Friday 21 September 2012

யார் இந்த பலாங்கொட மனிதன் .................?

இற்றைக்கு 34,000 வருடங்களுக்கு முந்தைய கால கட்டத்தில் இலங்கையில் வாழ்ந்ததாகக் கூறப்படும் உடற்கூற்றியல் சார்பில் நவீன மனிதனாகக் கணிக்கப்படும் மனிதன் தான் பலாங்கொட மனிதன்.

இற்றைக்கு சுமார் 125,000 ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே இலங்கையில் மனிதக்குடியிருப்புகள் இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நவீன மனிதனின் வரலாறு பழங்கற்காலத்தின் மத்திய பகுதியிலிருந்து ஆரம்பிக்கிறது. அதாவது இற்றைக்கு 200,000 வருடங்களுக்கு முன்னரிருந்து ஆரம்பிக்கிறது.

அக்காலப்பகுதியில் உலகில் நவீன மனிதன் வாழ்ந்தமையை உறுதிப்படுத்தும் தடங்கள் 196,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அவை எதியோப்பியாவின் ஒமா நதிக்கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டின் சில பகுதிகளாகும்.


கற்காலத்தின் தொடக்க காலத்தை பழங்கற்காலம் என்பர். அதன் பின்னர் இடைக்கற்காலமும் பின்னர் புதிய கற்காலமும் தொடர்ந்தன. புதிய கற்காலத்துடன் அந்த யுகம் முடிவுற்று வெண்கல யுகம் ஆரம்பித்தது. 

வெண்கல யுகத்தின் முடிவில் இரும்பு யுகம் ஆரம்பித்தது. இரும்பு யுகம் முடியும் வரையான காலப்பகுதியை வரலாற்றுக்கு முந்தைய காலம் என வரலாற்றாய்வாளர்கள் பகுக்கிறார்கள்.

இரும்பு யுகத்தின் பின்னரான காலத்திலேயே வரலாறு ஆவணப்படுத்தப் பட்டதாகக் கூறுவர். ஆதலால் புராதன காலம் என்பது இரும்பு யுகத்தின் பின்னரான காலப்பகுதியைக் குறிக்கிறது.

இவை இப்படி இருக்க, இந்த பலாங்கொட மனிதன் எந்தக் காலத்தைச் சேர்ந்தவன் தெரியுமா?

பழங்கற்காலத்துக்கும் புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட இடைக்காற்காலத்தைச் சேர்ந்தவனாவான். இந்த இடைக்கற்கால கலாசாரம் பலாங்கொட கலாசாரம் என அழைக்கப்படுகிறது. இடைக்கற்காலத்தை குறுணிக்கற்காலம் என்றும் அழைப்பர்.

ஏனெனில் இக்காலப்பகுதியில் நுண்ணிய கல்லாயுதங்கள் பயன்பாட்டிலிருந்தன. உறுதியான மனிதனாகக் கருதப்படும் பலாங்கொட மனிதனின் (ஆண்) சராசரி உயரம் 174 செ.மீ ஆகக் கருதப்படுகிறது. 

இலங்கையில் கோ(ஹோ)ட்டன் சமவெளி உருவாவதற்கும் இந்த பலாங்கொட கலாசாரமே காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது. இந்த வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த சில குகைகள் இலங்கையில் இன்னும் காணப்படுகின்றன.

கத்துல்கலவிலுள்ள பெலிலேன குகை, இரத்தினபுரியிலுள்ள வாவுல பனே குகை, குருவிட்டவிலுள்ள பட்டடொம்பலேன குகை, களுத்துறையிலுள்ள ஃபா கி(ஹி)யென் குகை, பலாங்கொடவிலுள்ள பெலன்பண்டி பல்லச, கோ(ஹோ)ட்டன் சமவெளி, கேகாலையிலுள்ள டொரவக்க லேன ஆகியனவே அந்த குகைகளாகும்.

ஃபா கி(ஹி)யென் குகையானது பலாங்கொட மனிதன் என்று அறியப்படும் மனிதன் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றி பல தகவல்களை நமக்குப் பெற்றுத்தந்த இடமாகும்.

இக்குகைக்கு ஃபா கி(ஹி)யென் எனவும் அது அமைந்திருக்கும் பகுதிக்கு பகி(ஹி)யங்கல எனவும் பெயர் வர என்ன காரணம் தெரியுமா?

