக்கர் யார்? இதற்குச் சரியான விடை தெரிந்தால் தமிழரின் உண்மையான பண்டைய வரலாற்றை அறிய வழிபிறக்கும். அரக்கர் யார் என்பதை அறிய பழந்தமிழைக் கொஞ்சம் ஆழ்ந்து பார்ப்போமா?

பண்டைத்தமிழர் இயற்கையோடு இணைந்து வாழ்ந்ததால் இயற்கையை நன்றாக ஆராய்ந்து அறிந்திருந்தனர். பூமியைச் சூழ நிலமும் நீரும் இருப்பதைக் கண்டு இவ்வுலகத்தை இருநிலம் என அழைத்தனர். பூமியிலுள்ள நிலத்தின் தன்மையைக்கொண்டு பூமியை அறுவகை நிலங்களாகப் பிரித்துப் பெயர் இட்டனர்.

மலையும் மலை சார்ந்த நிலம் – குறிஞ்சி
காடும் காடு சார்ந்த நிலம் – முல்லை
வயலும் வயல் சார்ந்த நிலம் – மருதம்
கடலும் கடல் சார்ந்த நிலம் – நெய்தல்

இந்த நான்கு வகைப் பாகுபாட்டால் நிலம் நானிலம் என அழைக்கப்பட்டது. அத்துடன் பாலை நிலத்தையும் சேர்த்து நிலத்தை ஐந்திணையாகக் (ஐவகை நிலமாகக்) கொண்டனர்.

‘குறிஞ்சி பாலை முல்லை மருத நெய்தல்
ஐந்திணைக் கெய்திய பெயரே’

அகப்பொருள் விளக்கம் – 

அகத்திணை தீவு அதாவது கடலால் சூழப்பட்ட நிலம் அளக்கர் திணை என அழைக்கப்பட்டது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலத்தோடு ஆறாவதாகிய அளக்கர் திணையையும் சேர்த்து அறுதிணையாகக் கொண்டனர்.

தமிழரின் இருவகை நிலப்பாகுபாடு: இருநிலம் (நிலம், கடல்)
நால்வகை நிலப்பாகுபாடு: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல
ஐவகை நிலப்பாகுபாடு:குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை அறுவகை நிலப்பாகுபாடு: குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, மருதத்திணை, நெய்தற்றிணை, பாலைத்திணை, அளக்கர் திணை (கடலால் சூழப்பட்ட நிலம் – தீவு)

இவ்வாறு உலகை அறுவகையாகப் பிரித்ததால் தமிழர் கடவுளாகிய முருகனை ‘அறுதிணைச் செல்வன்’ என அழைத்திருக்கின்றனர். 


‘அறுதிணைச் செல்வநின் அறுமுகமல்லால்
வேறு உறுதுணை உண்டோ’

பாட்டும் தொகையும்

அறுதிணைச் செல்வன் என்பதற்கு உரையாசிரியர் தமிழ்கூறும் நல்உலகத்து இறைவன் என்று எழுதியுள்ளார். அதனால் நான் முருகன் எனக் குறிப்பிட்டுள்ளேன்.

அறுமுகத்தவன் முருகனே.

தமிழில் அளகம் என்றால் நீர். ‘அளக்கர்’ என்னும் சொல் கடல், தீவு, தீவார், உப்பளம் போன்றவற்றை குறிக்கும். நெய்தல் நிலப்பெண் ‘அளத்தி’ எனவும், நெய்தல் நிலப் பெண்கள் ‘அளத்தியர்’ எனவும் சங்க காலத்தில் அழைக்கப்பட்டனர். சங்கப்புலவர்களில் ஒருவர் ‘மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளானார்’ என அழைக்கப்பட்டமை இங்கு நோக்கத்தக்கதாகும். 

‘அளக்கர்’ என்ற சொல்லில் இருக்கும் தமிழுக்கு உரித்தான ‘ள’கரம் பிறமொழி பேசியவர் வாய்ச்சொல்லில் ‘ர’கர-மாக மாறி ‘அரக்கர்’ ஆயிற்று. அளக்கர், அளக்கர் என்று சொல்லிப் பாருங்கள். அளக்கர் – அரக்கர் ஆக மாறு-வதை அறிவீர்கள்.

‘ள’கரம் – ‘ர’கரமாக மாறிய சொற்கள் ஒரே கருத்தைத் தருவதைப் பாருங்கள். 

