Friday, 6 December 2013

கிளர்கதிர் தொழில்நுட்பத்தினால் அதிநவீன.......!

கிளர்கதிர் (laser) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிநவீன ஆயுதங்களை தயாரிக்கும் சோதனையில் அமெரிக்கா கடந்த 1970ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது. 

எதிரிகளின் ஏவுகணைகளை அழிக்க, இலக்கை தாக்குவதற்கு மட்டுமே இதுவரை லேசர் தொழில்நுட்ப ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.


தற்போது முதல் முறையாக எதிரிகளின் படகுகளை செயல் இழக்கச் செய்யும், லேசர் பீரங்கியை அமெரிக்கா சோதனை செய்துள்ளது.

இந்த சோதனை அமெரிக்காவின் கலபோர்னிய கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டது.போர்க்கப்பலில் இருந்து இயக்கப்பட்ட பீரங்கியிலிருந்து சக்தி வாய்ந்த ஒளிக்கற்றைகள் வெளிப்படும்.

இது எதிரி படகின் இன்ஜினை தீப்பிடிக்க வைத்து செயல் இழக்கச் செய்து விடும் திறன் கொண்டது. அமெரிக்க கடற்படை லேசர் பீரங்கியை சோதனைசெய்தது இதுவே முதல் முறை.

நிலப் பகுதியில் வெற்றிகரமாக செயல்பட்ட லேசர் ஆயுதங்கள், கடல் பகுதியில் சோதித்தபோது, எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. கடல் காற்றில் உள்ள ஈரப்பதம் லேசர் சக்தியை குறைத்தது.

அதனால் அதிக சக்தி வாய்ந்த லேசர்களை பயன்படுத்தி தற்போது நவீன பீரங்கி சோதனை செய்யப்பட்டுள்ளது. இச்சோதனை வெற்றியா, தோல்வியா என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

 

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Sunday, 1 December 2013

ஆப்பிரிக்க கிழக்குக் கரையோரச் சமுத்திரத் தீவான.....!


இந்தக் கோயில் எங்கேயிருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களோ தெரியாது. ஆப்பிரிக்க கிழக்குக் கரையோரச் சமுத்திரத் தீவான மொரிசியசு என்னும் நாட்டில்.


மொரிசியசில் பிரெஞ்சுக்காரர்கள் குடியேறிய 1721ஆம் ஆண்டளவில் தமிழர்கள் பயிற்சி பெற்ற தொழிலாளர்களாகவும் வெள்ளைகாரர்களின் பிள்ளைகளுக்கு ஆசிரியர்களாகவும் வந்துசேர்ந்தார்கள். ஏனைய இந்தியக் குடியேற்றவாசிகள் போன்றே தமிழர்களும் புத்திசீவிகளாகவும் வணிகர்களாகவும் சிறந்து விளங்குகிறார்கள்.

இவர்கள் மத்தியில் கொடை வள்ளல்களுக்கும் குறைவில்லை என்பதையும் இங்கே குறிப்பிடுவது அவசியமாகும். இயலாதவர்களுக்கு உதவுவதில் அரசாங்கத்தையும் தட்டிக்கேட்கவும் இவர்கள் தயங்குவதில்லை.

இங்கு தமிழும் சைவமும் தளைத்தோங்குவதை இவர்கள் பெருமையுடன் இன்றும் கூறுகிறார்கள். கோயில் திருவிழாக்களில் காவடியும் தீமிதிப்பும் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் நடைபெறுவதுபொலவே இங்கும் நடைபெறுகின்றன.

முதலில் 1850 இல் Terre Rouge என்னுமிடத்தில் தமிழ் செல்வந்தர்களால் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி துரோபதை அம்மன் கோயில் நிர்மாணிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து லூயிஸ் துறையில் ஸ்ரீ சொக்கலிங்க மீனாட்சி அம்மன் கோயிலும் கிளெமென்சியாவில் அருள்மிகு பாலதந்தை கோயிலும் Plaines des Roches என்னும் நகரில் சிவ சுப்பிரமணியன் கோயிலும் நிர்மாணிக்கப்பட்டன. 

இக்கோயில் நிர்மாணிப்புப் பணிகளில் காலத்துக்குக் காலம் வந்த தமிழக அரசாங்கங்கள் எண்ணற்ற உதவிகளைக் கொடுத்துதவின என்பதையும் இங்கு நான் நன்றியுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

சமயமே தமிழர்களை இணைப்பதும் ஒற்றுமைப்படுத்துவதுமான சக்தியென இவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். எமது கண்ணுக்கு எட்டாத தூரத்திலிருக்கும் இந்த உடன்பிறப்புகளின் வாழ்வில் சுகமும் செல்வமும் சகோதரத்துவமும் வளர வாழ்த்துவோம்!

 தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.





Sunday, 10 November 2013

இசைப்பிரியாவின் சகோதரி விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்.....!

இசைப்பிரியாவின் சகோதரி விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்; செவிமடுப்பனவா தமிழ் ஊடகங்கள்?!

இறுதிப்போரில் இலங்கைப் படையினரால் பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகப் போராளி இசைப்பிரியாவின் குடும்பத்தினர் சார்பாக அவரது சகோதரி திருமதி தர்மினி வாகீசன் தமிழ் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த நான்கு ஆண்டுகளாக “இசைப்பிரியா” எனும் புனைப்பெயரைக் கொண்ட எனது தங்கையான, மறைந்த தமிழ்மொழி ஊடகவியலாளர் சோபனா அருட்செல்வன் அவர்கள் தொடர்பான செய்திகள், பெரும்பாலான செய்தி ஊடகங்களில் வசதிக்கேற்ப கதையமைக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.


இதனைத் தொகுப்பவர்கட்கு இசைப்பிரியாவைப் பற்றி எதுவும் தெரியுமா? அன்றி இசைப்பிரியாவுடன் இறுதிநாளிலே நந்திக் கரையோரம் இவர்களும் இருந்தார்களா? எப்படி உங்களால் இது முடிகிறது ? ! என்பது தெரியவில்லை. தமிழன் என்பவன் வீரத்துடன் மானத்தையும், பாசத்தையும் ஒருசேரப் போற்றுபவன். தமிழ் ஊடகங்களும் அதற்கு சான்று பகர்வனவாகவும், அவற்றை வளர்ப்பவைகளாகவும் அமைய வேண்டும்.

இசைப்பிரியா என்பவள் ஒரு கற்பனை கதாப்பாத்திரமல்ல. உயிருடன் சிறப்பாக வாழ்ந்து, நம் தமிழ் சமூகத்திற்காகவே உயிர்நீத்த ஒரு தமிழ்ப் பெண்.

ஒரு பெண்ணைப் பற்றிய செய்தியை எப்படி வெளியிட வேண்டும் என்ற நாகரிகம் ஒரு ஆறறிவு படைத்த மனிதனுக்கு, அதுவும் ஊடக சமூகத்திற்கு நிச்சயம் இருக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கின்றேன். அரை உடலை மறைத்து ஆடை அணிவதை நாகரிகமாகக் கொண்ட ஆங்கில ஊடகங்களுக்கு தெரிந்த ஊடக தர்மம், என் தாய் மொழி ஊடகங்களுக்கு தெரியாமலிருப்பது பெருத்த அவமானத்தையும், மனவருத்தத்தையும் அளிக்கின்றது.

தேசியத் தலைவர் காலங்களிலே, சிங்கள இராணுவப் பயங்கரவாதிகளால் போராளிகளும் பொதுமக்களும் சந்தித்த பல போர் விதிமீறல்கள் புகைப்படங்களாகவும், ஒளிநாடாக்களாகவும் அமைக்கக் கூடிய சூழல்கள் இருந்தன. பாரிய சண்டைகள் இராணுவ முன்நகர்வுகளின் போது இலங்கை இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டு, விடுதலைப் புலிகள் அமைப்பிடம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் ஒப்படைக்கப்படும் வித்துடல்கள் பல மிகவும் மோசமான நிலையில் கேவலப்படுத்தப்பட்டிருக்கும்.

அவற்றையெல்லாம் ஒளிப்படமாக்கி அவர்கள் உயிருடன் வாழ்ந்த காட்சிகளுடன் இணைத்து வெளியிடத் தெரியாதவைகளாவா விடுதலைப் புலிகளின் ஊடகங்கள் இருந்தன. அவர்கள் ஏன் அதனைச் செய்யவில்லை. தமிழ் ஊடக சகோதரர்களே நீங்கள் இன்று என்ன செய்கிறீர்கள்? இதிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி தான் என்ன ?

இசைப்பிரியா அவர்கள் ஒரு தமிழ்ப்பெண். ஒரு இளம் தாய், ஒரு குடும்பப்பெண். பல் திறமைசாலி, எல்லா வளமும் நிறைந்த சூழலில், குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். அவர்களுக்கென்று பெற்றோர், சகோதரிகள், பிள்ளைகள் என எல்லா உறவுகளுமே உண்டு. அவற்றையும் விட தமிழீழ தேசியத் தலைவரின் வளர்ப்பிலே இணைந்து பத்தாண்டிற்கு மேலாக ஊடகப் போராளியாக வலம் வந்து தலைவரதும் தமிழ் மக்களதும் நன்மதிப்பை பெற்றவள்.

கடும்போர் சூழ்ந்து பதுங்கு குழிகளை வாழ்விடமாக்கி முதுகு வளைந்து மக்கள் நடமாடிய காலத்தில் கூட, அவள் தன் குழந்தைகளையும் மறந்து உறவிழந்து தவிப்போரையும், காயமடைந்து மருந்தின்றி தவிப்போரையும் ஆற்றுப்படுத்துவதிலேயே தன் நாட்களைக் கழித்தாள். அவளின் பாசமான வார்த்தைகளை என்றுமே எம் தமிழ் உறவுகள் மறக்க மாட்டார்கள்.

ஊடக சகோதரர்களே!

அவளை நீங்கள் அறிந்திருந்தால்தானே அவளது மென்மையும், தாய்மையும், சகோதரப் பாங்கும் உங்கட்குப் புரியும். பூவினும் மென்மையான அந்தத் தாயின் காட்சிகளை கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சிகளாக்க உங்களுக்கு எப்படி மனம் ஒப்பியது. அவளது சகோதரியானதால் நான் மட்டுமல்ல தாயகத்தே அவளை நேசித்த தாய்மடி உறவுகளும் உங்கள் பொறுப்பற்ற செயலை கண்டித்த வண்ணமே உள்ளார்கள்.

சிங்கள அரச பயங்கரவாதத்தினால் நடத்தப்பட்ட இறுதி தமிழின அழிப்பு நடவடிக்கையின்போது உயிருடன் பிடிக்கப்பட்டு இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டார். துவாரகாவிலிருந்து மாறுபட்ட தோற்றமுடையவளாக இசைப்பிரியா இருந்திருந்தால் கூட சிங்களக் காடைகள் அவளை உயிருடன் விட்டிருக்கப்போவதில்லை. இந்தத் தகவலே போர் விதி மீறலுக்குப் போதுமான ஆதாரமாகும்.

சனல்-4 ஒரு காணொளியை வெளியிட்டால் உடனேயே அதற்கொரு கதை, வசனம், நெறியாள்கை செய்து சினிமாப் படமாக வெளியிடுகின்றீர்கள். சினிமாப் படங்களுக்குக் கூட ஒரு தணிக்கை உள்ளது. உங்கள் வீட்டுப் பெண்ணாக இருந்தால் இப்படித்தான் வெளியிடுவீர்களா? உங்கள் வீட்டுப் பெண்கள் உங்களிடம் இதுபற்றி மனம் வருந்தவில்லையா? உங்களது இந்த அபரிதமான அத்துமீறல்களையிட்டு இசைப்பிரியா குடும்பம் சார்பாக எனது அதிருப்தியையும், மனவருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ் ஒளிநாடாக்களை சிங்களவனிடமிருந்து பெற்று அதில் உள்ளவற்றை பொறுப்பற்ற முறையில் பிறரிடம் கையளித்த தமிழ் உறவுகளிடமும் எமது மன வருத்தத்தினை இவ்விடத்திலே நாம் தெரியப்படுத்த விரும்புகின்றோம். இதில் சம்பந்தப்பட்டிருப்பது உங்கள் அனைவருக்காகவும் மடிந்த ஒரு தமிழ்ப் பெண்ணின் மானம் என்பதை ஏன் நீங்கள் சிந்திக்க மறந்தீர்கள். அவளது தியாகத்தை ஏன் இப்படி அசிங்கப்படுத்துகின்றீர்கள்.

விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளென இணையங்களில் தோன்றுபவர்களே…உங்களுக்கும் இது தோன்றவில்லையா?? இதற்கான உங்கள் முன்னெடுப்பென்ன?? அவளின் பெயரை சொல்லி புகைப்படங்களில் காட்சி கொடுக்கும் நீங்கள், அசிங்கமான காட்சிகளை தணிக்கை செய்யவேண்டுவதிலும் எமக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

தமிழர் மீதான, உலகறிய நடத்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கையை பகிரங்கப்படுத்தி, இலங்கை அரசுமீது போர்க்குற்ற விசாரணையை நடத்த உலகைத் தூண்ட வேண்டியது ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதிகளான எமது கடமையாகும். ஆனால், சம்பவக் கோர்வைக்காகவும், வியாபார நோக்கு, சுயஇலாபம் கருதியும் உங்கள் மனத்தே எழும் கற்பனைகளையும், யூகங்களையும் கருவாக்கி ஒளிப்படங்களுக்கேற்ப கதையெழுதும் பொறுப்பற்ற சில தமிழ் ஊடகங்களின் செயற்பாடானது எமக்கு மிகுந்த மனவேதனை அளிக்கின்றது.

53வது படையணிக்கு கட்டளையிட்டவர்களும், படைப்பிரிவு அமைப்பவர்களும் போல் உங்கள் திறமையைக் காட்ட நீங்கள் எழுதும் வார்த்தைகள் எம் இதயங்களை ஈயக்குண்டுகளாக ரணமாக்குகின்றன. இசைப்பிரியாவையும், வேறு குடும்ப உறவுகள் மூவரையும் இழந்து நான்கரையாண்டுகளாக வளமிகு எம் தாய்நாட்டை விட்டு நாதியற்றலையும் எங்களை, நீங்களுமா துன்பப்படுத்த வேண்டும்.

ஊடகக் கோட்பாடுகளயும், அறநெறிகளயும் மீறிய சில தமிழ் ஊடகவியலாளர்களதும் அவர்கள் நடத்தும் இணையங்களதும் செயற்பாடானது பொறுப்புணர்வுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்படும் ஏனைய தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்களையும் சேர்த்தே பாதிக்கின்றது என்பதை ஒரு ஊடகப் போராளியின் சகோதரி என்ற முறையில் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இசைப்பிரியா எம் குடும்பத்தின் அன்பு தேவதை, இசைப்பிரியா தமிழினத்தின் ஒட்டுமொத்த வலிக்கான உணர்வாதாரம். இசைப்பிரியா பூசிக்கப்பட வேண்டிய ஒரு தமிழ்த்தாய். அவளை சிங்களவனுடன் சேர்ந்து நீங்களும் அசிங்கப்படுத்தாதீர்கள். சக ஊடகவியலாளர்களதும், அவரது குடும்பத்தாரதும் உணர்வுகட்கு மதிப்பளியுங்கள்.

இசைப்பிரியா சார்பாகவும், அவரது குடும்பத்தினர் சார்பாகவும் எனது உணர்வுபூர்வமான வேண்டுகோள் என்னவென்றால், இன்று முதல் இசைப்பிரியா தொடர்பான பொதுவில் தவிர்க்கப்படவேண்டிய ஒளிப்படங்களையோ, காணொளிகளையோ, சம்பவ யூகக் கற்பனைகளையோ வெளியிடாதீர்கள். இசைப்பிரியா சிங்கள இராணுவத்தினரால் உயிருடன் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வளவு தகவலுமே போதுமானது.

