Saturday 27 October 2012

வீரம் செறிந்த தமிழர்...!



வீரம் செறிந்த தமிழர் வரலாற்றிற்கு நிகரற்ற எடுத்துக்காட்டு இராசராச சோழன் பழந்தமிழ் நூல்கள் எழுந்த காலத்திலேயே சோழர்கள் பற்றிய குறிப்புக்கள் பாடல்களில் வருகின்றன.

நளன்கிள்ளி, நெடுங்கிள்ளி, கோர்ச்செங்கணான், கிள்ளிவளவன், கோப்பெருஞ்சோழன். முதலான சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் புறநானூறு முதலான செய்யுள்களில் காணப்படுகின்றன.

எனினும் கி.பி 850 தொடக்கம் 1230 வரையான ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுக்காலமே சோழப்பேரசுக் காலம் எனக் கொள்ளப்படுகிறது.

தமிழகத்து வரலாற்றிலே வேறெந்த காலத்தையும் போலல்லாது பல துறைகளிலும் பெருவளர்ச்சிகள் ஏற்பட்ட காலம் சோழர் காலமாகும்.

ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் விசயாலய சோழன் முத்தரையர்கள் என்னும் குறுநில மன்னர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றினான்.

விசயாலய சோழன் காலத்தில் சோழர்கள் தொண்டைநாட்டுப் பல்லவர்களின் மேலாதிக்கத்தின் கீழ் அடங்கியிருந்தனர். எனினும் விசயாலய சோழனின் மகன் ஆதித்த சோழன் திருப்புறம்பியப் போர் மூலமாக பல்லவர்களைத் தோற்கடித்து தொண்டை நாட்டைக் கைப்பற்றினான்.

இதனால் 'தொண்டைநாடு பரவின சோழன்' என்ற சிறப்புப்பெயர் பெற்றான்.

அதனைத்தொடர்ந்து பராந்தக சோழன் தெற்கிலே பாண்டி நாட்டையும் வடக்கிலே வாணர் வைதும்பர் நாடுகளையும் கைப்பற்றிக் கொண்டான்.

இவனது ஆட்சியிலே சோழரின் அரசு ஒரு பேரரசு என்ற நிலையை அடைந்தது. ஆயினும் கர்நாடகரின் தெற்கு நோக்கிய படையெடுப்பான தக்கோளப்போரிலே அவர்கள் பெரும் வெற்றி பெற்றார்கள்.

தொண்டைநாடு நடுநாடு என்பவற்றை சோழர்கள் இழக்க நேரிட்டது. தெற்கிலே பாண்டியர்கள் மீண்டும் தலைதூக்கினார்கள். பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுந்தரசோழன் உத்தமசோழன் என்போரின் காலத்தில் சோழர்கள் கன்னடரிடமிருந்து தொண்டை நாடுஇ நடுநாடு என்பவற்றைக் கைப்பற்றினார்கள்.

இவர்களுக்குப் பின் பதவியேற்ற இராசராசன் குறுகிய காலத்தில் சோழப்பேரரசினை பெருவலிபடைத்தததாக மாற்றினான்.

அவனது மகன் இராசேந்திர சோழனும் சோழப்பேரரசின் ஈடுஇணையற்ற வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றினான். சோழமன்னர்களில் சோழரின் புகழை உலகறியச் செய்து சாதனைமிகு மன்னனாகத் திகழ்ந்தவன் சோழத்தமிழ்மகன் இராசராச சோழனாவான்.

இராசராச சோழன் சோழப்பெருமன்னன் சுந்தரசோழனுக்கும் திருக்கோவலூர் மலையமான் குலத்தில் தோன்றிய வானவன் மாதேவிக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தவன் அருண்மொழிவர்மனாகிய இராசராச சோழனாவான்.

இளம் வயதிலேயே தாய்தந்தையரை இழந்த இராசராசன் தன் பெரிய பாட்டி செம்பியன் மாதேவியார் தமக்கை குந்தவை பிராட்டியர் ஆகியோர் அரவணைப்பில் வளர்ந்தான். மூத்தவன் ஆதித்த கரிகாலன் இறந்த பின்னர் இளைஞனாகிய அருண்மொழியே முடிசூடுவதாக இருந்தது.

