Thursday 27 September 2012

விடுதலைப் புலிகளை ஒழிக்க (பகுதி-4)........!

நிதர்சனம். நெற் என்னும் இணையத்தில் வெளியான கட்டுரை இதுவாகும்.

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்!

தேர்தலுக்கு முன்பு ‘முடிக்க’ விரும்பிய இந்தியா… பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்தியக் குழு கொழும்பு வந்து சேர்ந்தபோது பத்திரிக்கையாளர் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன்.

இதுபோன்ற ஒரு பாதுகாப்பை நான் அதுவரை இலங்கையில் பார்த்ததே இல்லை. அந்த அளவுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு முற்றுகையில் இருந்தது இலங்கைத் தலைநகர்.

கிட்டத்தட்ட கொழும்பு நகரம் மூடப்பட்டதைப் போன்ற ஒரு சூழ்நிலை காணப்பட்டது. பண்டாரநாயகே விமான நிலையத்திலிருந்து மாநாடு நடந்த இடத்திற்கு மன்மோகன் சிங் உள்ளிட்ட இந்திய அதிகாரிகள் இந்திய விமானப்படை உலங்குவானூர்திகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். 

அனைத்து சாலைகளும் பல மணி நேரத்திற்கு மூடப்பட்டன. பாதுகாப்பு கெடு பிடி காரணமாக கொழும்பில் வசித்து வந்த பலர் வீடுகளை விட்டே வெளியேறியதும் எனக்கு நினைவில் உள்ளது.

பிரச்சினை எதுவும் இல்லாமல் சார்க் மாநாடு முடிந்தது. இந்த பயணத்தின் போது இந்திய அதிகாரிகள், விடுதலைப் புலிகளுடனான போரின் நிலவரம் குறித்தும் முக்கியமாக ஆலோசித்தார்கள்.

இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா, கடற்படைத் தளபதி கரன்னகோடா ஆகியோருடன் இந்தியக் குழு ரகசியமாக சந்தித்துப் பேசியது. இந்த சந்திப்பின்போது சீன மற்றும் பாகிசு(ஸ்)தான் தலையீடுகள் குறித்து இந்தியத் தரப்பினர் கவலை தெரிவித்தனர்.

ஆனால் இந்தியா ஆயுத உதவிகளைச் செய்ய மறுத்ததால்தான் சீன, பாகிசு(ஸ்)தான் உதவியை நாட நேரிட்டதாக இலங்கைத் தரப்பு கூறியபோது இந்தியாவால் அதற்குப் பதிலளிக்க முடியவில்லை என்று இலங்கை அதிகாரி ஒருவர் பின்னர் என்னிடம் தெரிவித்தார்.

இருப்பினும் அதைப் பொருட்படுத்தாத இந்தியா, ராசபக்சேவிடம் ஒரே ஒரு முக்கிய செய்தியை மட்டும் சற்று உறுதிபட தெரிவித்து விட்டு வந்தது. அது – 2009ல் நடைபெறவுள்ள இந்திய லோக்சபா தேர்தலுக்கு முன்பாக போரை முடித்து விடுங்கள் என்பதுதான்.

தேர்தலின் போது ஈழப் போரின் நிழல் விழுவதையும், அதனால் தங்களது வெற்றி வாய்ப்புகள் பாதிக்கப்படுவதையும் காங்கிரசு அரசு விரும்பவில்லை. 

மேலும், தேர்தல் நேரத்தில் போர் நீடித்துக் கொண்டிருந்தால் அது சரியாக இருக்காது, தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரசு அரசு பயந்தது.

இந்தியாவின் கவலையைப் புரிந்து கொண்டார் ராசபக்சே. அதேசமயம், அவர் காலக்கெடு எதையும் நிர்ணயித்துக் கொள்ள விரும்பவில்லை. அதேசமயம், நடவடிக்கைளை விரைவுபடுத்துவதாக அவர் உறுதியளித்தார்.

இதையடுத்து மேனன், நாராயணன், விசய் சிங் அணியினர், பாதி கோரிக்கைள் நிறைவேறிய அரை குறை திருப்தியுடன் டெல்லி திரும்பினர்.

(இந்நூலில் வெளிவந்த செய்திகள் தொடரும்)…