எமது இவ் வேண்டுகோளை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்றும் எம்மை சட்ட நடவடிக்கை நோக்கி செல்லும் சந்தர்ப்பத்திற்கு ஆளாக்கமாட்டீர்கள் என்றும் நம்புகின்றேன்.

குடும்பத்தினர் சார்பாக

திருமதி தர்மினி வாகீசன்

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.

Thursday, 7 November 2013

குட்டி பறக்கும் ரோபோ வானூர்தி.....!

இதன் எடை மிகவும் குறைவு என்பதால் இதனை குட்டி ரோபோ வானூர்தி என்று அழைக்கலாம். இதன் நீளம் 80 சென்டி மீட்டர்தான் இந்தக் குட்டி ரோபோட்டின் நீளம். இதனை சுவிசு(ஸ்) மத்திய நிலையத்தைச் (The Swiss Federal Institute) சேர்ந்த ஜீன் கிரிசு(ஸ்)டோப் மற்றும் டேரியோ ப்ளோரீனோ என்ற ஆராய்ச்சியாளர்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.


இந்த குட்டி பறக்கும் ரோபோ வானூர்தி மிகவும் சிக்கலான இடங்களில் அதாவது குகை, சுரங்க வழிப்பாதை போன்றவைகளில் எந்த இடத்திலும் மோதாமல் பறக்கும் தன்மைக் கொண்டது. இதுபோன்ற இடங்களில் மீட்புப் பணி மற்றும் தேடும் பணிக்கு மிகவும் உதவிகரமாக இந்த மிகச்சிறிய பறக்கும் ரோபோட் இருக்கும். இதன் சிறப்பம்சமே எந்த இடத்திலும் மோதாமல் தானாகவே சரி செய்து கொள்ளும் ஆற்றல்தான்.

இதனை ஆராய்ச்சியாளர்கள் கார்பன் இழைகள், மிக லேசான ஒட்டுப் பலகை (plywood) மற்றும் தடிமன் குறைந்த நெகிழி படங்கள் மூலம் (By plastic films) தயாரித்துள்ளனர். இதனுடைய வால் மற்றும் இறக்கைகள் நெகிழி படங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு இறக்கைகளின் முனைகளிலும் முறையே இரண்டு புகைப்பட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மிகுந்த தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் 30 கிராம் எடையுள்ள பறக்கும் ரோபோவின் இறக்கையில் புகைப்பட கருவி என்றால் அது எவ்வளவு நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். விமானத்தின் முன்புறமும் ஒரு புகைப்பட கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த புகைப்பட கருவி ஒரு வினாடியில் 20ல் பங்கு நேரத்தில் எதிரே தட்டுப்படும் சுவரோ மற்றும் பொருளையோ படம் எடுத்து உடனடியாகக் கணக்கிட்டு மோதலை தவிர்க்கக்கூடியது. இதன் அடுத்தக்கட்டமாக ஆராய்ச்சியாளர்கள் இதைவிட மிகச்சிறிய அதாவது அதிகபட்சம் 12 கிராம் எடை மற்றும் 40 சென்டி மீட்டர் நீளமுள்ள பறக்கும் மிகச்சிறிய ரோபோவை தயாரிக்கும் பணியில் உள்ளனர்.

  தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.

Wednesday, 23 October 2013

மாம்பழத்துக்குப் பெயரைத் ...................!

மாம்பழத்துக்குப் பெயரைத் தந்தது தமிழர்கள்தான். ஆங்கிலத்தில் "மாங்கோ' என்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தப் பெயரைத் தந்தவர்கள் போர்த்துக்கீசியர்கள்.

500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக இந்தியா வந்து ஆங்காங்கே குடியேறிய போர்ச்சுக்கீசியர்கள், இந்திய மாம்பழங்களைச் சுவைத்து அதிசயித்துப் போனார்கள்.

பைத்தியம் பிடிக்காத குறைதான். அதனால்தான் விதவிதமான மாம்பழங்களை உருவாக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அல்போன்சா மற்றும் மல்கோவா என்று நாம் இப்போது சப்புக்கொட்டிச் சாப்பிடுபவை எல்லாம் போர்ச்சுக்கீசியர்களின் கடும் உழைப்பினால் வந்தவை. உலகிற்கு மாம்பழங்களை (ஏற்றுமதி செய்து) அறிமுகப்படுத்தியவர்களும் அவர்களே!
இந்தியர்கள் மாம்பழங்களை 3000 ஆண்டுகளாகச் சுவைத்து மகிழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் ஐரோப்பியர்களுக்கு இதன் சுவை கடந்த 300 ஆண்டுகளாகத்தான் தெரியும் என்பது அதிசய செய்தி!

ஆண்டு முழுவதும் பச்சைப் பசேலென்று இருப்பது மாமரம்.கோடையின் உச்சத்தில் மாம்பழத்தின் காலம் ஆரம்பிக்கும். கோடை வெய்யிலின் உக்கிரம் அதிகரிக்க, அதிகரிக்க மாம்பழத்தின் இனிப்பும் அதிகரிக்கும்! நமது கண்ணையும் கருத்தையும் நாவையும் கவரும் மாம்பழத்தில், உலகில் 1000 வகைகள் உள்ளன.

பந்துபோல உருண்டையாகவும், சற்றே நீள் உருண்டையாகவும், முன்பாகம் கிளியின் மூக்கு போல வளைந்த நிலையிலும் பல்வேறு வடிவங்களில் மாம்பழங்கள் விளைகின்றன. சில வகை மாம்பழங்கள் மாலை வானத்தைப் போல மஞ்சளும் சிவப்பும் கலந்த செவ்விளநீர் நிறத்தில் கண்ணைக் கவரும். சுத்தமான மஞ்சள் மற்றும் இலைப் பச்சை நிறங்களில் ஒரு சாதாரண விளாம்பழத்தின் அளவிலிருந்து தர்பூசணி அளவு பெரிய அளவு வரையிலும் வகைவகையாக மாம்பழங்கள் உள்ளன.

இந்தியாவும் ஆசியாவும் உலகிற்கு அளித்த அன்புப் பரிசு இந்த மாம்பழம். இந்தியாவின் மிகப்பெரும் சாதனை என்று யாராவது கேட்டால், தயங்காமல் "உலகிற்கு மாம்பழத்தை அறிமுகப்படுத்தியதுதான்' என்று சொல்லலாம். 

அசாம் காடுகளிலும் பர்மா (மியான்மர்) நாட்டின் அடர்ந்த காடுகளிலும்தான் முதன் முதலில் மாம்பழங்கள் தோன்றியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

வைட்டமின் ஏ,சி மற்றும் டி அதிகமாக உள்ள மாம்பழத்துக்கு வேறு பல குணங்களும் இருப்பதாக நம்மவர்கள் நம்புகின்றனர். மாம்பழம் யோகத்தைக் கொண்டு வரும் என்று பெரும்பாலோர் நினைக்கின்றனர். மாவிலைத் தோரணங்களை வீட்டு வாசல்களில் தொங்கவிடுவதன் மூலம் யோக தேவதையை இல்லங்களுக்கு வரவழைத்து ஆசைக் கனவுகளையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கருதுகிறார்கள். 

மண்மாதாவின் அன்புக் கொடை என்றும் மாம்பழத்தை வர்ணிக்கின்றனர். கௌதம புத்தர் வெள்ளை நிற மாமரம் ஒன்றை உருவாக்கினார் என்றும் பிற்காலத்தில் அவருடைய வழிவந்தவர்கள் அம்மரத்தை வழிபட்டனர் என்றும் கதைகள் உள்ளன.


எல்லோருடைய மனங்களிலும் இல்லங்களிலும் நிறைவான இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கும் மாம்பழம் உண்மையிலேயே "பழங்களின் அரசன்'தான்!

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.


Saturday, 19 October 2013

திருமலையின் வரலாறு உருவாகிய காலம்.....!

உலக வரலாறுகள் உருவாக்க காலம் என்பது கிட்டத்தட்ட கிறிசுத்துக்கு பின் வந்த காலப் பகுதிகளை ஒட்டித்தான் காணப்படுகின்றன.அப்படித்தான் இலங்கை வரலாறும் கி.மு 500 ஆண்டளவில் விசயன் வருகையோடு தொடங்குகிறது என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

ஆனால் மகாவம்சம் விசயன் வருகைக்கு முன்னரான திருகோணமலையில் இறுக்கமான ஒரு ஆட்சி முறை இருந்ததை வெளிப்படையாக சொல்லவிட்டாலும் சில இடங்களில் சொல்லாமலும் இல்லை.

அப்படித்தான் விசயனது வருகைக்குப் பின்னரான சம்பவம் ஒன்றை கூறும் மகாவம்சம் நம் தேடலை அதிகரித்து சென்று விடுகிறது , விசயன் வருகைக்கு பின்னர் விசயனுக்கு வாரிசு இல்லாமல் போகவே விசயன் தனது வாரிசுக்காக கலிங்க நாட்டில் இருந்து தனது தம்பி சுமிதனின் மகனான பாண்டு வாசுதேவனை இலங்கை தீவில் உள்ள தனது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்துக்கு அழைக்கிறான்.



அப்படி அழைக்கப்பட்ட பாண்டு வாசு தேவனும் அவனுடைய 32 மந்திரிகளும் துறவிகள் வேடம் பூண்டே திருகோணமலை துறை முகத்தை அடைந்ததாக மகாவம்சம் கூறுகிறது .

இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நமக்கு ஒரு கேள்வி எழுகிறது.பாண்டு வாசு தேவனும் அவனது மந்திரிகளும் மாறு வேடத்தில் திருகோணமலைக்கு வர காரணம் என்ன ?

அப்படியானால் விசயனது கூட்டத்திற்கு எதிரானவர்களின் கட்டமைப்பு திருகோணமலை பகுதியில் இருந்திருக்க வேண்டும். அதன் காரணமாகவே இக்குழுவினர் மாறுவேடத்தில் வந்திருக்கின்றனர். இவ் மகாவம்ச குறிப்பில் இருந்து இன்னும் ஒன்று புலப்படுகிறது. இங்கு வாழ்ந்த மக்கள் துறவிகளை மதிக்கத்தக்கவர்களாக வாழ்த்திருகின்றனர். ஆகவேதான் பாண்டு வாசுதேவன் குழுவினர் துறவி வேடத்தை தேர்ந்து எடுத்திருகின்றனர்.

ஒழுங்கான ஆட்சி முறையுடன் இம் மக்கள் வாழ்தார்கள் என்று நிருபிக்க மகாவம்சத்தில் இன்னுமொரு குறிப்பு காணப்படுகிறது.துட்டகைமுனு எல்லாளன் போரை பற்றி குறிப்பிடும் மகாவம்சம் எல்லாளனை துட்டகைமுனு வெல்வதற்கு முன்பு 32 தமிழ் ஆரசுகளை வென்றதாக கூறுகிறது.

அதுமட்டும் அல்லாது அக்காலத்தில் மிகப்பிரபலமாக இருந்த கோகர்ண (திருமலை) துறைமுகப்பகுதியை எந்த ஆரிய வம்சத்தில் இருந்து வந்த ஆட்சியாளனும் ஆண்டதாக குறிப்பிடவில்லை. ஆரிய வம்சத்துக்கு ஆதரவாக எழுதப்பட்ட நூலில் அடிக்கடி கோகர்ணம்(திருமலை)சவாலுக்குரிய பகுதியாகவே குறிப்பிடப் பட்டுள்ளது என்பது அவர்களின் செல்வாக்கு குறைவான இடம் என்பதை மட்டும் காட்டுகிறது. அப்படியானால் அந்த 32 அரசர்களில் யாரோ ஒருவனால் இப்பகுதி ஆளப்பட்டு இருக்கிறது என்பது சந்தேகமில்லாமல் புலப்படுகிறது.

இவ்வாறு சவாலுக்குரிய பிரதேசமாக இருந்த கோகர்ணம் வழிபாட்டு ரீதியாகவும் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

கி. மு 300 ஆண்டு காலப்பகுதியில்தான் இலங்கையில் சைவ மற்றும் பிராமணர்களின் செல்வாக்கு அதிகரிக்க தொடங்கிய காலம் எனலாம். இதற்கு முக்கிய காரணம் வியாபார தொடர்புகள்தான். இதே மாதிரித்தான் சமணமும் தேவாதார மற்றும் மகாயான பௌத்தங்கள் நிறுவன ரீதியாக இலங்கை தீவில் காலடி எடுத்து வைக்கின்றன.

கி மு 3 நூற்றாண்டு காலப்பகுதியில் மகாயான பௌத்தத்துக்கு மாறிய மகாசேனன் கோகர்ணம் (திருகோணமலை) , எரகாவில்லை(ஏறாவூர்), மற்றும் இலங்கை தீவின் கிழக்கு பகுதியில் இருந்த பிராமணன் கலந்தனின் ஊர் ஆகிய வற்றில் இருந்த லிங்க கோவில்கள் அழிக்கப்பட்டதாக மாகவம்சம் கூறுகிறது. மகாசெனனால் அழிக்கப்பட்ட மூன்று லிங்க வழிபாட்டு தலங்களும் இருந்த இடங்கள் திருகோணமலையை அண்டிய பிரதேசங்கள்தான் இருந்திருக்கின்றன.

இதில் முக்கியமான விடயம் என்னவேனில் பலமான தென்னிந்திய தொடர்பை திருகோணமலை கொண்டிருந்திருக்கிறது . என் என்றால் இலங்கையில் லிங்க வழிபாடு என்பது ஆதார ரீதியாக இலங்கை ஆதிக்குடிகளிடம் இருக்க வில்லை.கந்த, வேல் ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்ட முருக வழிபாடுதான் இவர்களிடம் இருந்தது.அப்படி காணப்பட்ட திருகோணமலையில் வணிகர்களில் வருகை மூலமே லிங்க வழிபாடு அறிமுகப்படுத்த பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு திருகோணமலையில் லிங்க வழிபாடு , மற்றும் மகாயான புத்த மதங்கள் போட்டி போட்டு கொள்ள முருக வழிபாடு அழியாமல் தனித்துவமான வழிபாட்டு முறையாக கி பி எழாம் நூற்றாண்டு வரை சிறப்பாக இருந்ததை சூளவம்சம் சில புனைவுகளுடன் எடுத்துரைக்கிறது.

கி பி எழாம் நூற்றாண்டு காலப்பகுதியில் மானவர்வன் என்ற இளவரசன் கந்தக்கடவுளை நினைத்து வேள்வி செய்ததாகவும் அப்போது கந்த கடவுள் மயில் பறவையில் வந்து காட்சி தந்ததாகவும் பாளி இலக்கியமான சூளவம்சம் கூறுப்பிடுகிறது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Thursday, 10 October 2013

வியக்க வைக்கும் தொழில் நகரம்.....!


2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வியக்க வைக்கும் தொழில் நகரம் கண்டு பிடிப்பு. தமிழ் எழுத்துக்களும் காணப்பட்டன !


திருப்பூர்: திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையிலுள்ள கொடுமணல் கிராமம், இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்குமுன், வணிக பெருநகரமாக விளங்கியதற்கான ஆதாரங்கள், அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைத்துள்ளன.

திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில், நொய்யல் ஆற்றின் கரையிலுள்ளது கொடுமணல் கிராமம். சங்க காலத்தில் வணிக பெருநகரமாக, பதிற்றுப்பத்தில், "கொடுமணம்பட்ட... வினைமான் அருங்கலம்' என்ற பாட்டில், மிகச்சிறந்த தொழிற்கூடங்கள் அமைந்திருந்ததற்கான சான்றுகள் உள்ளன.


இது, சேர மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய கரூரையும், வணிக தொடர்புக்கு பயன்பட்ட மேலைக்கடற்கரை துறைமுகமான, முசிறி பட்டணத்தையும், இணைக்கும் "கொங்கப்பெருவழி'யில் அமைந்துள்ளது. 

ஆய்வின்போது, தமிழ்பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள்; ஆட்பெயர்கள், குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்பிராமி எழுத்துக்கள், இலக்கண பிழையின்றி உள்ளன. இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் படிப்பறிவில் சிறந்தவர்களாக இருந்ததற்கு சான்றாக, இவை கிடைத்துள்ளன.

பிற நாடுகளுடன் வணிக தொடர்புகளை வைத்திருந்ததற்கு சான்றாக வெள்ளி முத்திரை நாணயங்கள், வடக்கத்திய கருப்பு வண்ணம் மெருகேற்றப்பட்ட மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன.

விலை உயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தொழிற்கூடங்கள், நெசவுத்தொழில், நூல் நூற்க பயன்பட்ட தக்களி, தந்தத்தால் செய்யப்பட்ட நூல் நூற்க பயன்படும் உபகரணம், இறந்தவர்களை புதைக்கும் ஈமக்காட்டில், பெருங்கற்படை ஈமச்சின்னங்கள், சுடுமண் தக்கலி, சுடுமண் மணிகள், தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள், கூரை ஓடுகள், கார் நீலியன் எனப்படும் சூதுபவள மணிகள், பளிங்கு கற்கள், வைடூரியம், வீடு, தொழிற்கூடங்கள், 218 மணிகள், சங்கு அணிகலன்கள் என நூற்றுக்கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 50 ஏக்கர் பரப்பளவுள்ள வாழ்விட பகுதியில், 9 அகழாய்வு குழிகளும், 100 ஏக்கர் பரப்பளவுள்ள ஈமக்காட்டில், நடுகல், வட்ட கல் என 100 ஈமச்சின்னங்கள் உள்ளன. இதில், ஒரு ஈமச்சின்னமும் தோண்டப்பட்டுள்ளது. இதில், மூன்று அறைகள், வடமேற்கு மூலையில் உயர் வெண்கல குவளை, கீழ் பகுதி சல்லடை போல் அமைப்பும் இருந்தது.

இரண்டாயிரத்து ஐநூறு  ஆண்டுகளுக்கு முன் சிறந்த விளங்கிய நகர், தோண்டி எடுக்கப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் கல் மணி அணிகலன்கள் மற்றும் உலோக அணிகலன்கள், சங்கு அணிகலன்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கியதும், ஒரு குழுவாக வாழ்ந்ததும், பண்டை காலத்திலேயே, உலக அளவில், மதிப்புமிகு பொருட்கள் உற்பத்தி செய்து வணிக தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

கொடுமணல் பகுதியில், விலை உயர்ந்த, சிறந்த தொழில் நுட்பங்களை கொண்ட அணிகலன்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் இருந்துள்ளன. "நீல கல்'(Sapphire), "பல வண்ணங்கள் கொண்ட படிக கல்'(Quartz) , "பெரில்' (Peril)எனப்படும் வைடூரியங்கள் மற்றும் கல் மணிகளை அறுக்கவும், மெருகூட்டவும் பயன்படும் குறுந்தம் கல் வகைகளும் இங்கு இருந்ததால், இங்கு தொழில் சிறப்பாக இருந்துள்ளது.

மேலும், கார்னீலியன், அகேட் ஆகிய மணிகள் தயாரிக்கும் மூலப்பொருட்கள், குச(ஜ)ராத் பகுதியில் இருந்தும், "பிளாக் கேட் ஐ' எனப்படும் பூனைக்கண் மணிகள் இலங்கையில் இருந்தும், லேபிசு(ஸ்) லசு(ஸ்)லி மணிகள், ஆப்கானிசுத்(ஸ்)தானில் இருந்தும் வந்துள்ளன. அதோடு, சங்கு அறுத்து, அணிகலன்கள் தயாரித்ததும், துணி உற்பத்தியும் சிறந்து விளங்கியதற்கு சான்றாக உபகரணங்கள் கிடைத்துள்ளன.இங்கு, 500 ஆண்டுகள் செழிப்பாக இருந்துள்ளன.

அரசியல், வணிக வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், நகரம் அழிந்துள்ளது. வணிகர்கள் அதிகளவு வந்து தங்கியிருந்ததும், 1912ம் ஆண்டு, ஐந்து கல் தொலைவில் உள்ள கத்தாங்கண்ணியில் கிடைத்த ரோமானிய நாணய குவியலும், வணிக தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன.

தமிழ் பிராமி எழுத்து பொறித்த மண்பாண்டங்கள் கிடைத்ததும், எழுத்து இலக்கண பிழையில்லாமல் உள்ளதால், 2,500 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்களின் கல்வி அறிவை விளக்குகிறது.வடக்கத்திய கருப்பு வண்ணம் மெருகேற்றப்பட்ட மண்பாண்டங்கள், பிராகிருத மொழியில் பெயர் பொறித்து ஆட் பெயர்கள், பெருங்கற்படை சின்னங்கள், இனக்குழு சார்ந்த வாழ்வியலையும், அவர்களுக்கு தேவையான உணவு உற்பத்திக்கு, வேளாண் தொழில் மேற்கொண்டதற்கான உழவு, அறுவடைக்கான உபகரணங்கள்,சேமிப்பு கிடங்குகள், கால்நடை எலும்புகள் அதிகளவு கிடைத்துள்ளதால், கால்நடை வளர்ப்பும் சிறந்து விளங்கியுள்ளது.

ஆட்பெயர்களில், மாகந்தை, குவிரன், சுமனன், ச(ஸ)ம்பன், ச(ஸ)ந்தைவேளி, பன்னன், பாகன், ஆதன் என்ற பெயர்களும், பெரும்பாலும் சாத்தன், ஆதன் என முடிவடைகின்றன. கண்ணகியின் கணவர் பெயர் சாத்தன்; சேர அரசர்களின் பெயர் சேரலாதன் என முடிவடைவதும், இந்நகரின் காலத்தை குறிக்கிறது.

விலை உயர்ந்த மணிகள் உற்பத்தி நகரமாக இருந்ததாலும், ஆயுதங்கள், கோவில்கள் தென்படவில்லை. இதிலிருந்து போர் முறை, கடவுள் வழிபாடு, பிந்தைய காலத்தில் உருவானது என தெரியவருகிறது.

அறிவியல் சார்ந்த கார்பன் ஆய்வு, அமெரிக்காவுக்கு அனுப்பி ஆய்வு செய்ததில், கொடுமணல் காலம் கி.மு., ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தையது என தெரிந்துள்ளது.கொடுமணல் என்ற நகரம், மிகச்சிறந்த தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழிற்கூடங்களை கொண்ட நகரமாகவும், உள்நாடு, வெளிநாடு வணிக உறவுகளை கொண்ட வணிக நகரமாகவும், சமூக, பொருளாதார, எழுத்தறிவு பெற்ற நகரமாகவும் விளங்கியுள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Sunday, 29 September 2013

சூழ்ச்சிகள் செய்து நாட்டைப் பிடித்தார்களோ.....!

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள் எப்படி சூழ்ச்சிகள் செய்து நாட்டைப் பிடித்தார்களோ, அதேபோல் இலங்கைக்கு வியாபாரம் செய்யப்போன ஐரோப்பியர்கள் தந்திரமாக நாட்டைக் கைப்பற்றிக் கொண்டார்கள். இலங்கைக்கு முதன் முதலாக வந்த ஐரோப்பியர்கள் போர்ச்சுக்கீசியர்கள்.

ஏறக்குறைய இந்தியாவுக்குள் போர்ச்சுக்கீசியர்கள் அடியெடுத்து வைத்த காலக்கட்டத்தில்தான் அவர்கள் இலங்கையையும் கைப்பற்றினர். கி.பி. 1505-ம் ஆண்டின் இறுதியில் போர்ச்சுக்கீசியர்கள் வந்த கப்பல் ஒன்று, புயலில் சிக்கியது. புயலில் திசை மாறி அந்த கப்பல் இலங்கையின் கடலோரப் பகுதியில் ஒதுங்கியது. அந்த கப்பலின் அணித்தலைவர் (captain) பெயர் டாம் லூரங்கோ.


உள்நாட்டு குழப்பம்

அப்போது இலங்கையில் கோட்டை, சித்தவாகா, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய 4 ராஜ்ஜியங்கள் இருந்தன. இந்த 4 ராச்சியங்களின் ஆட்சியாளர்களிடம் ஒற்றுமை இல்லை. உள்நாட்டுக் குழப்பங்கள் நிலவின. முதலில் வியாபாரம் செய்வதே போர்ச்சுக்கீசியர்களின் நோக்கமாக இருந்தது.

பின்னர், இலங்கையின் சூழ்நிலையைப் பார்த்த அவர்கள், "ஆட்சியைப் பிடிக்க இதுவே தக்க தருணம்'' என்று தீர்மானித்தனர். அவர்களிடம் நவீன போர்க் கருவிகள் இருந்தன. அவற்றைப் பயன்படுத்தி, இலங்கையின் மேற்கு கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பகுதிகளிலும் ஊடுருவினர்.

தமிழ் மன்னன்

போர்ச்சுக்கீசியர்கள் இலங்கையில் கோட்டை ராச்சியத்தைக் கைப்பற்றிக் கொண்டபோது, யாழ்ப்பாண ராச்சியத்தை செகராசசேகரன் என்கிற முதலாவது சங்கிலி (1519-1561) என்ற தமிழ் மன்னன் ஆண்டு வந்தான். யாழ்ப்பாண அரசை கைப்பற்ற போர்ச்சுக்கீசியர்கள் பலமுறை முயன்றும் தோற்றுப்போனார்கள்.

முடிவில், "மன்னாரில் வியாபாரம் மட்டும் செய்து கொள்கிறோம்'' என்று சங்கிலி மன்னனிடம் அனுமதி பெற்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வியாபாரம் செய்து வந்த போர்ச்சுக்கீசியர்கள், தமிழரிடையே இருந்த சாதிப்பாகுபாட்டை பயன்படுத்திக் கொண்டு, ஒரு பகுதியினரை தங்களோடு சேர்த் துக்கொண்டு, சங்கிலிக்கு எதிராகக் கலகம் செய்தனர்.

சங்கிலி அங்கு தன் படையோடு சென்று கலகத்தை அடக்கினான். கலகத்துக்கு காரணமாக இருந்தவர்களின் தலையைத் துண்டித்தான். இதனால் ஆத்திரம் அடைந்த போர்ச்சுக்கீசியர்கள், யாழ்ப்பாண அரசை கைப்பற்ற தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

முதலாம் சங்கிலிக்குப் பிறகு இரண்டாம் சங்கிலி (1615-1619) ஆட்சிக்கு வந்தான். அப்போது, போர்ச்சுக்கீசியர்கள் உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிட்டனர். இதற்கு, பிதுறு பொட்டன்கோன் என்ற போர்ச்சுக்கீசிய பாதிரியார் தலைமை தாங்கினார்.

கடும் போர்

உள்நாட்டுக் கலவரத்தை ஒடுக்க இரண்டாவது சங்கிலி மன்னன் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டான். தனக்கு உதவி செய்யுமாறு, தமிழ்நாட்டில் இருந்த ரகுநாத நாயக்க மன்னனுக்கு செய்தி அனுப்பினான். நாயக்க மன்னனும் வர்ணகுலத்தான் என்ற தளபதி தலைமையில் 5,000 வீரர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தான்.

அதே சமயம், மன்னன் சங்கிலியை முறியடிக்க போர்ச்சுக்கீசியர்கள் படை திரட்டினர். கோட்டையில் இருந்து மன்னாரை நோக்கி நூறு போர்ச்சுக்கீசிய வீரர்களும், சில நூறு சிங்களக் கூலிப்படையினரும் அனுப்பப்பட்டனர்.

அதே நேரத்தில் தரை வழியாகவும் 130 போர்ச்சுக்கீசிய ராணுவ வீரர்களும், 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிங்களக் கூலிப்படையினரும் யாழ்ப்பாணத்தை நோக்கி விரைந்தனர்.இரு தரப்பினருக்கும் இடையே கடும் போர் நடந்தது. சிங்கள கூலிப்படையின் உதவியுடன் யாழ்ப்பாண மன்னன் சங்கிலியை போர்ச்சுக்கீசியர் தோற்கடித்து கைது செய்தனர்.

தூக்கு தண்டனை

இந்தக் காலக்கட்டத்தில், இந்தியாவில் உள்ள கோவா நகரம் போர்ச்சுக்கீசியர் வசம் இருந்தது. அங்கு சங்கிலியை கொண்டு சென்றனர்.

சங்கிலிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவன் தூக்கில் போடப்பட்டான்.ஈழமன்னன் முதன் முறையாக அந்நியர்களான போர்ச்சுக்கீசியர்களிடம் தோற்றதுடன், மரணத்தையும் தழுவ நேர்ந்தது. அதற்கு போர்ச்சுக்கீசியர்களுக்கு உதவியாக இருந்தவர்கள் சிங்களர்கள்.

இலங்கையின் மத்தியப் பகுதி, கிழக்கு கடற்கரைப் பகுதி ஆகியவை தவிர இலங்கையின் மற்ற பகுதிகள் போர்ச்சுக்கீசியர்கள் ஆதிக்கத்தின் கீழ் வந்தன. ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு அலுவலகங்களில் உயர் பதவிகளுக்கு போர்ச்சுக்கீசியர்களும், தாழ்ந்த பதவிகளுக்கு தமிழரும், சிங்களர்களும் அமர்த்தப்பட்டனர்.

சிங்களர்களையும், தமிழர்களையும் கிறிசுத்தவ மதத்துக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தவர்களும், `கீழ்ச்சாதி' என்று கருதப்பட்டவர்களும் கிறிசு (ஸ்)த்தவ மதத்துக்கு மாறினர்.

போர்ச்சுக்கீசியர்கள், இலங்கையின் முன்னேற்றத்துக்காக எதுவும் செய்யவில்லை. மிளகு, லவங்கப்பட்டை, பாக்கு போன்றவற்றையும், யானைகளையும் தங்கள் நாட்டுக்கு கொண்டு போயினர்."போர்ச்சுக்கீசியர்கள் ஆட்சி காலத்தை இலங்கையின் இருண்ட காலம்'' என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Friday, 20 September 2013

திருமலையில் அகத்தியர் சிவலிங்க கோயில்.....!


இலங்கை வரலாற்றிலே கிழக்கு மாகாணம் தனியான வரலாற்றுச் சான் றுகளை தன்னகத்தே கொண்டமைந்த ஓர் மாகாணமாகும். அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய

மாவட்டங்கள் இந்து கலாச்சார விழுமியங்களை பேணிப் பாதுகாத்த வரலாறுகள் தற்போதும் புலனாகின்றது.

அதிலும் திருகோணமலை மாவட்டத்தில் கங்கு வேலி எனும் இடத்தில் மிகவும் பழமை வாய்ந்த அகத்தியர் சிவலிங்க கோவில் அமையப் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் கடந்த வன்செயல் காரணமாக இவ்வாலயத்தின் வழிபாடுகளை மேற்கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. 