அனைவரும் அதனையே விரும்பினார்கள். எனினும் அவனுடைய சிறியதந்தை மதுராந்தக உத்தம சோழனுக்கு அரசாளும் விருப்பம் இருந்ததை உணர்ந்த அருண்மொழி அவர் விருப்பப்படியே அவரை முடிசூடச் செய்தான்.

மதுராந்தக உத்தம சோழன் 15 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். அப்போது அருண்மொழி இளவரசனாக இருந்தான். கி.பி 985 ஆம் ஆண்டு மதுராந்தக உத்தம சோழன் இறந்த பின்பு சோழப்பேரரசனாக அருண்மொழிவர்மன் முடிசூடிக்கொண்டான்.

அத்துடன் இராசராசன் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றான். அன்று தொடங்கி இறக்கும் வரையும் சோழப்பேரரசிற்காகவும் மக்களுக்காகவும் சமயத்திற்காகவும் அரிய பல சாதனைகளைப் படைத்துள்ளான்.  

இராசராசனுக்கு சோழமாதேவிஇ திரைலோக்கியமாதேவி பஞ்சவன்மாதேவி அபிமானவல்லி இலாடமாதேவி பிரிதிவிமாதேவி மீனவன்மாதேவி லோகமாதேவி வீரநாராயணி வில்லவன்மாதேவி வானவன்மாதேவி முதலான பல மனைவியர் இருந்ததாக கூறப்படுகிறது.

இவர்களில் தந்திசக்திவிடங்கி எனும் லோகமாதேவியே பட்டத்தரசியாக விளங்கினார். இராசராச மாமன்னனுக்கும் வானவன் மாதேவிக்கும் பிறந்த ஒரே மகன் மதுராந்தகன் எனும் இராசேந்திர சோழன்.

இராசராச னுக்கு இரண்டு புதல்வியர் இருந்தனர். மூத்தவள் மாதேவ அடிகள் இளையவள் குந்தவை ஆகியோர். தனது பாட்டியார் செம்பியன் மாதேவி நினைவாக ஒரு பெண்ணுக்கு மாதேவ அடிகள் என்றும் சகோதரி குந்தவை பிராட்டியர் நினைவாக மற்றைய மகளுக்கு குந்தவை என்றும் சிறிய தந்தை மதுராந்தக உத்தம சோழன் நினைவாக மூத்த மகனுக்கு மதுராந்தகன் என்றும் பெயர் சூட்டினான் என்று கூறப்படுகிறது.

அரசு கட்டடில் ஏறிய இராசராசசோழன் முன்னர் பல்லவர் ஆட்சியில் போர்கள் மலிந்திருந்ததால் நாட்டின் செல்வமும் வளங்களும் சீரழிந்திருந்ததை கண்டு கவலையுற்றான். அவற்றை செழிக்க வைப்பதற்காக பாடுபட்டான்.

சோழ நாட்டினுள் போர் நடைபெறாதவாறு பார்த்துக்கொண்டான். எதிரிகளுக்கும் நேசக்கரம் நீட்டிய இராசராசன் எதிர்த்தவர்களை வெற்றி கொண்டு சோழப்பேரரசினை விரிவு படுத்தினான். சோழநாட்டினுள் போர்கள் இல்லை. செல்வம் பெருகி நாடு செழித்தது. கவின்கலைகள் வளர்ந்தன.

சைவத்தின் பால் ஈடுபாடு கொண்டதனாலும் சைவத்திற்கு தொண்டாற்றியமையாலும் இராசராசன் 'சிவபாத சேகரன்' என்ற சிறப்புப்பெயரையும் பெற்றான். கி.பி 985இல் முடிசூடிய மன்னன் 1012இல் தனது மகன் இராசேந்திர சோழனுக்கு முடிசூடி விட்டு மறைந்தான்.

இராசராச சோழனின் வெற்றிகளும் சாதனைகளும். தமிழக அரசுகளின் மன்னர்வரிசையில் முதன்மையானவனாகவும் 'நிகரிலிச் சோழன்' என்று அழைக்கப்படுபவனுமான இராசராசன் தமிழ் சாதனைகளுக்கு எடுத்துக்காட்டான ஒருவன் என்றால் அது மறுக்க முடியாது.

