Wednesday 31 October 2012

தமிழன் என்ற........!

தமிழன் என்ற ”தேசிய” இனமும் சுய நிர்ணயமும்.


தமிழன் யார் அல்லது யாரெல்லாம் தமிழர்கள் என்று அப்பப்போ கருத்துக்களங்களில், விவாதப்பொதுவெளிகளில் கேள்விகளும் கிண்டல்களும் வெளிப்படுகின்றன இப்போதெல்லாம். தமிழன் யாரென்ற கேள்விக்கு விஞ்ஞான, சமூக அரசியல் அடிப்படையில் பதில் சொல்ல வேண்டிய காலமும் கடந்து பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தாயிற்று.

மனித உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் எல்லா மக்களையும் போல் மனிதகுரங்கிலிருந்து வந்தவன் தான் தமிழனும். சமூக அரசியல் களங்களில் தமிழன் குறித்த கேள்விகளுக்கும், கிண்டல்களுக்கும் பதில், தமிழர் என்பது ஒரு தேசிய இனம். ஒரு தேசம். இதை ஏற்பதும் மறுப்பதும் உலகமயமாக்கலில் அவரவர் அரசியல் சார்பு நிலை ஏற்பாடுகளைப் பொறுத்தது. ஆனால், தமிழன் ஓர் தேசிய இனம். இது தான் சத்தியமான, நிச்சயமான உண்மை.

அப்படியே இதிலிருந்து அடுத்த கேள்வி வரும் சிலருக்கு. அப்படியென்றால், தேசிய இனம் என்றால் என்ன என்று! தேசிய இனம் என்பது ஒரு இனக்குழு மூலத்திலிருந்து தேசியம் என்பதன் மூலக்கூறுகளான ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி, பொதுமொழி, பொதுப்பண்பாடு இவற்றின் அடிப்படையில் நிலையாய் வாழும் ஒர் சமூகம். தமிழ் நாட்டின் தமிழ் தேசக் குடியரசு விவாதத்தில் பெ.மணியரசன் இனம் என்பது மரபு இனம் (Race), தேசிய இனம் (Nationality) என்று விளக்குகிறார்.

மரபு இனம் என்பது பல்வேறு தேசிய இனங்களில் கலக்கும் வாய்ப்பும் உண்டு. அதற்கு உதாரணம், ஆரியர் என்கிற மரபினம் அயிரோப்பிய, இந்திய தேசிய இனங்களில் கலத்துள்ளமை என்கிறார். அதே போல் இந்தியாவின், பாகிசு(ஸ்)தானின் பல பழங்குடிகளிலும் தேசிய இனங்களிலும் தமிழ் மரபினம் கலந்துள்ளது. (தமிழ்த்தேச குடியரசு-ஒரு விவாதம், பெ. மணியரசன்).

பெ. மணியரசன் ஆரியர்கள் பற்றி கருத்து சொன்னார் என்றால் அது தமிழ் தேசியத்தை ஏற்றுக்கொள்ளாதோரால் மறுத்துரைக்கப்படலாம். இதையே தமிழ் தேசியத்துக்கும் பெ. மணியரசனுக்கும் எந்த சம்பந்தமுமில்லாத பிரான்சு(ஸ்)சிசு(ஸ்) புக்குயாமா தன் அரசியல் அமைப்பின் தோற்றம் (The Origins of Political Order) என்கிற புத்தகத்தில் இந்தோ-ஆரியர் வருகையோடு இந்திய அரசியல் எப்படி வடிவமைக்கப்படுகிறது என்பதை விளக்குகிறார். 

அதில் அவர் குறிப்பி்டுவது இந்தோ-ஆரியர்கள் ரசியாவின் தெற்குப்பகுதியிலுள்ள கருங்கடல் மற்றும் காசி(ஸ்)பியன் கடலுக்கு (Black and Caspian Seas);இடைப்பட்ட ஒரு பகுதியிலிருந்து இந்தியா வந்தவர்கள் என்பதுதான் அந்தப்பிரதேசத்திலிருந்து புறப்பட்டவர்கள் மற்றும் சிலர் தான் ரோமானியர்கள், யே(ஜே)ர்மனியர்கள், மற்றும் அயி(ஐ)ரோப்பாவிலுள்ள சிலரது முன்னோடிகள் ஆக இருக்கிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார். அவ்வாறு புறப்பட்டவர்கள் ஒரு பகுதியினர் தான் இந்தியாவுக்குள்ளும் வந்தார்கள் என்கிறார்.

