Saturday 10 August 2013

ஈழத்தில் தமிழர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுமா என்ன...?

நடுங்க ஆரம்பித்துதது விட்டதா இலங்கை ?

இன்றைய திகதியில் இலங்கைக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர், ஒரு பேருந்து ஓட்டுனரின் மகள் என்று சொன்னால் நம்புவீர்களா! பாரதத் திருநாட்டின் பிரதமரைப் பார்த்தே பயப்படாத (!) இலங்கை அரசு, ஒரு பேருந்து ஓட்டுனரின் மகளைப் பார்த்து நடுங்குவதாவது – என்று நம்பிக்கையே இல்லாமல் திருப்பிக் கேட்பீர்கள். ஆனால், அந்த பேருந்து ஓட்டுனரின் மகள் பெயரைச் சொன்னால், நான் சொல்வதை நிச்சயமாக நம்புவீர்கள். அவரது பெயர், நவநீதம்பிள்ளை.

இப்போது சொல்லுங்கள் நம்புகிறீர்களா இல்லையா!
(சும்மா பேரைச் சொன்னாலே நடுங்குதுல்ல!)


ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையராக நவநீதம்பிள்ளை மட்டும் இல்லையென்றால், இந்நேரம் ‘இனப்படுகொலை’ என்கிற குற்றச்சாட்டை, செம்மணிப் புதைகுழிக்குப் பக்கத்திலேயே குழிதோண்டிப் புதைத்திருப்பார்கள். அந்த ஒற்றைப் பெண்மணியால் உயிர்த்திருக்கிறது அந்தக் கடுமையான குற்றச்சாட்டு. ‘சர்வதேச சுதந்திர விசாரணையின் மூலமே இலங்கையில் என்ன நடந்தது என்கிற உண்மையை வெளிக்கொண்டுவர முடியும்’ என்று நவ்விப் பிள்ளை என்று அன்போடு அழைக்கப்படும் நவநீதம்பிள்ளை சொல்கிற போதெல்லாம் வியர்த்துப் போகிறது புத்தனின் புத்திரர்களுக்கு!

இத்தனைக்கும், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி கேட்டுக் குரல் கொடுக்கும் எவரும், கண்மூடித்தனமாகவோ முட்டாள்தனமாகவோ பேசவில்லை. விசாரணையே இல்லாமல் ராசபக்சேவைத் தூக்கில் போடு என்றோ, எங்கள் சகோதரிகளைக் கற்பழித்த அவனது உறுப்புகளையோ துருப்புகளையோ உப்புக் கண்டம் போடவேண்டும் என்றோ கோரவில்லை எவரும். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்து என்றுதான் சொல்கிறோம். தன்னுடைய உயிர் நண்பனின் அனுக்கிரகத்தால் இத்தனை நாளாகக் குற்றவாளிக் கூண்டில் நிற்காதிருக்கிறது இலங்கை. இன்னும் நீண்ட நாளைக்கு இந்த நாடகம் நீடிக்காது – என்பதை உணர்த்துவதாக இருக்கிறது நவநீதம் பிள்ளையின் விசயம்.

அடுத்த வாரம் இலங்கைக்குச் செல்கிறார் நவ்விப் பிள்ளை. மழையில் நனைவதற்கு முன்பே சளியில் அவதிப் படுகிற சுவாசகாசம் (Asthma) நோயாளி மாதிரி, இப்போதே நெளிந்துகொண்டிருக்கிறது ராசபக்சே அரசு.

நவ்விப் பிள்ளையின் பாதுகாப்பு ஆலோசகர், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க இலங்கைக்கு வந்திருக்கிறார். நடந்த இனப்படுகொலையின் சூத்திரதாரிகளில் ஒருவனான சரத் பொன்சேகா ‘நான் நவ்விப்பிள்ளைச் சந்தித்தே ஆகவேண்டும்’ என்று ஒற்றைக்காலில் நிற்கிறான். நவ்விப் பிள்ளை நாட்டின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் தடையின்றிப் போகலாம் – என்று அறிவித்திருக்கிறது இலங்கை. எந்த இலங்கை? ஐ.நா. நியமித்த நிபுணர் குழுவைக் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்த அதே இலங்கை. அந்த அளவுக்கு நடுங்கிக் கொண்டிருக்கிறது அது.