தமிழ்ச்சமுதாய வரலாற்றிலே அரசியல் சமயம் பொருளாதாரம் கலைக்கட்டுமானம் போன்றவற்றிலே இவனது காலம் சாதனைகள் மிகுந்த உன்னத காலமாகும்.

ஐநூற்றுவர் முதலான வணிககணங்களின் உதவியோடு முப்படைகளையும் கொண்டு அவற்றின் வலிமையால் தென்னிந்திய அரசியல் நிலைகளை முற்றாக மாற்றினான்.

அயலிலுள்ள இராச்சியங்களெல்லாம் இவனது போர்களினாலே வீழ்ந்தன.

தன் தூதனைச் சிரையிலடைத்த சேர மன்னன் பாசு(ஸ்)கர ரவிவர்மனை திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள காந்தளுர் என்னும் இடத்தில் வெற்றி கொண்டதோடு அவனுடைய கடற்படையையும் கைப்பற்றியமை இராசராசனுடைய குறிப்பிடத்தக்க முதலாவது வெற்றியாகும்.

இதனை இவனுடைய மெய்க்கீர்த்தி 'காந்தளுர்ச்சாலை கலமறுத்தருளி...' என்று குறிப்பிடுகின்றது. இவ்வெற்றியைக் குறிப்பிடும் வண்ணம் 'கேரளாந்தகன்'(கேரள மன்னனுக்கு இயமன் போன்றவன்) என்ற சிறப்புப் பெயரையும் பெற்றான்.

இராசராசன் காலத்தில் சோழப்பேரரசு பல மண்டலங்களைக் கொண்டதாக காணப்பட்டது. கைப்பற்றப்பட்;ட இராச்சியங்கள் சில மாற்றங்களோடு மண்டலங்கள் என்ற நிர்வாகப் பிரிவுகளுக்குள் கொண்டுவரப்பட்டது.

பாண்டி நாட்டினை இராசராசன் காலத்தில் இராசராச தென்னாடு என்றார்கள்.

பல்லவர்களுடைய தென்னாடு ஐயங்கொண்ட சோழ மண்டலம் என்ற பெயரால் வழங்கப்பட்டது. கங்கபாடி முடி கொண்ட சோழ மண்டலம் என்றும் நுளம்பபாடி நிகரிழிச் சோழ மண்டலம் என்றும் பெயர் பெற்றது.

ஈழம் மும்முடிச் சோழ மண்டலம் எனப்படலாயிற்று. இவை ஒவ்வொன்றும் இராசராசனுடைய பட்டப் பெயர்களாலும் விருதுப்பெயர்களாலும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

பாண்டி நாடு வேங்கிநாடு எனும் கீழைச்சாளுக்கியர்களின் நடுநாடு(ஆந்திரப்பகுதி)இ இராங்டிரகூடர்களின் கங்கபாடி (மைசூர்பகுதி)இ நுளம்பர்கள் ஆட்சிபுரிகின்ற நுளம்பாடி (பெங்களுர்)இ பெல்லாரிப் பகுதிகள்இ சேரநாட்டுக் கொல்லம; கலிங்கம் (ஒரிசா மாநிலம்) ஈழமண்டலம் (இலங்கைத்தீவு) மேலைச்சாறுக்கியர்களின் இரட்டப்பாடி என்றும் வட கர்நாடகம் மகராட்டிரம; அரபிக்கடலிலுள்ள லட்சத்தீவு மாலைத்தீவு போன்றன இராசராசனால் வெற்றிக் கொள்ளப்பட்டன.

இதனை அவனுடைய கல்வெட்டுக்களில் வரும் மெய்கீர்த்தி உறுதிப்படுத்தும். இவ்வாறாக பெருவலி படைத்த சோழப்பேரரசில் முதன் முதலாக நிலங்கள் அளக்கப்பட்டு தரத்திற்கும் விளைச்சலுக்கும் ஏற்ப நிலங்கள் வகை செய்யப்பட்டன.