வெகு பிரபலமான ஃபா கி(ஹி)யென் என்ற சீன யாத்திரிகர், கி.பி 4 ஆம் நூற்றாண்டளவிலே இலங்கைக்கு வந்து சிவனொளிபாத மலைக்குச் செல்லும் இக்குகை அமைந்துள்ள பகுதியில் பெளத்த கல்வெட்டுகளைத் தேடியிருக்கறார்.

அதையடுத்தே அப்பகுதி பகி(ஹி)யங்கல எனவும் அக்குகை ஃபா கி(ஹி)யென் எனவும் அழைக்கப்படத் தொடங்கின.

அண்மையில் இந்த குகையிலே அகழ்வுப் பணிகளை மேற்கொண்ட போது பலாங்கொட மனிதன் ஒருவனின் முழுமையான எலும்புக்கூடு கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த எலும்புக்கூடு 37,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கணிக்கப்பட்டுள்ளது. பலாங்கொட மனிதன் தொடர்பாக இலங்கையில் கிடைக்கப்பெற்ற சான்றாதாரங்கள் யாவும் எலும்புக்கூட்டின் பகுதிகளாகவே கிடைக்கப்பெற்றிருந்தன.

இப்போது தான் முதன் முறையாக முழு எலும்புக் கூடு கிடைக்கப்பெற்றிருக்கிறது. எலும்புக்கூட்டோடு மிருகங்களின் எலும்பாலான ஆயுதங்கள் சிலவும் படிகங்கள், மணிகளாலான ஆபரணங்கள் சிலவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திமிங்கிலத்தின் பல்லாலான ஆயுதம் ஒன்றும் அதிலடங்கும். தொல்பொருளாய்வாளர் நிமல் பெரேரா ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்தின் படி, இந்த எலும்புக் கூட்டின் அடிப்படையில் இற்றைக்கு 40,000 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் நவீன மனித இனமான கோ (ஹோ)மோ சேப்பியன் குடியிருப்புகள் காணப்பட்டதை உறுதி செய்ய முடியும்.

மண்படைகளுக்குக் கீழ் புதையுண்டிருக்கும் இந்த எலும்புக்கூட்டின் சிறுபகுதி, பாறாங்கற்களுக்கிடையில் காணப்படுகிறது. அத்துடன் இந்த அகழ்வாராய்ச்சியின் போது பலாங்கொட மனிதனின் உணவுப்பாங்கு, சம்பிரதாயங்கள், ஆயுதங்கள் தொடர்பிலான ஆதாரங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்த பலாங்கொட மனிதனின் எலும்புக்கூடு தொடர்பில் ஆராய்ச்சி செய்ய வெளிநாடுகளைச் சேர்ந்த தொல்பொருளாய்வாளர்களும் வரவழைக்கப் படவுள்ளனர். அதேவேளை இந்த எலும்புக் கூட்டின் மாதிரிகள் காபன் திகதியிடலுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

காபன் திகதியிடல் என்பது பழைமையான உயிர்ப்பொருட்களின் வயதைக் கண்டுபிடிக்கப் பயன்படும் நுட்பம் எனலாம். உதாரணமாக மரங்களின் வயதைக் கணக்கிட காபன் திகதியிடல் பயன்படுகிறது.

அதேபோல் எலும்புக்கூடுகளின் வயதைக் கணக்கிடவும் காபன் திகதியிடலைப் பயன்படுத்த முடியும். தற்போது இந்த எலும்புக்கூட்டை பொதுமக்கள் பார்வையிடுவதானது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. 

அதேவேளை, இந்த எலும்புக் கூட்டை வெளியே எடுத்து பாதுகாப்பான முறையில் பேணுவ தற்கான வசதிகள் இல்லாமையால், அது இருந்த இடத்திலே வைத்தபடியே பேணப்படுவதாகவும் தெரிய வருகிறது. ஆய்வு முடிவுகள் என்ன சொல்லப் போகின்றன?

மேலதிக அகழ்வாராய்ச்சியின் போது இன்னும் என்னென்னவெல்லாம் கிடைக்கப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

உலக வரைபடத்தில் வேண்டுமானால் இலங்கை ஒரு சிறு புள்ளியாக இருக்கலாம். அந்தச் சிறு புள்ளி புறக்கணிக்கப்படக்கூடியதாகவும் இருக்கலாம்.

ஆனால் மனித நாகரிகம் பரிணமித்து வந்த பாதையில் இலங்கைக்கும் குறிப்பிடத்தக்க இடம் இருக்கிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.