நவ்விப் பிள்ளையின் இலங்கை விசயத்துக்கு முன்னோட்டமாக, அவர் அனுப்பிய ஐ.நா. குழு ஒன்று சென்ற ஆண்டு இலங்கைக்கு வந்து சென்றது. ‘இறுதிக் கட்டப் போரில் மனித உரிமை மீறல்கள் பற்றி இலங்கையே நடத்திக்கொள்ளும் விசாரணை நம்பகத்தன்மை அற்றது. இலங்கை அதிகாரிகளின் விசாரணை பாரபட்சமானது. அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டது குறித்து விசாரிக்கப்படும் – என்று வாக்குறுதி கொடுத்த இலங்கை, அதை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை’ என்றெல்லாம் குற்றஞ்சாட்டிய அந்தக் குழு, சட்டவிரோதப் படுகொலைகள் தொடர்வதைக் கவலையுடன் சுட்டிக்காட்டியது. அந்தக் குழுவின் அறிக்கை, அடங்காப்பிடாரி இலங்கையின் பிடரியில் விழுந்த அடி.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஐ.நா. அமைப்புக்குள் இருந்துகொண்டே, ‘இறுதிப் போர் நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில் ஐ.நா. தனது கடமையை ஆற்றத் தவறிவிட்டது’ என்று நவநீதம் பிள்ளை ஒளிவு மறைவின்றிப் பேசியது, ஐ.நா.வுக்குள் இருக்கும் இலங்கையின் கர்த்தாக்களை (agent) அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தன்னைத் தானே விசாரிக்க இலங்கை அமைத்த எல்.எல்.ஆர்.சி. விசாரணை ஆணையம் ஒரு மோசடி – என்பதையும், வடகிழக்கில் தமிழ்ப் பெண்கள் அச்சத்துடனேயே வாழ்கின்றனர் – என்கிற உண்மையையும் உலகறிய எடுத்துச் சொல்லி இலங்கையை மேலதிக அச்சத்தில் ஆழ்த்தினார் அவர்.


ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே நவநீதம் பிள்ளை இலங்கைக்கு வந்திருக்க வேண்டியது. பல்வேறு நெருக்கடிகள் மூலம், அவரது வருகைக்கு முட்டுக்கட்டையாக இருந்தது இலங்கை. அவர் வருவதை நீண்ட காலத்துக்குத் தடுக்க முடியாது – என்பதை உணர்ந்துகொண்ட பிறகு, இந்த ஆண்டு பிப்ரவரி – மார்ச்சில் அவரைச் சந்தித்துப் பேச ஒரு குழுவை அனுப்பத் தீர்மானித்தது. அந்தக் குழு, நவ்விப் பிள்ளையிடம் – தமிழர் பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள், மீள் குடியேற்றம், மறு சீரமைப்பு – பற்றியெல்லாம் எடுத்துச் சொல்லும் என்று செய்திகள் வந்தன. (இந்த வார்த்தைகளுக்கான ராயல்டியை நாச்சிகளுக்கும் நா.சா.க்களுக்கும் கொடுத்தார்களா இல்லையா!) இதுபோன்ற வார்த்தை சாலங்களால் ஏமாந்துவிட நவ்விப் பிள்ளை ஒன்றும் அமெரிக்காவோ மார்க்சிசுட் கம்யூனிசுட் கட்சியோ கிடையாது என்பதை, இலங்கை இப்போது உணர்ந்திருக்கும்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டதும், நவநீதம்பிள்ளை சொன்ன வார்த்தைகள் மறக்க இயலாதவை. “உலகின் எந்த மூலையில் எவர் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கான குரலாக மனித உரிமைகள் ஆணையம் இருக்கும்” என்றார் அவர். அப்படிச் சொல்வதற்கான தகுதி அவருக்கு இருந்தது. ஐ.நா.வில் பொறுப்பேற்கும் முன், சுமார் 8 ஆண்டுகள், ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை குறித்து விசாரித்த சர்வதேச குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதிகளில் ஒருவராக இருந்த அவர்தான், அதன் தீர்ப்புரையை எழுதியவர்.

இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான, ஜீன் பால் அகாய்சு – என்பவருக்கு அந்த நடுவர் மன்றம் கொடுத்த தண்டனை உலக வரலாற்றில் மிக முக்கியப் பதிவு.

