Tuesday 3 January 2012

எரிவேட்டல்........!


இட்டெறியும் ஓரெச்சில் இலைநக்கப் பகைவளர்க்கும்
இழிநாய்க் கூட்டம்!
விட்டெறியும் ஓர்கல்லில் விண்ணேறும் புட்கூட்டம்!
வேட்டெஃ கத்தால்
சுட்டெறியும் நிலைவரினும் தோளொன்றிச் சேராத
தொழும்பர் கூட்டம்!
பட்டறியும் திறனின்றிப் பலபிரிவாய்ப் பிளந்துவிட்ட
பாழுங் கூட்டம்!


இங்குறுதி கொண்டபிற இனங்கண்டும் கிஞ்சித்தும்
இனப்பற் றின்றித்
தங்குருதிச் சோதரரைத் தாய்மொழியைத் தம்மதத்தைத்
தாழ்த்துங் கூட்டம்!
செங்குருதி நாளத்தில் சீழோடுங் கூட்டமிது!
சிச்சீ! எண்ணில்
எங்கிருந்து பற்றுவரும்? இக்கூட்டம் குடித்ததெலாம்
ஈனப் பாலே!


கொத்தடிமைப் பணிசெய்து குறுக்கியுடல் இருகரங்கள்
குவித்து வாயைப்
பொத்தியற்பக் கூலிபெற்றுப் பொதிவயிற்றில் வெறுந்தீனி
போட்டுப் போட்டு
மெத்தனவாய் வாழ்ந்தமையால் வேறுதொழில் உயர்கல்வி
மெத்த நாடும்
புத்தறிவு பொலபொலத்துப் போய்விட்ட புழுக்கூட்டம்!
புன்மைக் கூட்டம்!


குறைபட்ட சிந்தனையால் கூரற்ற ஐம்புலனால்
கூனல் நெஞ்சால்
கறைபட்ட பகுத்தறிவால் கனத்துவிட்ட மேற்றோலால்
கன்னந் தன்னில்
அறைபட்ட போதினிலும் ஆண்மையின்றி ஆமையென
அடங்கும் போக்கால்
முறைகெட்ட ஒருகூட்டம்! முதுகெலும்பே இல்லாத
மோழைக் கூட்டம்!


ஈதென்ன மாந்தரினம்! இதற்கென்ன உயிர்வாழ்க்கை!
எட்டிப் போகும்
ஈதென்ன சமுதாயம்! இதற்கென்ன ஒருதலைமை!
இழிந்து தாழ்ந்த
ஈதென்ன தமிழ்ச்சாதி! இதற்கென்ன தனிப்பெருமை!
எலாரும் எள்ள
ஈதென்ன வாழ்வோ!தூ! இருந்தென்ன போயென்ன
இந்த வாழ்வே!


ஒருவழியும் பற்றாமல் உழல்தமிழர் நிலைகாண
உளமொப் பாமல்
இருவிழியும் மூடினையோ! ஏ,சிவனே! நுதல்விழியும்
இலையோ! அந்த
ஒருவிழியைத் திறசற்றே! ஊமைகளாய்க் குருடுகளாய்
உலவும் மாக்கள்
கருவழியச் சாகட்டும்! கருகட்டும்! எரியட்டும்!
கனல்வாய்ப் பட்டே!



தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.