Thursday 25 October 2012

பொருளாதார நலன்களில் அடியுண்டு...........!






































பொருளாதார நலன்களில் அடியுண்டு போகுமா தமிழ்ஈழத் தமிழர்களது விடிவும், தாய்த்தமிழ் நாட்டின் எழுச்சியும்? தமிழ்ஈழத் தமிழர்களின் விடிவினை ஆவலோடு செயற்படும் அனைத்துத் தமிழ்மக்களினதும் ஏக்கம்!

சமீபத்தில் கிருசு(ஷ்)ணா கோதாவரி டெல்டா (KGD) பகுதியில் ரிலையன்சு(ஸ்) நிறுவனம் அபரிமிதமான எண்ணெய் வளத்தைக் கண்டுபிடித்தது தங்களுக்குத் தெரியும். அது இந்தியாவின் எரிவாயு உற்பத்தியை பன்மடங்கு அதிகரித்துள்ளதும் அறிவீர்கள்.

வட இலங்கைக்கும் தென் தமிழகத்திற்கும் இடையில் உள்ள கடல் பகுதி ´காவேரி டெல்டா பேசின்´ எனப்படுகிறது. நமது ராமர்(!) பாலத்திற்கு மேலே உள்ளது காவேரி பேசின், கிழே உள்ளது மன்னார் பேசின். இங்கே படிமப் பாறைகளில் எண்ணை மற்றும் எரிவாயு வளம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

அதற்கான வேலை 1970 களில் ரசிய எண்ணை நிறுவனம் மூலமாகத் தொடங்கியது. பின் 1980 களின் தொடக்கத்தில் துளையிடப்பட்ட ஆழ்கடல் எண்ணெய் கிணறுகள் தொடர்ந்து தோல்வியைத் தர, முயற்சி சற்றே தள்ளிப் போடப்பட்டது.

பின்னர் 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதிநவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கடல் பரப்பில் ஆய்வுகள் செய்யப்பட்டன. எண்ணெய் வளம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இலங்கையின் கடல் பரப்பு வகுக்கப்பட்டு பல்வேறு எண்ணெய் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது.

அதில் முக்கியமான நிறுவனம் எடின்பர்கில் இருந்து இயங்கும் ´கெய்ன்சு(ஸ்) நிறுவனம். கெய்ன்சு நிறுவனம் இந்தியாவில் ´கெய்ன்சு இந்தியா´ என்கிற பெயரில் பல்வேறு இடங்களில் எண்ணெய் வளத்தைக் கண்டுபித்துள்ளது. 

அதே கெய்ன்சு நிறுவனம் இலங்கையில் ´கெய்ன்சு லங்கா´ என்ற பெயரில் நிறுவி இயங்கி வருகிறது. கெய்ன்சு லங்கா 2011 ஆம் ஆண்டில் இரண்டு ஆழ்கடல் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டியது. அதில் அதிக அளவில் எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இனி அடுத்தகட்ட ஆய்வுகளை 2012 -13 ஆண்டுகளில் மேற்கொள்ள ஆயர்தமாகி வருகிறது. இதுவரை கண்டுபிடிக்கப் பட்ட எண்ணெய் வளம் ஒரு பில்லியன் பீப்பாக்கள் எனக் கண்டக்கிடப்பட்டுள்ளது . இன்னும் கண்டுபிடிக்கப் படாத எண்ணெய் வளம் மிக அதிகம் என எதிர்பார்க்கப் படுகிறது.

எரிசக்தியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிற காரணத்தினாலும், உலகின் எண்ணெய் தேவை வளைகுடா நாட்டை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது என சில சக்திகளால் எடுக்கப் பட்ட முயற்சியினாலும், தற்போதெல்லாம் எண்ணெய் வளம் எங்கிருந்தாலும் அதாவது கடலில் இருந்தாலும், எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் அதைக் கண்டுபிடிப்பதற்கும், எடுப்பதற்கும் தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ளன. 

ஒருவேளை அதிக எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப் பட்டால் இலங்கை புருனே போலவும், ராசபக்சே புருனே சுல்தான் போலவும் ஆகிவிட வாய்ப்புண்டு! அதற்காக இந்தப் பதிவை எழுதவில்லை... இங்கே புதிய கோணத்தில் அணுக வேண்டிய சில விடயங்கள் உள்ளது.

1. இந்த எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தையும், ஈழப் போராட்டம் நடைபெற்ற காலத்து நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அதில் இதன் பங்கும் ஓரளவேனும் இருக்கக் கூடும்.