1994ல், ருவாண்டா நாட்டில் டூட்சி இனத்தவருக்கு எதிராக திட்டமிட்ட இனப்படுகொலை நடந்தது. அந்த நாட்டின் சனநாயகக் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகளில் ஒருவர், ஜீன் பால் அகாய்சு. முன்னாள் ஆசிரியரான அவர், சமயோசிதத்துக்குப் பெயர்பெற்றவர். டாபா பகுதி மேயராக இருந்த அவரது பொறுப்பில்தான் அந்தப் பகுதி காவல்துறை இயங்கியது. அவரது பகுதியில், கூடூ இனத்தைச் சேர்ந்தவர்களால் டூட்சி இன மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர், பாலியல் வன்முறை முதலான பல்வேறு கொடுமைகள் வேறு. அகாய்சுவால் அந்தக் கொலைகளையும் கொடுமைகளையும் தடுக்க முடியவில்லை.

விசாரணையில், அந்தப் படுகொலைகளைத் தடுக்க அகாய்சு முயலவேயில்லை என்பதும், அவரது மேற்பார்வையிலேயே அவை நடைபெற்றன என்பதும், கொல்லப்பட வேண்டிய டூட்சி இனத்தவரின் பட்டியலை கூ(ஹூ)டூ இனத்தவருக்கு அவர்தான் கொடுத்தார் என்பதும், உயிருக்குப் பயந்து ஒளிந்துகொண்டிருந்த டூட்சி இனத்தவரைத் தேடிக் கண்டுபிடிக்க வீட்டுக்கு வீடு சோதனை நடத்த உத்தரவிட்டார் என்பதும் அம்பலமானது. (ஈழத்திலும் இதெல்லாம் அம்பலமாகாமல் போகுமா என்ன?)

இனப்படுகொலை நடந்த அடுத்த ஆண்டு சாம்பியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார் அகாய்சு. ருவாண்டா இனப்படுகொலைக்கான சர்வதேச குற்றவியல் நடுவர் மன்றத்திடம் ஒப்படைப்பதற்காக, குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரை நாடுகடத்திய முதல் ஆப்பிரிக்க நாடு சாம்பியா தான்.

அகாய்சு மீது, இனப்படுகொலை, மனித இனத்துக்கு எதிரான குற்றம், இனப்படுகொலை தொடர்பான யெனீவா மாநாடு மீறல் – உள்ளிட்ட 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

“அகாய்சு-க்கு நடந்த கொலைகளில் நேரடித் தொடர்பு இல்லை, அதைத் தடுத்து நிறுத்தும் அளவுக்கு அதிகாரமும் இல்லை. டாபா மக்களின் வெறிச் செயல்களுக்காக, அகாய்சு பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்” என்று அவரது தரப்பில் வாதிடப்பட்டது. நவநீதம்பிள்ளை இடம்பெற்றிருந்த நடுவர் மன்றம் அந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் மீதான 15 குற்றச்சாட்டுகளில் 9 – ல் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் அடிப்படையில், அகாய்சுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ள அகாய்சு, இப்போது மாலி சிறையில் அந்தத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

இனப்படுகொலை – என்பதைக் குறிக்கும் ‘இனப்படுகொலை’ என்கிற வார்த்தை 1944க்குப் பின்தான் உருவானது. ஜெனோ – என்பது ‘இனம்’ அல்லது ‘இனக்குழு’ என்பதைக் குறிக்கும் கிரேக்க வார்த்தை. சைட் – என்பது படுகொலையைக் குறிக்கும் லத்தீன் வார்த்தை.

போலந்து நாட்டு யூதரான சட்ட வல்லுநர் ரபேல் லெம்கின் தான், நாசிக்கள் நடத்திய இனப்படுகொலையைச் சுட்டிக்காட்ட இந்த வார்த்தையை முதல்முதலாகப் பயன்படுத்தியவர். அவரது தொடர் முயற்சிகளால், 1948ல், இனப்படுகொலையைக் கொடிய குற்றமாக ஐ.நா. அறிவித்தது. இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுக்கவும் தண்டிக்கவும் 1948ம் ஆண்டே யெனீவா மாநாடு உருவானாலும், அதன் அடிப்படையில் முதல் முதலாகத் தண்டனை வழங்கியது, நவநீதம் பிள்ளை இடம்பெற்றிருந்த ருவாண்டா இனப்படுகொலைக்கான நடுவர் மன்றம்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

அந்த நடுவர் மன்றத்தின் தீர்ப்பு திட்டவட்டமானதாகவும் தெளிவானதாகவும் இருந்தது. ஒரு பட்டிமன்றத்திலேயே கூட திட்டவட்டமான தீர்ப்பைத் தெரிவிக்காமல், வழவழா கொழகொழா என்று தீர்ப்பு வழங்கும் நாம், அதன் சில பகுதிகளைத் தெரிந்துகொண்டாக வேண்டும்.

