Tuesday 25 September 2012

விடுதலைப் புலிகளை ஒழிக்க (பகுதி-2)........!

நிதர்சனம். நெற் என்னும் இணையத்தில் வெளியான கட்டுரை இதுவாகும் 

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்!

முதலில் போன உலங்குவானூர்திகள்… 2006 தொடக்கத்தில், இந்தியா தனது மறைமுக ராணுவ உதவிகளை இலங்கைக்கு வழங்கத் தொடங்கியது. 

முதலில் ஐந்து எம்.ஐ-17 ரக உலங்குவானூர்திகளை  இலங்கை விமானப்படைக்கு இந்தியா ரகசியமாக அனுப்பி வைத்தது. ஆனால் இந்த உலங்குவானூர்திகளை இலங்கை விமானப்படையின் பெயரில்தான் பயன்படுத்த வேண்டும்.

இந்தியாவின் பெயர் இதில் வந்து விடக்கூடாது என்று இலங்கைக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. அதற்கு முன்பாக 2002ம் ஆண்டு இந்திய கடலோரக் காவல் படை, இலங்கைக்கு சுகன்யா என்ற அதி நவீன கடல் ரோந்துப் படகை வழங்கியிருந்தது.

இந்தியா வழங்கி உலங்குவானூர்திகள்தான் இலங்கைக்குப் பேருதவியாக இருந்ததாக இலங்கை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இலங்கை ராணுவம் அமைத்த எட்டு வீரர்களைக் கொண்ட சிறு சிறு குழுக்கள், ராணுவத்தின் ஆழ் ஊடுறுவும் பிரிவினர் உள்ளிட்டோரை புலிகளின் பகுதிகளுக்கு கொண்டு செல்ல இந்த உலங்குவானூர்திகள் உதவியாக இருந்தனவாம்.

மேலும் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டு காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வரவும் இந்த உலங்குவானூர்திகள் உதவிகரமாக இருந்தன.

இலங்கை ராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவினர் திறமையாக செயல்பட இந்தியா வழங்கிய உலங்குவானூர்திகள் பேருதவியாக இருந்ததாக இலங்கை ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார். 

இந்தக் கட்டத்திற்கு மேல் இந்தியா ராணுவ ரீதியிலான உதவிகளைச் செய்ய தயக்கம் காட்டியது. காரணம், திமுகவின் ஆதரவை அது நாடியிருந்ததால். 

ஆனால் புலிகள் தங்களுக்கு எதிராக பெரும் தாக்குதலைத் தொடக்கலாம் என்ற பதட்டத்தில் இருந்து வந்த இலங்கை அரசுக்கு இந்தியாவின் இந்த நிதானமான போக்கு கவலையை அளித்தது.

2004ம் ஆண்டு இந்தியா, இலங்கை இடையே ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தின் கீழ் தங்களுக்கு பெருமளவில் உதவிகள் செய்ய வேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்தத் தொடங்கியது இலங்கை.

இந்த ஒப்பந்தத்தை இந்தியா நடைமுறைப்படுத்தாதற்கு வேறு ஒரு காரணம் இருந்தது. அது யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான தளத்தை தங்களது பொறுப்பில் இலங்கை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரியிருந்தது.

ஆனால் இதை இலங்கை ஏற்கவில்லை. இது இந்தியாவின் ஆதிக்க மனப்பான்மையைக் காட்டுகிறது, தங்களை அவமதிக்கும் அம்சம் இது என்று இலங்கை கருதியது. இதனால்தான் இலங்கைக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்க இந்தியா தயக்கம் காட்ட இன்னொரு காரணம்.

இருப்பினும் ஈழத்தில் போர் முடிந்த தற்போதைய நிலையில் பலாலி விமானதளத்தை சீரமைத்துத் தருவதாக இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

(இந்நூலில் வெளிவந்த செய்திகள் தொடரும்…)