அதற்கேற்ற வகையிலே வரிகள் அறவிடப்பட்டன. இந்த நிலங்கள் அளப்பதற்கு பொறுப்பாக இருந்த அதிகாரி 'உலகளந்த மாராயன்' என்ற சிறப்பு பெயரைப் பெற்றார். நிலங்களை அளக்கப் பயன்பட்ட கோள் 'உலகளந்தான் கோல்' என்ற நாமத்தாலும் வழங்கப்பட்டது.

இலங்கையிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சோழப்பேரரசின் நிர்வாக கட்டமைப்பு இராசராசனின் நிர்வாக திறமைக்கும் நெறிப்படுத்தலுக்கும் தக்க சான்று பகரும். பெரும் பிரிவுகளான மண்டலங்கள் ஒவ்வொன்றும் அரசிறை நிர்வாகத்தின் பொருட்டு வள நாடுகளாக வகுக்கப்பட்டது.

வளநாடு ஒவ்வொன்றிலும் இரண்டு அல்லது அதற்கு அதிகமான நாடுகள் அடங்கியிருந்தன. விசாலமான பிரம தேயங்களும் பெரும் பிரிவுகளாகக் காணப்பட்டன.

இராசராச சோழனின் சாதனைகளில் முக்கியமானது அவன் கலைக்கு ஆற்றிய சேவைகளாகும். சமயம் வளர்ப்பதற்காய் பிரமாண்டமான ஆலயங்களை அமைத்தான். அவ்வாறான ஆலயங்கள் வனப்பு மிகுந்த சிற்பங்களை சுமந்து நின்றன.

வியக்க வைக்கும் விமான கட்டுமானம் கோயிலின் பிரதானமான அம்சமாயிற்று. ஓவியங்கள் பலவும் ஆலயத்தை அலங்கரித்து நின்றன. ஆலயத்திலே இசைக்கலையும் நடனக்கலையும் வளர்க்கப்பட்டது.

கலைஞர்களுக்கு நிலதானங்கள் வழங்கப்பட்டன. இராசராசனின் தஞ்சைப் பெருங்கோயிலிலே பல நடனமாதர்கள் சேவை புரிந்ததாகவும் இசைவிற்பன்னர்கள் இசை பயிற்றுவித்ததாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறான கலைஞர்களுக்கு இராசராசன் கோயிலைச் சுற்றியே இருப்பிடங்களையும் அமைத்துக் கொடுத்தான் என்றும் கூறப்படுகிறது. ஆலயங்கள் தனியே வழிபாட்டுத் தலங்களாக மட்டும் இருந்து விடவில்லை.

அவை தமிழக வரலாறு கலைகலாசாரம் பண்பாடு என்பவற்றை சுமந்து நிற்கும் தொல்லியல் பெட்டகமுமாகும். இவை கல்வி புகட்டும் நிலையங்களாகவும் கலைபயிலும் அரங்கமாகவும் விளங்கின.

பிரமாண்டமாய் இவன் எடுப்பித்த ஆலயங்களில் சோழரின் சாதனைகளை இன்றும் நாம் காணலாம். இவற்றுல் தனிப்பெரும் சிறப்பு வாய்ந்ததாக விளங்குவது தஞ்சைப் பெருங்கோயில் ஆகும்.

தஞ்சைப் பெருங்கோயில் இராசராசன் காஞ்சி மாநகரத்திற்குச் சென்றபோது அங்கே இரசசிம்மபல்லவனால் கட்டப்பெற்ற கைலாசநாதர் கோயிலின் பேரழகில் பெரிதும் மயங்கி அக்கோயிலை 'கச்சிப்போட்டு பெரியதளி' என்று போற்றினான்.

இக்கோயில் இராசராசன் மனதில் ஓர் எழுச்சியைத் தூண்டியது. இதன் விளைவாக உருவானது தான் தஞ்சைப் பெருங்கோயில். சோழப்பேரரசின் தலைநகரமாக விளங்கிய ஊரே தஞ்சையாகும். காவிரி நதியின் புனலால் வளம் பெற்று விளங்கும் ஊர் என்பதனால் (தண் 10 செய் 10ஊர்) தஞ்சாவூர் ஆயிற்று.