“படுகொலைகள், சித்ரவதைகள், கற்பழிப்பு உள்ளிட்ட மானுட விரோதச் செயல்கள் அனைத்தும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாகக் கருதப்படும்……..

கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைகளை இனப்படுகொலைக் குற்றமாகவே எடுத்துக் கொள்ளவேண்டும்……

டூட்சி இனத்தை அழித்து ஒழிப்பதற்கான தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்தப் பாலியல் பலாத்காரம் நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கற்பழிப்புகள் திட்டமிடப்பட்ட முறையில் நடந்திருக்கின்றன. டூட்சி இன மகளிர் மட்டுமே இந்தக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். இதிலிருந்து, இந்தப் பாலியல் பலாத்காரங்கள், டூட்சி இனத்தை அழிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது……

ஒருவரது விருப்பத்துக்கு மாறாக அவரை பலவந்தப்படுத்தி உடல்ரீதியாக பலாத்காரம் செய்வது – கற்பழிப்பு. அதுவும் இனப்படுகொலையே! ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சிறிது சிறிதாகவோ முழுமையாகவோ அழிக்கும் நோக்கத்துடன் திட்டமிட்டு செய்யப்படுகிற இத்தகைய குற்றம் நிச்சயமாக இனப்படுகொலை தான்”……………………..

இவையெல்லாம் அந்த நடுவர் மன்றத் தீர்ப்பின் சில பகுதிகள். (டூட்சி என்று வரும் இடங்களில் ‘தமிழ்’ என்று மாற்றிப் படித்துப் பாருங்கள்… உள்ளம் கொதிக்கும்!)

போர்க்களங்களில் கற்பழிப்பெல்லாம் சகசம் – என்று சொல்லும் வக்கிரபுத்தி பிடித்த மிருகங்களை நவநீதம் பிள்ளை கடுமையாகச் சாடியிருந்தார். ‘கற்பழிப்பு என்பது போரில் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிச் சின்னம் கிடையாது. இனி, அது கொடிய போர்க் குற்றம், இனப்படுகொலையாகவே அது கருதப்படும்’ என்றார் பிள்ளை.

அந்த நவநீதம் பிள்ளை தான் இப்போது இலங்கைக்கு வரப் போகிறார். உள்ளூரில் ஓணான் பிடித்து அடுத்தவன் வேட்டிக்குள் விட்டு வேடிக்கை பார்த்து மகிழ்ந்த மகிந்தன் குழுவினருக்குக் காய்ச்சல் வருமா வராதா?

இப்போது பேருந்து ஓட்டுனரின் விசயத்துக்கு வருகிறேன். நவநீதம் பிள்ளை, தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் ஒரு வறிய தமிழ்க் குடும்பத்தில் பிறந்த, இந்தியக் குடிவழித் தமிழர். அவரது தந்தை, பேருந்து ஓட்டுநராக இருந்தவர். வறுமையில் வாடினாலும், அறிவுத் திறன் நவநீதம் பிள்ளையின் செல்வமாயிருந்தது. உள்ளூர் இந்தியர்களின் உதவியுடனேயே சட்டம் படித்த அவர், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பில் டாக்டர் பட்டம் பெற்ற வெள்ளையரல்லாத முதல் தென்னாப்பிரிக்கர் என்ற பெருமையைப் பெற்றது சாதாரண சாதனையல்ல!

பிள்ளையின் கணவரும் ஒரு வழக்கறிஞர், நிறவெறி வெள்ளை அரசுக்கு எதிராக மண்டேலா நடத்திய போராட்டங்களில் பங்கேற்றவர். கணவர் உள்பட நிறவெறிக்கு எதிராகப் போராடிய போராளிகளுக்கு தக்க சமயத்தில் தேவையான சட்டப் பாதுகாப்பைப் பெற்றுத் தந்தவர் நவநீதம் பிள்ளை.

