Saturday 27 October 2012

கைக்குண்டு வீச்சின் மர்மம்..............!

காதலிக்கப் போய் காலை இழந்த கிட்டு, கைக்குண்டு வீச்சின் மர்மம் அவுட்டு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்ட தளபதியாக விளங்கியவர் கிட்டு. இவர் மீது யாழ்ப்பாணத்தில் 1987 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இதில் இவர் ஒரு காலை இழந்து போனார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி சிந்தியா. இவர் கிட்டுவின் காதலி. இருவரதும் காதல் அந்நாட்களில் ரொம்பவே பிரபலம். சிந்தியாவின் வீடு இரண்டாம் குறுக்குத் தெருவில் இருந்தது. சிந்தியாவை காண கிட்டு ஒவ்வொரு நாளும் மாலையில் இவ்வீட்டுக்கு செல்கின்றமை வழக்கம். 

காதலியை சந்திக்க கிட்டு சென்றிருந்த வேளையில்தான் கைக்குண்டு வீசப்பட்டு இருக்கின்றது.

ஆயுதம் தரித்த மெய்ப் பாதுகாவலர்களுடன் வாகனத்தில் கிட்டு சென்று இருந்தார். வாகனத்தின் மீது கைக்குண்டு வீசப்பட்டது. மயக்கம் உற்ற நிலையில் கிட்டு யாழ். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். கால் துண்டிக்கப்பட்டது.

ஈ. பி. ஆர். எல். எப் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே இத்தாக்குதலை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பு ஒன்றில் இருந்த அருணா என்பவர் சந்தேகித்தார்.

இத்தாக்குதலுக்கு பழி வாங்குகின்றமைக்காக மாற்று இயக்க போராளிக் கைதிகள் 63 பேரை சரமாரியாக அரை மணித்தியாலத்தில் சுட்டுக் கொன்றார். ஆனால் கொலைகளை எவரும், எப்போதும், எதற்காகவும் நியாயப்படுத்த முடியாது. 

இதே நேரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் மாற்றுக் குழுவைச் சேர்ந்தவர்கள்தான் கிட்டு மீது கைக்குண்டு வீசி இருக்கின்றார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பெரிதும் சந்தேகித்தார். இவரது சந்தேகக் கண் மாத்தையா மீது பட்டது. பதவிப் போட்டிக்காக கிட்டுவைத் தீர்த்துக் கட்ட மாத்தையாவே முயன்றிருக்கின்றார் என்று பிரபாகரன் முடிவெடுத்து விட்டார்.

யாழ்ப்பாணத்தில் இயக்கத்தின் முழுப் பொறுப்பும் மாத்தையாவின் கைக்கு வந்தபோதும் மாத்தையா பிற்காலத்தில் றோ உளவாளி என்கிற குற்றச்சாட்டில் கைது செய்யப்படுகின்றமைக்கு கிட்டு மீதான கைக்குண்டு வீச்சுத்தான் அத்திவாரமாக அமைந்தது.

மாத்தையா நிலக் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு, பயங்கரமாக சித்திரவதைகள் செய்யப்பட்டு பிரபாகரனால் கொல்லப்பட்டார். பிரபாகரனை பேட்டி கண்ட இந்திய பெண் ஊடகவியலாளர் அனிதாப் பிரதாப். பிரபாகரனின் அனுமதியுடன் மாத்தையாவை வன்னிச் சிறையில் கண்டார். இவர் இரத்தத் தீவு என்கிற புத்தகத்தை எழுதினார்.

இதில் மாத்தையாவை பிரபாகரன் நாயை விட கேவலமாக நடத்தினார் என்று எழுதி உள்ளார். ஆனால் கிட்டு மீது கைக்குண்டு வீசியவர்களை புலிகளால் கண்டுபிடிக்க முடியாமல் போய் விட்டது என்பதுதான் உண்மை. இது பொட்டம்மானின் புலனாய்வுக்கு நேர்ந்து இருக்கக் கூடிய மிகப் பெரிய அவமானமும்தான்.

இக்குண்டு வீச்சு தொடர்பான சுமார் இரு தசாப்த கால மர்மம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின்புதான் கடந்த வருடங்களில் வெளியாகி உள்ளது.

இக்குண்டு வீச்சை மேற்கொண்டார்களென தீப்பொறிக் குழுவினர் உரிமை கோரி உள்ளார்கள். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்து பிரிந்தவர்கள் இவர்கள்.


புலிகள் இயக்கத்தில் ஆரம்பத்தில் இருந்து, பின்னர் பிரிந்து தமிழீழ மக்கள் கழகத்தில் இணைந்து, அதன் பின் தீப்பொறி என்கிற அமைப்பை நடத்துகின்றமையில் முக்கிய பங்கு வகித்த ரகுமான் யா(ஜா)ன் ஆசிரியரின் (மாஸ்ரரின்) ஒப்புதல் வாக்குமூலமாக இக்குண்டு வீச்சு குறித்த மர்மம் வெளியில் வந்து விட்டது.

உயிர்ப்பு என்கிற சஞ்சிகையின் ஆசிரியராகவும் செயல்பட்டவர் யா(ஜா)ன் ஆசிரியர் (மாஸ்ரர்). காந்தன் என்று இன்னொரு பெயர் இவருக்கு உள்ளது. மே 18 இயக்கம் என்கிற அமைப்பை தற்போது நடத்தி வருகின்றார். கனடா, ஐரோப்பா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு சென்று அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்திய வேளையிலேயே இக்கைக்குண்டு வீச்சு குறித்த மர்மத்தை கலைத்து உள்ளார்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.