தற்போது அந்த ஆலயத்தின் நிருவாக சபையினர் ஒன்றிணைந்து ஆலயத்தினை புனரமைப்புச்செய்து திருவிழாக்களை மேற்கொள்ள நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றார்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் மிகவும்புரதான வரலாற்றுச் சின்னங்களைக் கொண்டமைந்த கங்குவேலி அகத்தியர் ஆலயம் 

கங்கு கோயிலில் அமைந்துள்ள அப்புராதான ஆலயம் பல வரலாற்றுக் கதைகளோடு தொடர்புடையதாக அமைந்திருக்கின்றது. தொல்பொருள் ஆய்வினை மேற்கொள்ளும் பட்சத்தில் பல வரலாற்றுச்சான்றுகளை நாம் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ளக்கூடியதாக இருக்கும்.

ஆடி அமாவாசை தீர்த்தத்தினை கொண்டமைந்து திருவிழாக்களை நடத்தி வந்திருந் தபோதிலும் அண்மைக்காலமாக பூரணவழிபாடுகள் இடம் பெறாமல் இருப்பது அப்பிரதேச மக்கள் பெரும் கவலை கொள்கின்றார்கள்.

இவ் வாலயத்தின் சிறப்பு தலபுராணத்திலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிட த்தக்கது.



தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Tuesday, 17 September 2013

6ஆம் நுாற்றாண்டிற்கு முற்பட்ட இலங்கை.....!

6ஆம் நுாற்றாண்டிற்கு முற்பட்ட இலங்கை அரசுகளும் திராவிடஆரிய குடியிருப்புக்ளும். நாகதீபம்( பூநகரி)

கதிர்காமம் -நாகதீபம் (ஈழவூர்-பூநகரி இராச்சியம்) தாமிரபரணி கல்யாணி தீகவாவி மலையக அரசு ஆதிகாலத்தில் இலங்கையில் (ஈழத்தில்) சற்று வேறுபட்ட ஒரேமொழி பேசிய இயக்கர்கள். நாகர்கள் என்னும் இரு இனமக்களின் வசிவிடமாக இருந்தது.



இம்மக்கள் கி.மு1000ஆம் ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பின் உபயோகத்தை நன்கறிந்தவர்களாக நிலையான இடங்களில் பயிர்செய்து வாழ்ந்தார்கள். 

இவற்றுக்கான சான்றுகள் இராவண காவியம் இராமாயணம் மகாபாரதம் சங்கப்பாடல்களில் காணப்படுகின்றன. அதேபோன்று கல்வெட்டுக்கள் தொல்லியல் சான்றுகள் வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புக்கள் போன்ற சான்றுகளும் உள்ளன.

பெருங்கற்கால மனிதர்களாகிய திராவிட இனமக்கள் இலங்கைத்தீவின் வடபகுதியில் நாகதீபத்திலும் கதம்பதி(மல்வத்தை ஓயா) கலாஓயா கலியாணியிலும் வளவகங்கை மாணிக்ககங்கைக்கு இடைப்பட்ட பகுதியான மகா கமத்திலும் மட்டக்களப்பு பகுதியில்தீகவாவியிலும் நிரந்தரமாக வாழந்து அரசுகளும் அமைத்தனர்.

பிற்காலத்தில் தீவின் மத்திய மலைப்பகுதியில் மலையக அரசு உருவானது. இவர்கள் செயற்கையான நீர்ப்பாசன நாகரிகத்தை உடையவர்களாக இருந்துள்ளனர். இப்பிரதேசங்களிற் காணப்படும் சிவப்பு கறுப்பு மட்பாண்டாங்கள் சான்றாகின்றது.

கலாநி க.குணராசா அவர்களின் ஈழத்தவர் வரலாறு என்ற நுாலை வாசியுங்கள். அதில் பூநகரி இராச்சியம் பற்றிய பலசான்றுகளை வரலாற்று ஆதாரங்களடனும் புவியியல் ஆதாரங்களுடனும் விளக்கி விபரித்து எழுதியுள்ளார்.

பூநகரி நல்லுாரில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற முருகன் கோவில்தான் யாழ் நல்லுார் கந்தசாமி கோவில் என்பதையும் யாழ் மணற்திடரில் நிலத்திற்கு கீழான நீர்ப்பயன்பாட்டினை மக்கள் அறியமுன் குடியேறியிருக்க வாய்ப்பு இல்லை என்றும்.

யாழ்பாடி யாழ்வாசித்து பரிசுபெற்றபின் அவனுக்கு பரிசாக யாழ்குடா நிலத்தையும் மக்கள் குடியிருப்புகளையும் புதிதாக உருவாக்கி பரிசளித்தார்கள் என்ற தமிழ் மரபுக்கதையையும் சுட்டிக்காட்டியிருந்தார்.அதே நுாலில் 65 பக்கத்தின் ஒரு பகுதியை இங்கு அப்படியே தருகின்றேன் சான்றாக...

கி.பி 10 ஆம் நுாற்றாண்டளவில் பூநகரிப் பிரதேசம் சோழரின் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பற்கு ஆதாரங்களுள்ளன. அவ்வேளையில் அப்பகுதியின் சோழப்பிரதிநிதியாகவிருந்த புவனேகவாகு.

பூநகரியில் இன்று இருக்கின்ற நல்லுார் என்ற ஊர்ப் பகுதியில் தனது மாளிகையை அமைத்திருக்க வேண்டும் உண்மையில் இன்று கிடைக்கின்ற ஆதாரங்களில் இருந்து பூநகரியில் இன்று இருக்கின்ற நல்லுார் என்ற பிரதெசமே தமிழர் அரசின் புராதன நல்லுார் ஆகும் தென்னிந்தியாவில் பல ஊர்களுக்கு நல்லுார் எனப்பெயருள்ளது. ஆகவெ அத்தகைய ஒரு பெயர் இப்பிரதேசத்திற்கும் சோழர்கழால் இடப்பட்டிருந்தது.

முதலாம் பராந்தகன் ஆட்சியில்தான் தமிழநாட்டிலுள்ள சோழமண்டலமும் மண்ணியாறும் இதன் தென்எல்லையிலுள்ள நல்லுாரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகக் கூறப்பட்டுள்ளன.

குஞ்சரமல்லன் என்ற பராந்தகனின் சிறப்புப்பெயர் மண்ணியாற்றின் மறுபெயராக அழைக்கப்பட்டது.பூநகரியில் இராசதானிக்குரிய கட்டிட அழிபாடுகளின் தென்னெல்லையில் சோழமண்டலமும் வடவெல்லையில் மண்ணியாறும் அதற்குச் சற்று வடக்காக நல்லுார் என்ற ஊரும்(இடமும்) காணப்படுகிறது.

பதினோராம் நுாற்றாண்டில் இலங்கையிலிருந்து சோழரைத் துரத்திட்டு இலங்கை முழுதும் முதலாம் வியயபாகு(1055-1110) வரையும் அரசனானான். 

அவன் ஆட்சிக்காலத்தில் வடவிலங்கை அவனாட்சியின் கீழ்ப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்த புராதன பௌத்த விகாரைகைளுள் ஒன்றாகிய யம்புக்கோல விகாரையை புதுக்க அமைத்தான் என சூளவம்சம் கூறுவதிலிருந்து இது உறுதிப்படுகிறது.

வியயபாகு இறந்தபின் கி.பி1110 ஆம் ஆண்டளவில் குலோத்துங்க சோழன் சோழராட்சியை மீண்டும் நிலைநாட்ட இலங்கைமீது படையெடுத்தான். 

அப்படைக்கு தலைமைதாங்கியவன்தான் கருணாகரத்தொண்டமான். என்னும் தளபதியாவான் அவன் யாழ்ப்பாணத்தைச் சிலகாலம் நிர்வகித்தான் தொண்டைமானாற்றை துறைமுகமாக்குவித்தான்.

தொன்டைமானாற்றில் விளைந்த தன்படுவான் உப்பை(தானாக விளையும் உப்பு) சோழநாட்டிற்கு ஏற்றுவித்தான். உரும்பிராயில் உள்ள கருணாகரப் பிள்ளையார் கோவிலைக் கட்டுவித்தான்.

இதன்பின்னர் சோழர்களின் தமிழ் இன விரோதங்களை குமரிநாடு சுட்டுகின்றது.

இதன் மூலம் சோழர்களால் ஆரியக்கடவுளும் ஆரியமுறைகளும் பரப்பப்பட்டிருக்கிறது என்பதையும் இக்கோவில்களின் வரலாறுகளில் வட மொழி கலந்திருப்பதையும் சோழர்கள் தமது ஆதிக்கத்தைக் கொணடிருந்தனரே ஒழிய தமிழ் என்பதைப் பின்தள்ளினர் என்பதையும் தமிழர் சமயங்களையும் பின்தள்ளி பிராமண முறைகளையும் பரப்பினர். 

இதன் தாக்கம் இன்று ஐரோப்பி ஆசியநாடுகளிலும் ஆபிரிக்காவிலும் இருப்பதை உணர்க திருந்துக தமிழை மீட்குக. இனிவரலாற்றை மீண்டும் வாசிக்கவும்.....

படஆதாரங்களுடன் நாம்விளங்கிக் கொள்வதற்காக. எனவே நாகதீபம் என்பதை நைனாதீவு என்று எண்ணுவது தவறு. அது போர்ச் சூழலால் இடம்பெயர்ந்து சென்ற கோவில் அது பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக அண்மையில் இருந்த தமிழக அரசின் உதவிபெறப்பட்டது.

அதற்காக அங்கிருந்து வந்தவர்கள் அங்கு குடியேறியு முள்ளனர். அதேபோன்று ஏனைய தீவுகளிலும் இந்தியக்குடியேற்றங்கள் நிகழ்திருக்க வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இவ்வாறே வடமுனை பருத்தித்துறை வல்வெட்டித் துறையிலும் குடியேற்றங்கள் நிகழ்திருக்க இடமுண்டு. பூநகரி இராச்சியம் சிங்கை நகர் என்று வழங்கியமையும் அறிய இருக்கின்றது.

அத்தோடு வன்னிப் பகுதியில் தமிழர்களின் பரம்பரிய கொற்றவை வழிபாடான முறையில் அம்மன் கோவில்கள் பிரபல்யமானவை பெரும்படை பொறிக்கடவை அம்மன் கிளிநொச்சி கனகாம்பிகை புளியம்பொக்கணை நாதம்பிரன் கோவில் முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன்கோவில் இன்னும் குறிப்பிடப்படாத பல உள்ளன.

நாகர்களின் வாழ்வியல் பண்பாட்டை பிரதிபலிக்கும் நாகராசா நாகம்மா நாகமுத்து நாகையா போன்ற பெயர்கள் சான்று. அதே போன்று தமிழர்களின் நற்காரியங்களில் தலைப்பாகை கட்டும் முறையானது நாகபடத்தைக் குறிப்பதாகும்.

அதே போன்று பெண்களுக்கும் நாகசடம் அணிகிறார்கள். ஆதாரம் இலங்கையம் அரசுகளும் என்ற குரும்பசிட்டி கனகரத்தினத்தின் வரலாற்று நுாலிலிருந்து இவை இன்றி விளக்கமின்றி மரட்டியர்களின் தொப்பியை அணிவதாலும் பெண்களிற்கு மொட்டாக்குப் போடுவதாலும் இந்திய மராட்டிய பண்பாட்டை விளக்கமின்றி ஏற்று உடுக்கின்றனர்.

அதே போன்றதே பஞ்சாபிகளின் பஞ்சாவி தமிழர்களின் பண்பாட்டு உடை என்று தமிழர்கள் எண்ணுவதும் தவறு. சாதாரண நேரங்களி அணிவது தவறல்ல தமிழ் உடையெ எண்ணி அணிதல் தவறு என்பதே கருத்து.அதே போன்று மராட்டியர்களின் சர்வாணியையும் கழுத்துத்துண்டையும் போட்டு தமிழ் உடுப்பு என்று நம்புகின்றார்கள்.

இது தமிழ் வியாபாரிகளின் பொறுப்பற்ற வர்த்தகத்தால் வரும் தமிப்பண்பாட்டுக் கேடுகளாகும். மணவறைகள் தமிழர்களின் திராவிடர்களின் என்ற பழைய முறைகளை விடுத்து வைசுணவ முறைகளை மணவறை சோடனைகாறர்கள் கிருச்சுணர் ராதை பொம்மைகளையும் வைத்து ஆரிய முறைகளைப்பரப்புகிறார்கள்.

தமிழைக் கெடுக்கிறார்கள். எனவே தமிழப்பண்பாட்டு முறையில் என்று தொடங்கி தமிழை விழுங்கி இந்திய மராட்டிய கலாச்சாரத்தில் போய் பரப்பும் கேவலத்தைக்கண்டு தமிழ் உலகம் அழுவது எவருக்கும் விளங்குவதில்லை.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Wednesday, 11 September 2013

புலிகள் போர்க்குற்றவாளிகளா..........?

புலிகள் போர்க்குற்றவாளிகளா? - விளக்கமும், தமிழினத் தலைவர்களுக் கொரு விண்ணப்பமும்


விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது காலம் காலமாகவே பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுத்தான் வருகின்றன. ஆனால், அவை அனைத்துக்கும் உச்சக்கட்டம், நடந்த இனப்படுகொலையின்பொழுது விடுதலைப்புலிகளும் மனித உரிமை மீறல்களில், அதுவும் தமிழர்களுக்கு எதிராக ஈடுபட்டதாகச் சொல்வது! பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் நலனுக்காக ஐ.நா சார்பில் இலங்கைக்கு வந்திருக்கும் நவநீதம் பிள்ளை இப்பொழுது மீண்டும் இந்த அருவெறுப்பான குற்றச்சாட்டைப் பற்றிப் பேசப் போக, தற்பொழுது மீண்டும் இது உலக சமுதாயத்தின் விவாதப் பொருளாகியிருக்கிறது!

 விடுதலைப்புலிகள் போலத் தோற்றமளிக்கும் சிலர் தமிழ் மக்களைச் சுட்டுக் கொல்வது போல் வெளியான காணொலி (வீடியோ) ஒன்று முதன்முதலாக இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தது. அதன் பிறகு வெளிவந்த, ஈழத் தமிழினப் படுகொலை பற்றிய ஐ.நா வல்லுநர் குழுவின் தொடக்க நிலை விசாரணை அறிக்கையிலும் இந்தக் குற்றச்சாட்டு இடம்பெற்றது. அதை அடுத்து வெளிவந்த, உலக மன்னிப்பு கழகம் (Amnesty) முதலான எல்லா மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகளிலும் இதே குற்றச்சாட்டு குறிப்பிடப்பட்டது. மீண்டும் மீண்டும் தொடர்ந்து எல்லா மட்டங்களிலும் இந்தக் குற்றச்சாட்டு பேசப்பட்டுக் கொண்டுதான் வருகிறது. ஆனால், இன்று வரை இதற்குத் தமிழர் தரப்பிலிருந்து யாருமே பதிலளிக்காமல் இருப்பது இந்தக் குற்றச்சாட்டை விடக் கொடுமையான ஒன்று!

தலைவர்.வைகோ அவர்களோ, ஐயா பழ.நெடுமாறன் அவர்களோ, அண்ணன்.சீமான் அவர்களோ, அண்ணன்.கொளத்தூர் மணி அவர்களோ... யாருமே இந்தக் குற்றச்சாட்டு பற்றி இதுவரை எந்த விதமான விளக்கமும் அளிக்கவில்லை. விடுதலைப்புலிகளின் வெளிப் படையான ஆதரவாளர்களும், உண்மையான தமிழ்த் தலைவர்களுமான இவர்களே விடுதலைப்புலிகளுக்கு எதிரான இந்தச் சகிக்க முடியாத குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்காமல் இருப்பதுதான் இந்தக் குற்றச்சாட்டின் மீதான நம்பகத்தன்மையையே உறுதிப்படுத்தி வருகிறது என்பதைக் கனிவு கூர்ந்து இவர்கள் முதலில் உணர வேண்டும்!