1973ல், ரொபன் தீவில் சிறை வைக்கப்பட்டிருந்த மண்டேலா உள்ளிட்ட அரசியல் கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திக்க சட்டப்படியான உரிமையை வாதாடிப் பெற்றவர் நவநீதம் பிள்ளை. நிறவெறியிலிருந்து விடுபட்ட பிறகு, 1995ல் தென் ஆப்பிரிக்க உயர்நீதி மன்றத்தில் பிள்ளை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் இந்தியக் குடிவழித் தமிழர் அவர்தான்.

முன்னதாக, 1967ல் நேட்டால் மாகாணத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்க நவநீதம்பிள்ளை முயன்றபோது, எந்த சட்ட ஆலோசனை நிறுவனமும் அவரைச் சேர்த்துக் கொள்ள முன்வரவில்லை. வழக்கறிஞர்களின் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், வெள்ளையரல்லாத ஒரு வழக்கறிஞரின் கீழ் வேலை செய்ய விரும்பமாட்டார்கள் என்பதே அதற்குக் காரணம். வேறு வழியில்லாமல் தனியாக வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார் பிள்ளை. அப்படி தனக்கென்று ஒரு அலுவலகம் ஏற்படுத்திக் கொண்ட முதல் பெண் வழக்கறிஞர் அவர்தான்.

வெள்ளையரல்லாத வழக்கறிஞர்கள் நீதிபதிகளின் அறைக்குச் சென்று அவர்களைச் சந்திக்க முடியாத நிலை அப்போது இருந்தது. ‘நீதிபதியின் அறைக்குள் ஒரு நீதிபதியாகவே தான் நான் நுழைய வேண்டியிருந்தது’ என்றார் நவநீதம் பிள்ளை, 1995ல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பின், நகைச்சுவை உணர்வுடன்!

2008ல், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையராக நவநீதம் பிள்ளையை நியமிக்க பான் கீ மூன் முடிவெடுத்தபோது, அமெரிக்கா அதைக் கடுமையாக எதிர்த்தது. என்றாலும், அனைத்துத் தகுதிகளின் அடிப்படையிலும் ஏகமனதாக அவர் நியமிக்கப்பட்டார். 2012ல் மீண்டும் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்ட பிள்ளை 2014 வரை, அந்தப் பொறுப்பில் இருப்பார். அதனால்தான் அஞ்சி நடுங்குகிறது இலங்கை.

நவநீதம் பிள்ளையின் நேர்மையும் அஞ்சாமையும் அனுபவமும் அறிவும் தெளிவும், செய்த இனப்படுகொலையை, நடத்திய பாலியல் வன்முறைகளை மூடி மறைக்க இலங்கை மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் தகர்த்து எறிந்துவிடும் என்கிற அச்சத்தில் இலங்கையும், நம்பிக்கையில் நாமும் இருக்கிறோம்.

அன்று நீதிபதியின் அறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நவநீதம் பிள்ளை, நீதிபதியாகவே அந்த அறைக்குள் நுழைந்து வரலாறு படைத்தார். இன்று, இலங்கைக்குள் நுழைவதற்கான தடங்கல்களை எல்லாம் தகர்த்து அங்கே செல்கிறார். அங்கும் அவர் வரலாறு படைப்பார் என்பது நிச்சயம். ருவாண்டாவில் டூட்சி இன மக்களுக்குக் கிடைத்த நீதி, ஈழத்தில் தமிழ் மக்களுக்குக் கிடைக்காமல் போய்விடுமா என்ன?

காமன்வெல்த் மாநாட்டை எப்படியாவது நடத்தியாக வேண்டும் இலங்கைக்கு. இப்படியொரு இக்கட்டான நிலையில் நவநீதம் பிள்ளை வருவதைக் குறுக்குவழிகளில் தடுக்க முயல்வது தற்கொலை முயற்சியாகி விடும் என்பதால், அத்தகைய முயற்சிகளில் இலங்கை இறங்காது.

இதையெல்லாம் பேசும் இந்த நேரத்தில், தமிழினத்தின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் மிக மிகக் குறைந்த அளவு எண்ணிக்கையே உள்ள டூட்ஸி இன மக்களுக்கு ஒரு சில ஆண்டுகளிலேயே கிடைத்த நீதி, 4 ஆண்டுகளுக்குப் பிறகும் ஈழத் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கம் நம் ஒவ்வொருவருக்கும் எழும். நீதி கிடைப்பதில் ஏற்படும் இந்தக் காலதாமதத்துக்குக் காரணம் யார் யார்? மூன்று விரல்களை நீட்ட வேண்டியிருக்கிறது….

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.