தமிழர் என்பது ஒர் மரபினம். அது தமிழ்த் தேசிய இனமும் ஆகும். அது ஈழத்தமிழர்கள் என்றாலும், தமிழக தமிழர்கள் என்றாலும் பொருந்தும். 

“..தனித்துவமான ஒரு மொழி, பண்பாடு, வரலாறு, நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு தாயக நிலம், இன அடையாள உணர்வு போன்ற பண்புகளை உடையவர்கள் என்பதால், எமது மக்கள் ஒரு தேசிய இனமாக, ஒரு மக்கள் சமூகமாக அமைந்துள்ளனர்.

ஒரு தனித்துவமான மக்கள் சமூகம் என்ற ரீதியில் எமது மக்கள் சுய நிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள்...” (2002 கார்த்திகை 27, மாவீரர் நாள் உரை-தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் வே.பிரபாகரன்).

தேசம், தேசியம் என்கிற வரையறைகள் ரசியப்புரட்சிக்கு தலமை தாங்கிய ஜே.வி. ஸ்டாலினின் கூற்றுக்கு இணங்கவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஸ்டாலினை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட அவரது தேசம், தேசியம் குறித்த வரையறைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

The most accurate definition of a "nation", comes from Joseph Stalin. In his Marxism and the National Question, New York, 1942. He said:

"A nation is a historically evolved, stable community of language, territory, economic life, and psychological make-up manifested in a community of a culture....."

Diaspora referenda on Tamil Eelam in Sri Lanka - Brian Seniwiratne.

இது லெனினின் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை குறித்த விளக்கங்கள்.

இது இப்படி இருக்க தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் என்பது ஈழப்போராட்டம் நடத்தியவர்கள் கற்றுக்கொடுத்தது என்கிற அபத்தத்தையும் சிலர் சளைக்காமல் சொல்லித்திரிவது அதன் உச்சம். குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் கண்டுபிடித்த தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி தான் தமிழ் நாட்டிலும் தமிழ் தேசியம் பேசுகிறார்கள் என்பது அறியாமை என்றே சொல்லத்தோன்றுகிறது.

தமிழீழ தமிழ் தேசியம் வேறு. தமிழ் நாட்டு தமிழ் தேசியம் வேறு. இரண்டும் ஒன்றல்ல. அது ஒன்றாகவும் முடியாது.

திராவிட கொள்கைகளின் அடிப்படையில் தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் பேசப்பட்ட காலங்களின் பின்னர் தான் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் தேசியம் குறித்து பேசத்துவங்கினார்கள். அதற்கு வடிவமும் கொடுத்தார்கள். ஈழத்தின் தமிழ் தேசியமும் கூட தந்தை செல்வா காலத்தில் மக்கள் ஆணையாய் வழங்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம் தானம் தான் அதன் அடிப்படை என்பதும் வரலாறு.

விடுதலைக்குரிய முயற்சி என்பது மாற்றத்திற்கு உள்ளாகிக்கொண்டே இருக்கும் ஒரு சுழற்சி முறைப் போராட்டம், விடுதலை கிடைக்கும் வரை! 

அறவழிப்போராட்டம், ஆயுதப்போராட்டம், சமாதானம் பேச்சுவார்த்தை என்று பல கால படி நிலை வளர்ச்சிக்குப் பிறகு இன்று அது ஈழத்தில் மறுபடியும் மக்கள் போராட்ட வடிவமாய் மக்களிடமே விடப்பட்டிருக்கிறது. ஐ. நா. வின் சாசனங்கள், பிரகடனங்களுக்கு அமைவாகவே தமிழர்கள் என்கிற தேசிய இனத்தின் விடுதலைக்கான சுய நிர்ணய உரிமைப்போராட்டமும் ஈழத்தில் கட்டியமைக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய அரசியல் சூழலில் அமெரிக்க-இந்திய கூட்டு சதியால் சுய நிர்ணய உரிமைக்கான ஈழப்போராட்டம் பயங்கரவாதம் என்று நாமகரணம் சூட்டப்பட்டிருக்கிறது. ஐ. நா. விதிகளின் படி ஒரு தேசிய இனம் தன் சுய நிர்ணய உரிமை கோருவது தவறில்லை என்னும் போது, ஏகாதிபத்தியங்களும், அதற்கு அடிவருடுபவர்களும் இயங்கும் கிளப் (Club) என்று ஐ. நா. மாறிப்போன அவமானம் அதுக்கே கிடையாது. இதில் ஒரு தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமை குறித்து சரியாய் நடக்க ஏது அதுக்கு சுதந்திரம்.

ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஒன்றுமில்லாதாக்கும் ஒர் முயற்சியை இந்தியா மிக லாவகமாக 2009 ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு செய்து வருகிறது. இலங்கையில் தமிழர்கள் “சிறுபான்மையினர்” என்கிற ஒரு குயுக்தியான கருத்துப்பரம்பல் செய்யப்படுகிறது இந்திய மேலாதிக்க அரசியல்வாதிகளால்.

அதற்கு அண்மையில் ஈழத்தில் சில கல்விமான்கள் மற்றும் குடிமக்கள் சார்ந்த(சிவில்)சிலரால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், ஈழத்தமிழர்களை ‘சிறுபான்மையினர்’ என்று சொல்வோருக்கும் ஒரு நல்லதோர் பதில் வழங்கவும் பட்டிருக்கிறது.

முதலில், ஈழத்தமிழர்கள் சிறுபான்மையினர் அல்ல. ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம். சிறுபான்மையினர் என்னும் போது பெரும்பான்மை சமூகத்துக்கு இணையான மொழி மற்றும் கலாச்சார உரிமைகள் குறித்த சலுகைகள் தான் தமிழர்கள் கேட்கிறார்கள் என்று ஆகிப்போகும். இதன் வழி சுய நிர்ணய உரிமை/சுயாட்சி தந்திரமாக மறுக்கப்படும்.

ஈழத்தமிழர்கள் சலுகைகள் கேட்கவில்லை. அவர்கள் கேட்பது தங்களைத்தாங்களே ஆளும் சுய நிர்ணய ஆட்சி. சட்டத்தின் ஆட்சியும் (Rule of Law) நல்லாட்சியும் (Good Governance) மதிக்கப்படும் ஆட்சியிலேயே அதெல்லாம் சாத்தியம்.

இலங்கையில் அது சாத்தியமில்லை என்று புரிய வைத்திருக்கிறார்கள். ஈழத்தமிழர்களின் உரிமைப்பிரச்சனைகள் வெறுமனே சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதனூடாக தீர்க்க முடியாதவை என்று வலியுறுத்தி கூறியிருக்கிறார்கள் (தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்குத் தமிழ் சிவில் சமூகத்திடமிருந்தான பகிரங்க விண்ணப்பம், 13 டிசம்பர், 2011). 

ஆனாலும், வழக்கம் போல ஈழத்தமிழர் சிறுபான்மையினர் என்று இந்தியா தன் உழுத்துப்போன பல்லவியையே பாடும்.

வரலாற்று ரீதியாகவும் இன்று இலங்கை என்று அழைக்கப்படும் நாடு மூன்று ராச்சியங்களை கொண்டிருந்தது. பிரித்தானிய காலனியாதிக்க காலத்தில் தங்கள் நிர்வாக செளகர்யங்களுக்காக அது குறித்து ஆராய ஒரு ரோயல் கமிசனை (Colebrooke-Camerom Commision) 1829 ம் ஆண்டு அனுப்பியது. 

அந்த கமிசன் (Colebrooke-Camerom Commision) அறிவுரையின் படி 1833 ம் ஆண்டு அந்த தமிழ், கண்டி, மற்றும் கோட்டை ராச்சியங்கள் ஒன்றாய் இணைக்கப்பட்டது. மூன்று ராச்சியங்களும் கலைக்கப்பட்டு அதன் ஆட்சி அதிகாரமும் கொழும்பில் குவிக்கப்பட வேண்டும் என்பதை நிறைவேற்றினார்கள்.

அதை கலைத்துப்போடுங்கள். எங்கள் ஆட்சியை திருப்பி தாருங்கள். எங்கள் உரிமைகளை ஊர்சி(ஜி)தம் செய்யும் சுய நிர்ணய உரிமையை மறுக்காதீர்கள் என்றால் நாங்கள் சிறுபான்மையினர் என்று இந்தியாவும் சேர்ந்து பித்தலாட்டம் செய்கிறது.

இப்படியாக எங்கள் நிலம், மொழி, பண்பாட்டு பொருளாதார வரலாறும் அதன்வழி நாங்கள் கேட்கும் தமிழ் தேசியம், சுய நிர்ணயம் என்பன அதற்குரிய அங்கீகாரம் தான் மிச்சம் என்கிற ஒரு நிலையில் இருக்கிறது. ஆனால், தமிழ் நாட்டு தமிழ் தேசியம் குறித்து பேசும் போது தான் புரிகிறது அது இன்னும் பல குழப்ப நிலைகளை கொண்டதாகவே இருக்கிறது என்பது. 