தமிழினப் படுகொலை பற்றி உலக நாடுகளும், அதன் பிரதிநிதிகளும் 

பேசும்பொழுது, பன்னாட்டு அமர்வுகளில் இது பற்றி விவாதம் எழும்பொழுது, வடநாட்டு, வெளிநாட்டு ஊடகங்களில் இது குறித்து உரையாடப்படும்பொழுது இப்படி உலகில் யார், எங்கே இந்த இனப் படுகொலை குறித்துப் பேசினாலும் இலங்கை மீதான குற்றச்சாட்டுகளைப் பற்றி மட்டுமல்லாமல் விடுதலைப்புலிகள் மீதான இந்தக் குற்றச்சாட்டைப் பற்றியும் சேர்த்துத்தான் பேசுகிறார்கள், விவாதிக்கிறார்கள். ஆனால், நம் தமிழ்நாட்டுத் தலைவர்களும், தமிழ்நாட்டு ஊடகங்களும் மட்டும் ஈழத்தமிழினப் படுகொலை பற்றிய தங்களுடைய எந்த ஒரு பேச்சிலும், எழுத்திலும் இது பற்றி மூச்சு கூட விடுவதில்லை. இது, மேலும் இந்தக் குற்றச்சாட்டுக்கு அளவிட முடியாத வலிமையைச் சேர்க்கிறது!

இப்பொழுதுதான் ஈழப் பிரச்சினை பற்றியும், விடுதலைப்புலிகள் பற்றியுமான நல்ல ஒரு விழிப்புணர்வு தமிழ்நாட்டிலும், உலகத் தமிழர்களிடையிலும் பரவி வருகிறது. விடுதலைப்புலிகள் என்றாலே தீவிரவாதிகள் என்றும், இராஜீவ் காந்தி எனும் தர்மத்தின் தலைவனைக் (!) கொன்றவர்கள் என்றும், உலக நாடுகள் அனைத்தாலும் தடை செய்யப்பட்ட கொடும் குற்றவாளிகள் என்றும்தான் பெரும்பாலான மக்கள் கருதி வந்தார்கள். ஆனால், நடந்த தமிழினப் படுகொலையும், அது பற்றித் தலைவர்.வை.கோ, அண்ணன்.சீமான் முதலானோர் தொடர்ந்து மக்களிடையே ஆற்றிய எழுச்சி உரைகளும், இனப்படுகொலை பற்றி இணையத்தில் தமிழ்ப் பற்றாளர்களும் அறிஞர்களும் பரப்பிய விழிப்புணர்வுத் தகவல்களும்தான் கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு உண்மையைப் புரிய வைத்திருக்கின்றன. விடுதலைப்புலிகள் போன்ற ஓர் அமைப்புக்கு எப்பேர்ப்பட்ட ஒரு கட்டாயத் தேவை இலங்கையில் நிலவுகிறது என்பது மக்களுக்கு இப்பொழுது தெரிய வந்திருக்கிறது. அவர்கள் மீது எத்தனை பொய்க் குற்றச்சாட்டுகள் யார் யாரால், எந்தெந்த நாடுகளால், என்னென்ன நோக்கத்துடன் சுமத்தப்பட்டுள்ளன என்பதும் புரியத் தொடங்கியிருக்கிறது.

இந்தப் புரிதல்தான் அண்மையில் உலகமே திரும்பிப் பார்க்கும்படியான அவ்வளவு பெரிய மாணவர் கிளர்ச்சியைத் தமிழ்நாட்டில் மலர வைத்தது!

இந்நிலையில், ஈழத் தமிழர்கள் சார்பானவராக நம்பப்படுகிற, ஈழத் தமிழர்களுக்காக ஐ.நா-வில் முழங்கும் தமிழராகத் திகழ்கிற நவநீதம் பிள்ளை அவர்களால் மீண்டும் புலிகள் மீதான இந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு கிளம்பியிருப்பதும், ஆனாலும் இந்தக் குற்றச்சாட்டுக்குத் தமிழ்த் தலைவர்கள் பதிலளிக்காமல் இன்னமும் அமைதி காப்பதும் ஈழப் பிரச்சினை, விடுதலைப்புலிகள் ஆகியவை பற்றி இப்பொழுது நிலவும் நல்ல விழிப்புணர்வுச் சூழ்நிலையைக் கண்டிப்பாகப் பாதிக்கும் என்பதை அருள் 
கூர்ந்து அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்! மேலும், இந்தக் குற்றச்சாட்டு விடுதலைப்புலிகளை மட்டுமின்றி அவர்களை ஆதரிக்கிற தமிழ்நாட்டுத் தலைவர்கள், இயக்கங்கள் ஆகியோரையும் இவர்களைப் பின்தொடரும் இலட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களையும் கூட இழிவுபடுத்துவதாக இருக்கிறது! எல்லாவற்றுக்கும் மேலாக, நமது இனப்படுகொலைக்கான நீதி கோரும் முயற்சிக்கும், தமிழீழக் கோரிக்கைக்கும் கூட இந்தக் குற்றச்சாட்டு பலவீனம் சேர்க்கிறது.

ஒருபுறம், நம் இனத்தை அழித்த இலங்கை ஆட்சியாளர்களைத் தண்டிக்கக் கோரித் தமிழர்கள் நாம் உலகெங்கும் போராடிக் கொண்டிருக்கையில், மறுபுறம் உலகமே ஓரணியில் நின்று விடுதலைப்புலிகள் மீதும் இதே போன்ற குற்றச்சாட்டை முன்வைப்பது கண்டிப்பாக நம் தரப்புக் குற்றச்சாட்டை வெகுவாகப் பலவீனப்படுத்துகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதே போல, தமிழீழம் கோரிய விடுதலைப்புலிகளைத் தவறானவர்களாகவும், தமிழர்களுக்கு எதிரானவர்களாகவும் காட்டும் இந்தக் குற்றச்சாட்டின் மூலம் ‘தமிழீழம் என்கிற கோரிக்கையே தவறானது, தமிழர்களுக்கு எதிரானது’ என்கிற தோற்றம் உருவாகிறது; படிப்படியாக உருவாக்கப்பட்டும் வருகிறது. தனி நாடு கேட்ட ஒரே காரணத்துக்காகத் தமிழ் இனத்தையே அழிக்கப் பேரழிவு ஆயுதங்களைக் கையிலெடுத்த இலங்கை முதலான உலக நாடுகள், அந்தக் கோரிக்கையையும் அழிக்க இப்பொழுது இந்த அரசியல்ரீதியான நச்சு ஆயுதத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் உண்மை!

இந்த உலக மகா அரசியல் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாமல், இந்தக் குற்றச்சாட்டுக்குத் தக்க பதிலளிக்காமல் வெறுமே தமிழீழத்துக்காகவும், இனப்படுகொலைக்கான நீதிக்காகவும் நாம் போராடுவது எந்த விதத்திலும் பலனளிக்காது என்பதை நம் தமிழ்த் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாதது!

எனவே, இனிமேலாவது தமிழ்நாட்டுத் தலைவர்களும், தமிழ் ஊடகங்களும் இந்தக் குற்றச்சாட்டு குறித்த தங்கள் மௌனத்தை உடைத்துக் கொள்ள வேண்டும்! உலகமே சேர்ந்து விடுதலைப்புலிகள் மீது சுமத்தும் இந்தக் கொடிய குற்றச்சாட்டுக்குச் சரியான பதிலை, விளக்கத்தை இப்பொழுதாவது முறைப்படி அளிக்க வேண்டும்!

அந்த அளவுக்கு இது ஒன்றும் பதிலளிக்க முடியாத குற்றச்சாட்டும் இல்லை.

விடுதலைப்புலிகள் பற்றியும், அவர்கள் நற்பெயரைக் குலைப்பதற்காக இலங்கை அரசாங்கங்கள் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் திட்டமிட்ட நடவடிக்கைகள் பற்றியும் ஓரளவு நன்றாகவே அறிந்தவன் என்னும் முறையில் இந்தக் குற்றச்சாட்டு பற்றி எனது கருத்து என்னவென்றால், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெயரைக் கெடுப்பதற்கெனவே இலங்கை இராணுவத்தில் ‘பச்சைப் புலிகள்’ என ஒரு தனிப் பிரிவே இயங்கி வருகிறது. இது அவர்கள் செயலாகத்தான் இருக்க வேண்டும்.

ஒழுக்கமின்மை, துரோகம் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட காரணத்துக்காக விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை விலைக்கு வாங்கி, மூளைச் சலவை செய்து, அவர்களுடன் சிங்கள இராணுவத்தினர் பலரையும் கலந்து தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்தப் ‘பச்சைப் புலிகள்’ பிரிவு. விடுதலைப்புலிகள் தோற்றத்திலேயே சென்று தமிழ்த் தலைவர்கள், சிங்களப் பொதுமக்கள் ஆகியோரைக் கொல்வதன் மூலம் விடுதலைப்புலிகளைத் தீவிரவாதிகள் போலக் காட்டுவதும், அதே போல் ஈழத் தமிழ் மக்களின் குடியிருப்புகளுக்குள் விடுதலைப்புலிகள் தோற்றத்தில் புகுந்து அவர்களைக் கொல்வதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு விடுதலைப்புலிகள் மீது இருக்கும் நம்பிக்கையைக் குலைப்பதுமே இவர்கள் பணி! அந்தக் காலத்தில் இலங்கைத் தமிழர் தலைவர்.உயர்திரு.அமிர்தலிங்கம் அவர்களைக் கொன்று அந்தப் பழியை விடுதலைப்புலிகள் மேல் சுமத்தியதுதான் இவர்கள் செய்த முதல் வேலை. அதன் பின் இப்படி இலங்கைத் தமிழ்த் தலைவர்கள், ஈழத் தமிழர்கள், சிங்களப் பொதுமக்கள் ஆகிய பலரை இவர்கள் இப்படி விடுதலைப்புலிகள் தோற்றத்தில் போய்க் கொன்றிருக்கிறார்கள்!

இவ்வாறு பல்லாண்டுகளாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெயரைக் கெடுப்பதற்கான இத்தகைய செயல்களில் ஈடுபட்ட இவர்கள் நடந்த அந்த இனப்படுகொலையின்பொழுது மட்டும் தமது கைவரிசையைக் காட்டாமலா இருந்திருப்பார்கள்? அதுவும் விடுதலைப்புலிகள் எல்லா வல்லமைகளோடும் சுற்றி வந்து கொண்டிருந்த காலத்திலேயே ஈழத் தமிழர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பல கொடுமைகளில் அவர்களால் ஈடுபட முடிந்தது என்றால், இனப்படுகொலையின்பொழுது, அந்த உச்சக்கட்டப் போர்ச் சூழலில், விடுதலைப்புலிகளின் முழுக் கவனமும் எல்லைப் பாதுகாப்பிலேயே குவிந்திருந்த நேரத்தில் இவர்களால் வெகு எளிதாகத் தமிழர் பகுதிக்குள் ஊடுருவி அவர்களைக் கொன்றிருக்க முடியாதா? எனவே, கண்டிப்பாக இது அந்தப் ‘பச்சைப் புலிகள்’ பிரிவினருடைய வேலையாகத்தான் இருக்க முடியும்.

விடுதலைப்புலிகள் தோற்றத்தில் அவர்கள் செய்த இந்தக் கொடும் செயல்களைக் காணொலியில் பார்த்து விட்டும், அவர்களை விடுதலைப்புலிகள் என்று நம்பி ஏமாந்த ஈழத் தமிழர்களின் வாக்குமூலத்தைக் கொண்டும்தான், ‘இனப்படுகொலையின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப்புலிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக’ ஐ.நா முதலான பன்னாட்டு அமைப்புகளும், உலகத் தலைவர்களும், ஊடகங்களும் குற்றஞ்சாட்டி வருகின்றன என்பதுதான் என் வாதம்.

ஆக, கொலையும் செய்துவிட்டு, கொலைக்கான பழியையும் செத்தவன் மீதே போடும் வேலை இது! ஓர் இனத்தையே அழித்து ஒழித்துவிட்டு, அதற்கு நியாயம் கேட்டுக் குரல் எழுப்பினால் அழித்தவர்களே உங்கள் ஆட்கள்தான் என்று மகா மட்டமான திசை திருப்பல் வேலையைச் செய்ய முயல்கிறது இலங்கைச் சிங்கள அரசு.

ஆனால், இது நான் சொன்னால் எத்தனை பேருக்குப் போய்ச் சேரும். மிஞ்சி மிஞ்சிப் போனால் இதைப் படிக்கும் ஓர் ஐந்நூறு அறுநூறு பேருக்குப் போய்ச் சேருமா? அதுவே பெரிது! தவிர, இப்படி வலைப்பூவில் விளக்கமளிப்பதெல்லாம் பன்னாட்டுக் குற்றச்சாட்டு ஒன்றுக்கான முறையான விளக்கமும் ஆகாது!

எனவே, முன்னரே கூறியபடி, பேரன்புக்கும் தனிப்பெருமதிப்புக்கும் உரிய தலைவர்.வை.கோ அவர்களே! ஐயா பழ.நெடுமாறன் அவர்களே! அண்ணன்.சீமான் அவர்களே! அண்ணன்.கொளத்தூர் மணி அவர்களே! அருள் கூர்ந்து இது பற்றிப் பேச நீங்கள் முன்வர வேண்டும்! விடுதலைப்புலிகளின் இத்தனை ஆண்டுக்காலத் தியாக வாழ்க்கைக்குக் களங்கம் கற்பிக்கும் இந்த உலகளாவிய குற்றச்சாட்டுக்கு நீங்கள்தான் தக்க பதிலடி தர வேண்டும்! விடுதலைப்புலிகளைக் குற்றஞ்சாட்டும் சாக்கில் தமிழீழக் கோரிக்கையை ஒடுக்கவும், இனப்படுகொலைக் குற்றச்சாட்டைத் திசை திருப்பவுமான இந்தச் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டியது தமிழீழ மலர்ச்சிக்கும் இனப்படுகொலைக்கான நீதி கிடைப்பதற்கும் இன்றியமையாதது என்பதால் இதற்கான தக்க விளக்கத்தை முறைப்படி ஐ.நா முதலான பன்னாட்டு அமைப்புகளுக்கு நீங்கள் உடனே அனுப்பி வைக்க வேண்டும்! விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குவதை விட இந்தப் பழியை நீக்குவதுதான் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய முதற் கடமை என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்! அதுவும் விடுதலைப்புலிகளும், அதன் தலைவர்களும் தலைமறைவாக இருக்கும் இன்றைய சூழலில் அவர்கள் மேல் எழுப்பப்பட்டிருக்கும் இந்த அபாண்டமான குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க வேண்டியது உங்கள் கடமை இல்லையா? நீங்களே செய்யாவிட்டால் இதை வேறு யார் செய்வார்?!

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Monday, 2 September 2013

தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு............!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப் படமாகிறது - பிரபாகரன் படம் ஒவ்வொரு தமிழனுக்கும் உந்துசக்தியாக அமையும்! - பழ. நெடுமாறன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை விபரிக்கும் திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக திரைப்பட இயக்குநர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
சந்தனக்காடு தொலைக்காட்சி தொடரின் மூலம் அறியப்பட்டு மகிழ்ச்சி திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர் வ.கௌதமன். இவர் இயக்கப் போகும் புதிய திரைப்படம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பற்றியதாம்.