விசயாலய சோழனில் தொடங்கி ஆதித்தன்இ பராந்தகன் கண்டராதித்தன் அரிஞ்சயன; சுந்தர சோழன் ஆதித்த கரிகாலன; மதுராந்தக உத்தம சோழன; இராசராசன்; இராசேந்திரன்(இவனது ஆட்சியின் முதல் 10 ஆண்டுகள்); ஆகிய பெரு மன்னர் காலம் வரை 176 ஆண்டுகள் தஞ்சை சோழப்பேரரசின் தலை நகரமாக விளங்கிற்று.

இவ்வாறான சிறப்புக்களையுடைய தஞ்சாவூரில் இராசராசசோழன் கட்டுவித்த பிரமாண்டமான சாதனைப் படைப்புதான் தஞ்சைப் பெருங்கோயில் ஆகும்.

கி.பி 1004 இல் கட்டுமானப்பணிகளை ஆரம்பித்து ஆறு ஆண்டுகளுக்குள் கி.பி 1010 ஆம் ஆண்டில் கட்டி முடித்தான். இச்செய்திகளை அக்கோயிலிலுள்ள கல்வெட்டு கூறுகிறது.

இலக்கணப்படி 'இராஜராசசேச்சரம்' என்பது சரியானது ஆயினும் இராசராசனின் கல்வெட்டிலே 'இராஜராசசீச்சரம்' என்று தான் காணப்படுகிறது.

'பாண்டிய குசானி வளநாட்டுத் தஞ்சாவூர் எனும் ஊரில் இக்கோயிலை எடுப்பித்தேன்..' என்று இராசராசன் கல்வெட்டிலே குறிப்பிட்டுள்ளான்.  

இராசேந்திரசோழனின் கல்வெட்டு இக்கோயிலை'சிறீராசராசஈசுவரமுடையார் கோயில்' என்று குறிப்பிடுகின்றது.

இராசராசேசுவரம் எனப்படுகின்ற தஞ்சைப் பெருங்கோயில் வடமொழியில் பிருகதீசுவரம் என்றும் அழைக்கப்படுகிறது. தஞ்சைப்பெருங்கோயிலை உருவாக்கிய கட்டக்கலைஞன் வீரசோழன் குஞ்சரமல்லனான ராசராச பெருந்தச்சன் ஆவான்.

மதுராந்தகனான நித்தவினோத பெருந்தச்சன் இலத்தி சடையனான கண்டாராதித்தப் பெருந்தச்சன் ஆகிய இரு தச்சர்களும் குஞ்சரமல்லனின் பணிக்குப் பெரிதும் துணை புரிந்தனர்.

இக்கோயில் கிழக்கு மேற்காக 244 மீற்றர் நீளமும் வடக்குத்தெற்காக 123 மீற்றர் அகலமும் உடையது. முழுவதுமாக 29இ768 சதுரமீற்றர் பரப்பளவைக் கொண்ட பிரமாண்டமான தோற்றமாகக் காட்சி தருகின்றது.

முழுவதும் செந்நிறக்கற்களால் கட்டப்பட்டது. இராசராசன் காலத்தில் கருவறை இடைக்கழி அர்த்தமண்டபம் மகாமண்டபம் நாட்டியமண்டபம்இ முன்மண்டபம் ஆகியவற்றுடன் கூடிய மூலக்கோயிலும் அதனைச்சுற்றி இரண்டு அடுக்குள்ள திருச்சுற்றுமாழிகை அதனுடன் இணைந்த இராசராசன் திருவாயில் அதனை அடுத்துள்ள முதல் கோபுரமான கேரளாந்தகன் நுழைவாயில் சண்டிகேஸ்வரர் ஆலயம் என்பன அமைக்கப்பட்டன. 

கிழக்குத்திசையில் மூலவாயிலாக விளங்குவது கோபுரங்களில் முதல் கோபுரமான கேரளாந்தகன் திருவாயிலாகும். இது 30 மீற்றர் நீளமும் 18 மீற்றர் அகலமும் உடையது.

இதிலே புராணச் செய்திகளைக் கொண்ட சிற்பங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளன. கேரளாந்தகன் திருவாயிலிலிருந்து மேற்கே 100 மீற்றர் தொலைவில் இன்னுமொரு வாயில் காணப்படுகிறது. இது கல்வெட்டுகளில் இராசராசன் திருவாயில் எனப்படுகிறது.

