Friday 1 June 2012

தூய தமிழ்ப் பெயர்களே................!


காலஞ்சென்ற பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் எழுதிய தமிழீழம் நூலில் “இலங்கையின் வரலாற்றுப் பின்னணி’ என்ற முதல் அத்தியாயத்தின் ஒரு பகுதியை இங்கே நன்றியுடன் அறியத் தருகிறோம். பழந்தமிழ் நாடு, செந்தமிழ்நாடும் கொடுந்தமிழ் நாடும் என இரு பிரிவாகப் பிரித்து பேசப் பெற்றது. அவற்றை மருவிச் சூழ்ந்துள்ள நாடுகள் பதினேழு என்று குறிக்கப் பெற்றுள்ளன. அவற்றைக் கீழ்வரும் பழம் பாடலால் அறியலாம்.

சிங்களம் சோனகம் சாவகம்
சீனம் துளுக்கடகம்
கொங்கணம் கன்னடம் கொல்லம்
தெலுங்கு கலிங்கவங்கம்
கங்கம் மகதம் கவுடம்
கடாரம் கடுங்குசலம்
தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி
னேழ்புவி தாமிவையே!

ஈழம் என்பது சிங்களத்தின் மாற்று பெயராகும். சிங்களம் என்னும் பெயர், சிங்கவாகுவின் மகன் விசயன், தன் தந்தையின் பெயரடிப்படையாகக் கொண்டு அøத்ததென்பது பொருந்தாது. சிங்கவாகுவின் மகன் இலங்கைக்கு வந்தது இன்றைக்கு ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்.

ஆனால் இன்றைக்கு ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன் உள்ள பாரதத்தில் சிங்களம் என்னும் பெயர் வந்துள்ளது. இப்பெயர் அங்குப் பேரளவில் விளையும் கறுவாப்பட்டையால் வந்தது என்பதே பொருந்துவதாகும்.

இலக்குமன் இராமச்சந்திர வைத்திய பண்டிதர் என்பார் எழுதிய சமற்கிருத ஆங்கில அகர முதலியில் சிங்களத் துவீபம் என்பதற்குப் பட்டைத் தீவு என்றே பொருள் தரப் பெற்றுள்ளது. இனி, சிங்களம் என்னுஞ் சொல்லால் இந்நாடு குறிக்கப் பெறுவதை விட, இலங்கை, ஈழம் என்னுஞ் சொற்களால் தமிழ் இலக்கியங்களில் குறிக்கப் பெறுவதே பெருவழக்காக உள்ளது.

“தொல்லிலங்கை கட்டழித்த சிலப். 2,35:3.
“பெருமா விலங்கை புறம்: 1786.
“இலங்கைக் கிழவோன்’ புறம்: 3766.
“தொல்மா விலங்கை’ சிறுபாண் 119.
“இலங்கையில் எழுந்த சமரம்’ சிலப். 2538.
“ஈழத்துணவு’ பட்டினப்191.
“ஈழம்’ முத்தொள். 263.

முதலிய குறிப்புகளால் இதனை உணரலாம். சேர மண்டிலம், சோழ மண்டிலம், பாண்டிய மண்டிலம், தொண்டை மண்டிலம் என்று மண்டிலப் பெயர் கொண்டு வழங்கும் நாடுகளுள் ஈழ மண்டிலம் என்பதும் ஒன்றாகப் பண்டைத் தமிழ் நூல்களில் குறிக்கப் பெறுகிறது.

விசயன் இலங்கைக்கு வந்த கி.மு. 543க்குப் பன்னெடுங் காலத்துக்கு முன்பிருந்தே, அந்நாடு தமிழ் மக்கள் குடி கொண்டிருந்த நாடாக இருந்தது என்பர் பெர்டோலாக்கி (Bertolocei) பென்னட் (Bennet) ஆகிய ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள், அந்நாட்டில் வழங்கும் பல ஊர்களின் பெயர்கள் இன்னும் தூய தமிழ்ப் பெயர்களாகவே விளங்குகின்றன.

எடுத்துக் காட்டாக பாலாவி, மாதோட்டம், மாந்தை, சிலாபம், குசலை, உடைப்பு, ஆணை மடு பள்ளம், கற்பிட்டி, குதிரை மலை, வில்பற்று, முசலி, மன்னார் மூதூர், கந்தளாய், பன்குளம், திறப்பனை, குச்சவெளி, நிலாவெளி, பச்சிலைப் பள்ளி, கரைச்சிக் குடியிருப்பு, முள்ளிய வலை, குமணை, உகந்தை, அம்பாறை, நல்லூர், அரிப்பு, வெருகல் (ஆறு), பருத்தித்துறை, புத்தளம்,

வதுளை, கண்டி, கதிர்காமம், கொழும்பூ (இதுவே பின்னர் கொழும்பு என்றானது), சிலாத்துறை, சுண்ணாகம், செம்பியன் பற்று, ஆனையிறவு, கிளி நொச்சி, முல்லைத் தீவு, மண்டைத் தீவு, வேலணை, காரைத் தீவு, எழுவைத் தீவு, அனலைத் தீவு, புங்குடு தீவு, (இது பொன் கொடு தீவு என்பதன் மருவாதல் வேண்டும்) நெடுந்தீவு, பாலைத் தீவு,மாங்குளம், அருவியாறு, ஆனைமேடு,

களுத்துறை, அலம்பில் வப்புவெளி, செங்கலம், கோட்டை முனை, பொலனறுவை, மட்டகளப்பு, தும்பளஞ்சோலை, அக்கறைபற்று, வெளிமடை, அப்புத்துளை, வெல்லவாய், புத்தளை, கருக்குப்பனை, முந்நூல், அறுகும்குடா, அம்பாந்தோட்டை, தேவுத்துறை, பாணன்துறை, கமம் முதலிய பரவலான எண்ணிறந்த ஊர்கள் தூய தமிழ்ப் பெயர்களே!

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.