முதலில் தமிழ் நாட்டு தமிழ் தேசியத்தில் தமிழர்கள் என்றால் யாரென்பது பெரும் குழப்பமாய் தெரிகிறது. தமிழகத்தில் தமிழ் மொழியை பேசும் வேற்று மாநிலத்தோரும் வாழ்கிறார்கள்.

இவர்கள் மொழிவாரி சிறுபான்மையினர் (கன்னடர்கள், மலையாளிகள்) என்று தமிழ் தேசியம் பேசும் மார்கிசியர் தியாகு குறிப்பிடுகிறார். இது ஒன்றும் புதிய உலக வழக்கு இல்லை என்பதையும் தெளிவாக்குகிறார்.

அதைப்போலவே பிராமணியத்தை கடைப்பிடிப்பவர்களும் தமிழர் பண்பாட்டில் தமிழர் என்று கொள்ளப்படுவார்களா என்றால், அதற்குரிய தியாகுவின் பதில், தமிழ் பண்பாட்டில் பார்ப்பனியத்திற்கும் இடமில்லை. 

மானுட சமத்துவத்தை மறுக்கும் கடவுள் கொள்கைகளுக்கும் இடமில்லை என்பதுதான். நன்றாக கவனியுங்கள் அவர் தமிழ் பண்பாடு குறித்து தான் பேசுகிறார். (தமிழ் தேசியம் குறித்து மார்க்சீயர் தியாகுவுடன் யமுனா ராஜேந்திரன் மற்றும் விசுவநாதன் உரையாடல் மே 2003).

பெ. மணியரசனும் (த. தே.பொ. க) பார்ப்பனர்கள் தமிழ் மொழியை பேசினாலும் அவர்கள் சமசு(ஸ்)கிருத மொழி உயர்ந்தது என்றும், ஆரியத்தின் பெருமையில் மார் தட்டுபவர்கள் என்பதாயும் குறிப்பிடுகிறார்.

என்னுடைய புரிதல் என்னவென்றால் இங்கே கடவுளின் பெயரால் வர்ணாச்சிரமம், சா(ஜா)தி என்று உலகின் வேறெந்த மதத்திலும் இல்லாத ஏற்றத்தாழ்வுகளை பிராமணியம் கடைப்பிடிப்பவர்கள் பேசிக்கொண்டிருந்தால் தமிழ் தேசியத்தில் அது போன்ற மனப்போக்குடையவர்கள் உள்வாங்கப்படுவார்களா என்பதே!

ஆனாலும், தமிழ் நாட்டு தமிழ் தேசியம் பேசுபவர்கள் யாரையும் விலக்கி வைத்தோ அல்லது உள்வாங்க மறுத்தோ தமிழ் தேசியத்தை பேசவோ, கட்டியமைக்கவோ இல்லை என்பதும் தெளிவாய் தெரிகிறது.

தம்மை தமிழராய், தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்காய் குரல் கொடுப்பவர்களை விலக்கி வைத்தால் அது சரியான தேசியத்திற்கான பாதையாயும் இருக்காது.

எந்த மொழி பேசுவாராகிலும், பார்ப்பனிய வர்ணாச்சிரம பேதங்களை புறக்கணித்து தமிழ் உணர்வோடு செயற்படுபவர்கள் அனைவரும் தமிழ் நாட்டு தமிழ் தேசியத்தில் உள்வாங்கப்படுவார்கள் என்பதும் புரிகிறது.

தமிழர்கள் யாரென்று அல்லது தமிழ் தேசியம் என்பதற்குள் உள்வாங்கப்படுவர்கள் குறித்து முடிவுக்கு வந்தாலும், பிறகு தமிழ் தேசியம் பேசுபவர்கள் ஒரு சிலர் குழப்பமாகவே இருக்கிறார்கள்.

உருவான தமிழ் தேசியமும் உருவாகாத இந்திய தேசியமும் என்று பேசிக்கொண்டே இந்திய இறையாண்மை குறித்து அக்கறைப்படுபவர்களும் உண்டு.

இந்திய தேசியம், தமிழ் தேசியம் இரண்டும் குறித்து எப்படி ஒரே நேரத்தில் அக்கறைப்பட முடியும் என்று என் பொதுப்புத்திக்கு ஓர் கேள்வி தோன்றுகிறது. தமிழ் தேசியம் குறித்து எத்தனை பேர் பேசினாலும் அவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையோடு செயற்படவில்லை என்பதும் தெரிகிறது.

இது எல்லாத்தையும் விட தமிழர்கள் தேசிய இனமாய் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டவர்களா!