இந்தியாவில் உள்ள கோயில் விமானங்களில் மிக உயரமுடையது தஞ்சைப்பெருங்கோயில் விமானமாகும். இதன் உயரம் 214 அடியாகும். சமீபத்தில் இக்கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டொன்றில் இராசராசன் இக்கோயில் முழுவதும் பொன் வேய்ந்த செய்தி கூறப்படுகிது.

தஞ்சைப்பெருங்கோயிலின் சிறீவிமானத்தின் பெயர் தட்சிணமேரு என்பதாகும். நான்கு பட்டை வடிவில் கூம்பிச் செல்லும் விமானம் மேல் நிலையில் 26ஒ26 சதுர அடி தளத்தை உருவாக்கி நிற்கிறது.

இத்தளம் ஒரே கல் என்றும்இ அது 80 தொண் எடையுடையது என்றும் இவ்விமானத்தின் நிழல் தரையில் விழாது என்றும் சில ஆய்வாளர்கள் கூறியிருந்தாலும் அது முற்றிலும் தவறானது.

எனவே சிறப்புக்கள் பல பெற்ற தஞ்சைப்பெருங்கோயில் இராசராசனின் ஈடுஇணையற்ற சாதனையாகும் என்றால் மிகையாகாது. ஈழமும் இராசராச சோழனும். இராசராச சோழனின் இணையற்ற ஆற்றலால் சோழப்பேரரசு விரிவு படுத்தல் நடைபெற்று கடல் கடந்து புகழடைந்தது.

இராசராசனின் ஆதிக்க வேட்டையிலிருந்து அயலிலுள்ள இராச்சியங்களும்இ நாடுகளும் தப்பித்துக்கொள்ள முடியவில்லை.

அந்தவகையில் பத்தாம் நூற்றாண்டின் முடிவில் இராசராசனது எட்டாவது ஆட்சியாண்டில் (கி.பி 993) சோழர் இலங்கையின் பிரதானமான பகுதிகளைக் கைபற்றினார்கள்.

அவனுடைய எட்டாம் ஆட்சியாண்டு முதலாக சாசனங்களில் வருகின்ற மெய்க்கீர்த்தியிலே சோழர் வசமாகிவிட்ட பகுதிகளில் ஒன்றாக ஈழமும் குறிப்பிடப்படுகின்றமை நேக்கற்பாலது.

தஞ்சைப்பெருங்கோயிலிலுள்ள இராசராசனுடைய சாசனமொன்றில் 'ஈழமான மும்முடிச்சோழமண்டலத்து இராசராசவளநாடான மாப்பிசும்பு கொட்டியாரம்...' என்று பதிவாகியுள்ளது.

அத்துடன் இராசராசனது காலத்து சாசனங்கள் பதவியா திருகோணமலை போன்ற இடங்களிலே கிடைத்துள்ளன. எனவே இராசராசனது ஆட்சிக்காலத்திலே ஈழமானது மும்முடிச்சோழ மண்டலமாகிவிட்டமை தெளிவாகின்றது.

சோழராட்சியில் புலத்திநகரமான பொலநறுவை சனநாத மங்களம் என்னும் புனர்நாமம் பெற்றுத் தலைமை நிர்வாக நிலையமாக விளங்கியது. அங்கு இந்து கலாசாரத்தின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவிலே ஏற்பட்டது.

தென்னிந்தியாவில் இருந்து வந்த நிர்வாக அதிகாரிகளும் படையினரும் நானாதேசிவணிகரும் தொழில்வினைஞரும் அந்தணரும் வேறு பல சமூகப்பிரிவினரும் அங்கு வாழ்ந்தனர்.

அத்தகையோரின் வழிபாட்டுத் தேவைக்கேற்ப பல கோயில்கள் அமைக்கப்பட்டன. பதினாறுக்கும் மேற்பட்ட சைவ வைணவ ஆலயங்கள் பொலன்நறுவையில் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

அவற்றுள் சில சோழராட்சிக்குரியவை ஏனையவை பிற்காலத்தவை. தொல்லியல் வரலாற்றாய்வாளர்களால் இரண்டாம் சிவாலயம் ஐந்தாம் சிவாலயம் ஆறாம் சிவாலயம் என்று கூறப்பட்ட கட்டிடங்களில் சோழர் கால தொல்பொருட் சின்னங்கள் கிடைக்கின்றன.

