Wednesday 26 September 2012

விடுதலைப் புலிகளை ஒழிக்க (பகுதி-3)........!

நிதர்சனம். நெற் என்னும் இணையத்தில் வெளியான கட்டுரை இதுவாகும்.

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்!

இந்தியாவை வழிக்குக் கொண்டு வந்த ராசபக்சே சகோதரர்கள்… இந்திய அரசின் கவலை மற்றும் பிரச்சினைகளை ராசபக்சேவும் உணர்ந்திருந்தார்.

தமிழகத்தை மையமாக வைத்துத்தான் இந்திய அரசியல் இருக்கிறது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். அதேசமயம், இலங்கைக்கு உதவுவது இந்தியாவுக்கு அவசியம் என்பதையும் அவர் புரிந்திருந்தார்.

இல்லாவிட்டால் தெற்காசியப் பகுதியில், இந்தியாவின் பிடி தளர்ந்து போய் விடும் என்பது இந்தியாவுக்குத் தெரியும் என்பதையும் அவர் புரிந்து வைத்திருந்தார்.

இதை ராசபக்சே சகோதரர்கள் சரியாகப் புரிந்து கொண்டு காய்களை நகர்த்தத் தொடங்கினர். பாகிசு(ஸ்)தான், சீனாவின் உதவிகளை அவர்கள் நாடத் தொடங்கினர். அதே சமயம், முற்று முழுதாக இந்தியாவை புறக்கணித்து விட முடியாத நிலையும் ராசபக்சேவுக்கு.

இதனால் இந்தியா, பாகிசு(ஸ்)தான், சீனா ஆகிய மூன்று பேரையும் சரிசமமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட அவர் பசில், கோத்தபயா மற்றும் அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்கா ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்தார்.

இந்தக் குழுவின் வேலை, தினசரி, இந்திய அரசுடன் தொடர்பு கொண்டு போர் குறித்த நிலவரங்களை புதுப்பிப்பது.

அதேபோல இந்தியத் தரப்பிலும் ஒரு ரகசியக் குழு அமைக்கப்பட்டது. சிவசங்கர மேனன், எம்.கே.நாராயணன், பாதுகாப்புத்துறை செயலாளர் விசய் சிங் ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பிடித்தனர்.

இந்த இரு குழுக்களும் தினசரி போர் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டன. ஒருவருக்கொருவர் தகவல்களையும் பரிமாறிக் கொண்டனர்.

இரு குழுக்களும் பெரும்பாலும் தொலைபேசி மூலம் பேசிக் கொண்டாலும் கூட அவ்வப்போது நேரிலும் சந்தித்துக் கொள்ளத் தவறவில்லை.

மேலும் ஒவ்வொரு சந்திப்புக்கும் ஏதாவது ஒரு காரணம் கூறி வைக்கப்பட்டது. ஆனால் இவர்களின் ஒவ்வொரு சந்திப்பின் போதும் புலிகள் அழிப்பு குறித்துத்தான் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

2007-09 ஆண்டுகளில் இலங்கைக் குழு இந்தியாவுக்கு ஐந்து முறை வந்தது. இந்தியக் குழு 3 முறை இலங்கை போனது. இந்தியக் குழுவின் பயணங்களிலேயே மிகவும் முக்கியமானது 2008ம் ஆண்டு ஜூன் மாதம் மேனன் தலைமையிலான குழு இலங்கை போனதுதான்.

அப்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் விறுவிறுப்பு  
அடைந்திருந்தது. 2008 ஆவணி மாதம் கொழும்பில் சார்க் அமைப்பின் 15வது மாநாடு நடக்கவிருந்தது.

இந்த நிலையில்தான் ஆனி மாதம் இந்திய விமானப்படை விமானம் மூலம் ரகசியமாக வந்து சேர்ந்தனர் நாராயணன், மேனன், விசய் சிங் குழுவினர். அவர்களது வருகை கிட்டத்தட்ட ரகசியப் பயணமாக வைக்கப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் , சார்க் மாநாட்டில் பெரும் தாக்குதல் நடத்தக் கூடும் என அப்போது எதிர்பார்ப்பிருந்தது. அதுபோல நடந்து விடாமல் தடுப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை முடுக்கி விட வேண்டும் என மேனன் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.

மேலும், இந்தியப் பாதுகாப்புப் படையினரை பாதுகாப்புப் பணிக்காக அனுப்புவதாகவும் இந்தியா தெரிவித்தது. இதை ஏற்குமாறும் இலங்கையை அது வலியுறுத்தியது.

ஒருவேளை இந்தியாவின் பாதுகாப்புப் படையினரை இலங்கை ஏற்காவிட்டால் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்றும் மிரட்டலாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்தியாவின் படை வருகையை இலங்கை அரை மனதுடன் ஏற்றுக் கொண்டது. அதன்படி இந்திய கடற்படைக் கப்பல்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், உலங்குவானூர்திகள் ஆகியவை கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் குவிக்கப்பட்டன.

(இந்நூலில் வெளிவந்த செய்திகள் தொடரும்…)