இது தொடர்பாக இயக்குநர் வ.கௌதமன் கூறுகையில்,

தேசியத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் திரைப்படமாக இது இருக்கும்.  அவரின் சிறு வயது முதல் நடந்திக்கடல் யுத்தம் வரையில் அவர் நடத்திய யுத்தங்களை உள்ளடக்கிய திரைப்படமாக்கத் திட்டமிட்டுள்ளோம்.  இந்த திரைப்படத்துக்கான பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

பிரபாகரன் படம் ஒவ்வொரு தமிழனுக்கும் உந்துசக்தியாக அமையும்! - பழ. நெடுமாறன்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்று படம், ஒவ்வொரு தமிழருக்கும் உந்து சக்தியாக அமையும் என பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த வீடியோ பேட்டி:

 

வரலாற்றில் மிகப்பழமையும் மிகப்பெருமையும் மிக்க புரட்சி யுகத்தை பூக்கச்செய்த பெருமை தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு.

வீரமே ஆரமாகவும், தியாகமே அணியாகவும் கொண்ட அவரது செயல் திறனின் விளைவாக இன்று உலகத் தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள்.

கிழக்கே சீனா முதல் மேற்கே உரோமாபுரி வரை அன்றைய நாளில் நமது தமிழர்கள் புகழ் கொடியை பறக்க விட்டார்கள்.

அந்த வீரம் மிக்க வழியிலே வந்த நம் மக்கள், நமது தமிழர்கள் அடிமை சேற்றில் புழுக்களாக நெளிந்து கொண்டிருந்த போது புலிகளாக மாற்றி உலகத்தையே பிரமிக்க வைத்த பெருமை பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு.

எனது வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பேர் என்னவென்றால் பிரபாகரன் அவர்களின் நட்பும் தோழமையும் எனக்கு கிடைத்ததை பெரும் பேராக கருதுகின்றேன்.

கடந்த முப்பது ஆணடுகளுக்கு மேலாக அவரோடு நெருங்கிப் பழகி அவரது இலட்சிய நோக்கத்தை புரிந்து கொண்டவன் என்கின்ற முறையில் அவர் தலைமை தாங்கி நடத்துகின்ற போராட்டம், தமிழர்களை விடுவிக்கின்ற போராட்டம் மட்டுமல்ல அது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் விடிவை கொண்டுவரப் போகின்ற போராட்டம் என்பதை நான் தெளிவாக உணர்ந்தவன் என்கின்ற முறையில் தெரிவித்த பல செய்திகள், அவர் கைப்பட எனக்கு எழுதிய கடிதங்கள், அவர் மட்டுமல்ல, அவர் பெற்றோரும் குடும்பத்தினரும் கூறிய செய்திகள், அவரின் முக்கிய இளமைப் பருவ தோழர்கள், பிற்காலத்தில் அவரது படையில் தளபதிகளாகி வீர சாகசங்கள் புரிந்தவர்கள், என அவர்கள் எனக்கு தெரிவித்த முக்கிய செய்திகளின் அடிப்படையில் அவரது வாழ்க்கை வரலாற்றை உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்“ என்ற இந்நூலை மூன்று ஆண்டுகள் எழுதியிருக்கின்றேன்.

கடந்த இருபதாம் நூற்றாண்டு உலகெங்கும் பல்வேறு தேசிய இனங்கள் விடுதலைக்காக போராடிய நூற்றாண்டு ஆகும். இன்னமும் அத்தகைய விடுதலைப் போராட்டங்கள் உலகில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இருபதாம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க விடுதலைப் போராட்டங்கள் உண்டு. இந்தியாவின் மகத்தான தலைவர்களில் ஒருவரான நேதாசி சுபாசு(ஸ்) சந்திர போசு(ஸ்) அவர்கள் சிங்கப்பூரிலே சுதந்திர இந்திய அரசை அமைத்து, இந்திய இராணுவத்தை அமைத்து, இந்திய விடுதலைக்காக போராடிய வரலாறு ஒரு மெய் சிலிர்க்க வைக்கும் வரலாறாகும்.

ஆனால் உலகமறிந்த மாபெரும் தலைவர் சுபாசு சந்திர போசு அவர்களுக்கு அன்று வல்லரசாக விளங்கிய யேர்மனி, யப்பான், இத்தாலி, போன்ற நாடுகள் ஆதரவளித்தன.

வியட்நாமின் விடுதலைப் போராட்டத்தை மதிப்புக்குரிய கோசிமின் நடத்திய போது அவருடைய அந்த போராட்டத்திற்கு செஞ்சீனமும் சோவியத் ஒன்றியமும் எல்லாவகையிலும் துணை நின்றன.

அதைப்போல பாலசுத்(ஸ்)தீன விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போது யாசீர் அரபாத் அவர்கள் அதற்கு தலமை தாங்கினாலும், இருபத்தியேழு அரேபிய நாடுகள் அவருக்கு பக்கபலமாக நின்றன.

சோவியத் ஒன்றியம், இந்தியா, செஞ்சீனம் போன்ற நாடுகள் ஆசிய ஆபிரிக்க நாடுகள் எல்லாம் அவருக்கு அங்கீகாரம் அளித்தன. வங்க தேச விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போது இந்தியா முழுமையாக உதவியது.

அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்திய இராணுவத்தை அனுப்பி வங்கதேச விடுதலையை உறுதி செய்தார்.

ஆனால் இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற போராட்டங்களிலேயே தனித்தன்மை வாய்ந்த போராட்டம் எதுவென்று சொன்னால் அது தமிழீழ விடுதலைப் போராட்டம்தான்.

பிரபாகரன் அவர்கள் தலைமையில் தமிழீழ போராட்டம் அன்று நடைபெற்ற போதும், இனி நடைபெறப் போகின்ற போதும் சரி அந்தப் போராட்டத்திற்கு உலகில் எந்த நாடோ, எந்த ஒரு அரசோ, ஒரு சிறு உதவி கூட செய்யவில்லை.

மாறாக இந்தியா போன்ற அண்டை நாடுகளே அதற்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு நின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இந்த சூழ்நிலையில் தமிழீழ தேசியத் தலைவர் பிரகாகரன் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்களின் துணைகொண்டு அவருடைய நாட்டைச் சேர்ந்த இளைஞர்களையும் யுவதிகளையும் மட்டுமே நம்பி இந்த வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கின்றார்.

பிரபாகரன் அவர்களை நான் முன்பு குறிப்பிட்ட உலகறிந்த தலைவர்களோடு ஒப்படும் பொழுது வயதாலும் அனுபவத்தாலும் அவர் மிக மிக இளையவர் என்பதில் சந்தேகமில்லை. அந்த தலைவர்களுக்கு எல்லாம் உலக நாடுகள் பல சேர்ந்து துணை நின்றன. அதனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

ஆனால் நாடோ, எந்த அரசோ உதவாமல் தனி மனிதனாக பிரபாகரன் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டம் ஆங்கிலத்திலே சொல்வதானால் இது தனிப்பட்ட உள்ளது .. (It is Unique...) இந்த மகத்தான போராட்டத்திற்கு துணை நிற்க வேண்டிய கடமை எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு.

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீர காவியத்தை அடிப்படையாக கொண்டு நம்முடைய இயக்குனர் வ.கௌதமன் அவர்கள் திரைக் காவியமாக அதை படைக்கவிருப்பதை அறிய மகிழ்கின்றேன்.

நம்முடைய தம்பி கௌதமன் தியாக முத்திரை பதித்த ஒரு தமிழ் தேசியக் குடும்கத்தின் வழித்தோன்றல். அவர் இந்தப் படத்தை எடுப்பது எல்லாவகையிலும் சாலச் சிறந்தது என்று நான் கருதுகின்றேன்.

வள்ளுவ பேராசான் சொன்னது போல "இதனை இவன் இதனால் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்" என்று சொன்னார்.

உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பத்து கோடி தமிழர்களுக்கு நடுவே புரட்சி மலராக மலர்ந்து மணம் வீசி நமது தமிழின பெருமையை உலகறியச் செய்த தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பற்றிய இந்த திரைக்காவியத்தை எடுப்பதற்கு எல்லா வகையிலும் தகுதி பெற்றவர்.

அதற்கான ஆற்றலும் அறிவும் அவரிடம் நிரம்பவே உண்டு. எல்லாவற்றிற்கு மேலாக ஒரு உண்மையான தமிழனாக திகழ்கின்றார். அவர் இப்படத்தை எடுப்பதை நான் மனதார பாராட்டுகின்றேன்.

மேலும் அவர் படைக்கவிருக்கும் இத்திரைக்காவியத்தை உலகத் தமிழர்கள் வரவேற்பார்கள் என நான் நிச்சயமாக நம்புகின்றேன்.

உலகிற்கு இந்த திரைக்காவியம் ஒரு உன்னதமான தமிழ் மகனின் வரலாற்றை எடுத்துச் செல்லும் காவியமாக இது திகழும். அதற்கு எல்லாவகையிலும் துணை நிற்பதற்கு ஒவ்வொரு தமிழனும் முன்வர வேண்டும்.

மேலும் இத் திரைப்படம் ஒவ்வொரு தமிழனுக்கும் உந்து சக்தியாக அமையும் என்பதால் இதற்கு ஆதரவு தாருங்கள் என்று உங்களை மிக்க பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.


Tuesday, 20 August 2013

சிறு குருவி இயந்திரம் ஒன்றை................!


பதினாறு செண்டிமீட்டர் அளவுள்ள சிறு குருவி இயந்திரம் ஒன்றை அமெரிக்க பாதுகாபபுத் துறையின் பெண்டகனுக்கு உருவாக்கப் பட்டுள்ளது.


நாலு மில்லியன் டொலர் செலவழித்து உருவாக்கப்பட்ட இந்தக் குருவி போர் முனையில் எதிரிகளின் கண்ணுக்குப்படாமல் அதில் பொருத்தப்பட்டுள்ள சிறு ஒளிப்பதிவுக் கருவி மூலம் எதிரியின் நிலைகளைப் படம் பிடித்துவிடும்.

இச்சிறு விமானம் மணிக்கு பதினொரு மைல் வேகத்தில் பறக்க வல்லது. ஏற்கனவே உள்ள சிறு உளவு விமானங்கள் காற்றாடிகளுடன் பறப்பதால் எதிரிகள் அவற்றை அடையாளம் கண்டு விடுகின்றனர்.

இந்தக் குருவி விமானம் சிறகடித்துப் பறக்கும். மேலும் கீழும் பக்கவாட்டிலும் பறக்க வல்லது. இந்தச் சிறு இயந்திரக் குருவி திறந்த சாளரங்களுடாகவும் நுழையக் கூடியது. உண்மையான குருவிகள் போலவே மின்சாரக் கம்பிகளிலும் உட்காரும்.

சிறு விமானங்கள் உருவாக்கலில் இந்தக் குருவி விமானம் ஓரு புதிய பரிமாணத்தை கொண்டுவந்துள்ளது. இதை தொடர்ந்து வரும் கருவிகள் உளவுத் துறையில் பெரும் பங்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.

Friday, 16 August 2013

மூவரில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா.....!

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய சுதந்திர வரலாற்றில், பால கங்காதர திலகர் காலத்தில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த மூவர் மறக்கமுடியாத தியாகசீலர்களாவர். இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் சுதந்திர தாகம் ஏற்பட காரணமாயிருந்த அம்மூவரில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா.

மற்ற இருவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, எட்டயபுரம் தந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோராவர்.


மற்ற இருவரைப் பற்றி இந்த வலைத்தளத்தில் வேறோர் இடத்தில் வரலாற்றைக் கொடுத்திருக்கிறோம். இப்போது 'வீரமுரசு' எனப் புகழப்படும் சுப்பிரமணிய சிவா பற்றி பார்ப்போம். வீரத்துறவி என்று தலைப்பில் கொடுத்துவிட்டு, இவர் ஓர் சுதந்திரப்போராட்ட வீரர் என்கிறீர்களே என ஐயப்பாடு எழலாம். ஆம்!

இவர் அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்தே சுதந்திரத்துக்காகப் போராடினார், ஆகையால் இந்தத் தலைப்பு அவருக்கு மிகவும் பொருந்தும்.

இவர் பிறந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு. இவர் தந்தையார் ராசம் ஐயர், தாயார் நாகம்மாள். இவருக்கு இரு சகோதரிகள் அவர்கள் ஞானாம்பாள், தைலாம்பாள். ஒரு சகோதரரி வைத்தியநாதன் என்று பெயர். இவர் கோவை புனித மைக்கேல்சு(ஸ்) கல்லூரியில் படித்தார்.

பல்கலைக்கழக நுழைவுரிமை பேறு (Matriculation )தேர்வில் தோற்றார். தூத்துக்குடியில் காவல்துறை அலுவலகத்தில் அட்டெண்டராக வேலை பார்த்தார். வாழ்க்கையில் விரக்தியுற்று துறவியானார்.அவர் நினைவாக அவ்வூரின் பேருந்து நிலையம் இவர் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த தியாகிக்குச் செலுத்தும் அஞ்சலி அது.

சிறு வயதில் வறுமைக்கு ஆட்பட்டு திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புறையில் உண்டு வசித்தார். அங்கிருக்கும் நாளில் இவருக்கு தேசபக்தி இயல்பாக உண்டாகியது. தன் உள்ளத்தில் ஏற்பட்ட தேசபக்தியை இவர் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.

1906இல் கர்சான் வங்கத்தை மதரீதியில் இரண்டாகப் பிளந்தான். நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் 'வந்தேமாதரம்' எனும் சுதந்திர கோசம் எழுந்தது. அப்போது தூத்துக்குடியில் வக்கீல் ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் நிறுவனம் தொடங்கினார்.

சிதம்பரம் எனும் காந்தம் சிவா எனும் இரும்பைத் தன்வசம் இழுத்துக் கொண்டது. இவர்களின் சுதேச உணர்வைத் தன் 'சுதேச கீதங்களால்' பாரதியார் தூண்டிவிட்டார்.

சிதம்பரம் பிள்ளை பேசும் கூட்டங்களில் எல்லாம் இவரும் வீரவுரையாற்றினார். அவர் பேச்சில் அனல் வீசியது. அந்த சமயம் சென்னை கடற்கரையில் தேசபக்தர் விபின் சந்திரபால் வந்து தொடர்ந்து சொற்பொழிவாற்றினார்.

தெற்கில் இம்மூவரின் மேடைப்பேச்சு, சென்னையில் பாலரின் சொற்பொழிவு இவை சேர்ந்து சுதந்திர நாதம் எங்கும் எதிரொலிக்கத் தொடங்கியது. 1907இல் சூரத் நகரில் நடந்த காங்கிரசு மாநாட்டுக்குப் பிறகு காங்கிரசில் திலகரின் கை ஓங்கியது.

அப்போது தூத்துக்குடியில் சிவா தொடர்ந்து மேடைகளில் சுதந்திரம் கேட்டு முழங்கினார். அதோடு தூத்துக்குடி கோரல் மில் வேலை நிறுத்தம் வெற்றி பெறவும் பாடுபட்டார். தொழிலாளர் பிரச்சினையிலும் இவர் கவனம் சென்றது.

அந்தக் காலத்தில் இந்து முசுலீம் ஒற்றுமையை வலியுறுத்தித் தலைவர்கள் பேசிவந்தார்கள். சிவாவும் தன் பேச்சு துவங்கு முன்பாக 'வந்தேமாதரம்', 'அல்லாகு(ஹு)அக்பர்', என்று முழக்கமிடுவாராம்.