இரண்டாம் சிவாலயமான வானவன் மாதேவி ஈசுவரம் அழிவுறாது இன்றும் சீரான நிலையில் உள்ளது. இலங்கையில் இன்று வரை நிலைத்துள்ள கோயில்களில் இதுவே பழைமையானது. சோழர்க் கலைப்பாணியின் சிறந்த சிறந்த பண்புகளுக்கு கற்றளியான இரண்டாம் சிவாலயம் சிறந்த உதாரணமாகும்.

சுந்தர சோழனுடைய பட்டத்தரசியின் நினைவாக அதாவது இராசராசசோழனின் தாயின் நினைவாக இந்த ஆலயத்தை அவன் அமைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எனவே இராசராசனுடைய காலத்தில் பாரததேசம் ஈழத்தோடு நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தது. இராசராசனுடைய மெய்க்கீர்த்தி வரலாற்று செய்திகளை ஆதாரப்படுத்த உதவும் மூலங்களில் முதன்மையானது தொல்பொருட்சான்றுகளாகும்.

அதிலும் குறிப்பாக கல்வெட்டுக்கள் வரலாற்றை அறிய உதவும் தனித்துவமான சான்றாதாரமாக விளங்குகின்றன. கல்வெட்டு அமைப்பு முறையிலே மங்களச்சொல்லினைத் தொடர்ந்து அமைந்திருப்பதே மெய்க்கீர்த்தியாகும்.

சோழர் காலம் முதலாகத்தான் கல்வெட்டுகளில் மெய்க்கீர்தியை அமைக்கும் முறை உதயமாகியது. இந்த மெய்க்கீர்த்தியென்பது மன்னனுடைய புகழ்பாடுகின்றனவாக அவனுடைய சாதனைகள் அவன் கைப்பற்றிய பிரதேசங்கள் விருதுப்பெயர்கள் என்பவற்றைத் தாங்கியதாக அமைந்து விடுகின்றன.

அந்தவகையில் இராசராசனுடைய கல்வெட்டுக்களில் அவனுடைய மெய்க்கீர்த்தி மேல்வருமாறு அமைந்திருக்கும்.

'திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்குயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளுர்ச்சாலை கலமறுத்தருளி வேங்கை நாடுங்
கங்கை பாடியும் தடிகைபாடியும் நுளம்பபாடியும் குடமலைநாடுங் கொல்லமுங் கலிங்கமும் எண்டிசை புகழத்தர ஈழமண்டலமும்
இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றித் தண்டாற்
கொண்ட தன்னெழில் வளரூழியுனெல்லா யாண்டுந் தொழுதக
விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் கோ ராசகேசரி
வர்மரான சிறீராசராசதேவர்க்கு யாண்டு........'

இந்த மெய்க்கீர்த்தி வாசகம் இராசராசனது புகழினை எடுத்தியம்பி நிற்கிறது. இராசராசனை திருமாளோடு ஒப்பிடுவதோடு அவன் திருமகளையும் நிலமகளையும் உரிமையாக்கிக் கொண்டான் என்றும் நயம்படக் கூறுகிறது. 

அத்துடன் இராசராசனால் கைப்பற்றப்பட்ட இடங்கள் இராச்சியங்கள் பற்றியும் விரிவாக கூறுகிறது. மெய்க்கீர்த்தி வாசகம் வாயிலாக அவனுடைய புகழையும். சாதனைகளையும் அறியமுடிகிறது.

முடிவுரை எனவே தமிழக வரலாறு பல பேரரசுகளையும் நூற்றுக்கணக்கான மன்னர்களையும் பதிவு செய்திருந்தாலும், திறமையான ஆட்சியினாலும் கலைக்கட்டுமாணங்களினாலும் அதிகார விரிவு படுத்தலினால் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருப்பவன் தான் சோழமன்னன் இராசராசன் என்றால் யாரும் மறுத்து விடமுடியாது.

வீரம் சொறிந்த தமிழர் வரலாற்றிற்கு இராசராசசோழன் நிகரற்ற எடுத்துக்காட்டாகும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.