இச்சொற்கள் போலவே அளக்கர் என்னும் சொல்லே அரக்கர் ஆக மாறியுள்ளது. எனவே, அளக்கர் என்னும் சொல்லின் கருத்தாகிய தீவு என்னும் கருத்-தையே அரக்கர் என்ற சொல்லும் கொண்டிருந்தது என்பது தெளிவாகிறது.

இது மட்டுமல்ல… அரக்கர் என அழைக்கப்பட்டவர்கள் தீவுகளில் வாழ்ந்தார்கள் என்பதை இதிகாசங்களும் புராணங்களும் எமக்குத் தெளிவாகக் கூறுகின்றன. இதிகாசமான இராமாயணம் இராவணனை அரக்கன் என்பதும், கந்தபுராணம் சூரபத்மனை அசுரன் என்பதும் நீங்கள் அறிந்ததே.

பலராலும் பேசப்பட்ட ‘அளக்கர்’ என்ற சொல் அரக்கர் ஆக மாற்றமடைந்தது. எனினும் இலங்கையின் பெயர்களில் ஒன்றான ‘அளகை’ எனும் சொல் பலராலும் பேசப்படாததால் தன் வடிவம் மாறாது இன்றும் இருக்கிறது. 

இராவணன் கைலாய மலையை தூக்கிய போது,

‘மதில் அளகைக்கு இறை முரல மலரடி ஒன்று
ஊன்றி மறைபாட ஆங்கே
முதிரொளிய சுடர்நெடுவாள் முன்னீந்தான்’

பன்னிருதிருமுறை 1:131:8

அதாவது மதிலால் சூழப்பட்ட அளகையின் (இலங்கையின்) அரசன் கதறும்படி காலால் ஊன்றி அவன் சாமகானம் பாட, ஒளிபொருந்திய நீண்ட வாளை சிவன் கொடுத்து அவனுக்கு அருளியதாக திருஞானசம்பந்தர் குறிப்பிட்டு உள்ளார். இத்தேவாரத்தில் இலங்கையின் பெயர் அளகை என இருப்பது இங்கு கவனிக்கவேண்டிய விடயம்.

கந்தபுராணமும் அளகை என்றே குறிப்பதைப் பாருங்கள்.

‘அதுபொழுது அவுணர்கள்
அளகை ஊடுபோய்’ 

கந்தபுராணம் , திக்குவி 45

இலங்கையின் தமிழ்ப்பெயர்களின் ஒன்றான ‘அளகை’ என்ற பெயரையும் வரலாற்றுப் பதிவேடுகளில் பதிவுசெய்து வைக்க வேண்டிய கடமை எமக்கு இருக்கிறது. தமிழர் அல்லாத மார்க்கோபோலேவோ, யுவான் சுவாங்கோ குறிப்பிட்டிருந்தால் அதை வரலாறாகப் பார்க்கும் நாம், நம் மூதாதையர் சொல்லிச் சென்றதை ஏன் வரலாறாக ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறோம்? 

இங்கு நான் இராமாயணத்தை தமிழர் வரலாறு எனச் சொல்லவில்லை. நம் முன்னோர் எமக்காக விட்டுச்சென்ற பழந்தமிழர் சொற்களையே குறிப் பிட்டேன். அளக்கர் எனும் பழந்தமிழ்ச் சொல்லே அரக்கர் என மாறியதால் அரக்கர்கள் & தமிழர்களே! அதிலும் முக்கியமாக நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட தீவுகளில் வாழ்ந்த தமிழர்களே அரக்கர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
‘நாங்கள் அரக்கர்களா?’ எனக் கேட்க வேண்டாம். நானும் ஒரு தீவின் (அளக்க) தமிழிச்சியே! இதில் கோபப்படவோ வெட்கப்படவோ எதுவுமே இல்லை. அரக்கர்கள் அதாவது அளக்கர்கள் அறிவிலும், அறிவியலிலும் பண்பாட்டிலும் உலகிற்கு முன்னோடிகளாக சிறந்தே விளங்கி இருக்கிறார்கள்.

வடக்கே இருந்து வந்த முனிவர்கள் செய்த கொலை வேள்விகளை அளக்கர்கள் – அதாவது தமிழர்கள் தடுத்தார்கள். எனவே, உயிர்களைக் கொலை செய்யாத கொல்லா அறக்கொள்கை பண்டைத் தமிழர் பண்பாடே. வட இந்தியர்களிடம் இல்லாத ஆனால், பண்டைத்தமிழரிடம் இருந்து முகிழ்ந்த கொல்லா அறக்கொள்கையையே சமண முனிவர்கள் கைகொண்டனர் எனக் கொள்வதே ஏற்புடையதாகும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.