தெற்கே சுதந்திரக் கனல் பரவி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள், வ.உ.சி. சிவா உட்பட பலர் மீது வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் வ.உ.சி. தீவாந்தர தண்டனை பெற்றதும், மேல் முறையீட்டில் அது குறைக்கப்பட்டதும் நமக்குத் தெரியும்.

சிவா சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் முதலில் ஆறாண்டு காலம் சிறை தண்டனை பெற்று ஜுலை 1908 முதல் நவம்பர் 1912 வரை சிறையிலிருந்தார். இவருடைய சிறை வாழ்க்கையில் இவர் அனுபவித்தத் துன்பம் சொல்லத் தரமன்று.

சிறை இவருக்கு அளித்த சீதனம் பார்த்தவர் அஞ்சும் தொழுநோய். இதனை அவர் "கொடியதோர் வியாதி கொல்லுது என்னை" என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். 1912இல் இவர் சென்னை மயிலாப்பூரில் குடியேறினார்.

சென்னையில் இவர் இருந்த நாட்களில் இவர் தன்னுடன் ஒரு தொண்டரை அழைத்துக் கொண்டு ஒரு மேசை, நாற்காலி இவற்றையும் அத்தோடு ஒரு பெட் ரோமாக்சு(ஸ்) விளக்கையும் எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச் செல்வார்.

அங்கு மக்கள் கூடும் ஒரு நல்ல இடத்தில் மேசையைப் போட்டு அதன் மீது ஏறி நின்று உரத்த குரலில் மகாகவி பாரதியின் பாடல்களைப் பாடுவாராம். அப்போது அங்கு கூடும் கூட்டத்தில் இவர் சுதந்திரப் பிரச்சார்ம் செய்வாராம். இப்படித் தன்னலம் கருதாத தேசபக்தனாக இவர் கடமையே கருத்தாக இருந்தார். 

இரண்டாம் முறையாக இவர் இரண்டரை வருடங்கள் நவம்பர் 1921 முதல் சிறையில் இருந்தார். இவர் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, நல்ல எழுத்தாளர், நல்ல பத்திரிகை ஆசிரியர். "ஞானபானு" எனும் பெயரில் இவர் ஓர் பத்திரிகை நடத்தினார். மகாகவி பாரதியும், வ.வெ.சு.ஐயரும் இந்த பத்திரிகையில் எழுதி வந்தார்கள்.

அதன் பின்னர் 'பிரபஞ்சமித்திரன்' எனும் பெயரிலும் இவர் ஒரு பத்திரிகை நடத்தினார். இரண்டாம் முறை இரண்டரை ஆண்டுகள் சிறை சென்று விடுதலையானபின் தொழுநோயின் கடுமை அதிகமாக இருந்ததாலும் இவர் மிகவும் வருந்தினார்.

சேலம் மாவட்டத்தில் அப்போது இருந்த பாப்பாரப்பட்டி எனும் கிராமத்தில் பாரதமாதாவுக்கு ஒரு ஆலயம் எழுப்ப இவர் பெரிதும் முயன்றார். அதற்காக சித்தரஞ்சன் தாசை கல்கத்தாவிலிருந்து அழைத்து வந்து 1923இல் அடிக்கல்லும் நாட்டினார்.

மறுபடியும் சிவா மூன்றாம் முறை சிறை செல்ல நேர்ந்தது. இது ஒரு ஆண்டு சிறைவாசம். அதுகுறித்து இவர் ஒரு வழக்கு தொடர்ந்து அதிலிருந்து விடுதலையானார். இவர் மகாத்மா காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை.

தீவிர வாதமே இவரது எண்ணம். இவர் தொழுநோயினால் பாதிக்கப்பட்டதனால் இவரை அன்றைய பிரிதானிய அரசு ரயிலில் பயணம் செய்வதை தடை செய்திருந்தது.

எனவே இவர் மதுரையிலிருந்து தன் உடல் உபாதையையும் பொருட்படுத்தாமல் பாப்பாரப்பட்டிக்கு வந்துவிட வேண்டுமென்று கால்நடையாகவே பயணம் செய்து வந்து சேர்ந்தார். இவருக்கு வயது அதிகம் ஆகவில்லையாயினும், தொல்லை தரும் கொடிய வியாதி, ஆங்கில அரசின் கெடுபிடியினால் கால்நடைப் பயணம் இவற்றல் ஓய்ந்து போனார்.

இவர் யாருக்காகப் போராடினாரோ அந்த மக்களும் சரி, சுதந்திரத்துக்காக முன்நின்று போராடிய காங்கிரசும் சரி, இவர் காந்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் இவர் ஒதுக்கப்பட்டார். மனம் உடைந்த சிவா 23-7-1925இல் இவ்வுலக வாழ்க்கையை நீத்து அமரரானார்.

வாழ்க தீரர் சுப்பிரமணிய சிவாவின் புகழ்!

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.

Tuesday, 13 August 2013

தமிழர்கள் யார்.............?

இதுதான் முதலில் அதிகம் பார்க்கபடவேண்டியது .பல குழுக்கள் தமிழை பேசினர். ஆனால் அவை கொஞ்சம் கொஞ்சம் வேறுப்பட்டே இருந்தன. அப்புறம் அவர்களின் எழுத்துவடிவங்கள் வெவ்வேறானவை.

பல்லவ வட்டெழுத்து முறையில் இருந்தே தன் வரி வடிவத்தை தாய் ( தாய்லாந்தின் ) மொழி எடுத்துக்கொண்டது.


மூர்கள் என்று சொல்லப்படும் மொரக்காவை சார்ந்தவர்கள். ஐரோப்பியர்கள்; கிரேக்கர்கள்; எகிப்தியர்கள் என பல வர்தககுளுக்கள் அவர்களின் மொழிபயன்பட்டை அதிகபடுத்தியவை.

தமிழர்கள் இது போன்றே இருந்து வந்து உள்ளனர். இப்ன் பட்டுடா என்கிற அரேபியாவின் வழிப்போக்கன் கேரளம் வந்தது இன்னும் வரலாற்றில் உண்டு. ஆனால் பட்டுடவின் மரக்கலம் உடைந்த தருணத்தில் அவனுக்கு மன்னன் உதவில்லை என்றும் உதவினார் என்றும் பதிவு செய்யபடுகிறது.

தமிழர்களின் வணிக பொருள் திரவியங்கள். அதில் மிளகும் அடக்கம். மிளகு தமிழ் மண்ணில் மட்டுமே ( கேரளமும் ) விளைந்ததாக பதிய படுகிறது.

ஏசுவின் பிறப்பின் தருணத்தில் ஏசுவை காண வந்தது திரவிய வர்தர்கர்கள் - கிழக்கில் இருந்து வந்தவர்கள் - என்று நம்பபடுகிறது. இது உண்மையாக இருந்தால் - அவர்கள் தமிழர்கள் ஆக இருக்கலாம்.

சுமேரியர்களுடன் தமிழர்கள் தென் அமெரிக்காவில் கலந்துகொண்டனர் என்று சொல்லப்படுகிறது. மேக்சிகோவில் உள்ளவர்கள் அந்த மண்ணின் மனிதர்களைத்தான் திருமணம் செய்து கொண்டனராம். இது அங்கே விதி போல் கடைபிடிக்கபட்டிருக்கலாம். வெள்ளையர்கள் வந்த தருணத்திலும் இந்த நிலை என்று ஒரு முறை அறிந்துகொண்டேன்.

முதல் நாடுகள் (First Nations) என்று ஒரு குழு கனடா மண்ணில் உண்டு - இவர்கள் பூர்விகர்களுக்கு பின்னால் வந்திருக்கலாம் - இவர்கள் வணிக குழுவாக இருக்கலாம். எனக்கு இது தொடர்பாக முழுமையாக தெரியவில்லை.

மேக்சிகோவின் பல நகர் பெயர்கள் தமிழ் பெயர்களின் திரிபே என்று சில ஆய்வாளர்கள் பதிவு செய்கின்றனர். மலையூர் என்கிற ஊரின் பெயரே மலேசியா என்கிறது ஆங்கிலர்களின் ஆய்வு.

ஆக வெள்ளையர்களின் வரவிற்கு முந்தய வரலாற்றில் தமிழர்கள் என்று எந்த நிலையிலும் தமிழர்கள் அறியப்படவில்லை அவர்களின் குழு பெயரிலே அறியப்பட்டனர். மாயன்கள் - அபோர்கின்கள் - ஈழர்கள் - வேட்டுவர்கள் - நாகர்கள் - யட்சர்கள் ( இந்த பெயர் பற்றி ஆய்வு செய்வது நலம் ) என்று நிறைய குழுக்களாகவே தமிழன் அறியப்பட்டான்.

தமிழனாய் அல்ல. இன்றும் தமிழர்களை குழு பெயர் சொல்லி குறிக்கும் வழக்கம் மலையாள பூமியில் உண்டு. பாண்டிகள் நாம் சேரர்களுக்கு.

வழக்கம் போல் பிரித்தானியா ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் BBC (British Broadcasting Corporation) வாயிலாக தமிழர்களுக்கு உரிமை கொண்டாடக் கூடிய நிலப்பரப்பு தமிழர்களின் ஆள்மைக்குள் இருக்கவில்லை எனச்சொல்லுவதாகவே இந்த ஆய்வு தமிழர்கள்மீதும், தமிழர்கள் வரலாற்றின் மீதும் திணிக்க்கப்பாடுவதாகவே எண்ணத்தோன்றுகின்றது. 

தமிழ்மக்களே எங்களுக்கு என சொந்த நாடு இல்லாத காரணத்தால் உலகமும், தமிழர்களை அழிக்க நினைக்கும் இனங்களும் தங்களது அரசு, தமது கட்டுப்பாட்டினுள் இருக்கும் ஊடகங்கள் ஊடாகவும் தமிழர்களின் வரலாற்றையும் தமிழ்மக்கள் சார்பான அனைத்து செயற்பாடுகளையும் ஒடுக்குவது, அழிப்பதே நோக்கமாகும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.

Saturday, 10 August 2013

ஈழத்தில் தமிழர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுமா என்ன...?

நடுங்க ஆரம்பித்துதது விட்டதா இலங்கை ?

இன்றைய திகதியில் இலங்கைக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர், ஒரு பேருந்து ஓட்டுனரின் மகள் என்று சொன்னால் நம்புவீர்களா! பாரதத் திருநாட்டின் பிரதமரைப் பார்த்தே பயப்படாத (!) இலங்கை அரசு, ஒரு பேருந்து ஓட்டுனரின் மகளைப் பார்த்து நடுங்குவதாவது – என்று நம்பிக்கையே இல்லாமல் திருப்பிக் கேட்பீர்கள். ஆனால், அந்த பேருந்து ஓட்டுனரின் மகள் பெயரைச் சொன்னால், நான் சொல்வதை நிச்சயமாக நம்புவீர்கள். அவரது பெயர், நவநீதம்பிள்ளை.

இப்போது சொல்லுங்கள் நம்புகிறீர்களா இல்லையா!
(சும்மா பேரைச் சொன்னாலே நடுங்குதுல்ல!)


ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையராக நவநீதம்பிள்ளை மட்டும் இல்லையென்றால், இந்நேரம் ‘இனப்படுகொலை’ என்கிற குற்றச்சாட்டை, செம்மணிப் புதைகுழிக்குப் பக்கத்திலேயே குழிதோண்டிப் புதைத்திருப்பார்கள். அந்த ஒற்றைப் பெண்மணியால் உயிர்த்திருக்கிறது அந்தக் கடுமையான குற்றச்சாட்டு. ‘சர்வதேச சுதந்திர விசாரணையின் மூலமே இலங்கையில் என்ன நடந்தது என்கிற உண்மையை வெளிக்கொண்டுவர முடியும்’ என்று நவ்விப் பிள்ளை என்று அன்போடு அழைக்கப்படும் நவநீதம்பிள்ளை சொல்கிற போதெல்லாம் வியர்த்துப் போகிறது புத்தனின் புத்திரர்களுக்கு!

இத்தனைக்கும், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி கேட்டுக் குரல் கொடுக்கும் எவரும், கண்மூடித்தனமாகவோ முட்டாள்தனமாகவோ பேசவில்லை. விசாரணையே இல்லாமல் ராசபக்சேவைத் தூக்கில் போடு என்றோ, எங்கள் சகோதரிகளைக் கற்பழித்த அவனது உறுப்புகளையோ துருப்புகளையோ உப்புக் கண்டம் போடவேண்டும் என்றோ கோரவில்லை எவரும். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்து என்றுதான் சொல்கிறோம். தன்னுடைய உயிர் நண்பனின் அனுக்கிரகத்தால் இத்தனை நாளாகக் குற்றவாளிக் கூண்டில் நிற்காதிருக்கிறது இலங்கை. இன்னும் நீண்ட நாளைக்கு இந்த நாடகம் நீடிக்காது – என்பதை உணர்த்துவதாக இருக்கிறது நவநீதம் பிள்ளையின் விசயம்.

அடுத்த வாரம் இலங்கைக்குச் செல்கிறார் நவ்விப் பிள்ளை. மழையில் நனைவதற்கு முன்பே சளியில் அவதிப் படுகிற சுவாசகாசம் (Asthma) நோயாளி மாதிரி, இப்போதே நெளிந்துகொண்டிருக்கிறது ராசபக்சே அரசு.

நவ்விப் பிள்ளையின் பாதுகாப்பு ஆலோசகர், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க இலங்கைக்கு வந்திருக்கிறார். நடந்த இனப்படுகொலையின் சூத்திரதாரிகளில் ஒருவனான சரத் பொன்சேகா ‘நான் நவ்விப்பிள்ளைச் சந்தித்தே ஆகவேண்டும்’ என்று ஒற்றைக்காலில் நிற்கிறான். நவ்விப் பிள்ளை நாட்டின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் தடையின்றிப் போகலாம் – என்று அறிவித்திருக்கிறது இலங்கை. எந்த இலங்கை? ஐ.நா. நியமித்த நிபுணர் குழுவைக் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்த அதே இலங்கை. அந்த அளவுக்கு நடுங்கிக் கொண்டிருக்கிறது அது.

நவ்விப் பிள்ளையின் இலங்கை விசயத்துக்கு முன்னோட்டமாக, அவர் அனுப்பிய ஐ.நா. குழு ஒன்று சென்ற ஆண்டு இலங்கைக்கு வந்து சென்றது. ‘இறுதிக் கட்டப் போரில் மனித உரிமை மீறல்கள் பற்றி இலங்கையே நடத்திக்கொள்ளும் விசாரணை நம்பகத்தன்மை அற்றது. இலங்கை அதிகாரிகளின் விசாரணை பாரபட்சமானது. அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டது குறித்து விசாரிக்கப்படும் – என்று வாக்குறுதி கொடுத்த இலங்கை, அதை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை’ என்றெல்லாம் குற்றஞ்சாட்டிய அந்தக் குழு, சட்டவிரோதப் படுகொலைகள் தொடர்வதைக் கவலையுடன் சுட்டிக்காட்டியது. அந்தக் குழுவின் அறிக்கை, அடங்காப்பிடாரி இலங்கையின் பிடரியில் விழுந்த அடி.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஐ.நா. அமைப்புக்குள் இருந்துகொண்டே, ‘இறுதிப் போர் நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில் ஐ.நா. தனது கடமையை ஆற்றத் தவறிவிட்டது’ என்று நவநீதம் பிள்ளை ஒளிவு மறைவின்றிப் பேசியது, ஐ.நா.வுக்குள் இருக்கும் இலங்கையின் கர்த்தாக்களை (agent) அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தன்னைத் தானே விசாரிக்க இலங்கை அமைத்த எல்.எல்.ஆர்.சி. விசாரணை ஆணையம் ஒரு மோசடி – என்பதையும், வடகிழக்கில் தமிழ்ப் பெண்கள் அச்சத்துடனேயே வாழ்கின்றனர் – என்கிற உண்மையையும் உலகறிய எடுத்துச் சொல்லி இலங்கையை மேலதிக அச்சத்தில் ஆழ்த்தினார் அவர்.


ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே நவநீதம் பிள்ளை இலங்கைக்கு வந்திருக்க வேண்டியது. பல்வேறு நெருக்கடிகள் மூலம், அவரது வருகைக்கு முட்டுக்கட்டையாக இருந்தது இலங்கை. அவர் வருவதை நீண்ட காலத்துக்குத் தடுக்க முடியாது – என்பதை உணர்ந்துகொண்ட பிறகு, இந்த ஆண்டு பிப்ரவரி – மார்ச்சில் அவரைச் சந்தித்துப் பேச ஒரு குழுவை அனுப்பத் தீர்மானித்தது. அந்தக் குழு, நவ்விப் பிள்ளையிடம் – தமிழர் பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள், மீள் குடியேற்றம், மறு சீரமைப்பு – பற்றியெல்லாம் எடுத்துச் சொல்லும் என்று செய்திகள் வந்தன. (இந்த வார்த்தைகளுக்கான ராயல்டியை நாச்சிகளுக்கும் நா.சா.க்களுக்கும் கொடுத்தார்களா இல்லையா!) இதுபோன்ற வார்த்தை சாலங்களால் ஏமாந்துவிட நவ்விப் பிள்ளை ஒன்றும் அமெரிக்காவோ மார்க்சிசுட் கம்யூனிசுட் கட்சியோ கிடையாது என்பதை, இலங்கை இப்போது உணர்ந்திருக்கும்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டதும், நவநீதம்பிள்ளை சொன்ன வார்த்தைகள் மறக்க இயலாதவை. “உலகின் எந்த மூலையில் எவர் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கான குரலாக மனித உரிமைகள் ஆணையம் இருக்கும்” என்றார் அவர். அப்படிச் சொல்வதற்கான தகுதி அவருக்கு இருந்தது. ஐ.நா.வில் பொறுப்பேற்கும் முன், சுமார் 8 ஆண்டுகள், ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை குறித்து விசாரித்த சர்வதேச குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதிகளில் ஒருவராக இருந்த அவர்தான், அதன் தீர்ப்புரையை எழுதியவர்.

இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான, ஜீன் பால் அகாய்சு – என்பவருக்கு அந்த நடுவர் மன்றம் கொடுத்த தண்டனை உலக வரலாற்றில் மிக முக்கியப் பதிவு.

1994ல், ருவாண்டா நாட்டில் டூட்சி இனத்தவருக்கு எதிராக திட்டமிட்ட இனப்படுகொலை நடந்தது. அந்த நாட்டின் சனநாயகக் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகளில் ஒருவர், ஜீன் பால் அகாய்சு. முன்னாள் ஆசிரியரான அவர், சமயோசிதத்துக்குப் பெயர்பெற்றவர். டாபா பகுதி மேயராக இருந்த அவரது பொறுப்பில்தான் அந்தப் பகுதி காவல்துறை இயங்கியது. அவரது பகுதியில், கூடூ இனத்தைச் சேர்ந்தவர்களால் டூட்சி இன மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர், பாலியல் வன்முறை முதலான பல்வேறு கொடுமைகள் வேறு. அகாய்சுவால் அந்தக் கொலைகளையும் கொடுமைகளையும் தடுக்க முடியவில்லை.

விசாரணையில், அந்தப் படுகொலைகளைத் தடுக்க அகாய்சு முயலவேயில்லை என்பதும், அவரது மேற்பார்வையிலேயே அவை நடைபெற்றன என்பதும், கொல்லப்பட வேண்டிய டூட்சி இனத்தவரின் பட்டியலை கூ(ஹூ)டூ இனத்தவருக்கு அவர்தான் கொடுத்தார் என்பதும், உயிருக்குப் பயந்து ஒளிந்துகொண்டிருந்த டூட்சி இனத்தவரைத் தேடிக் கண்டுபிடிக்க வீட்டுக்கு வீடு சோதனை நடத்த உத்தரவிட்டார் என்பதும் அம்பலமானது. (ஈழத்திலும் இதெல்லாம் அம்பலமாகாமல் போகுமா என்ன?)

இனப்படுகொலை நடந்த அடுத்த ஆண்டு சாம்பியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார் அகாய்சு. ருவாண்டா இனப்படுகொலைக்கான சர்வதேச குற்றவியல் நடுவர் மன்றத்திடம் ஒப்படைப்பதற்காக, குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரை நாடுகடத்திய முதல் ஆப்பிரிக்க நாடு சாம்பியா தான்.

அகாய்சு மீது, இனப்படுகொலை, மனித இனத்துக்கு எதிரான குற்றம், இனப்படுகொலை தொடர்பான யெனீவா மாநாடு மீறல் – உள்ளிட்ட 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

“அகாய்சு-க்கு நடந்த கொலைகளில் நேரடித் தொடர்பு இல்லை, அதைத் தடுத்து நிறுத்தும் அளவுக்கு அதிகாரமும் இல்லை. டாபா மக்களின் வெறிச் செயல்களுக்காக, அகாய்சு பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்” என்று அவரது தரப்பில் வாதிடப்பட்டது. நவநீதம்பிள்ளை இடம்பெற்றிருந்த நடுவர் மன்றம் அந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் மீதான 15 குற்றச்சாட்டுகளில் 9 – ல் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் அடிப்படையில், அகாய்சுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ள அகாய்சு, இப்போது மாலி சிறையில் அந்தத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

இனப்படுகொலை – என்பதைக் குறிக்கும் ‘இனப்படுகொலை’ என்கிற வார்த்தை 1944க்குப் பின்தான் உருவானது. ஜெனோ – என்பது ‘இனம்’ அல்லது ‘இனக்குழு’ என்பதைக் குறிக்கும் கிரேக்க வார்த்தை. சைட் – என்பது படுகொலையைக் குறிக்கும் லத்தீன் வார்த்தை.

போலந்து நாட்டு யூதரான சட்ட வல்லுநர் ரபேல் லெம்கின் தான், நாசிக்கள் நடத்திய இனப்படுகொலையைச் சுட்டிக்காட்ட இந்த வார்த்தையை முதல்முதலாகப் பயன்படுத்தியவர். அவரது தொடர் முயற்சிகளால், 1948ல், இனப்படுகொலையைக் கொடிய குற்றமாக ஐ.நா. அறிவித்தது. இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுக்கவும் தண்டிக்கவும் 1948ம் ஆண்டே யெனீவா மாநாடு உருவானாலும், அதன் அடிப்படையில் முதல் முதலாகத் தண்டனை வழங்கியது, நவநீதம் பிள்ளை இடம்பெற்றிருந்த ருவாண்டா இனப்படுகொலைக்கான நடுவர் மன்றம்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

அந்த நடுவர் மன்றத்தின் தீர்ப்பு திட்டவட்டமானதாகவும் தெளிவானதாகவும் இருந்தது. ஒரு பட்டிமன்றத்திலேயே கூட திட்டவட்டமான தீர்ப்பைத் தெரிவிக்காமல், வழவழா கொழகொழா என்று தீர்ப்பு வழங்கும் நாம், அதன் சில பகுதிகளைத் தெரிந்துகொண்டாக வேண்டும்.

“படுகொலைகள், சித்ரவதைகள், கற்பழிப்பு உள்ளிட்ட மானுட விரோதச் செயல்கள் அனைத்தும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாகக் கருதப்படும்……..

கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைகளை இனப்படுகொலைக் குற்றமாகவே எடுத்துக் கொள்ளவேண்டும்……

டூட்சி இனத்தை அழித்து ஒழிப்பதற்கான தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்தப் பாலியல் பலாத்காரம் நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கற்பழிப்புகள் திட்டமிடப்பட்ட முறையில் நடந்திருக்கின்றன. டூட்சி இன மகளிர் மட்டுமே இந்தக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். இதிலிருந்து, இந்தப் பாலியல் பலாத்காரங்கள், டூட்சி இனத்தை அழிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது……

ஒருவரது விருப்பத்துக்கு மாறாக அவரை பலவந்தப்படுத்தி உடல்ரீதியாக பலாத்காரம் செய்வது – கற்பழிப்பு. அதுவும் இனப்படுகொலையே! ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சிறிது சிறிதாகவோ முழுமையாகவோ அழிக்கும் நோக்கத்துடன் திட்டமிட்டு செய்யப்படுகிற இத்தகைய குற்றம் நிச்சயமாக இனப்படுகொலை தான்”……………………..

இவையெல்லாம் அந்த நடுவர் மன்றத் தீர்ப்பின் சில பகுதிகள். (டூட்சி என்று வரும் இடங்களில் ‘தமிழ்’ என்று மாற்றிப் படித்துப் பாருங்கள்… உள்ளம் கொதிக்கும்!)

போர்க்களங்களில் கற்பழிப்பெல்லாம் சகசம் – என்று சொல்லும் வக்கிரபுத்தி பிடித்த மிருகங்களை நவநீதம் பிள்ளை கடுமையாகச் சாடியிருந்தார். ‘கற்பழிப்பு என்பது போரில் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிச் சின்னம் கிடையாது. இனி, அது கொடிய போர்க் குற்றம், இனப்படுகொலையாகவே அது கருதப்படும்’ என்றார் பிள்ளை.

அந்த நவநீதம் பிள்ளை தான் இப்போது இலங்கைக்கு வரப் போகிறார். உள்ளூரில் ஓணான் பிடித்து அடுத்தவன் வேட்டிக்குள் விட்டு வேடிக்கை பார்த்து மகிழ்ந்த மகிந்தன் குழுவினருக்குக் காய்ச்சல் வருமா வராதா?

இப்போது பேருந்து ஓட்டுனரின் விசயத்துக்கு வருகிறேன். நவநீதம் பிள்ளை, தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் ஒரு வறிய தமிழ்க் குடும்பத்தில் பிறந்த, இந்தியக் குடிவழித் தமிழர். அவரது தந்தை, பேருந்து ஓட்டுநராக இருந்தவர். வறுமையில் வாடினாலும், அறிவுத் திறன் நவநீதம் பிள்ளையின் செல்வமாயிருந்தது. உள்ளூர் இந்தியர்களின் உதவியுடனேயே சட்டம் படித்த அவர், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பில் டாக்டர் பட்டம் பெற்ற வெள்ளையரல்லாத முதல் தென்னாப்பிரிக்கர் என்ற பெருமையைப் பெற்றது சாதாரண சாதனையல்ல!

பிள்ளையின் கணவரும் ஒரு வழக்கறிஞர், நிறவெறி வெள்ளை அரசுக்கு எதிராக மண்டேலா நடத்திய போராட்டங்களில் பங்கேற்றவர். கணவர் உள்பட நிறவெறிக்கு எதிராகப் போராடிய போராளிகளுக்கு தக்க சமயத்தில் தேவையான சட்டப் பாதுகாப்பைப் பெற்றுத் தந்தவர் நவநீதம் பிள்ளை.

1973ல், ரொபன் தீவில் சிறை வைக்கப்பட்டிருந்த மண்டேலா உள்ளிட்ட அரசியல் கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திக்க சட்டப்படியான உரிமையை வாதாடிப் பெற்றவர் நவநீதம் பிள்ளை. நிறவெறியிலிருந்து விடுபட்ட பிறகு, 1995ல் தென் ஆப்பிரிக்க உயர்நீதி மன்றத்தில் பிள்ளை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் இந்தியக் குடிவழித் தமிழர் அவர்தான்.

முன்னதாக, 1967ல் நேட்டால் மாகாணத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்க நவநீதம்பிள்ளை முயன்றபோது, எந்த சட்ட ஆலோசனை நிறுவனமும் அவரைச் சேர்த்துக் கொள்ள முன்வரவில்லை. வழக்கறிஞர்களின் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், வெள்ளையரல்லாத ஒரு வழக்கறிஞரின் கீழ் வேலை செய்ய விரும்பமாட்டார்கள் என்பதே அதற்குக் காரணம். வேறு வழியில்லாமல் தனியாக வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார் பிள்ளை. அப்படி தனக்கென்று ஒரு அலுவலகம் ஏற்படுத்திக் கொண்ட முதல் பெண் வழக்கறிஞர் அவர்தான்.

வெள்ளையரல்லாத வழக்கறிஞர்கள் நீதிபதிகளின் அறைக்குச் சென்று அவர்களைச் சந்திக்க முடியாத நிலை அப்போது இருந்தது. ‘நீதிபதியின் அறைக்குள் ஒரு நீதிபதியாகவே தான் நான் நுழைய வேண்டியிருந்தது’ என்றார் நவநீதம் பிள்ளை, 1995ல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பின், நகைச்சுவை உணர்வுடன்!

2008ல், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையராக நவநீதம் பிள்ளையை நியமிக்க பான் கீ மூன் முடிவெடுத்தபோது, அமெரிக்கா அதைக் கடுமையாக எதிர்த்தது. என்றாலும், அனைத்துத் தகுதிகளின் அடிப்படையிலும் ஏகமனதாக அவர் நியமிக்கப்பட்டார். 2012ல் மீண்டும் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்ட பிள்ளை 2014 வரை, அந்தப் பொறுப்பில் இருப்பார். அதனால்தான் அஞ்சி நடுங்குகிறது இலங்கை.

நவநீதம் பிள்ளையின் நேர்மையும் அஞ்சாமையும் அனுபவமும் அறிவும் தெளிவும், செய்த இனப்படுகொலையை, நடத்திய பாலியல் வன்முறைகளை மூடி மறைக்க இலங்கை மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் தகர்த்து எறிந்துவிடும் என்கிற அச்சத்தில் இலங்கையும், நம்பிக்கையில் நாமும் இருக்கிறோம்.

அன்று நீதிபதியின் அறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நவநீதம் பிள்ளை, நீதிபதியாகவே அந்த அறைக்குள் நுழைந்து வரலாறு படைத்தார். இன்று, இலங்கைக்குள் நுழைவதற்கான தடங்கல்களை எல்லாம் தகர்த்து அங்கே செல்கிறார். அங்கும் அவர் வரலாறு படைப்பார் என்பது நிச்சயம். ருவாண்டாவில் டூட்சி இன மக்களுக்குக் கிடைத்த நீதி, ஈழத்தில் தமிழ் மக்களுக்குக் கிடைக்காமல் போய்விடுமா என்ன?

காமன்வெல்த் மாநாட்டை எப்படியாவது நடத்தியாக வேண்டும் இலங்கைக்கு. இப்படியொரு இக்கட்டான நிலையில் நவநீதம் பிள்ளை வருவதைக் குறுக்குவழிகளில் தடுக்க முயல்வது தற்கொலை முயற்சியாகி விடும் என்பதால், அத்தகைய முயற்சிகளில் இலங்கை இறங்காது.

இதையெல்லாம் பேசும் இந்த நேரத்தில், தமிழினத்தின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் மிக மிகக் குறைந்த அளவு எண்ணிக்கையே உள்ள டூட்ஸி இன மக்களுக்கு ஒரு சில ஆண்டுகளிலேயே கிடைத்த நீதி, 4 ஆண்டுகளுக்குப் பிறகும் ஈழத் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கம் நம் ஒவ்வொருவருக்கும் எழும். நீதி கிடைப்பதில் ஏற்படும் இந்தக் காலதாமதத்துக்குக் காரணம் யார் யார்? மூன்று விரல்களை நீட்ட வேண்டியிருக்கிறது….

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.