Monday 18 June 2012

ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்ச்சியில்...........?

ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்ச்சியில் இளையராஜா பாடல்?


இளையராஜா லண்டன் ஒலிம்பிக்ஸ் தொடக்கவிழா நிகழ்வில், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல் ஒன்று இடம் பெற இருப்பதாக பிரித்தானிய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் நடக்கும் பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகளில் ஒன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட உலகப் பாடல்கள் அடங்கிய ஒரு நிகழ்ச்சி. அதில் இடம் பெறும் 86 பாடல்களில் தமிழ்த் திரைப்படப் பாடலும் ஒன்று என்று பிரித்தானிய பத்திரிகைகள் சில கூறுகின்றன.

பெரும்பாலும் பிரித்தானிய இசைக் கலைஞர்களின் பாடல்களே இடம்பெறும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள வெகு சில வேற்று மொழிப்பாடல்களில் ஒன்று, தமிழ்த் திரை இசையமைப்பாளர் இளையராசா(ஜா)வின் இசையில், எஸ்.பி.பாலசுப்ரமண்யம் பாடிய " நான்தான் ஒங்கப்பண்டா" என்ற பாடல்தான்.

கமலகா(ஹா)சன் மற்றும் சிறீப்பிரியா நடிப்பில் 1981ல் வெளியான 'ராம் லட்சுமண்' என்ற படத்தில் வரும் பாடல் இது. சடுகுடு அல்லது கபடி விளையாட்டு வீர்ர் ஒருவர் அந்த விளையாட்டின் போது பாடுவது போல் அமைந்திருக்கும், விறுவிறுப்பான இசையுடன் கூடிய இந்தப் பாடல், அந்தப் படம் வெளியான போது பெரிய அளவில் பிரபல்யம் ஆனதாக நினைவில்லை.

ஆனால் இப்போது சர்வதேசப் புகழ் பெற்ற பிரித்தானிய இசைக்குழுவான பீட்டில்ஸ் மற்றும் பிற பிரபல பிரித்தானிய இசைக்கலைஞர்களான ஏமி வைன்ஹவுஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், ஷுகர் பேப்ஸ் போன்றோரின் பாடல்களுடன் இந்தப் பாடலின் ஒலிக்கீற்றும் இந்த தொடக்க விழா நிகழ்வில் இடம்பெறலாம் என்று பிரித்தானிய பத்திரிகைகளில் கசிந்து வந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழுவினர் அதிகாரபூர்வமாக்க் கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். ஆஸ்கார் விருது பெற்ற “ஸ்லம் டாக் மிலியனேர்” போன்ற படங்களை இயக்கிய டானி போய்ல் அவர்கள் ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்ச்சிகளை கருத்துருவாக்கி வருகிறார்.


அவரது மேற்பார்வையில், சுமார் 27 மிலியன் பவுண்ட் செலவில் உருவாகிவரும் இந்த தொடக்கவிழா நிகழ்ச்சியில் இடம்பெறும் மற்றுமொரு தமிழ்க் கலைஞர், இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட பிரிட்டனில் வாழும் மியா என்ற மாதங்கி அருள்பிரகாசம்.

இவரது, பிரபலமான "காகித விமானங்கள்" (“பேப்பர் ப்ளேன்ஸ்”), என்ற பாடல் இந்தப் பட்டியலில் இடம்பெறுவதாக செய்திகள் கூறுகின்றன.

குடியேறிகளின் அனுபவத்தைச் சொல்லும் இந்தப் பாடல் 2007ம் ஆண்டு இயற்றப்பட்ட பாடல், அவரது இரண்டாவது ஆல்பமான “கலா” என்ற ஆல்பத்தில் இடம்பெற்றிருந்த்து. உலக அளவில் பல லட்சக்கணக்கானோர் பார்த்து ரசிக்க இருக்கும் ஒலிம்பிக் தொடக்கவிழாவில் இரண்டு தமிழர்களின் இசையும் இடம்பெறப்போகிறது என்பது தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.