இந்திய மைய அரசியலில் தமிழ் தேசிய மொழி இல்லை. தமிழருக்குரிய அங்கீகாரமும் இல்லை. அவர்கள் தம் மொழிக்கும் அங்கீகாரம் இல்லை. இப்படி இருந்தாலும் தமிழ் தேசியம் தன்னால் வலுப்பெறுமோ!

தமிழ் தேசியம் பேசினாலோ அல்லது அதுக்காய் போராடினால் ஈழம் போல் அழிவை சந்திக்க வேண்டும் என்கிற கருத்தையும் படித்திருக்கிறேன். அது ஈழப்போராட்டம் போல் தான் இருக்க வேண்டுமா!

ஏன் கனடா போன்ற நாட்டில் நடந்தது போல் ஒரு வாக்கெடுப்பு (Referendum) இந்தியா என்கிற சனநாயக தேசத்தில் சாத்தியம் வராதா!

ஈழப்பிரச்சனையின் அடிப்படையும், அதன் போராட்ட களங்களும் வேறு. தமிழ் நாட்டு தமிழ் தேசியத்தின் களங்கள் வேறு. அதற்கு ஏற்றாற்போல் வழிமுறைகள் சாத்தியமில்லையா!

இதுவரை எந்தவொரு தமிழ் நாட்டு தமிழ் தேசியம் பேசுபவர்களும் அதை அடையும் வழியாய் ஆயுதப்போராட்டத்தையோ அல்லது நாடாளுமன்ற அரசியல் வழிமுறையையோ பேசி நான் படித்ததில்லை.

தமிழ் தேசிய புரட்சி மக்கள் எழுச்சியாகவே நடக்கும் என்று தான் படித்திருக்கிறேன். ஒரு முல்லை-பெரியாறு போதும் தமிழ் தேசியம் பிறக்குமா, பிறக்காதா என்பதை நாடிபிடித்துப்பார்க்க!

ஈழத்தின் தமிழ் தேசியத்திற்கு முரணான கொள்கைகளுடன் இசு(ஸ்)லாம் என்கிற அடையாளத்துடன் இலங்கை முசு(ஸ்)லிம்களும்; தமிழ் நாட்டில் பிராமணியம் கடைப்பிடிக்கும் பிராமணர்களும்/பார்பனியர்கள் தமிழ் தேசியத்துடன் முரண்படுகிறார்கள். இது குறித்து விரிவாய் இன்னோர் கட்டுரையே எழுதலாம்.

ஒரு தேசிய இனத்தின் உரிமைகளும், அரசியல் அபிலாசைகளும் காலவெள்ளத்தில் அடித்து வரப்பட்டு சிறுபான்மையாய் எம்மத்தியில் வாழ்பவர்கள் வழி நீர்த்துப்போகவேண்டுமா!

எம் நிலம், மொழி, பண்பாடு, பொருளியல் வாழ்வு என்று அத்தனையும் பறிகொடுத்து இனவழிப்புக்கு ஆளான ஒரு இனம் பிரிந்து போய் தனியே சுயாட்சி மூலம் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்துவது உலகவிதிகளின் படியே தவறே இல்லை என்னும் போது, அது குறித்து பேசவே நாம் ஏன் தயங்க வேண்டும். எந்தவொரு மக்கள் சமூகத்தின் உரிமைகளை மறுப்பதோ, அல்லது பாசிசமோ அல்ல தமிழ் தேசியம் என்பது. தமிழ் தேசியத்தின் வழி நாம் கேட்பதும், உறுதிபடுத்துவதும் எம் சுய நிர்ணய உரிமையே என்பது என் தெளிவான புரிதல்.

பூர்வீகத்தை தமிழாகக் கொண்ட அனைவரும் தமிழர்களே!

தமிழர்களா இல்லையா என்பதைபப்றியே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டுமேயொழிய எந்த மதப்பிரிவை அல்லது எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவரென ஆய்வுமேற்கொள்தல் எங்கள் தமிழினத்தின் விடிவுப் பாதையில் நாங்களே ஏற்படுத்திக் கொள்ளும் தடைக்கற்களாகும். தமிழ் மக்களின் விடிவிற்காக உழைக்கும் தமிழுணர்வாளர்களே தங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தாது ஏன்?

தமிழ்மக்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளின் குரல்வடிவமோ இல்லையேல் எழுத்துவடிவமோ மக்களிடம் சென்றடைவதற்கு முன்பு பலமுறைகள் சீர்செய்யப்பட்டு மக்களிடம் வழங்குமாறு அனைத்து தமிழ்மக்களையும் தாழ்மையுடன் வேண்டிக்கொண்டு விடைபெறுகின்றேன்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.