Sunday 8 April 2012

பிரிகேடியர் விதுசா சொன்ன ....!

பிரிகேடியர் விதுசா சொன்ன அய்யாமுத்தன் கதை !

வரலாற்றை நிராகரிக்கவோ அழிக்கவோ முடியாது. அதைச் செய்ய நினைப்பது பெருந் தவறு. விடுதலை புலிகளின் ஆட்சி காலம் ஈழத் தமிழர்களின் பொற்காலம் என்பதில் மறுப்பில்லை. மக்கள் விடுதலை உணர்வோடு சுயகவுரவத்துடன் வாழ்ந்தார்கள்.

அவர்கள் வாழ்வில் அர்த்தமும் பெருமிதமும் இருந்தன. மக்கள் விடுதலை இயக்கத்தின் அங்கமாக இருந்தார்கள். போராளிகள் அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளாகவும் குடும்ப வாரிசாகவும் இருந்தனர். போராளிகளின் போராட்ட வாழ்விற்கு மக்கள் உரமூட்டினார்கள்.

இரு பகுதி என்று வகைப் படுத்த முடியாது. தாயும் பிள்ளையும் வேறல்ல. இந்த முகவுரையுடன் 2009 ஏப்ரல் 4ம் நாள் வீரச்சாவடைந்த பிரிகேடியர் விதுசா அவர்கள் பற்றிய நினைவுப் பதிவினை இதில் மேற்கொள்கிறோம். அவர் வடமராட்சி, கரவெட்டி, கப்பூது கிராமத்தைச் சேர்ந்தவர்.

சைவக் குருக்கள் குடும்பத்தவராயினும் போராட்ட வாழ்வை அவர் தனது பதினேழாம் வயதில் தேர்ந்தெடுத்தார். நாற்பதாம் அகவையில் வீரச்சாவடைந்தார். அவரோடு நெருங்கிப் பழகும் வாய்புக் கிடைத்தோரின் வறண்ட வாழ்வில் பசுமையான நினைவுகளை அவர் விட்டுச் சென்றார்.

அவர் அதிகம் பேச மாட்டார். பேசினால் அவருடைய சொற்கள் சிந்தனைக்கு வித்தாக அமைந்தன. கரவெட்டியில் பிரசித்தமான அய்யா முத்தன் என்ற முளைத் திறன் குறைந்த உடற் பலம் மிக்கவரின் கதையை அவர் ஒரு முறை சொன்னார். அதை மறப்பது கடினமாக இருக்கிறது.

அய்யாமுத்தருக்கு என்ன வயதென்று துல்லியமாக சொல்ல முடியாது. அவரை எந்த வருடம் பார்த்தாலும் ஒரே மாதிரித் தான் இருப்பார். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துவார். அவர் செய்யும் வேலைக்குரிய ஊதியத்தை கொடுக்க மாட்டார்கள். அவரை ஏமாற்றுவது மிகவும் சுலபம்.

அவருக்குச் சாப்பாடு தான் முக்கியம். அவருக்கு நித்திய பசி. எதைக் கொடுத்தாலும் ருசி பார்க்காமல் தின்பார். அவரை வேலைக்குப் பிடிப்பவர்களுக்கு இந்த இரகசியம் நன்கு தெரியும். ஒரு மூடை நெல்லை உரலில் தனி ஆளாகக் குற்றி அரசியாக்கி அதே அரிசியை மாவாக்க அவரால் முடியம்.

இந்தச் சாதனையை அவர் ஒரே நாளில் செய்து முடிப்பார். பனை ஓலையில் செய்த தட்டில் சோற்றைக் கொட்டி அவருக்கு மூன்று தரம் கொடுப்பார்கள் சாப்பிட்டு முடிந்ததும் வேலையைத் தொடர்ந்து செய்வார். கையில் தொட்டுக் கொள்ளச் சீனியும் வெறுந் தேனீரும் கொடுப்பார்கள். அதையும் குடிப்பார்.

அவர் ஒரு நாளில் செய்யும் வேலைக்கு ஊதியமாக குறைந்தது ரூபா இரு நூறு கொடுக்க வேண்டும். ஆனால் பத்து ரூபாயும் சாப்பாடும் தான் கொடுப்பார்கள். இரு நூறு ரூபாய் வாங்கும் தொழிலாளர்களுக்கும் சாப்பாடு கொடுக்கத் தான் வேண்டும். அய்யாமுத்தரின் வேலையில் நேர்த்தியும் கரும சிரத்தையும் இருக்கும்.

சிந்தாமல் சிதறாமல் சேதாரம் இல்லாமல் மிகவும் பக்குவமாக அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பார். தனக்குரிய ஊதியத்தை கேட்டு வாங்க மாத்திரம் அவருக்கு தெரியாது. அவர் தனிக் கட்டை. அவரை நம்பி கழுத்தை நீட்ட ஒரு பெண்ணும் தயார் இல்லை. அவருக்கும் குடும்ப வாழ்வில் நாட்டமில்லை.

எதற்காக இந்த அப்பாவியின் கதையை விதுசா சொன்னார் என்று தெரியவில்லை. அய்யாமுத்தன் போன்றவர்கள் எல்லா நாடுகளிலும் எல்லாச் சமூகங்களிலும் இருக்கிறார்கள். அவர்களை எளிதில் அடையாளம் காணமுடிவதில்லை. கரவெட்டி அய்யாமுத்தர் ஒரு விதிவிலக்காக அமைகிறார்.

எந்த நிர்வாகத்திலும் செய்யும் வேலையே குறியாக வாழ்பவர்கள் இருக்கிறார்கள். அய்யாமுத்தரைப் போல் அவர்களுக்கு வயிற்றுப் பசி இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு நிட்சயம் பசியும் பிணியும் அறியாப் பணிப் பசி இருந்தே தீரும்.

அவர்கள் திரைமறைவில் இருந்தபடி பிறர் வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்வார்கள். இப்படியானவர்கள் பற்றி வெளி உலகத்தவர் அறியமாட்டார்கள். அவர்கள் பேர் புகழைத் தேடாதவர்கள். தலைமைப் பதவியை நாடாதவர்கள். ஆனால் நிர்வாகச் சக்கரம் சுற்றுவதற்கு கட்டாயமாகத் தேவைப்படுகிறார்கள். 

விதுசா அவர்கள் ஒரு முறை எல்லோராலும் தலைமைப் பதவியைத் தாங்க முடியாது. அதற்குத் தனித் திறமை தேவைப்படுகிறது. எல்லோரையும் தலைவராக மக்கள் ஏற்க மாட்டார்கள். அதற்காகப் பிறக்க வேண்டும். தலைவர்களை தெரிவு செய்ய வேண்டியதில்லை என்று சொன்னார்.

அவர்கள் காலத்தின் தேவை அறிந்து சுயம்புவாகத் தோன்றுவார்கள். ஒரு இனம் அழியக் கூடாது என்ற விதி இருக்கமாயின் மீட்புக்காகத் தனிப் பெரும் தலைவன் தோன்றுவான், நிட்சயம் தோன்றுவான் இப்படிச் சொன்ன விதுசா வீரச்சாவடைந்து இனத்தின் வரலாறாகி விட்டார்.

அவர் சுருங்கச் சொல்லி விளங்க வைத்த மனித வாழ்வின் ஆதாரங்கள், இயக்கிகள், நியதிகள் துயரில் மூழ்கும் போது கைதூக்கி விடும் கருவிகளாக இடம்பெறுகின்றன. வீர வணக்கம் பிரிகேடியர் விதுசா.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.