Sunday 9 September 2012

ஈழத்தாய் சபதத்திலிருந்து.................!

ஆரியர் கொடுமை - மகா வம்ச காலம்
(யுகசாரதியின் ஈழத்தாய் சபதத்திலிருந்து)
விசயனென்றொரு முரடன் - தான் 
விரும்பியபடி அவன் நாட்டினிலே 
தசையினில் ஆசைகொண்டே - இளந்
தளிர்களைக் கசக்கிப் பின் தரையெறிந்தான் 
வசை வருமெனப் பயந்தே - அந்த 
வம்பனை அவனது தோழருடன்
திசையறியாக் கடலில் - என்றும்
திரும்பி வராவண்ணம் மரக்கலத்தில்

தந்தை அரசனவன் - உயர்
தர்மத்தைக் காத்திட அனுப்பிவைத்தார் 
விந்தையில் விந்தையடா - எங்கள் 
வினைப்பயனோ இல்லை விதியதுவோ 
முந்தையர் கொடுமைகளோ - அந்த
மூர்க்கனைச் சுழற்புயல் கொணர்ந்தெமது 
செந்தமிழ் ஈழத்திலே - கரை 
சேர்த்ததடா மறை வேர்த்ததடா

மண்டலத்தரசியவள் - உயர் 
மறத்தினள் ராவணன் வழியில் வந்தாள் 
வண்டமிழ்ப் பொற் 'குவை நீ"- எனும் 
வாயினி லினிக்கிற பெயருடையாள் 
புண்டரிகத் தெழிலாள் - அந்தப் 
புலையனைப் புணர்ந்திட ஆசை கொண்டாள்
பண்டைய பெருமையெல்லாம் - அந்தப் 
பாவியினால் எமக் கழிந்ததுவே

ஆயிரமாயிரமாய் - இளம் 
அனிச்சைகள் தனை முகர்ந் தெறிந்தவனை
நாயினை அவள் புணர்ந்தாள் - நாம் 
நாடிழந்தே நடுத்தெருவில் நின்றோம் 
தேயத்து வன்னியர் நாம் - தலை 
திருப்பிய புறமெங்கும் அன்னியர்கள் 
பேயெனச் சிரித்து நின்றார் - எங்கள்
பெருமையெல்லாம் அன்று எரித்து நின்றார்

துட்டனைப் புணர்ந்ததனால் - அவள் 
துயரினை அதன் பின்னர் சுமந்ததுவும்
கெட்டவன் எமதரசைத் - தன்றன் 
கீழ்க் கொண்டு வந்திட முயன்றதுவும்
பட்டத்து அரசியென - ஒரு
பாண்டிய மங்கையை மணந்ததுவும் 
பொட்டெனத் தமிழ் நிலங்கள் - அந்தப் 
புலையனின் கை வசமானதுவும்

நாட்டினை இழந்ததனால் - வெறும்
நடைப்பிணமாகிய தமிழரினம்
காட்டினி லுறைந்ததுவும் - தீவின் 
கரைகளில் ஒதுங்கியே வாழ்ந்ததுவும் 
வேட்டுவரானதுவும் - சிலர்
வெஞ்சினமுற்றுக் குவை நீ தனை
ஈட்டியில் முடித்ததுவும் - எங்கள்
ஈழத்தை இந்தியத் தமிழர்களாம்

பாண்டிய மன்னர்களும் - பலம் 
பொருந்திய புலிக் கொடிச் சோழர்களும் 
ஆண்டதும் விதிவலியால் - தமிழ் 
அன்னையைத் தவிக்கவிட்டவர் நிலமே 
மீண்டதும் பழைய கதை - பின்னர் 
மேற்குலகத்தினர் எமைப்பிடித்தே 
வேண்டிய பொருள் பறித்தார் - சுவை
மேவிய தமிழுக்கும் குழி பறித்தார்

தமிழ் கவிதைகள் (இணையத்தில் வலைவீசிப்பிடித்தவை)

நன்றிகள் பல.