2. முக்கியமாக, நமது தமிழக மீனவர்கள் 500 க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை கொல்லப் பட்டுள்ளனர். எதனால் நட்பு நாட்டின் மீனவர்களைக் கொல்ல வேண்டும்?

சிறைபிடித்து துன்புறுத்தி அனுப்பினால் கூட ஏற்றுக்கொள்ளலாம்.. கொலை செய்தால்??

ஒருவேளை எண்ணெய் வளம் மிக்க பகுதிகளில் அத்துமீறி நுழைந்துவிடக் கூடாது, ஆய்வுப் பணிகளில் இடையூறு வரக் கூடாது என்பதற்காகவா? 

மீனவர்கள் செல்வதால் எப்படி ஆய்வு பாதிக்கும் என நீங்கள் கேட்பது புரிகிறது. கடல் ஆய்வு செய்யும் முறை அறிந்தவர்களுக்குப் புரியும். 

பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கப்பல்களுக்குப் பின்னால் பத்து கிலோமீட்டர் நீளத்திற்கு நுண்கருவிகளைக் (Sensors)கட்டி இழுத்துச் செல்வர். கடல் மீதிருந்து ஒலி அலைகளை அனுப்பி பூமியின் அடி ஆழத்தில் (5 -6 கிமீ ஆழம்) இருந்து பாறைகளில் பட்டு எதிரொலிக்கும் நுண்ணிய ஒலிகளைப் பதிவு செய்வர்.

அப்போது கடல் பரப்பில், அருகாமையில் ஏதேனும் சிறிய மோட்டார் படகுகள் வந்தாலும் அதன் ஒலி பதிவாகிவிடும். இது ஒரு காரணமாக இருக்கலாம்.

அல்லது இப்போதே தனது வளப் பகுதிகளை கடலில் வேலி போட்டு பாதுகாத்துக் கொள்கிறான் போலும். பிறகென்ன! தண்ணீர் கிணற்றிற்கே வேலி போட்டு காவலுக்கு ஆள் வைக்கிறபோது, எண்ணெய் கிணறுக்கு காவல் வைக்கமாட்டானா?

3. அடுத்தது, எண்ணெய் வளத்தைக் கண்டுபிடித்த கெய்ன்சு நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை லண்டனில் இருந்து இயங்கும் வேடான்த்தா நிறுவனம் 8 .7 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது. கிட்டத்தட்ட நாற்பதாயிரம் கோடி இந்திய ரூபாய்!

இது இலங்கையின் ஓராண்டு எண்ணெய் இறக்குமதி செலவை (3 பில்லியன் டாலர்) விட மூன்று மடங்கு அதிகம் எனலாம். இத்தகைய அசுர பணபலம் கொண்ட வேடாண்டா நிறுவனம் தான் தூத்துக்குடியில் சு(ஸ்)டெர்லைட் நிறுவனத்தையும் நடத்துகிறது.

அதை எதிர்த்துதான் எந்தவித சமரசமும் இன்றி வைகோ நீதிமன்றத்தில் போராடி வருகிறார். இதே நிறுவனம் தான் ஒரிசாவில் அலுமினிய ஆலை அமைத்தது, அதை எதிர்த்து டோங்க்ரி பழங்குடியினர் போராடி வருகின்றனர்.

4. ஒருவேளை அதிக எண்ணெய் எடுக்கப்பட்டால் இந்தியாவின் எண்ணெய் தேவைக்கு இலங்கை உதவ வேண்டி நிலை வரும். அதுகூட இன்றைய அரசு இலங்கைக்குப் பக்கவாத்தியம் வாசிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். 

மேலே உள்ள வரைபடத்தில் சீனாவுக்கும் சில உரிமங்கள் வளங்கப்படுள்ளதைக் காணலாம். சீனா இங்கு மட்டுமல்ல, பல்வேறு நாடுகளில் குறிப்பாக தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் எண்ணெய் வளங்களை சூரத்தனமாக குத்தகைக்கு எடுத்து வருகிறது. டைகர் எகனாமி சீனா என்றால் சும்மாவா?

## சரி இப்போது, எண்ணெய் வளம், இனப்படுகொலை, இலங்கையிடம் அளவுக்கு அதிகமாகவே அனுசரித்துப் போகும் இந்தியாவின் நிலை, சீனா ஊடுருவல் கதை, நடுக்கடலில் இந்திய மீனவர்கள் படுகொலை, வேதாந்தா நிறுவனம், வைகோ இருட்டடிப்பு , தமிழக தேர்தல் அரசியல், பொருளாதாரப் போட்டி, சர்வதேச அரசியல் என அனைத்தையும் தொடர்புபடுத்தி யோசித்துப் பாருங்கள்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.